அதிதி தேவோ பவ
விசாலம்
நடேசன் தன் குளுகுளு அறையில் அமர்ந்திருந்தார். தில்லியில் ஒரு கம்பெனியில் அவருக்கு மிகப்பெரிய பதவி தான். அவர் அதில் சேரும் போது சாதாரண குமாஸ்தாவாகத்தான் சேர்ந்தார். ஆனால் அவர் அறிவும் உழைப்பும் “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற கருத்தும் அவரை வெகு வேகமாக மேலே உயர்த்தி விட்டன.
கால்பெல்லை அழுத்தவும் ஒரு காக்கிச் சட்டைக்காரன் உள்ளே வந்தான் “எஸ் சார்”
“அந்த மோகன் லாலை உள்ளே வரச்சொல்”
“கியா மை அந்தர் ஆ ஸக்தா ஹூன்?” என்ற பவ்யமான கேள்வியுடன் மோகன்லால் உள்ளே வந்தான்.
“ப்ளீஸ் ஸிட் டவுன்” என்று தன் முன் இருந்த இருக்கையைக் காட்ட அவனும் அதில் அமர்ந்து கொண்டான்.
“மோகன் உனக்கு மகிழ்ச்சியான சமாச்சாரம் சொல்லப்போகிறேன். உன்னைப் பாரீஸின் அருகில் இருக்கும் லியான் என்ற இடத்திற்கு மாற்றல், பிரமோஷன் செய்திருக்கிறோம்”
தன் இரு புருவங்களையும் மேலே உயர்த்தித் தன் வியப்பைக் காட்டினான் மோகன்லால், பின் திரு. நடேசனின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
முதன் முதலாக மோகன் அங்கு சேர்ந்த போது வேறு டிவிஷனில் இருந்தான். பாவம் ரொம்ப சாது. அதிர்ந்து பேச மாட்டான், இதனால் அவனை எல்லோரும் சுமை மாடாக உபயோகித்தனர்.
“என் மனைவிக்கு இன்று பிரசவம். ஆகையால் நீ இந்த வேலையை முடித்து விடு” என்று ஒருவன் தன் பைலை அவனிடம் நீட்டுவான். இன்னொருவன் “காலையிலிருந்து ஒரே பீவரிஷ், வீட்டுக்குப் போகப் போகிறேன் மோகன்! நீ என் வேலையை முடித்து விடேன்” என்பான். சில பெரிய ஆபீசர்கள் அவனை விஸ்கி வாங்கி வரவும் எலக்டிரிக் பில் கட்டவும் வீட்டில் சில எடுபிடி வேலைகள் செய்யவும் உபயோகித்துக் கொள்வார்கள். பாவம் இந்த அசடு! உடனே ஒருவருக்கும் மறுக்காமல் வேலை செய்யும்.
இதையெல்லாம் பார்த்து நடேசன் மனம் குமுறுவார். சாது என்றால் இப்படியா! தவிர இத்தனை வேலை செய்தும் ஒரு பதவி உயர்வு கூட இதுவரை கண்டதில்லையே! சேர்ந்த இடத்திலேயே ஆணி அடித்தாற்போலல்லவா இருக்கிறான்.
அவனுக்குத் திருமணமும் ஆனது. வந்த பெண் மிகப்படுசுட்டி. அவசியமானதுக்கு மட்டும் செலவு செய்து தானும் ஒரு வேலையைத் தேடிக்கொண்டாள். அவனுடன் இருந்த தங்கையைக் கரையேற்ற வேண்டாமா?
எப்படியாவது மோஹனைத் தன் செக்ஷனில் போட்டு அவனுக்குப் பிரமோஷன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நடேசன் உறுதி பூண்டார். கடவுளும் அதற்குச் செவி சாய்த்தது போல் நடந்தது ஒரு சம்பவம். அவர் செக்ஷனில் ஒருவர் மாரடைப்பால் இறந்து போக அந்த இடம் காலியானது. மிகுந்த பிரயாசைப்பட்டு மோஹனைத் தன்னிடம் சேர்த்துக் கொண்டார். அன்றைய தினத்திலிருந்து மோஹனுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது அவனை டிரெய்னிங் அனுப்பி ஜெர்மன் மொழியையும் படிக்க அனுப்பி வைத்தார். தவிர அவர் எந்த வெளியூருக்குப் போனாலும் தவறாமல் அவனையும் அழைத்துப்போனார். மோகன் கண்ணிற்கு நடேசன் ஸார் ஒரு தெய்வமாகவே தெரிந்தார். எங்கு இருந்தவன் இப்போது எத்தனை உயர்ந்த நிலையை எட்டி விட்டான்.
தன் நன்றியைத் தெரிவிக்க ஒரு நாள் மோகன் தன் மனைவியுடன் திரு நடேசன் வீட்டிற்கு வந்தான். கொஞ்சம் பாதாம் பருப்பும் வாங்கிச் சென்றான்.
“நமஸ்தேஜி” என்று அவர் பாதம் தொட்டு வணங்கினான்.
“ஸார் உங்களால் தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் .தயவு செய்து இந்தச்சின்ன அன்பளிப்பை மறுக்காமல் பெற்றுக்கொள்ளுங்கள்”
“இதெல்லாம் எதற்கு மோகன்லால்” என்றவரின் கையில் அந்தப்பொட்டலத்தை அழுத்தினான்,
“இன்னும் மேலே மேலே உயரணும் மோகன்” மனமார ஆசீர்வதித்தார் அவர்.
அவர் ஆசீர்வாதமோ என்னமோ மோஹனுக்குப் பாரீஸ் போகும் பாக்கியமும் கிடைத்தது. பாரீஸ் அருகில் இருக்கும் லியோன் என்ற இடத்தில் ஒரு கிளை ஆபீஸ் திறக்க அதில் ஜெர்மன் மொழி தெரிந்தவர் தேவைப்பட மோஹனுக்கு யோகம் அடித்தது.
“என்ன மோகன் எங்கேயோ போய் விட்டாயே! இப்ப சந்தோஷம் தானே” என்ற திரு. நடேசனின் குரல் கேட்கவும் தன்னிலைக்கு வந்தான் மோகன் அவன் கண்களில் நீர் பனித்தது.
“ரொம்ப ரொம்ப நன்றி ஐயா”
“இன்னும் இரண்டு வாரங்களில் நீ அங்கு செல்லவேண்டும் அங்கேயும் நல்ல பெயர் எடு. போவதற்கு எல்லாம் இப்போதே தயார் செய்”
போன ஜன்மத்தில் அவர் என்னுடைய தந்தையாக இருந்திருப்பாரோ என்ற எண்ணத்தில் மூழ்கி அங்கிருந்து கிளம்பினான், காலச்சக்கரம் சுழன்றது இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. நடேசனும் ஓய்வு பெற்று விட்டார். நடேசனின் ஒரே மகனுக்குப் பாரீஸில் ஏர் பிரான்ஸில் உத்தியோகம் கிடைத்து, தன் பெற்றோரைப் பாரீஸுக்கு அழைத்திருந்தான். அவரும் அங்கு போக விசாவுக்கு முயற்சித்து விசாவும் கிடைத்தது. அப்போது அவருக்கு மோஹனின் ஞாபகமும் வர லியானுக்கு ஒரு கடிதம் அனுப்பி தாங்கள் அங்கு வருவதாகவும் எழுதினார்.
உடனேயே மோஹனின் போனும் வந்தது. “ஸார் நீங்கள் வருவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தலை கால் புரியவில்லை. கண்டிப்பாக வந்து எங்களுடன் தங்கி விருந்தும் உண்ண வேண்டும்’
“கண்டிப்பாக மோகன். உன் வீட்டிற்கு வராமல் போவேனா? வரும் முன் நான் உனக்குத் தெரியப்படுத்துகிறேன். ஆமாம் உன் தங்கை எப்படி இருக்கிறாள்?’
“ஸார் அவளுக்குப் போன வருடம் திருமணம் ஆகி இப்போது முழுகாமல் இருக்கிறாள்”
“ஆஹா அப்படியா கங்க்ராட்ஸ், என் நல்லாசிகள். ஓகே. அப்புறம் பாக்கலாம் பை பை”
ஒரு நல்ல நாளில் நடேசனும் அவர் மனைவியும் தன் மகன் இருந்த பாரீஸுக்குப் போனார்கள். அந்த ஊரில் உடலிச்சைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ என்று நடேசனுக்குத் தோன்றியது. தான் வந்ததை மோஹனுக்கும் தெரிவித்து பின் வரும் சனிக்கிழமையன்று மோகன் வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்தார்.
காரிலிருந்து இறங்கியவுடனேயே மோஹனின் மனைவி பூஜா வீட்டினுள்ளிருந்து ஓடி வந்து அவர்கள் காலைத்தொட்டு வணங்கினாள். மோஹனும் அப்படியே செய்ய நடேசன் அவனை அணைத்துக்கொண்டார்.
வீடு சின்னதாக இருந்தாலும் பல சௌகரியங்கள் கொண்டிருந்தன. குழாய் வழியாகக் கேஸ் வந்து அடுப்பு எரிந்தது. சிலிண்டர் தொல்லை இல்லை, சாப்பாட்டிற்குப் பலவிதமான ஐட்டங்கள் மேஜையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. படூரே சோலே, ரைய்தா, கோப்தா, பனீர் டிக்கா என பூஜா அசத்தியிருந்தாள். முதலில் சூப்பும் வந்தது, சூப் கொடுத்த கப்பின் அழகே அழகு.
நடு நடுவே பூஜா உள்ளே போவதும் வருவதுமாய் இருக்க, அவள் கணவனும் அவளைத்தொடர கமலாவுக்கு ஏதோ விஷயம் நடந்திருக்கிறது என்று உள் மனதில் பட்டது.
ஆபீஸைப்பற்றி அலசல், அரசியலைப்பற்றி அலசல், கிரிக்கெட் மாட்சைப்பற்றி அலசல் என்று பல அலசல்கள். இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டனர். நடுநடுவே சில ஜோக்குகளும் உதிர்ந்தன. சிரிப்பும் சேர்ந்து விருந்து களை கட்டியது, விருந்து முடிந்து டெஸர்ட்டாக ஐஸ்க்ரீம் பழக்கலவையை அழகான பூக்கள் பதிந்த கிண்ணங்களில் நிரப்பி பூஜா ஒரு தட்டில் வைத்தபடி வந்தாள்.
“ஆமாம் கேட்க மறந்து போய் விட்டேனே! உன் தங்கை எப்படி இருக்கிறாள்? குழந்தை பிறந்து விட்டதா? என்ன குழந்தை?”
உடனே பூஜா மோஹனைப் பார்த்தாள். மோகன் பூஜாவைப்பார்த்துக் கண்களால், ‘ஒன்றும் சொல்லாதே’ என்று சமிக்ஞை செய்தான். ஆனால் பூஜாவின் கண்களில் நீர் நிரம்பி அவளால் பொறுக்க முடியாமல் அழ ஆரம்பித்தாள்.
“ஐயோ என்ன ஆயிற்று” என்று நடேசன் தம்பதியும் கேட்க, மோஹனும் வந்த அழுகையை அடக்க முயன்றான். ஆனால் முடியவில்லை.
“ஸார் என் தங்கை இப்போது இந்த உலகத்தில் இல்லை. மேலே போய் நான்கு நாட்கள் ஆகின்றன. குழந்தை பிறந்தவுடன் அவள் சன்னி கண்டு இறந்து விட்டாள். அவளது குழந்தையை அடுத்த வாரம் நாங்கள் இங்கு அழைத்து வருகிறோம்”
“என்ன மோகன் இது. இதை என்னிடம் முதலிலேயே சொல்லவில்லையே! இந்த நேரத்தில் இப்படி ஒரு விருந்தா? எப்படி உன்னால் இந்த மாதிரி?”
“இல்லை ஸார், என் தங்கை உங்கள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள். நான் மேலே உயர்ந்து வந்ததால்தான் அவள் திருமணத்தை நடத்த முடிந்தது. இது அவளுக்கும் நன்கு தெரியும். என் உயர்வுக்குக் காரணம் நீங்கள்தானே! எங்கேயோ இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்திய நீங்கள் தன் மனைவியுடன் வருகிறீர்கள் என்றால் சாதாரண விஷயமா!
என் தங்கை ஆஸ்பத்திரியில் சேர்ந்த பின்னர் பேசினாள், “அண்ணா, நடேசன் ஜி உங்கள் வீட்டிற்கு வந்த பின்னர் நீங்கள் என்னைப் பார்க்க வாருங்கள். அவர் அத்தனைச் சட்டென்று ஒருவர் வீட்டுக்கும் போக மாட்டார். அதுவும் மனைவியுடன் வருவது இதுவே முதல் தடவை ஆகையால் நல்ல விருந்து வைத்து அசத்துங்கள். அவருக்கு என் பரிசாகப் பார்க்கர் பேனாவைப்பரிசளியுங்கள். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்”
“அவள் ஆசையையும் பூர்த்தி செய்தேன். என் மனைவியும் நானும் இதையே விரும்பினோம் இந்தாருங்கள்” என்றபடி ஒரு பார்க்கர் பேனாவை அளித்தான் மோகன்.
இப்படி ஒரு விருந்தோம்பலா?
“அதிதி தேவோ பவ” என்றபடி வாய் பேச இயலாது மலைத்துப்போய் நின்றார் நடேசன்.
படத்திற்கு நன்றி:http://stagetecture.com/2011/11/guest-blogger-how-to-plan-the-best-holiday-events-with-family-and-friends