அகரம் இதழாகும் ஐரோப்பியத் தமிழர் முதலாகும்

0

 

 

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

அரிச்சந்திரன் நாடகத்தைப் பிரித்தானிய அரசி விக்டோரியாவின் முன் வழங்கியவர் யாழ்ப்பாணத்தவரான முத்துக்குமாரசாமி (1833-1879). பிரித்தானிய அரசியிடம் சர் பட்டம் வாங்கிய முதலாவது ஆசியர்.

கடந்த 250 ஆண்டுகளில் மேனாடுகளுக்குக் குடியேறிய தமிழர்களுள் பெருமளவினர் பிரஞ்சு நாட்டிலேயே வாழ்கிறார்கள்.

புதுச்சேரி வழியாகக் காவிரிப் படுகை சார்ந்த தமிழர் பிரான்சுக்குச் சென்றார்கள். அங்கேயே தங்கினர். இன்றைய பிரான்சில் புதுச்சேரி வழித் தமிழர் தோராயமாக 300,000 பேர் வாழ்கின்றனர்.

பிரித்தானியாவிற்கும் கடந்த 250 ஆண்டுகளில் தமிழர் புலம்பெயர்ந்தனர். 1950களில் பிரித்தானியாவில் வாழ்ந்த தமிழரின் தொகை தோராயமாக 100,000 எனச் சொல்வர். தமிழ் நாட்டவரை விட ஈழத்தவரே அத்தொகுப்புள் பெரும்பாலார்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளில் சொரியல் சொரியலாகத் தமிழர் வாழ்ந்து வந்தனர்.
அக்காலத்தில் புலம்பெயர்ந்த பின்னரும் தமிழர் அடையாளங்களைப் பேணும் முயற்சியில் பிரித்தானியத் தமிழர் கண்ட முன்னேற்றங்களைப் பிரஞ்சுத் தமிழர் காணவில்லை.

இத்தாலியில், வத்திக்கான் நகரில், கடந்த 50 ஆண்டுகளாக, ஞாயிறு தோறும் ஒரு தேவாலயத்தில் தமிழில் வழிபாடு நடைபெற்று வருகிறது. கிறித்துமசு நாளன்று, போப்பாண்டவரின் வழிபாட்டில் சாந்த பவுலர் தேவாலாயத்தில் தமிழிலும் பூசைகள் நடைபெறுகின்றன.

இலண்டனில் தமிழ்ப் பள்ளி, சைவக் கோயில், தமிழ் இதழ் எனத் தமிழ் அடையாளங்களை 1970களுக்கு முன்னரே பேண முயன்றனர்.
1970களின் இறுதிப் பகுதியில் ஈழத் தமிழ் இளைஞர் ஐரோப்பாவுக்குப் பெரும் எண்ணிக்கையில் பயணிக்கத் தொடங்கினர். சிங்களத் தேசிய எழுச்சியின் படுமோசமான விளைவான தமிழர் ஒழிப்புக் கொள்கையை எதிர்க்க முன்வந்த தமிழ் இளைஞர் உயிர் அச்சம் காரணமாகப் புலம்பெயரத் தொடங்கினர்.

புகலிடம் வழங்கிய ஐரோப்பிய நாடுகளில் யேர்மனி முதன்மை வகித்தது. வந்திறங்கும் விமான நிலையத்திலேயே நுழைவனுமதியை இலங்கையர் எவரும் பெறலாம் என்ற அன்றைய யேர்மனியக் குடிவரவுக் கொள்கை, ஈழத் தமிழ் இளைஞருக்கு அருங்கொடையாயிற்று.

1977இன் தொடக்கத்தில், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 தமிழ் இளைஞர், புகலிடப் பயணத்துக்கான கடவுச்சீட்டுப் பெற என் உதவியை நாடினர். மனமுவந்து உதவினேன். அனைவரும் மேனாடுகளை நோக்கிப் பயணித்தனர். அவர்களின் விவரங்களை மறந்துவிட்டேன். எனினும் இலங்கை அரசு அதற்காக என் மீது கொண்ட சினத்தைக் கைவிடவில்லை, மறக்கவுமில்லை. புகலிடங் கோருவோருக்கான யேர்மனியின் கொள்கையும் ஈழத் தமிழ் இளைஞருக்குப் பாதுகாப்பைக் கொடுத்தது.

1977, 1983 தமிழர் மீதான சிங்களவரின் கொடுந் தாக்குதல்களால் மென்மைப் போக்குள்ள தமிழர் பலர் இலங்கையைவிட்டு வெளியேறினர்.
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஆத்திரேலியா நியூசிலாந்திலும் புகலிடம் தேடினர்.

250 ஆண்டுகளாகப் பிரான்சில் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழர் முயலாததை, மேற்காணும் புதுப்புலங்களில் 35 ஆண்டுகளாகக் குடியேறிவரும் தமிழர் முயல்கின்றனர். தமிழர் என்ற அடையாள உணர்வைக் கொண்டதால். சிங்களத் தேசியத்துடன் வேற்றக் கலக்க மறுத்ததால், புகலிட வாழ்க்கை. புதிய சூழலிலும் புகலிட வாழ்வில் தமிழர் அடையாளத்தை இழக்கலாமா? எதை இழக்க மறுத்தோமோ அதைக் காக்க, அடுத்த தலைமுறைக்கு வழங்க, என்னென்ன முயற்சி தேவையோ அந்தந்த முயற்சிகளை மேற்கொள்ளும் வழிகளைத் தமிழர் தேடினர். ஊரல் மலைகளுக்கு அப்பால் வந்து ஐரோப்பாவில் வாழத் தொடங்குகின்றோமே? தொலைந்துவிடுவோமோ, தொலைத்துவிடுவாமோ என்ற உள்ளுணர்வு மேலோங்கியது.

ஊரல் மலைத் தொடருக்கு அப்பாலான ஐரோப்பாவில் 50 நாடுகள் (2012). 1 கோடி சகிமீ. பரப்பளவு. 75 கோடி மக்கள் (2012).
விடுதலை பெற்ற நாடுகளாகத் தம்மை அறிவித்துக் கொண்டு, இந்த 50க்கு வௌயே 7 நாடுகள் ஐரோப்பாவில் உள்ளமை வியப்பு. மேலும் 7 பிரதேசங்களில் முழுமையான சுயாட்சி, மற்றொரு நாட்டின் மேலாதிக்கத்துடன்.

ஐரோப்பிய ஒன்றியமாக 27 நாடுகள். 43 இலட்சம் சகிமீ. பரப்பளவு. அங்கே 50 கோடி மக்கள்.

பொருண்மிய வளர்ச்சியின் உச்ச நிலை நாடுகள் பல இன்றைய ஐரோப்பாவில் உள. சுவிட்சர்லாந்து, சுவீடன், நார்வே ஆகிய நாடுகளை மனித நாகரிக வளர்ச்சியின் இக்கால உச்சநிலை நாடுகளாகவும் சொல்வர்.
தமிழர்களுக்கும் ஊரலுக்கு அப்பால் உள்ளோருக்குமான தொல் தொடர்புகள் வணிகத் தொடர்புகளாகவே தொடங்கின. அயனியர் = பயோனியர் = யவனர் என்றாகித் தொல் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

பாண்டிய மன்னரின் தூதர் உரோமப் பேரரசுக்குச் சென்ற செய்தி ஒருபுறம். செங்கடல் வழிசென்ற தமிழர் விட்டுச் சென்ற பானையில் தமிழ்ச் சொற்களை எகிப்து நாட்டவர் கண்டு காத்துவரும் செய்தி ஒருபுறம். உரோமக் காசுகள் தமிழகத் தொல்லியலாரின் பட்டியலான செய்தி ஒருபுறம். விவலியத்தில் காணும் தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுவோர் ஒருபுறம். ஈழத்தின் மாந்தைத் துறை, புத்தளம் துறை வழியாக மேனாட்டாருடன் தொடர்புகள் பற்றிய செய்திகள் ஒருபுறம்.

போர்த்துக்கேயர் வருகைக்குப் பின்னர், தமிழருக்கும் ஐரோப்பியருக்கும் இடையே உள்ள தொடர்புகள் ஆவணங்களாக உள. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், தென்மார்க்கர், பிரஞ்சர், பிரித்தானியர் வரவுகளை அடுத்துத் தமிழர் மேனாடுகளுக்குப் பயணித்தனர். தமிழ்மொழியில் மேனாட்டவர் பலர் புலமை பெற்றனர். மேனாட்டு மொழிகளில் தமிழர் புலமை பெற்றனர்.

இவை யாவையும் தொகுப்பதால் தமிழர் – ஐரோப்பியர் தொல் தொடர்புகளை வலுவாக்கலாம். வரலாற்றுச் சிறப்புமிக்க தொல் தொடர்புகளை அறியாத் தலைமுறையினரே புகுநாட்டிலுள்ளோரிடமும் புகலிடம் தேடியோரிடமும் இருந்தது. ஐரோப்பாவின் 50 நாடுகளுள் 15 நாடுகளில் கணிசமான தொகையில் தமிழர் வாழ்வதால், அந்த நாடுகள் தமிழர் அடையாளங்களைப் பேணுவதற்குத் தத்தம் அரச நிதிக் குவைகளிலிருந்து மானியங்கள் வழங்குகின்றன.

அரச எந்திரங்கள் ஆதரவாக உள்ளன. மொழிப் பயிற்சி, நுண்கலை வளர்ச்சி, பண்பாடு பேணல் என யாவுக்கும் அரசுகளின் ஆதரவு உண்டு.75 கோடி ஐரோப்பிய மக்களுள் 12 இலட்சத்தினருக்குக் கூடுதலாகத் (0.02%) தமிழர் தொகை. 15 நாடுகளை மட்டும் கணக்கில் கொண்டால் 0.5% தமிழர் தொகை. தம் இயல்பான தமிழ்ச் சூழலில் வாழவேண்டிய மக்கள், தமிழர் என்ற ஒரே காரணத்தால் புலம் பெயர்ந்தனர். புலம்பெயர்வதற்கு முன்பிருந்த இயல்பான சூழலை ஐரோப்பாவில் பெற முடியாவிட்டாலும், ஆகக் கூடிய அடையாளப் பேணலைக் கொள்ள அரசுகள் ஒத்துழைக்கின்றன.

புலப்பெயர்வுக்கு முன்னுள்ள சூழலைத் தொடரும் இல்லப் பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழர் உணவு, தமிழர் உடைகள் எதையும் எளிதில் பெறும் சூழ்நிலை. ஐரோப்பாவெங்கும் வார இறுதித் தமிழ்ப் பள்ளிகள் மொழிப் பயிற்சி நடுவங்களாகின்றன. சைவக் கோயில்கள், கிறித்தவ தேவாலயங்களில் தமிழ் என வழிபாட்டிடங்கள் தமிழர் குடியிருப்புத் தோறும் உள.

புலப்பெயர்வுக்குப் பின்னரும் குடும்ப உறவுகளைப் பேணும் வசதிகளை, முன்பிருந்த சூழலில் வாழ்ந்தோருடனான உறவுகளைப் பேணுதலை, வளர்த்தலை அரசுகள் ஊக்குவிக்கின்றன.

தமிழ் மொழி சார்ந்த மின் மற்றும் அச்சு ஊடகங்கள் ஐரோப்பாவில் பல்கிப் பெருகியுள்ளன. புலப்பெயர்வுக்கு முன்னுள்ள சூழலைப் பின்புலமாகக் கொண்ட ஊடக இணைப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன.

ஒரு சமூகம் எதிர்பாராமல் எதிர்கொண்ட பின்னணி. காலத்தின் கட்டாயப் பின்னணி. சுவையான பின்னணி. ஐரோப்பியத் தமிழர் இயல்பாகத் தம்மை வெளிப்படுத்தப் பல்வேறு முயற்சிகளைக் காலந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் மாதாந்த இலவச இதழ் ஒன்றை யேர்மனியில் இருந்து வெளியிடுகின்றனர். அகரம் அந்த இதழின் பெயர். தொடக்கத்தைக் குறிக்கும் அச்சொல், தமிழின் இளமையை, என்றும் தொடங்கிக் கொண்டிருக்கும் வற்றா ஊற்றைக் குறிக்கிறது.

புலத்தில் பிறந்த தமிழ் அகரம். 12 இலட்சம் தமிழ் மக்களின் நடுவில் பிறந்த படைப்பு. புகலிடத்தில் அடையாள உணர்வு மங்காதிருக்க உயிரும் உணர்வும் ஈழத்திலிருக்க உதவ முயலும் இதழ். ஈழத்தை விட்டு வந்தாலும் அந்த மண் வாசனை மரத்துப் போகாமலிருக்க வாழ்ந்த சூழலை நினைவூட்டும் பக்கங்கள். தமிழீழ ஊர்களை விவரிக்கும் செய்திக் கட்டுரைகளே மண்ணோடு இறுக்கும் மந்திரக் கயிறாக இதழ்கள் தொறும் தொடர்கின்றன.

இஃது இலவச இதழ். ஐந்தாவது இதழிலேயே இலவச இதழாகத் தொடர்வது சாத்தியமா? என்ற வினாவுக்கு, வாசகரும் வணிகரும் துணை நிற்பர் என ஆசிரியர் உறுதி தருகிறார். யேர்மனியில் இருந்து வெளிவரும் அகரம் இதழின் பக்க வடிவமைப்பு அண்மைக் காலத் தொழினுட்ப உத்தி சார்ந்த்து. 64 பக்கங்கள், அனைத்தும் வண்ணப் பக்கங்கள், வழுவழு தாளில். ஈழத்தமிழர் விடுதலை அரசியல் அலசல்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை, துணுக்கு, திரைச் செய்தி, உலகவலம் எனப் பக்கத்துக்குப் பக்கம் தமிழ், கொள்ளை அழகு குலவும் தமிழ்.

வண்ணங்களைக் கலவையாக்கி, வாசகரின் உள்ளத்தை ஈர்த்துப் படிக்குமாறு தூண்டும் தமிழ் வரிகளை அக் கலவைக்குள் கரைத்து, ஒவ்வொரு வரியும் உற்சாகம் தரும் வரியாக, ஊக்கம் தரும் வரியாக, கருத்தூட்டம் தரும் வரியாக, தமிழ் அடையாளம் பேணும் வரியாக அமைந்த பந்திகளே கட்டுரையாக, கதையாக, துணுக்காக, செய்தியாக விரிந்துள.

யேர்மனி உற்பத்தி செய்யும் ஐடல்பர்க்கு அச்சு எந்திரங்கள் உலகின் மிகச் சிறந்த அச்சு எந்திரங்கள். யேர்மனியின் அச்சு வளர்ச்சியை உள்வாங்கிய அச்சமைப்பும் கட்டமைப்பும் அகரம் இதழைத் தலைநிமிர்த்துகிறது.

சுட்டும் அனல் விழியர் வெட்டும் குரல் தொனியர் என்ற பாராட்டுக் கவிதை வரிகள் நடுஅடைந்தன. பக்கமாக்கியார் இட அடைவாக்கினால் வாசகர் தெளிவர். ஆளணியற்ற சூழ்நிலை. பக்காக்கியர், ஓவியர், மெய்ப்பர், அச்சிடத் தயாரிப்பவர் யாவருமே ஆசிரியராகும் காலமிது. கணினி தரும் வசதிக் காலமிது. எழுத்துருக்கள் தமிழில் ஒரே அடக்கத்துள் இல்லை. ஒருங்குறி மட்டுமே அனைவருக்கும் பொது எழுத்துரு. விசைப்பலகைகளும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக உள. இந்தக் குழறுடிகளைச் சீர்செய, கணினிப் பயில்வும் பழக்கமும் தேவை. ஆசிரியரிடமே இவை அமைந்து வரும் காலம்.

எழுத்துப் பிழைகள் ஏற்பட்டுவிட்டன என்ற கவலையுடன் ஆசிரியர் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுப் பார்க்கிறார். ஆனாலும் அவர் கண்கள் அவைரையே ஏமாற்றுகின்றன. அதற்காக வாசகரிடம் மன்னிப்புக் கோருகிறார் எளிவந்த எம்பிரானாய் அகரம் ஆசிரியர். அட்டைப் படம் சிந்திக்கத் தூண்டுவதெனில், வாசகர் கருத்துரை கண்டனமாக, பாராட்டாகச் சந்தியில் நிறுத்துகிறது.

பெரும் வலியோடு பிரசவமாகின்றன அகரம் இதழ்கள் என்ற வரி, வாசகரின் கண்களில் நீரை வரவழைக்கும். பிரசவத்துக்குப் பிந்தைய வேதனைகளையும் அகரம் சுட்டுகிறது. வாசகருக்குப் போய்ச் சேரும் வினியோக அமைப்பில் உள்ள குறைகளைப் போக்க உதவுமாறு வாசகரைகயே கேட்கும் அகரத்தின் நோக்கம், 50 நாடுகள் கொண்ட ஐரோப்பாவான தம் புகலிடத்தில் அடையாளம் கலையாத சமூகமாகத் தமிழர் நிலைப்பதே.
யாருக்கும் எடுபிடியோ கைத்தடியோ அல்ல என்ற உரத்த குரல் ஐயங்களைப் போக்கி, மயல்களை நீக்கி, மயக்கங்களை விலக்குகிறது.

நாம் தவறிழைக்கக் கூடியவர்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் தெரிந்தவர்கள். திருந்துவோம், நல்லவர்களாக, வல்லவர்களாக மாறுவோம. ஒழுக்கம் விழும்பம் தரும். நல்வழியில் தொடர்வோம், விட்டுக் கொடோம் என்ற உறுதியைக் கட்டுரைகளின் வரிகளிடை இலைமறை காயாகத் தருவது அகரம். நாம் திருந்த மாட்டோம் என்ற வண்ணை தெய்வத்தின் சிறுகதை சான்று.

தமிழினத்தின் மனச்சாட்சியாக விளங்கும் என்ற ஓங்கிய குரலே உள்ளடக்க ஆசிரியர் குரல். தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு நிலை ஒவ்வொரு இதழிலும் அலசலாகும். தமிழ் நாட்டு அரசியலும் வளர்ச்சியும் சொல்லுவதில் ஐரோப்பிய வாசகரைத் தன் கண்முன் நிறுத்துகிறார் பதிப்பாசிரியர். புலம்பெயர் தமிழர்கள் இந்தியச் சாடலைக் கடுமையாக முன்னெடுக்கிறார்கள். இந்தியா வழிதான் தீர்வு வரவேண்டும் என உலக நாடுகள் கருதுகின்றன. இந்திய மேலாதிக்க வலையத்துள் உள்ள சிறு நாடு என இலங்கையைப் பார்க்கின்றன.

யூகோசுலோவியாவை உடைத்தபின் சேர்பியாவையும் உடைத்துக் கொசொவோ தனி நாடான பின்னும் உருசியா உடன்படாததால் முழுமையான விடுதலையைக் கொசொவோ அடையமுடியவில்லை என்பதைத் தென் ஐரோப்பாவில் கண்கூடாகக் கண்டபின்னரும் புவிசார் அரசியல் புரிதலற்று, இந்தியாவைப் புலம்பெயர் தமிழர் கடுமையாகத் தாக்குவது தொடர்கிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பகைநிலை வராது காத்துவரும் சிங்களத் தலைமையின் சாணக்கியத்தைப் புலம்பெயர் தமிழர் புரியாதிருக்கிறார்களோ?

அகரம் இந்த நிலைக்கு விதிவிலக்கல்ல.

தமிழர் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் வழிமுறைகளில் பூடகத் தன்மை நீங்கி வெளிப்படைத் தன்மை பெருகவேண்டுமென்ற அழுத்தம் இதழக்கு இதழ் தொடர்கிறது.

தமிழ்க் கலாச்சார விழாக்களின் தேவையை, அடையாளத் தக்கவைப்பின் இன்றியமையாமையை அகரம் வலியுறுத்துகிறது.

யவனர் வழி ஊரலுக்கு அப்பாலான மக்களை அறிந்தனர் சங்க காலத் தமிழர். ஆங்கிலேயர் வழி ஐரோப்பாவைக் கண்டனர் அண்மைய காலத் தமிழர். ஐரோப்பாவெங்கும் (ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகள் 23) இறுகி உறுதியுடன் தமிழ்ப் பண்புகள் நிலைக்க அகரம் போன்ற ஊடக உள்கட்டமைப்புகளைச் சமைக்கின்றனர் இக்காலத் தமிழர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.