பவள சங்கரி

வாழ்வியல் வண்ணங்கள்!

சுட்டும் விழி

தீபம் (3) – தாளம் தப்பிய ராகம்?

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று நாம் காலங்காலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு வளர்ந்து வந்துவிட்டோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதையே தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு வாழ்ந்த பெண்டிரின் மன நிலைமை இன்றைய பல பெண்களுக்கு சற்றும் இல்லை என்றே தோன்றுகிறது. கல்வியறிவில் நல்ல முன்னேற்றம், பொருளாதார சுதந்திரம் பணியிடங்களில் உயர் பதவிகள் இவைகளெல்லாம் நல்ல மாற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்தியிருந்தாலும், ஒரு சில பிரச்சனைகளையும் உருவாக்காமல் இல்லை. கிடைத்தற்கரிய ஒரு பொருள் தம் கையில் கிடைத்து விட்டால் அதைச் சரியாகப் பயன்படுத்தும் வழிவகையறியாத ஒரு சிறு குழந்தையின் மன நிலையில் இது போன்ற சில சம்பவங்களும் முன்னுதாரணங்களாகிவிடுகின்றன..சரிசெய்ய முடிந்த பிரச்சனைகள் படிப்பினையாக மாறி நல்வழி காட்டினாலும், சரிசெய்ய முடியாத சில தவறுகள் உயிரையே பலி வாங்குவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் ஏனையோருக்கு வேண்டுமானால் பாடமாக அமையலாம். சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கோ இது தீராத வேதனையாகவன்றோ ஆகிவிடுகிறது.

”ஆசிர்வாதங்களைக் கணக்கில் கொள், பிரச்சனைகளை அல்ல” என்பார்கள். ஆனால் நாம் எப்போதும் நம் பிரச்சனைகளையும், நமக்குக் கிடைக்காததையும் பற்றித்தான் அதிகமாக சிந்திக்கிறோம். கிடைத்த பேறுகளை எண்ணி பெருமிதம் கொள்ள மறந்து விடுகிறோம். ஒரு மனிதரிடம், அவர் எத்தனை பெரிய அறிவாளியாக இருந்தாலும், எல்லா நல்ல குணங்களும் ஒருசேர அமைந்திருப்பது சாத்தியமல்ல. குறை நிறைகளுடன் இருப்பதுதான் மனித மனம். அதை உணர்ந்து கொண்டால்தான் வாழ்க்கை இனிமையாகக் கழியும். அப்படியில்லாமல், தம்முடைய வாழ்க்கைத் துணையிடம் அதிகமாக எதிர்பார்க்கும் போதுதான் பிரச்சனை விசுவரூபமெடுக்கிறது. அப்படி ஒரு ச்ம்பவம் இந்தப் பெண்ணின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டிருக்கிறது பாருங்கள்!

சாதனா கல்வி, கலை, அழகு, அறிவு என அனைத்திலும் மிகச்சிறந்து ஒரு செல்வச்சீமான் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்தவள். தந்தையின் செல்லமும், செல்வமும் அவளை அளவிற்கதிகமான தன்னம்பிக்கையும், கர்வமும் ஊட்டி வளரச் செய்தது. வாழ்க்கையில் தனக்கு அனைத்துமே உயர்ந்ததாக மட்டுமே அமைய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் கொண்டவள். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை மனமுவந்து ஏற்றுக் கொண்டாள், ஆனால் அதிக எதிர்பார்ப்புடன்! கணவனின் வெளித்தோற்றமும், கல்வியும், வசதி வாய்ப்பும் அனைத்தும் அவளுக்கும் திருப்தியளிப்பதாகவே இருந்தாலும், போகப்போக தன் அறிவுக்குத் தகுந்த சமமான அறிவாளியாக தன் கணவன் இல்லை என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில் இரண்டு குழந்தையும் பிறந்துவிட்டது. நாளுக்கு நாள் தனக்கு பொறுத்தமானவனாக கணவன் இல்லை என்ற எண்ணம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. வெறுப்பைக் கொட்ட ஆரம்பித்தாள். கணவனின் ஒவ்வொரு செய்கையின் மீதும் குற்றம் காண ஆரம்பித்தாள். குடும்பத்தில் அமைதி குறைய ஆரம்பித்தது.. இந்த நேரத்தில்தான் விதி ஒரு நண்பனாக உள்ளே நுழைந்தது.

கணவனின் தொழில்முறை நண்பன் வந்து போய்க் கொண்டிருந்தவன், இவர்களின் நிலையை நன்கு புரிந்து கொண்டு, அதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அவளுக்குப் பிடித்த வகையில் பலவிதமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அவளைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டான். ஏற்கனவே கணவனின் மீது வெறுப்பாக இருந்தவள் எளிதாக அந்த வலையில் சிக்க வேண்டியதாகிவிட்டது. அந்தக் கயவனும் அவளை பல விதங்களில் மூளைச்சலவை செய்ய ஆரம்பித்ததன் விளைவு, அவள் துணிந்து எடுத்த முடிவு அவள் உயிரையே குடிக்கக்கூடிய காலனாக மாறிவிட்டது. ஆம், தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு அந்தக் கயவனை நம்பி வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தாள். பெற்றோரிடம் சென்று பலவாறு போராடியும் அவர்களின் ஒப்புதல் கிடைக்காததோடு, குழந்தைகளையும் அவளுடன் அனுப்ப மறுத்து விட்டனர். தாங்கள் இறந்தால் கூட தங்கள் முகத்தில் விழிக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாகச் சொல்லி தலை முழுகுவதாகவும் சொல்லிவிட்டார்கள். அந்த நேரத்தில் வீம்பிற்காக அவள் எடுத்த முடிவு வெகு விரைவில் மிகத் தவறானது என்பதை அவளுக்கு விளக்கிவிட்டது. கணவனை விட்டுவிட்டு அடுத்தவனை நம்பிச் சென்ற சில நாட்களிலேயே அவனுடைய உண்மைச் சொரூபம் தெரிந்துவிட்டது.

முதலில் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பவன் போல இவள் பெயரில் ஒரு சொத்தை வாங்கிவிட்டு, அவள் பெயரில் இருந்த பெரிய சொத்துக்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்தபோதுதான் அவளுக்கு விழிப்புணர்வே ஏற்பட்டிருக்கிறது அவனுடைய நோக்கம் என்ன என்று. எத்துனை பாதுகாப்பான ஒரு வாழ்க்கையை இழந்து இன்று பெற்றோரின் ஆதரவும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறோம் என்று. மிகவும் மனமுடைந்து போன நிலையில், பெற்றோரும் மன்னிக்கத்தயாரில்லை என்ற சூழலில் ஒரு பெண் வேறு என்ன முடிவு எடுக்க முடியும்? அதேதான் தற்கொலைதான்.. பெட்ரோல் ஊற்றி தன்னையே கொளுத்திக் கொண்டாள். தன்னோடு சேர்ந்து தன் தீய எண்ணங்களும் எரிந்து போகட்டும் என்ற முடிவில்.. 80 சத்விகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையிலும் கூட, பெற்றோரைப் பார்த்து மன்னிப்புக்கோர வேண்டும் என்று மன்றாடிய போதும் பெற்றோர்கள் மறுத்து விட்டனர். என்று தங்கள் மகள் தங்கள் பேச்சைக் கேளாமல் வீட்டை விட்டு குடும்ப மானம் பற்றிக்கூட கவலைப்படாமல் போனாளோ அன்றே அவள் இறந்து விட்டாள். இனி நாங்கள் யாரை வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். உயிர் விடும் வரை பெற்றோரைக் கேட்டுக் கொண்டேயிருந்து விட்டு உயிரை விட்டிருக்கிறாள் அந்த பேதை! யோசிக்காமல் அவசரப்பட்டு எடுத்த முடிவினால் அவளுடைய இரண்டு குழந்தைகளும் தாயில்லாத குழந்தைகளாக பாட்டி வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பெண் எவ்வளவுதான் படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், தனக்கென்று உள்ள எல்லையைத் தாண்டினால் பாதுகாப்பு என்பது இல்லாமல் போவதும், வாழ்க்கையில் அமைதியை இழக்க நேரிடும் என்பதையும் உணர வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.