மறவன்புலவு க. சச்சிதானந்தன்

முக்கு, முகம், முகில், முட்டு, முடம், முடி, முடுக்கு, முண்டு, முத்தம், முதல், முதிர், முந்தி, முயங்கு, முயல், முரண், முரல், முருகு, முலை, முழம், முழு, முள், முறை, முற்று, முறி, முன் ஆகியன மு என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டன. நெடிலான மூ தரும் மூதூர், மூலம், மூவார், மூளை யாவுமே மேற்காணும் சொற்களை வேராகக் கொண்டன.முதலாவதை, முன்னோரை, முற்காலத்தைக் குறிப்பனவாகவே மு என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்ட இந்தச் சொற்களின் பொதுத் தன்மை.

முது இன மக்களே தொடக்க கால மக்கள் என்ற கருத்தியலுக்கும் இத்தகைய சொல்லாட்சிக்கும் தொடர்பு உண்டா என்பதை மானிடவியலாளரே நோக்கவேண்டும். மூர் அல்லது இலமூர் என்ற நிலப் பரப்பினரே முது மக்கள் என்ற கருத்தியலையும் நோக்க வேண்டும்.

முது இன மக்களின் வழிவந்தவர் இயக்கர், நாகர் ஆகிய இரு குலத்தவர். மேற்கே இன்றைய ஆப்கானித்தானத்தில் இருந்து இமயத்துக்குத் தெற்கேயுள்ள நிலப்பரப்பெங்கும் 40,000 ஆண்டுகளாக இயக்கர், நாகர் குல மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இராவணன் இயக்கர் குலத்தவன் என்பர். இலங்கையில் இயக்கச்சி, இயக்கர்கல், இயக்கர்களப்பு, இயக்கரூர், இயக்கரை, இயக்கவாவி ஆகிய ஊர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக, இன்றுவரை தொடர்ந்து அதே பெயரில் உள.

இலங்கையின் மூத்த குடிகள் இயக்கர், நாகர் என மகாவமிசமும் கூறும், மணிமேகலையும் கூறும்.

தென்பாண்டி நாட்டில் இயக்கர் என்ற சொல் இசக்கி என மருவியது. அயல் = அசல், பயல் = பசல், முயல் = முசல் என யகரம் சகரமாகி இசக்கி என்ற சொல்லாட்சி வழக்கில் வந்தது. இசக்கிமுத்து என்ற பெயருடையோர் பலர் தென்பாண்டி நாட்டில் வாழ்வர்.

முது மக்கள் வழி வந்தவர் இயக்கர். குறிஞ்சி நிலத்தவராயினர். தாயை வழிபட்டனர், குளிர் போக்கத் தீ வளர்த்தனர், இளமையை, எழிலை, அழகைப் போற்றினர், முருகனை, இயற்கையை வழிபட்ட மக்களாதலால் இயற்கையான மக்கள், இயக்கரானார். யக்ஞம், யாகம் என்ற தீவளர்ப்பு முறைமை இயக்கரிடமிருந்து வந்தேறியோர் பெற்றது.

இசக்கி அம்மன் கோயில்கள் தென்பாண்டி நாட்டின் தொன்மைக் கோயில்கள். 40,000 ஆண்டுகாலத் தமிழ்ப் பண்பாட்டுப் பேழைகள். முது மக்களின் எச்சமான இத் தொன்மைச் சின்னங்களைப் பாதுகாப்பதும் பேணுவதும் தமிழர் கடமை.

இலமூர்க் கண்டமெங்கும் பரவியிருந்த மக்கள், இயக்கர், நாகர் என வாழ்ந்த தொல்குடிகள், அவர்கள் அமைத்த இயக்கர் கோயில் நாகர் கோயில் என்பன பத்திச் சின்னங்களாகத் தமிழரிடையே இருந்தாலும் அவை தொன்மை மக்களின் நினைவுச் சின்னங்களே.

கன்னியாகுமரி மாவட்டத்தில், விளவன்கோடு வட்டத்தில் சுனைக்காவளை இசக்கி அம்மன் கோயில் பாழடைந்து போக, அக்கோயிலைப் புதுப்பித்துப் பேணும் முயற்சியில் புலவர் த. சுந்தரராசன் ஈடுபட்டுள்ளார்.

தலைமுறைகள் பல ஊடாக அவரின் முன்னோர் தொடர்ந்த தொன்மை பேணும் பெருமுயற்சியை அவரும் தொடர்கிறார். அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க, உதவுக.

40,000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள பண்பாட்டுப் பேழையை, நாகரிகக் கருவூலத்தைக் காத்து நம் மரபினருக்கு விட்டுச் செல்லும் பெரும் பொறுப்பை உவகையுடன் தொண்டாக்கும் புலவர் த. சுந்தரராசனார் பணி சிறப்பதாக.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *