ஐக்கியா & வல்லமை சிறுகதைப் போட்டி!

5

 

 

நல்ல சிறுகதைகள் எழுதும் வல்லமை உடையவரா நீங்கள்? இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

ஐக்கியா அறக்கட்டளை, வல்லமை மின்னிதழுடன் இணைந்து சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது!

 

2012 ஆகஸ்டு மாதம் முதல், நம் வல்லமை இதழில் வெளியாகும் சிறுகதைகளிலிருந்து மாதம்தோறும் ஒரு படைப்பு, சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெறும். இவ்வாறு தேர்வு பெறும் 12 சிறுகதைகளிலிருந்து தலைசிறந்த ஒன்று, ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்வு பெறும். மாதம்தோறும் தேர்வுபெறும் சிறுகதைக்கு ஒரு புத்தகமும் நூறு ரூபாயும் (ரூ.100) பரிசாக வழங்கப்படும். ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்வுபெறும் படைப்புக்கு ஆயிரம் ரூபாய் (ரூ.1000) பரிசு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் பன்னிரண்டு சிறுகதைகளும் தாரிணி பதிப்பகத்தார் மூலம் நூல் வடிவம் பெறும். மிகச் சிறந்த முறையில் எழுதப்படும் சிறுகதைகள், ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். நமது நோக்கம், தமிழில் மிகச் சிறந்த சிறுகதைகள் வெளிவந்து, உலகத் தரத்துக்கு எந்த வகையிலும் தமிழ்ச் சிறுகதை இளைத்ததல்ல என்று நிரூபிப்பதும், புதிய படைப்புகளையும் புதிய எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதுமே ஆகும்.

ஐக்கியா அறக்கட்டளை நிறுவனரும் தாரிணி பதிப்பக உரிமையாளருமான எழுத்தாளர் வையவன், இப்பரிசுகளை வழங்க இசைந்துள்ளார்.

 

 

 

மாதம்தோறும் வெளியாகும் சிறுகதைகளிலிருந்து சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை மூத்த விமர்சகரும் எழுத்தாளருமான வெங்கட் சாமிநாதன் ஏற்றுள்ளார்.

 

சிறுகதைப் போட்டிக்கான விதிமுறைகள்:

1. ஒருங்குறியில் அமைந்த சிறுகதைகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

2. இணையத்திலோ, அச்சிலோ இதுவரை வெளிவராத புதிய படைப்பாக இருத்தல் வேண்டும்.

3. ஆசிரியரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்போ, தழுவலோ ஏற்கப்பட மாட்டாது.

4. மாதத்தின் முதல் தேதியிலிருந்து கடைசி தேதி வரை இந்திய நேரப்படி வெளியாகும் படைப்புகள், அந்தந்த மாதத்தின் பரிசீலனைக்கு ஏற்கப்படும்.

5. ஆர்வமுள்ள எவரும் பங்கேற்கலாம். வல்லமை ஆசிரியர் குழுவினரும் இதில் பங்கேற்கலாம். அனைத்துப் படைப்புகளையும் சமமாகவே நடுவர் பரிசீலிப்பார்.

6. பரிசுத் தொகையும் புத்தகமும் பெறுவோர், இந்தியாவுக்கு வெளியில் இருந்தால், அவர்களின் இந்திய முகவரிக்கு இவை அனுப்பப்படும். அல்லது மின்னஞ்சலில் மின்னூலாக அனுப்பப்படும். அச்சு நூல் அல்லது மின்னூல் ஏதேனும் ஒன்று மட்டுமே அனுப்பப்படும்.

இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களின் ஆகச் சிறந்த சிறுகதைகளை அனுப்புமாறு எழுத்தாளர்களை அழைக்கிறோம். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தைப் புதிய உயரத்திற்கு இட்டுச் செல்ல வாரீர்! வாரீர்!!

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “ஐக்கியா & வல்லமை சிறுகதைப் போட்டி!

  1. அன்பு பவளசங்கரி இது மிக அருமையான செய்தி .திரு வையவன் அவர்களுக்கும்

    திரு வெங்கட் சுவாமிநாதன் அவர்களுக்கும் என் நன்றி ..இது வெற்றிபெறும் என்பதில்
    சந்தேகமே இல்லை

  2. சிந்தனைத் திறனோடு எழுதும் திறமை படைத்தவர்கள், தங்களை சிறுகதை எழுத்தாளர்களாக அறிமுகப் படுத்திக் கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு.  

    படைப்புகள், குறைந்த பட்சம் எத்துணை பக்கங்கள் இருத்தல் வேண்டும் என்பதை தெரிவித்தால் நலம்.

    சிறுகதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்கும் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளுக்குப் பரிசு வழங்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ளும் ‘ஐக்யா’ அறக்கட்டளை நிறுவனர் திரு வையவன் அவர்களும் இணைந்து தமிழ் இலக்கியத்துக்கு ஆற்ற இருக்கும் அரும் பணியை மெச்சி எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *