இயந்திரங்களை உருவாக்கலாமா கல்விக்கூடங்கள்?

1

பவள சங்கரி

தலையங்கம்

” கல்வி என்பது தகவல்களை மூளையில் ஏற்றிக் கொண்டு அசை போடாமல் அங்கேயே அடங்கிக் கிடப்பது அல்ல. நல்ல மனிதர்களை உருவாக்குகிற, நல்வாழ்க்கை தரும் சிந்தனைகளின் சங்கமமாக கல்வி இருக்க வேண்டும். .” – விவேகானந்தர்

”கல்வி என்பது தீபத்தை தீண்டிவிடுதலேயன்றி ஓர் பாத்திரத்தை நிரப்புதலன்று.” – சாக்ரடீஸ்

கல்வி என்பது அவரவர் திறமையைக் கண்டறியும் சாதனமாக இருக்க வேண்டுமேயொழிய, நினைவுத்திறனை மட்டும் சோதிக்கும் முயற்சியாக இருக்கலாகாது என்பதையே பல அறிஞர்களும் கூறுகின்றனர். இந்த கணினி யுகத்தில் அனைத்து விதமான செய்திகளும் தடையற இணையத்தில் கிடைக்கப்பெறும் பட்சத்தில் வெறும் மனப்பாடம் செய்து எழுதி தன்னை நிரூபிப்பதால் மட்டுமே ஒரு மாணவன் தம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது. அதை விடுத்து படித்த அந்த விசயங்களை வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும் விதம் மற்றும் அதுகுறித்த தெளிவும் அவசியம். தேவை. அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்ட்டீன் சொல்வது போல அறிவுத்திறனைக் காட்டிலும் கற்பனைத்திறன் முக்கியமானது. கற்பனா சக்தி என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடக்கூடியது. அதனைக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல, அதாவது அந்தக் குழந்தையின் எண்ணம்போல தம் எதிர்காலத்திற்கான தொழிலைக் கண்டறிய உதவுவதாக இருக்க வேண்டும். யதார்த்த வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இருப்பதே சிறந்த கல்வி முறை.

நவீன கல்வித் திட்டத்தில் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலமாக சிந்தனா சக்தி மேம்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ள்ன. உருசியாவில், மாணவர்களை தர்க்கப்பூர்வமாக சிந்திக்கச் செய்வதற்காகவும், கூர்மையான கவனத்தை ஊக்குவித்து, மனோபலத்தை மேம்படுத்தும் முகமாகவும் சதுரங்கம் என்கிற செஸ் விளையாட்டு கட்டாயப்படுத்தப்படுகிறது. கல்வித் திட்டத்தில், தொழில் மற்றும் உடற்பயிற்சிக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதும் அவசியம்.. அனைத்து விதமான தொழிலுக்கும் சமமான மதிப்பளிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்க வேண்டும். திறந்த மனதுடன் கற்பிக்கும் பாடத்தை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்..குழந்தைகளுக்கு குழுவாக சேர்ந்து பணிபுரியும் பழக்கமும் ஏற்படுத்த வேண்டும். நம் இந்தியர்களுக்கு அடிப்படையிலேயே அந்த பழக்கம் குறைவாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். தாய்மொழி அறிவுடன், ஆங்கில மொழி அறிவும் அவசியமாகிறது.

ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒவ்வொரு ஆசிரியரும் தொழில்முறை உளவியலாளராக பயிற்சி அளிக்கப்படுவதன் மூலமாக தம் மாணவர்களின் தனித்திறனை கண்டறியும் திறம் பெறக்கூடும் என்கிறார். இதனால் குழந்தைகள் தமக்கு விருப்பமில்லாததொரு தொழிலைத் தேர்ந்தெடுத்து அதனால் தம் வாழ்க்கையையேத் தொலைக்காமல் இருக்க் பேருதவி புரிபவர்களாக இருக்கக்கூடும் என்கிறார். மேலும் அவர் குழந்தைகளை இளமை முதலே இயற்கையை நேசிக்கப் பழக்க வேண்டும் என்கிறார்.

மாணவர்கள், தேவையற்ற அச்சம் காரணமாக தேர்வில் ஏற்படும் தோல்வியால் மனம் உடைந்து தற்கொலை அளவிற்குச் சென்றுவிடுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போன்ற தற்கொலைகள் அதிகமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய யோகா, தியானம் போன்ற முறைகளும் கற்பிபபது அவசியமாகிறது.

சமீபத்தில் வெளியான +2 தேர்வில், சுஷ்மிதா என்ற மாணவி 1189/1200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,மற்றவர்கள், 1 மதிப்பெண் வித்தியாசத்தில், அதாவது 1188 மதிப்பெண்கள் வாங்கி 2ம் இடத்திலும், 1187 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி விகிதமும் 86.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளதும் வரவேற்கத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளே முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளன. அந்த வகையில் தமிழை முதல் பாடமாக எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்ததில் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை கிடைத்திருக்கிறது. எல்லாம் சரிதான். ஆனால் இப்படி நல்ல மதிப்பெண் வாங்கியதால் மட்டுமே இவர்கள் வெற்றி பெற்றதாக ஆகிவிடுமா. மதிப்பெண்கள் மட்டுமே அவர்தம் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதா..?

பெரும்பாலும் பெண் குழந்தைகளே அதிக மதிப்பெண் வாங்குவதற்கான காரணம் அவர்கள் வெளியில் அதிகம் போகாமல் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி படித்ததை எழுதி மதிப்பெண் பெற்று விடுகிறார்கள். ஆண் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தினாலும் வெளியுலக பொது அறிவினையும் பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் பணிக்கான நேர்காணல்களையோ அன்றி அதற்கான பொதுத் தேர்வுகளையோ சந்திக்கும்போது அவர்களால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது. சில நாட்கள் முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்கள் கூறிய செய்திகள் மிகவும் சிந்திக்கச் செய்தது. நம் கல்வி முறையில் மாற்றங்கள் எந்த அளவிற்கு அத்தியாவசியமாகிறது என்பதை உணர முடிகிறது.

பள்ளியிறுதித் தேர்வில் 86.5% மதிப்பெண்கள் பெற்று விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பை தேர்ந்தெடுத்த ஒரு மாணவி, கல்லூரியில் நுழைந்தவுடன் அவர் அந்த குறிப்பிட்ட படிப்பை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் பற்றி ஒரு பக்கம் எழுதச் சொன்னபோது தன்னால் எழுத முடியவில்லை என்பதை வேதனையுடன் தெரிவித்தது சிந்திக்க வேண்டிய விசயம். பொது அறிவின் வளர்ச்சி பற்றிய சிந்தை துளியும் இல்லாமல் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வாசித்து தேர்வு எழுதும் குழந்தைகளை வெறும் புத்தகப் புழுக்களாக மாற்றும் இது போன்ற கல்வி முறைகள் கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.

ஒரு பள்ளியின் முக்கிய கடமை என்பது, குழந்தை தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றியுள்ள உலகம் பற்றியும் அறிந்து கொள்வதோடு, தன்னுடைய தனித்திறமை மற்றும் அடையாளத்தையும் உணரச் செய்வதுதான். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு வித்தியாசமான திறமை விதையாக புதைந்து கிடக்கும். அதை விருட்சமாக வளரச் செய்ய வேண்டியதுதான் தோட்டக்காரராகிய ஆசிரியரின் கடமை.

மதிப்பெண்கள் ஒன்றையே குறியாகக் கொண்டு செயல்படும் பள்ளிகள் அதைப் பெறச்செய்வது ஒன்றே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதும் வருந்தத்தக்கது. நிறைய மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிக்க வைப்பதையே இன்றைய பல பிரபலமான பள்ளிகள் விரும்புகின்றன. அப்படிப்பட்டவர்களை படிக்க வைப்பதில் அந்தப் பள்ளிக்கு என்ன பெருமை இருக்கிறது. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை தங்கள் திறமை மூலமாக அதிக மதிப்பெண் பெறச் செய்வதில்தானே பெருமை. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணியில் வெற்றி காண முடியாதவர்களையும், மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தம் பொது அறிவு மற்றும் தனித்திறன்கள் மூலமாக உயரிய நிலையில் இருப்பவர்களையும் காண முடிகிறது.

ஒரு நாடு முழுமையான பொருளாதாரச் சுதந்திரம் பெற வேண்டுமானால் அந்நாட்டில் நல்ல கல்வித்திட்டம் அடிப்படையாக அமைய வேண்டும். இன்றைய கல்வித்திட்டத்தில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், அதில் பல மாற்றங்கள் வர வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. நம் கல்வித்திட்டங்கள் மாணவர்களின் செயல் திறனையும், பொது அறிவையும் ஊக்குவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் பலவும் இது போன்ற மாற்றங்களை செயல்படுத்தத் துவங்கிவிட்டன. அந்த வகையில் அந்த மாணவர்களுடன் போட்டி போட வேண்டிய சூழலில் நம் கல்வித்தரமும் உயர்ந்தால்தான் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் இதற்கு சரியான தீர்வு காண முனைய வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இயந்திரங்களை உருவாக்கலாமா கல்விக்கூடங்கள்?

  1. தங்கள் கட்டுரையில் தாங்கள் எழுதியவை அனைத்துமே உண்மை. சில இடங்களில் பெற்றோர்களும் கூட தங்கள் குழந்தையின் உண்மையான ஆற்றல் என்ன?…திறமை என்ன?…அவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தங்களுடைய விருப்பத்திற்கு அவர்களை வளைத்து அவர்களின் வாழ்க்கையையே திசை திருப்பி விடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *