இதுவும் ஒரு பிரகிருதி ~II வது தொகுப்பு: 1

0

 

இன்னம்பூரான்

குயுக்தி’ காமுப்பாட்டி

ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்தி வேளையில் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்கும் போது, பிரசன்னமானாள், ஊரையே கலங்கடிக்கும் மாதுஶ்ரீ. காமாக்ஷி குப்புசாமி ஐயர் அலையஸ் ‘குயுக்தி’ காமுப்பாட்டி.

நான்: வாங்கோ, மாமி.

(மனம் ‘போங்கோ’ என்கிறது. பாட்டி ஒரு பெண்பால் நாரதர் cum ராவணன். பாட்டி என்று கூப்பிட்டால், பல்லை உடைத்து, கையில் கொடுக்காமல், கடாசி விடுவாள்.)

கு.பா: என்ன பண்ணிண்டு இருக்கே, ராஜு?

நான்: (என்ன சொன்னாலும் ஆபத்து!) (பணிவாக) சந்தியாவந்தனம் பண்ணிண்டிருக்கேன், மாமி.

கு.பா: (எரிச்சலுடன்) மண்டூகம்!  எனக்கு கண்ணு அவிஞ்சா போயிடுத்து? நீயும், உன் சந்தியாவந்தனமும்? காயத்ரி சொல்லத்தெரியாது. சந்தியாவந்தனம் பண்றானாம். ருக்கு பிள்ளைன்னா இப்படித்தான். ஒண்ணு கேட்டா, ஒண்ணு சொல்றது. நான் அந்த பாழாப்போன பாகீரதியை பற்றி கேட்டேன். பெரிய பீ.எல். படிச்சு கிழிச்சுட்டான். வக்கீல் சன்னது வேறே, இந்த அழகிலே. உன்னெல்லாம்….!

(நாக்கைத் துருத்தறா. முட்டாக்கு நழுவறது. தாடகை மாதிரி இரட்டை நாடியா? பாத்தாலே, பயமாயிருக்கு.)

நான் அழுச்சாட்டியமா ‘காயத்ரி ஜபம்’ பண்றேன். காமுப்பாட்டி தொடருகிறாள்.

(முன்கதைச்சுருக்கம்: ஏழு வயதிலே அவளுக்குக் கல்யாணமாம். சாங்கோபாங்கமாக, அஞ்சு நாள் கல்யாணம். அப்பா, கணபதி அக்ரஹாரம் என்ற ஊர்லே பெரிய பண்ணை. மாப்பிள்ளை குப்புசாமி, எஸ்.எஸ்.எல்.சியில் முதல் தடவை கோட்டு என்ற வாகை சூடிய தருணம். கட்டுக்குடுமி. சண்டியர் காலர், டப்பா மடிப்பு, மைனர் சங்கிலி. அப்பா, ஊர்லெ சின்ன பண்ணை. அவருடைய கண்டிப்பு தாங்காமெ, அண்ணா சுப்பராமன், கிருத்துவ ‘அக்ரஹாரம்’ செபாஸ்டியன் பொண்ணு ஜூலியோட ஓடிப்போயிட்டானா, இவனுக்கு எக்கச்சக்க அம்மா செல்லம். அவ கொடுக்கிற காசை வச்சுண்டு கும்பகோணம் டவர் டாக்கீஸ்லெ கச்சதேவயானி சினிமா பார்க்கப்போயிடுவான், குடியானத்தெருவிலேயிருந்து, ஜமா சேத்துண்டு. அப்பா தான் சாமியாடுவார், அவன் இல்லாத சமயம் பார்த்து, ‘மூதேவி! உங்கப்பன் மாதிரி, உனக்கு பிள்ளை வாய்ச்சிருக்கான். மளிகை மாணிக்கம் சொன்னாண்டி. தேரடித்தெருவிலே, ஒரு கூறு கெட்டவளோட சுத்தறானாம். ஆத்துக்கு வரட்டும். நரசிம்மம் மாதிரி குடலை உருவிட்றேன்.‘ ஆனா, அவன் வரச்சே,லேசா நழுவி, சீட்டு விளையாட போயிடுவார், டொச்சு மாமாவாத்துக்கு. பொறுக்கமுடியாமா, ஒருநாள் மாமி எதிர்த்துக் கேட்டுவிட்டாள், ‘எங்கப்பா பேரை இழுத்தா, நாக்கு அழுகிப்போயிடும். அவர் சத்யசந்தன். உங்கப்பா மாதிரி பொம்மனாட்டி பித்து இல்லை. சுப்பு அவரை உரிச்சு வச்சு இருக்கானா. அதான்…‘. மொத்திப்பிட்டார், மொத்தி. அந்தக்காலத்திலெல்லாம், ஆணாதிக்கம் கிடையாது. ஆண்  பைசாசம் மட்டும் தான். அம்மாக்காரி, அழுகையோடு அழுகையா, ‘குப்புவுக்கு மங்களத்தைக் கேட்கச்சொல்லி’, ஆணையிட்டாள். அவரும், தரகர் ராமசாமி சாஸ்திரிகள் கூட, பெரிய பண்ணையிடம் போய், அவர் லாகிரி மயக்கத்தில் இருந்த போது, செட்டில் பண்ணி விட்டார் என்று, தன் மாமனாரை நிந்திப்பாள், காமாக்ஷி. கல்யாணம் ஆகி அஞ்சு வருடத்திலெ வீணாப்போயி, பொறந்த வீட்டுக்கு வந்து விட்டாளா, இவள். அப்பாவும் நொடிச்சுப்போய்ட்டார். கூடப்பிறந்த இரண்டு அண்ணாவும் சரி, மதனிகளும் சரி, இவ மேலெ கரிச்சுக்கொட்டினா. இவளும் தற்காப்புக்காக, காலாவட்டத்தில், ‘குயுக்தி’ குப்புப்பாட்டியாக மறுபிறவி எடுத்தாள். அவள் ஊரை ஆட்டிவைக்கும் முன், அண்ணா/மன்னிகளை ஜன்மவைரிகளாகப் பிரித்து விட்டாள்.  

( ‘குயுக்தி’ காமுப்பாட்டி ஒரு தொடர்கதை)

இன்னம்பூரான்

23 07 2012

*

சந்தியாவந்தனம் ~ காலை, மாலை பிராமண நித்ய பூஜை மாதிரி;

மண்டூகம் ~ தவளை;

‘காயத்ரி ஜபம்’~ ஒரு விதமான தேவி உபாசனை;

கோட்டு ~ ஃபெயில்;

ஜமா: ~ சேக்காளி;

டொச்சு ~ ‘துரைசாமி’ யின் திரிபு.

 

mintamil <minTamil@googlegroups.com>, thamizhvaasal <thamizhvaasal@googlegroups.com>, தமிழ் சிறகுகள் <tamizhsiragugal@googlegroups.com>

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *