நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-6)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

கல்யாணி கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தாள். பக்கத்தில் ஏதோ ஒரு ஃபைல் திறந்து கிடந்தது. கண்கள் சிவந்து தூக்கமின்மை தெரிந்தது கண்களில். அன்று ஞாயிற்றுக் கிழமை ஆதலால் லேட்டாக எழுந்து வந்த சுந்தரம் கல்யாணி வேலையில் மூழ்கியிருப்பதைப் பார்த்தான். அவள் கண்களைப் பார்த்தவனுக்குச் சட்டென்று கோபம் வந்தது.

“என்ன பண்றே? கல்யாணி?”

வேலையில் ஆழ்ந்திருந்தவள் பதறி நிமிர்ந்து, “நீங்க தானா? நான் பயந்தே போயிட்டேன்” என்று சொல்லி விட்டு மீண்டும் கம்ப்யூட்டரில் ஆழ்ந்தாள்.

“கல்யாணி! நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு! என்ன பண்ணிக்கிட்டு இருக்கே நீ?”

“ஒண்ணுமில்லீங்க, நாளைக்குள்ளே இந்த ஃபைலை முடிக்கணும் ஏகப்பட்ட வேலை இருக்கு. அதான் பாத்துக்கிட்டு இருக்கேன்”

“ராத்திரி தூங்கினியா? இல்ல கம்ப்யூட்டரே கதின்னு கெடந்தியா?”

“என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க? பன்னண்டு மணிக்கெல்லாம் வந்து படுத்துட்டேனே?”

“பன்னண்டு மணிக்கு? ஏன் உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? எதுக்கு இப்படி ராத்திரி கண்முழிச்சு உடம்பைக் கெடுத்துக்கற? காலையில வேற சீக்கிரம் எழுந்துருக்க? இதெல்லாம் என்ன? நாளைக்கே கொண்டு வந்து குடுத்தாகணும்னு அந்த ஆபீசுல உன்னைக் கம்பெல் பண்றாங்களா?”

“சேச்சே! அப்டி எல்லாம் ஒண்ணுமில்லீங்க! இந்த ஃபைலை முடிச்சுட்டா இந்த மாசம் 14,000 ரூவா கெடைக்கும். அதான் பாத்துக்கிட்டு இருக்கேன்”

“வரவர பணப் பைத்தியம் பிடிச்சு அலையற நீ? சரி! இப்போப் போயி ஒரு ஒரு மணி நேரம் படு. நிகில் இன்னும் எழுந்துக்கல! அப்டியே அவன் எழுந்தாலும் நீ போடற ஓட்ஸ் கஞ்சியை நான் போட்டுக் குடுத்துக்கறேன். போ!போயி கொஞ்சம் ரெஸ்ட் எடு”

“கஞ்சியெல்லாம் ஒண்ணும் போட வேண்டாம். நான் போயிப் படுத்துட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். அப்றமா பேசிக்கலாம்” என்று சொல்லி விட்டுக் கம்ப்யூட்டரை அணைத்தவள் பெட்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.

சுந்தரம் அன்றைய செய்தித்தாளில் ஆழ்ந்திருந்தார். மின் வெட்டு, விலை வாசி உயர்வு என்று ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்தார். சற்றைக்கெல்லாம் நிகில் எழுந்து வந்தான். அப்பா மட்டும் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அம்மாவைத் தேடி சமையலறைக்குப் போனான். மேடை எப்பவும் போல சுத்தமாக இல்லாமல் அலங்கோலமாக இருந்தது. அம்மாவும் இல்லை.

“ஏம்ப்பா! அம்மா எங்க?”

“அதை ஏன் கேக்கற போ! என்னவோ +2 பரீட்சைக்குப் படிக்கறவ மாதிரி ராத்திரி பன்னண்டு மணி வரை முழிச்சு வேலை பாத்துருக்கா. போதாதுன்னு காலையில வேற சீக்கிரம் எழுந்து கம்ப்யூட்டரை நோண்டிக்கிட்டு இருந்தா உங்கம்மா. நாந்தான் சத்தம் போட்டு படுக்க அனுப்புனேன்”

“ஏம்ப்பா! அம்மா இப்டி மாறிட்டாங்க? வீடு வீடாவே இல்ல தெரியுமா? கிச்சனுக்குப் போனா முன்னெல்லாம் செம நீட்டா இருக்கும். இப்போ பொயிப் பாத்தா பாலைப் புரை ஊத்தாம பால் தெறஞ்சு கெடக்குது. அதுல அத்தனைப் பூச்சிங்க. நேத்து ராத்திரி வெச்ச சாம்பார் பாத்திரம் தேய்க்கப் போடாம தெறந்து கெடக்குது. அது கெட்டுப் போயி நாறுது. நெறைய வேற இருக்கு. ஃப்ரிட்ஜுலயாவது வெச்சிருக்கலாம் இல்ல?”

“ஏயப்பா! நீ இத்தனை கவனிக்கறீயா? பரவாயில்லையே? கல்யாணி எப்பவுமே தனக்கு ஒரு பொண்ணு இல்லையேன்னு வருத்தப்படுவா. அந்தக் கொற இனிமே இல்ல.”

“சும்மா பேச்சை மாத்தாதீங்கப்பா. அம்மா ஏன் இப்டி இருக்காங்க அதைச் சொல்லுங்க!”

“என்னை என்ன சொல்லச் சொல்ற நிகில்? நீயும் சேந்து தான் அம்மாவைக் கம்ப்யூட்டர் கோர்சில சேருங்கப்பான்னு சொன்ன! இப்போ வந்து அம்மா ஏன் இப்படின்னா நான் என்ன பதில் சொல்ல?”

“கம்ப்யூட்டர் தெரிஞ்ச எல்லா அம்மாவுமா இப்டி இருக்காங்க? சரி சரி! அப்பா நேத்தே சொல்ல மறந்துட்டேன். என் ஃப்ரெண்டு இருக்கானே சுரேஷ் அவனை இன்னிக்கு மதியச் சாப்பாட்டுக்கு நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கேன். ஏன்னா அவங்க வீட்டுல எல்லாரும் காஞ்சிபுரத்துக்கு ஒரு கல்யாணத்துக்காகப் போயிருக்காங்க! அவன் மட்டும் தான் இருக்கான். நான் தான் ஹோட்டல்ல சாப்பிட வேணாம். எங்க வீட்டுல சாப்பிடலாம்னு கூப்பிட்டேன்”

“அதுக்கென்னப்பா! தாராளமா வரட்டும்.”

“அம்மா என்ன சொல்வாங்களோ தெரியலியே?”

“உங்கம்மா என்னடா சொல்லப் போறா? ஒண்ணும் சொல்ல மாட்டா. நீ எத்தனை தடவை உன் ஃப்ரெண்ட்சைக் கூட்டிக்கிட்டு வந்துருக்க?”

“அதெல்லாம் அப்போ! இப்போ அம்மா ரொம்ப மாறிட்டாங்க! அன்னிக்கு மதியம் என் ஃஃப்ரெண்ட்சைக் கூட்டிக்கிட்டு வந்தேன். டிஃபன் ஒண்ணுமே செஞ்சு தரல. அது பரவாயில்லன்னா கூட “ஏண்டா கூட்டத்தையேக் கூட்டிட்டு வந்து நான் வேலை செய்யற நேரத்துல டிஸ்டர்ப் பண்றன்னு திட்டுனாங்க தெரியுமா?”

“என்ன? கல்யாணியா அப்டி சொன்னா? என்னால நம்பவே முடியலியே?”

“சாட்சாத் உங்க கல்யாணியேதான் அப்டி சொன்னாங்க. என்னிக்கு பார்ட் டைமா வேலை பாக்க ஆரம்பிச்சாங்களோ அன்னிலருந்து அவங்க ரொம்ப மாறிட்டாங்க”

“எல்லாம் உனக்கு ஒரு நல்ல பைக் வாங்கிக் குடுக்கணும்னுதாம்ப்பா இப்டிக் கண்ணு மண்ணு தெரியாம அவ வேலை செய்யுறா! இந்தக் குடும்பத்துக்கு நாலு காசு கூட வரட்டுமேன்னுதான் அவ ஒழைக்கிறா பாவம்!”

“நான் ஒண்ணும் தப்பா சொல்லலப்பா! என்னதான் பணம் வேணும்னாலும் நம்ம நிம்மதிய இழந்திடக் கூடாதுல்ல”

என்ற நிகிலை ஆழ்ந்து நோக்கிய சுந்தரம் இப்போதைக்கு இந்தப் பேச்சை வளர்க்க வேண்டாம் என்று நினைத்து “போடா போ! பெரிய பேச்செல்லம் பேசாதே! போயி பல்லைத் தேச்சுட்டு வா, டீ போட்டுத் தரேன்”

“பல்லைத் தேச்சுட்டு வரேன். டீ நீங்க போட வேணாம்ப்பா! நானே போட்டு உங்களுக்கும் கொண்டு வரேன்” என்று கூறியவன் பல் தேய்க்க விரைந்தான்.

பல்லைத்தேய்த்து விட்டுப் பாலைக் காய்ச்சி டீ போட்டு அம்மாவுக்காக ஃப்ளாஸ்கில் ஊற்றி தனக்கும் அப்பாவுக்கும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான். அப்பாவோடு ஜாலியாக அன்றைய பேப்பர் விஷயங்களை அலசினான்.

சற்றைக்கெல்லாம் எழுந்து வந்தாள் கல்யாணி.

“ஏம்மா எழுந்துட்ட இன்னும் கொஞ்சம் தூங்கறதுதானே?” என்றான் சுந்தரம்.

“இல்லீங்க தூக்கம் கலஞ்சு போச்சு.” என்றவள் மளமளவென் பல் தேய்த்துக் டீ குடித்து விட்டுக் குளிக்கப் போனாள். வந்தவள் மீண்டும் கப்யூட்டரை நோக்கிப் போய் அதை இயக்க ஆரம்பித்தாள். கல்யாணி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த சுந்தரம் எட்டிப் பார்த்து விட்டு அவள் மீண்டும் கம்ப்யூட்டரில் வேலை செய்வதைப் பார்த்து விட்டுக் கடுப்பானார்.

“கல்யாணி என்ன திரும்ப இதுல வந்து உக்காந்துட்ட? மத்த வேலையெல்லாம் இல்லியா?”

“இருங்க ஒரே நிமிஷம் முடிச்சிட்டு வந்துர்றேன். நீங்க போயி காய்கறி, பழம் இதெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க, நான் இப்போ வந்திடுறேன்” என்றாள்.

சுந்தரமும் கல்யாணி சொன்னபடிப் பழங்களையும் காய்கறிகளையும் வாங்கிக் கொண்டு திரும்புகையில் எப்போதும் மீன் விற்கும் அந்த வயதான அம்மாள் “சார் நல்ல மீன் வந்திருக்கு. புது மீன் அதுவும் கடல் மீன். அம்மாவுக்குச் சின்ன மீன்னா ரொம்பப் பிடிக்கும். முள்ளே இருக்காது. சாஃப்டா இருக்கும். வாங்கிட்டுப் போ சார்.” என்றாள். அவரும் அரை கிலோ வாங்கிக் கொண்டார். கல்யாணியை ஃபிஷ் கறி செய்யச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மணி பதினொன்று ஆகியது, அப்போதும் கல்யாணி வந்தபாடில்லை. நிகில் படிக்கும் அறையிலிருந்து வந்து இரண்டு முறை எட்டிப் பார்த்து விட்டுப் போய் விட்டான். மணி பதினொன்றரையும் ஆகி விட்டது. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் நேரே கல்யாணியிடம் போனான் சுந்தரம்.

அவள் அப்போது கம்ப்யூட்டரில் சுவாரசியமாக எதையோ டைப் செய்து விட்டுப் பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் புரியாமல்

“கல்யாணி நீ என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க மனசுல? பசி உயிர் போகுது. நீ என்னடான்னா இங்க உக்காந்துக்கிட்டுக் கம்ப்யூட்டரை நோண்டிக்கிட்டுத் தன்னால சிரிச்சுக்கிட்டு இருக்க? உனக்கென்ன பைத்தியமா? ஓவரா வேலை பாத்து நட்டு கழண்டுக்கிச்சா?”

“அதெல்லமில்ல! நான் சேட்டிங் பண்ணிக்கிட்டு இருக்கேன். என் ஃப்ரெண்டு ப்ரீதாதான் என் கூட பேசிக்கிட்டு இருக்கா. அவ ஒரு ஜோக் சொன்னா. அதான் சிரிச்சுக்கிட்டு இருக்கேன். எதுக்கு நீங்க இப்டிக் கத்தறீங்க? இப்ப என்ன ஆச்சு?”

“என்ன? கத்துறனா? காலையில மணி பன்னண்டு ஆகப் போகுது. நீ இன்னும் சமையல் வேலை எதுவும் ஆரம்பிக்கவேயில்ல. என்னைக் காய்கறி பழம்லாம் வாங்கிட்டு வரச்சொன்னே! நானும் அதோட சேர்த்து மீனும் வாங்கிட்டு வந்துருக்கேன். நீ இனிமே எப்போ மீனை உரசி கறி செய்யப் போற?”

“அதுக்கு ஏன் இப்படிக் கத்தறீங்க? இருங்க ஒரு நிமிஷம் இருங்க. நான் இந்த சேட்டிங்கை முடிச்சுட்டு வந்திடுறேன். சீ! கல்யாணமே செஞ்சுக்கக் கூடாது. மத்தவங்களுக்கு அடங்கி அடிமை மாதிரி இருக்க வேண்டியிருக்கு” என்று முணு முணுத்தாள். அது சுந்தரம் காதிலும் விழுந்தது. வந்த கடுங்கோபத்தை அடக்கிக் கொண்டு பேசாமல் சென்றான். கல்யாணியும் கம்ப்யூட்டரை அணைத்து விட்டு அவன் பின்னால் சென்றாள்.

“ஏங்க! இப்டி இருக்கீங்க? என் ஃப்ரெண்டோட சேட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது இப்படித்தான் அனாகரீகமா தொந்தரவு செய்யறதா?”

“எது அநாகரீகம்? நீ வீட்டு நினைப்பே இல்லாம கம்ப்யூட்டர்ல மூழ்கியிருக்கியே அது அநாகரீகமா? நான் உன்னைக் கூப்பிட்டது அநாகரீகமா? ஏதோ வேலைதான் செய்யறன்னு பாத்தா இப்படிக் கண்ட கழிசடைங்களோடயும் சேட்டிங் பண்ணிக்கிட்டு இருக்கியே. சண்டே கார்த்தால குடும்பத்தைக் கவனிப்போம்னு இல்லாம அந்த லூசும் உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்காளே?”

“இதப் பாருங்க! கன்னா பின்னான்னு பேசாதீங்க! ப்ரீதா ஒண்ணும் கண்ட கழிசடையில்ல! நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுதான். சென்னையில வேலை பாக்கறா. ஹாஸ்டல்ல தங்கியிருக்கா. சின்னப் பொண்ணு தான்.”

“சரிதான்! அப்போ திட்ட வேண்டியது அவளை இல்ல! உன்னத்தான்! ஹாஸ்டல்ல இருக்கற சின்ன வயசுப் பசங்களுக்குச் சரியா நீயும் காலையில அரட்டையடிக்கிறியா? வெளங்குனாப்புலதான். இன்னிக்கு என்ன செய்யப் போற? சாப்பாடுன்னு ஒரு ஐட்டம் நம்ம வீட்டுல உண்டா இல்லியா?”

“ஏன் ரொம்பப் பேசுறீங்க? இன்னிக்கு என்னால சமைக்க முடியாது. ராத்திரியெல்லாம் கண் முழிச்சதுல டயர்டா இருக்கு. நல்ல பசி வேற. அதனால் நாம் ஹோட்டலுக்கு போகலாம்.”

“ஏண்டி! தெரிஞ்சு தான் பேசுறீயா? போன வாரம் தானே ஹோட்டலுக்குப் போனோம்? இப்போ மாசக் கடசீல வந்து ஹோட்டலுக்கு வான்னா என்ன அர்த்தம்?”

“கையில காசில்லன்னு தெரியுமில்ல? அவ்ளோ பேசறவரு நான் கம்ப்யூட்டர்ல ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கும் போது சமச்சு வெக்க வேண்டியதுதானே? ஒரு நாள் சமச்சா என்ன கொறஞ்சா போயிடுவீங்க?”

“கண்டிப்பாக் கொறஞ்சி போக மாட்டேண்டி! நீ ரெண்டு மாசத்துக்கு முன்னால டைஃபாய்டு காச்சல் வந்து படுத்துக் கெடந்தியே? அப்போ அபீசுக்கு லீவு போட்டுட்டுட்டு யாரு சமச்சாங்க? உனக்கும் கஞ்சி வெச்சுக் குடுத்து, நிகிலுக்கும் சாப்பாடு ரெடி பண்ணி எல்லாம் நான்தானே செஞ்சேன். வேற யாரு வந்தா? உங்கம்மாவா வந்தாங்க?”

“இதப் பாருங்க எங்கம்மாவையெல்லாம் பிடிச்சு அனாவசியா இழுத்தா நான் சும்மாயிருக்க மாட்டேன் ஆமா!”

அப்போது கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த நிகில் “என்னப்பா என்ன சத்தம்? ஏம்மா எதுக்காக சண்டை போடுறீங்க? என்றான். கல்யாணி “வந்துட்டான் பெருசா! போடா! போயி படிக்கற வேலையை மட்டும் பாரு! நாங்க என்ன பண்றோம்னு கவனிக்காதே” என்றாள். சுந்தரமும் “நிகில் கண்ணா! உங்கம்மாவுக்கு கொஞ்சம் மூளை சரியில்லை அதான் கத்தறா! நீ போடா கண்ணு!” என்றவர் கல்யாணியைப் பார்த்து “கொஞ்சம் பேசாமே இருக்கியா? நிகிலுக்கு டிஸ்டர்பிங்கா இருக்கு” என்றான்.

“இதப் பாருங்க சும்மா சால்ஜாப்பெல்லாம் சொல்லாதீங்க! அப்போ எங்கம்மாவைப் பிடிச்சு இழுத்தீங்க ! இப்போ எனக்கு மூளை சரியில்லைங்கறீங்க? என்னை என்ன இளிச்சவாய்னு நெனச்சீங்களா? இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதீங்க”

“என்னடி பண்ணிடுவ? என்னமோ மெரட்டறியே? அன்பா அதைச் செய்யுங்கன்னு சொன்னா செய்வேன். நீ பண்ற அதிகாரத்துக்கெல்லாம் கட்டுப்பட மாட்டேன். ஆமா”

“ஒஹோ! இவுரு மட்டும் அதிகாரமா இதப் பண்ணு, அதப் பண்ணுன்னு சொல்வாரு! நாங்க கேக்கணும்! ஆனா நான் ஏதேனும் சொன்னா அதை இவுரு கேக்க மாட்டாரு. நான் மாசாமாசம் பணம் குடுக்கும்போதே என்னை நீங்க இப்டி ட்ரீட் பண்றீங்களே? இன்னும் மக்கு மாதிரி வீட்டுல இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”

“என்னடி பேச்செல்லாம் ஒரு மாதிரியா வருது! இப்பத்தான் ஆறு மாசமா நீ சம்பாதிக்கற! அதுல இருந்து ஒரு பைசா நான் தொடறது இல்ல! பெரிய பேச்செல்லாம் பேசறியே! அப்டியா உன்னை அடிமை மாதிரி வெச்சுருந்தாங்க? ராணி மாதிரி வாழ்ந்தே. இப்போதானே வேலை. முன்னெல்லாம் பகல்லயும் தூக்கம், ராத்திரியும் தூக்கம்னு தூங்கி நல்ல எஞ்சாய் பண்ணிட்டு இன்னிக்கு அடிமைன்னா பேசற? “

“ஒரு நாள் உங்களைச் சமைக்கச் சொன்ன உங்களுக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது. சரி நீங்க சமைக்க வேணாம்! நானும் சமைக்கற மூடில இல்ல! அதுனால ஹோட்டல் போகலாம் காசு நான் தரேன். எங்கிட்ட இருக்கு”

“இன்னிக்கு நிகில் ஃப்ரெண்டை நம்ம வீட்டுலச் சாப்பிடக் கூப்பிட்டு இருக்கானே? அவனை என்ன செய்வ?”

“அதனால என்ன? அந்தப் பையனையும் சேத்துக் கூட்டிக்கிட்டுப் பொனாப் போச்சு!, உங்க கிட்ட காசு இருக்காதுன்னு தெரியும் நான் தரேன் எங்கிட்ட இருக்கு”

“ஒத்தக் காசு நான் உங்கிட்ட வாங்காதப்போவே நீ இந்தப் பேச்சுப் பேசற! வேண்டாம் தாயே! நான் உன் காசுல சாப்பிட வரல! எனக்கு மட்டும் ஒரு சோறு வெச்சிக்க எனக்குத் தெரியும். தயிர் இருக்கு ஊத்திச் சாப்பிட்டுக்கறேன். நீயும் உன் பையனும், அவன் ஃபிரெண்டும் வேணாப் போய்ச் சாப்பிட்டு வாங்க!”

“நான் உங்க காசுல உக்காந்து சாப்பிட்டேன்னு குத்திக் காட்டறீங்களா? இது வரைக்கும் எனக்கு எவ்ளோ செலவாச்சுன்னு கணக்குப் பண்ணிச் சொல்லுங்க! நான் சம்பாதிச்சு முழுசும் திருப்பிக் குடுத்துடறேன். “

கேட்டுக் கொண்டிருந்தவன் கோபம் தலைக்கேற கல்யாணியை ஓங்கி அறைந்தான். அறை பட்ட வேகத்தில் கல்யாணி அப்படியே உட்கார்ந்து விட்டாள். கண்களில் பூச்சி பறந்தது. கண்ணீர் பெருகத் தொடங்கியது. அது வரை அம்மா அப்பா சண்டையை அறைக்குள் இருந்து வேதனையோடு கேட்டுக் கொண்டிருந்தவன் ஓடோடி வந்தான்.

“என்னப்பா அம்மாவை அடிச்சிட்டீங்க! சீ! நீங்களும் ஒரு ஆம்பிள்ளையா? உங்க மேல நான் வெச்சிருந்த மரியாதையே போச்சு!” என்றவன் தாயைத் தேற்றினான். சுந்தரமும் தான் செய்த செயலுக்கு மிகவும் வெட்கி அங்கே இருக்க முடியாமல் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியேறினான்.

வீடே அமைதியாக இருந்தது. கல்யாணியின் விம்மல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

“அம்மா! இத்தனை வருஷத்துல நீயும் அப்பாவும் இப்டி சண்டை போட்டுக்கிட்டதே இல்லியே! அப்பா உன்னைக் கை நீட்டி நான் பாத்ததே இல்லயேம்மா! நீங்க பேசறதை எல்லாம் நான் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தேன். கோவத்துல ரெண்டு பேருமே வரம்பு மீறிட்டீங்க! இப்போ நான் என் ஃபிரெண்டு வீட்டுக்குப் போறேன். தனியா உக்காந்து நீ யோசி! நீ பேசினது, செய்யறது எல்லாம் சரியான்னு” என்றவன் அவனும் புறப்பட்டு விட்டான்.

தனிமையில் கல்யாணியிடம் பல எண்ணங்கள். சுந்தரத்தின் மேல் கோபம் வந்தது. “அப்டி நான் என்ன சொல்லிட்டேன்? ஒரு நாள் சமைங்கன்னு சொன்னது ஒரு தப்பா? இல்ல எங்கிட்ட காசு இருக்கு வாங்க எல்லாரும் சாப்பிடலாம்னு நான் சொன்னது தப்பா? இப்டி அடிச்சிட்டாரே! அதுவும் பையன் எதுத்தாப்போல? சீசீ! என்ன வாழ்க்கை? பொம்பளைங்கன்னாலே சமயக்கட்டுல தான் அடங்கிக் கெடக்கணுமா?” இப்படி ஓட ஆரம்பித்த எண்ணங்களை அவள் மனசாட்சி தடுத்தது. “கல்யாணி! உண்மையாச் சொல்லு? உன்னை அடிமை மாதிரியா வெச்சுருக்காரு? பசியோட இருக்கற நேரம் நீ இப்டி மரியாதை இல்லாமே பேசினா யாருக்குத்தான் தான் கோவம் வராது? அதுவும் இது வரை செலவழிச்ச காசெல்லாம் திருப்பிக் கொடுக்கறேன்னு எப்படி நீ சொல்லலாம்?” என்று இடித்துக் காட்டியது. தான் செய்த தவறு மெதுவாகத் தெரிய வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மனம் அமைதியடைந்தது.

“நான் சொன்னது தப்புதான். ஆனா அவர் மேலயும் தப்பு இல்லாம இல்லை. அவர் காசு எங்காசுன்னு நான் வித்தியாசம் பாக்காதப்போ இவுரு மட்டும் என்னைப் பிரிச்சுப் பாக்கலாமா? இவருக்கு உதவி செய்யத்தானே நான் சம்பாதிக்கறேன். அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறார்?” அடங்கியிருந்த கண்ணீர் மீண்டும் வெளிப்பட்டது. ஏதாவது செய்தால்தான் மனசு ஆறும் போல இருந்தது.

மேஜை மேல் சுந்தரம் வாங்கி வந்த மீன் இருந்தது. அவற்றை உரசிக் கழுவி நறுக்கி மசாலா சேர்த்துக் கறி செய்தாள். சோறு வடித்து அந்த மீனையே கொஞ்சம் போட்டு மசாலாவும் தேங்காயும் நிறைய அரைத்து விட்டு மீன் குழம்பு செய்தாள். சுந்தரம் வந்தான். வரும்போதே கல்யாணிக்குப் பிடித்த சாக்லேட்டும், பூவும் வாங்கி வந்தான்.

“கல்யாணி! சாரிம்மா! இத்தனை நாள் உன்னை நான் கண்டிச்சது கூடக் கெடையாது. ஆனா இன்னிக்கு அடிச்சுட்டேன், என்னை மன்னிச்சிடும்மா, ஆனா என் கோபத்தைத் தூண்டுற முறையில நீ ஏன் நடந்துக்கற? அதான்”

அந்த வார்த்தைகளில் மனசெல்லாம் கரைந்து இளகிப் போயிற்று. ஒன்றும் பேசாமல் அவன் கொடுத்த பூவை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டாள். சாக்லேட்டை அப்புறம் சாப்பிடலாம் என்று ஃப்ரிட்ஜில் வைத்தாள். அப்போது ஃபிரண்டோடு உள்ளே வந்த நிகில்

“என்னம்மா மீன் வாசனை தூக்குது. இன்னிக்கு மீன் சமையலா நம்ம வீட்டுல? ஒரு புடி புடிக்க வேண்டியது தான்! சூப்பர்மா” என்று சொல்லி சூழ்நிலையைக் கலகலப்பாக்கினான். பின்னர் நடந்ததையெல்லாம் மறந்து நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். நிகிலின் நண்பன் இருந்ததால் சண்டை பற்றி அதிகம் பேசவில்லை. சமையல் பிரமாதம் எனப் புகழ்ந்தனர்.

அதன் பின்னர் நடந்ததை மறந்து சிரித்துப் பேசி மகிழ்ந்தனர்.

அந்த வீட்டில் சிரிப்பொலி கேட்டாலும் அது ரொம்ப நாள் நிலைக்காது என்று சொல்வது போல கல்யாணியின் வலது கண் துடிக்க ஆரம்பித்தது.

 (தொடரும்)

படத்திற்கு நன்றி: http://www.dw.de/dw/article/0,,5869647,00.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *