உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-8) இறுதிப்பகுதி
ராமஸ்வாமி ஸம்பத்
கள்ளந்திரியில் குடியேறிய மணிவண்ண நம்பியையும் குமுதவல்லியையும் என்ன ஆனார்கள் என்பதைச் சற்றுப் பார்க்க வேண்டாமா? தாயுமானவரும் மட்டுவார்க்குழலியும் விடைபெற்றுக்கொண்ட பின்னர், நம்பியும் குமுதாவும் அக்கிராமத்தில் நலமாகவே வசித்து வந்தனர். முற்றிலும் புதிய இடமாக இருந்தாலும் கள்ளந்திரி வாசம் அவர்களுக்குப் பிடித்திருந்தது. பக்கத்து வீட்டு மூதாட்டி ஒருவர் குமுதாவைத் தன் மகள் போலவே கவனித்துக் கொண்டார். கடவுள் அருளால் அவர் வீட்டு மருத்துவத்தில் அநுபவம் பெற்றவராக இருந்தது குமுதாவுக்கு உதவியாக இருந்தது. அவளும் நம்பியும் அடிக்கடி மாலிரும்சோலைக் கள்ளழகரை தரிசித்து ஆநந்தம் கொண்டனர்.
அவர்கள் எண்ணங்களெல்லாம் மாலடியானிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையே என்பதுதான். தாயுமானவரிடமிருந்தும் ஒரு மடலும் வராமல் இருந்தது அவர்கள் கவலையை அதிகரித்தது. ”என்னதான் ராஜாங்க அலுவலிருந்தாலும் கர்ப்பவதியான மனைவியைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் எப்படி அவனால் இருக்க முடிகிறது” என்று நம்பி புலம்பிக் கொண்டிருந்தார்.
குமுதா அவரைச் சமாதானப்படுத்த, “அப்பா! கவலைப்படாதீர்கள். சோழ நாட்டு நடப்பு சரியில்லாத நிலையில் அவரால் எப்படி இங்கு வர முடியும்? கட்டாயம் விரைவில் வருவார்” என்று கூறினாலும் அவள் உள்மனத்தில் பெரும் ஆதங்கம் இல்லாமல் இல்லை.
நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று காலம் யாருக்கும் காத்திராமல் கழிந்து கொண்டிருந்தது. ஒரு நாள் குமுதவல்லி ஒரு ஆண்மகவை ஈன்றெடுத்தாள். ஆனால் அவள் உடல்நலம் குன்ற ஆரம்பித்தது.
”அப்பா! நான் வெகு நாள் உயிர் வாழ்வேனென்ற நம்பிக்கை எனக்கில்லை. தாடாளன் அருளால் இச்சேய் நலமாக உள்ளது. குருகூர் சடகோபரின் மீது அவருக்கு நல்ல ஈடுபாடு. ஆகவே இவனுக்கு மாறன் எனப்பெயர் இடவும். என்றாவது ஒருநாள் அவர் உங்களிடம் வருவார். அவர் மீது சினங்கொள்ள வேண்டாம். அவர்க்கு உங்கள் மேல் அளவிலடங்காத மரியாதை. என் மேல் அபரிமிதமான அன்பு. நாட்டு நிலை அவரைக் கட்டி வைத்திருக்கிறது. மேலும் அரசகட்டளையை மீறி அவரால் ஏதும் செய்ய இயலாமல் போயிருக்கலாம். மாறனை அவரிடம் ஒப்படைக்கவும். அதுவரை பக்கத்து வீட்டு மூதாட்டியிடம் இவனை வளர்க்கும் பொறுப்பினை விடவும்” என்று சொல்லிக் குமுதவல்லி பூவும் பொட்டுமாக விடைபெற்றுக் கொண்டாள்.
“தாடாளா! இது என்ன சோதனை!” என்று நம்பி மனம் நொந்து கதறிக் கொண்டே இருந்தார். அடுத்த வீட்டு மூதாட்டி அக்குழவியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது நம்பிக்குச் சற்று ஆறுதலாக இருந்த்து.
இதற்கிடையில் சோழநாட்டு நிலை பற்றி வந்த விதவிதமான வதந்திகள் அவருக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தின. ‘கோவிந்தராஜர் மூர்த்தம் அவ்யபதேஸ்யனால் கடலில் எறியப்பட்டது’, ’பகவத் ராமானுஜர் மன வேதனையால் திருவரங்கத்தை விட்டுத் திருப்பதிக்கு ஏகி விட்டார்’, ’அக்குறுநில மன்னன் கழுத்தில் பிளவை நோய் கண்டு மாண்டு விட்டான்’ என்பதே அந்த வதந்திகள். ’இவ்வளவு நிகழ்வுகளுக்கிடையில் மாலடியானுக்கு என்ன நேர்ந்திருக்கும்’ என்ற ஆலோசனை அவரை வாட்டி வதைத்தது.
இப்படியாகப் பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் மாலடியான் அவர் முன் நின்றது அவரது கவலையைச் சீற்றமாக்கியதில் வியப்பு ஒன்றும் இல்லை.
மாலடியான் காழியில் மணிவண்ண நம்பி மற்றும் குமுதவல்லியிடம் விடைபெற்றுக் கொண்டதிலிருந்து தான் செய்த அனைத்துக் காரியங்களையும் விவரித்ததோடு கோவிந்தராஜர் சிலையைக் காக்கச் செய்த முயற்சிகளையும் விளக்கினான். இறுதியில் திருமுல்லைவாயிலில் ‘இயற்பா சாற்றுமுறை’ வைபவமாக நடந்தேறியதை விவரிக்கும்போது நம்பி குறுக்கிட்டார்.
”ஹூம்! இப்படிப்பட்ட செயற்கரிய செயலைப் புரிந்து விட்ட உன் பெருமையை எங்களிடம் பறை சாற்றிக் கொள்ளத்தான் இங்கு வந்தாயோ? உனக்கு வெட்கமாக இல்லை?” என்று ஏளனத்துடன் கேட்டார்.
“மாமா! தங்களுக்குச் சற்றுப் பொறுமை தேவை. அந்த வைபவத்தின் போதுதான் என் பல நாள் முயற்சி திருவினையானது. இயற்பா கோஷ்டி முடிந்ததும் ஊழிமுதல்வனுக்கு அமுது சேவிக்கத் திரை போடப்பட்டது. அந்த அரை நாழிகை இடைவேளையில் கோவிந்தராஜரின் மூர்த்தம் சப்தமின்றி வெகு ஜாக்கிரதையாக என் வீட்டின் பாதாள அறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒரு போலி சிலையினைத் திரை முன் வைத்தோம். அப்படி மாற்றப்பட்ட சிலைக்கு அமுது சேவித்தபின், திரை நீக்கம் செய்து மற்ற கைங்கர்யங்களை நடத்தி முடித்தோம். ஆக, தாங்கள் வருந்தத் தேவை இல்லை. கடலில் இடப்பட்டது ஒரு மாற்று விக்கிரகமே” என்றான் மாலடியான்.
இதைக்கேட்ட மணிவண்ண நம்பி வியப்புடன், “அப்படியா! அது எப்படிச் சப்தமில்லாமல் அந்தப் பெரிய சிலையை மாற்றினீர்கள்?” என்றார்.
“அமுது சேவிக்கும் போது, இவ்விழாவிற்கென்றே கொணரப்பட்ட பெரிய மணியின் இடைவிடா ஓசை மற்ற எல்லா அரவங்களையும் அறவே அடைத்து விட்டது.”
“அப்பா, நீ எவ்வளவு உயர்ந்தவன்! அரசன் போக்கிலேயே செயற்பட்டு, கோவிந்தராஜரின் மூர்த்தத்தைக் காப்பாற்றி இருக்கிறாயே! வைணவர்கள் காலம் காலமாக உனக்குக் கடன்பட்டிருப்பர்,” என்று நெகிழ்வோடு கூறிய நம்பி, ”இப்படிப்பட்ட உபாயம் உன்னைத் தவிர வேறு எவர்க்குத் தோன்றும்” என்றார்.
“மாமா, அது என் உபாயமன்று. இந்த யோசனையை எனக்கு வழங்கியவர் வேறு யாரும் அல்ல. அவர் திருவரங்கத்து அமுதனாரே.”
”ஆஹா! அந்தாதி பாடிய அமுதனாரா?” என்று வினவிய நம்பி, “அந்தச் சிலை இப்போது எங்கு உள்ளது?’ எனக்கேட்டார்.
“சாற்றுமுறை நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர், கோவிந்தராஜரின் சிலையை எவர் கண்களிலும் படாமல் திருப்பதிக்குக் கொண்டு சென்று அங்கே தண்டு கொண்டிருந்த எம்பெருமானாரிடம் சமர்ப்பித்தோம். அந்த ஆச்சார்யப் பெருந்தகை எப்படித் தில்லி பாதுஷாவின் அரண்மனையில் ராமப்ரியன் என்கிற ஸம்பத்குமாரரை வரவழைத்து மிக்க மகிழ்ச்சி கொண்டாரோ அதேபோல் ஆநந்தக் கண்ணீர் பெருகக் கூடாரை வெல்லும் கோவிந்தனை அப்படியே அணைத்துக் கொண்டார். ’சிலகாலம் இத்திருப்பதியில் வாசம் செய்யும். என்றாவது ஒரு நாள் நீவிர் திருச்சித்திரக்கூடம் திரும்புவது உறுதி’ என்று சொல்லி, அப்பகுதியை ஆண்டுவந்த யாதவ அரசனை அழைத்து வருமாறு பணித்தார். அவ்வரசன் வந்தபின், அவனிடம் கோவிந்தராஜருக்கு ஒரு கோயில் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். அம்மன்னனும் உடையவரின் ஆணைப்படி அதற்கான ஆயத்தங்களைச் செய்து ஆறே மாதங்களில் அக்கோயிலை எழுப்பி அதனைச்சுற்றியுள்ள பகுதிக்கு ராமானுஜபுரம் எனப் பெயரிட்டான். கோவிந்தராஜர் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்த பின் எம்பெருமானார் திருவரங்கம் திரும்பினார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அரங்கனில் இரண்டறக் கலந்தார்” என்று கூறினான் மாலடியான்.
“மாலடியானே, என்னை மன்னித்து விடு. குமுதவல்லி உன் உயர்ந்த பண்புகளைப் பலவாறு பல முறை எடுத்துரைத்தும் அவற்றை மறந்து என் மதியீனத்தால் உன்னை எவ்வாறெல்லாம் தகாத வார்த்தைகளால் சாடி விட்டேன்” என்று கண்ணீர் மல்கக் கூறி அவனை ஆலிங்கனம் செய்து கொண்டார்.
மணிவண்ண நம்பி, மாலடியான் மற்றும் மாறன் ஆகிய மூவரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லையோ என்ற அளவில் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர். ‘எம்பெருமானார் திருவடிகளே சரணம்’ என்று அவர்கள் திருவரங்கத் திசை நோக்கி வணங்கினர்.
”என்றாவது ஒருநாள் நீவிர் திருச்சித்திரக்கூடம் திரும்புவது உறுதி” என்று திருப்பதியில் பகர்ந்த எம்பெருமானாரின் சூளுரை வீண் போகவில்லை. ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின், விஜயநகர சாம்ராஜ்யத்தினைப் பம்பா நதி தீரத்தில் இருந்த ஹம்பி மாநகரிலிருந்து ஆண்டு வந்த அறவீடு குலத்தோன்றலான அச்சுதராயன் என்பான் மீண்டும் கோவிந்தராஜர் மூர்த்தத்தினைத் தில்லைக் கனகசபையை ஒட்டிய திருச்சித்திரக்கூடத்தில் நிலை பெறச் செய்தான். [திருப்பதிவாழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றொறு கோவிந்தராஜர் சிலையைத் தயார் செய்து அதனை அந்தக் கோயிலில் ப்ரதிஷ்டை செய்தான்.]
’உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது’ என்று ஆயர்பாடி நங்கையர் கண்ணனிடம் அறுதியிட்டுக் கூறியதை ஆண்டாள் தம் ‘திருப்பாவையில்’ அருளிச் செய்தபடி, ’எப்படி ஒளியையும் கற்றையையும் பிரிக்க முடியாதோ, எப்படி வார்த்தையையும் பொருளையும் பிரிக்க முடியாதோ, எப்படிப் பழத்தையும் சுவையையும் பிரிக்க முடியாதோ, அதேபோல் எங்களையும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்டது எங்கள் பாந்தவ்யம். எங்களுக்குள் பேதம் இல்லை. பேதமெல்லாம் உங்களிடம்தான். பிரித்தாலும் மீண்டும் சேர்ந்து விடுவோம்’ என்று சொல்லாமல் சொல்லும் ஆடலரசனையும் அரவணைத் துயில்வோனையும் இன்றும் தில்லையில் தரிசிக்கலாம்.
வந்துஎதிர்த்த தாடகைதன் உரத்தைக் கீறி
வருகுருதி பொழிதர வண்கணை ஒன்று ஏவி
மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்!
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத்
தில்லைநகர்த் திருச்சித்திரகூடந் தண்ணுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணிமணி ஆசனத்து இருந்த அம்மான் தானே!
—குலசேகர ஆழ்வார் (பெருமாள் திருமொழி)
[முற்றும்]
==============
முடிவுரை
கடந்த இரு மாதங்களாகப் பொறுமையுடனும் உன்னிப்பாகவும் அடியேனுடைய குறுந்தொடரைப் படித்துப் பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் தங்கள் அறிவு சார்ந்த கருத்துக்களையும் பதிவு செய்த வல்லமை குழுமத்தினர் அனைவருக்கும் மற்றும் இதனை ’வல்லமை’ மின் இதழில் பதிவு செய்த ஆசிரியர் குழாம் அன்பர்களுக்கும் முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இக்கதையின் மூலக்கருவினை என்னுள் அசை போட்டுக் கொண்டிருந்த என்னை ’நீங்கள் ஏன் அதற்கு ஒரு உருவினைக் கொடுக்கக்கூடாது?’ என்று வினவியதோடு, ‘நீங்கள் அக்கதையை எழுத வேண்டும், உங்களால் முடியும்’ என்று ஊக்குவித்த இனிய நண்பரும், என்னைத் தன் ஆசானாக அங்கீகரிக்கும் – உண்மையில் எளியேனின் ஆசான் அவர் – திரு. திவாகர் அவர்களுக்கு இத்தொடரினைச் சமர்ப்பிக்கின்றேன்.
கல்லூரி மாணவனாக இருந்த கால கட்டத்தில், புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெகசிற்பியன் ’ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிய ’திருச்சிற்றம்பலம்’ எனும் வரலாற்றுப் புதினத்தினைப் படித்த நாள் முதல் அத்தொடருக்குத் தொடராக ’கடலில் எறியப்பட்ட தில்லைத் திருச்சித்திரக்கூடத்து கோவிந்தராஜர் சிலை” எவ்வாறு மீண்டும் அதே கனகசபை வளாகத்தில் நிலை நாட்டப்பட்டது?’ என்பதனை விளக்க வேண்டும் என ஒரு ஆர்வம் என்னில் எழுந்தது. அதன் விளைவாகச் சில வரலாற்றுக் குறிப்புகளைத் தேடும் முயற்சியில் பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரியாரின் ‘A History of South India’, தென்னக வரலாற்று ஆராய்ச்சியாளர் சதாசிவ பண்டாரத்தார் அவர்களின் ‘பிற்காலச் சோழர் வரலாறு’, ஸ்ரீமான் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியரின் ‘வரலாற்றில் வைணவம்’, அறிஞர் பி.ஸ்ரீ. ஆசார்யா அவர்களின் ‘ஸ்ரீராமானுஜர்’ போன்ற நூல்களைப் படித்தது எனக்கு ஒரு துணிவினை அளித்தது.
‘உறவேல் ஒழிக்க ஒழியாது’ ஒருவகையாக 1970 ஆண்டில் ஓர் உரு எடுத்தது. என்னுடையப் படைப்பில் நானே மகிழ்ந்து போய் அதனைக் ‘கல்கி’ வார இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அப்பத்திரிகை ஆசிரியர் ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்ற துண்டுக் காகிதத்துடன் பத்திரமாகத் தன் செலவில் எனக்குத் திருப்பி அனுப்பி வைத்தார். ஒரு பக்கம் ஏமாற்றம் என்றாலும், ”சரி, நமக்கும் கதை எழுதுவதற்கும் ‘ஸ்நான ப்ராப்தி’ இல்லை போலும்” எனக்கருதி அந்த முதல் படைப்பை உடைப்பில் போடாமல் ஒரு பெட்டியின் கீழ் மட்டத்தில் வைத்து விட்டு மறந்து விட்டேன்.
ஆண்டுகள் உருண்டோடின. சென்ற நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் விசாகப்பட்டினத்தில் வசிக்கும் போது ஒரு நாள், ’வம்சதாரா’, ‘திருமலைத் திருடன்’, ‘S.M.S. எம்டன்’ போன்ற வரலாற்றுப் புதினங்களைப் படைத்த திரு. திவாகரிடம் அக்கதையைப் பற்றி விவாதித்தேன். அவர் அக்கதையைப் படிக்க ஆவல் கொண்டார். எப்படியோ அந்த எழுத்துப்பிரதியைத் தேடிக்கண்டு பிடித்து அவரிடம் கொடுத்தேன். அதைப் படித்த பின், “உங்கள் முயற்சி போற்றத்தக்கதே!” என்று கூறி விட்டு அவர் கண்களில் பட்ட சில வரலாற்றுப் பிழைகளைச் சுட்டிக்காட்டி, இவைகளைச் சரி செய்ய மேலும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். “இதைத்தவிர உங்கள் கதைக்கு ஒரு பெண் பாத்திரம் தேவை” என்றும் பகர்ந்தார்.
அந்த அறிவுரையின்படி மீண்டும் அசைபோட ஆரம்பித்து, வரலாற்றுக் கட்டுரைகளைத் தேடிப்பிடித்துக் குறிப்பெடுக்க முனைந்தேன். அனாதிகாலம் தொட்டுத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் நாகரீகத்தினை ஆராய்ந்த தேவநேயப் பாவாணர், பேராசிரியர் P.T. ஸ்ரீனிவாஸ ஐயங்கார், பேராசிரியர் N. சுப்ரமணியன், மு. ராகவையங்கார் போன்ற தமிழ் வரலாற்று அறிஞர்களின் கட்டுரைகள் எனக்குப் பெரிதும் உதவின. அண்மையில் எனக்கு ஒரு பொக்கிஷம் ஆந்திராவில் உள்ள குண்டூர் நகரத்தில் கிடைத்தது. அதுதான் ’Ramanuja – a Reality Not a Myth’ என்னும் முனைவர் A. கிருஷ்ணமாச்சாரியாரின் ஆராய்ச்சி நூல். ”கோவிந்தராஜரின் சிலையைக் கடலில் இட்டது சோழ வம்சாவளியைச் சார்ந்த மன்னவன் அல்ல” என்ற அவர்தம் ஆணித்தரமான ஆராய்ச்சி முடிவு என்னை வெகுவாகக் கவர்ந்தது. ’ஸ்ரீராமானுஜர்—வாழ்வும் வாக்கும்’ எனும் மா. சீதாராமன் அவர்களின் நூலும் எனக்குப் பல உபயோகமுள்ள செய்திகளை அளித்தது. அத்துடன் பொன்னியின் செல்வன் யாஹூ குழும அங்கத்தினர்களின் பகிர்வுகளும் மிகவும் பயன்பட்டன.
திரு. திவாகரின் ஆணைப்படி, குமுதவல்லி எனும் கதாநாயகி இக்கதையில் இடம் பெற்று அதற்கு ஒரு பொலிவினை ஏற்படுத்திக் கொடுத்தாள். “எல்லாம் சரி, தமிழ் நடைக்கு என்ன செய்வது.” என்று அவரிடம் கேட்டேன். ”ஆண்டாள் அன்னையை, ஆழ்வார்களை அணுகுங்கள். அவர்களின் தமிழில் மயங்கி நாரணனே அவர்கள் ’சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ ஆகி விட்டான். அவர்கள் அருளால் வெகு விரைவில் தமிழ் நடை உங்களைத் தேடி வரும்” என்று கூறினார். தன்னை ’நம்மாழ்வாரின் காதலி’ என்று பாவிக்கும் அந்தப் பொல்லாத மனிதர் சொன்னபடிச் செய்ததால் இன்று என் முயற்சி திருவினையாகி உள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவை முற்றிலும் அடியேனின் அறியாமையின் விளைவு.
மற்றபடி எல்லாப் புகழும் ஆண்டாளுக்கே! ஆழ்வார்களுக்கே!
படங்களுக்கு நன்றி: http://www.indiadivine.org/audarya/sri-vaishnava-forum/450066-sri-kallazhagar-madurai.html
http://thiruchitrakoodam.blogspot.in/2008/05/non-monetary-plea-get-blessings-by.html
அவசரம் அவசரமாக முடித்தது போன்ற உணர்வு. இன்னும் கொஞ்சம் போயிருக்கலாமோ? எப்படியோ வரலாற்றுச் சான்றுகளோடு ஆன நிரூபணம் இடம் பெற்றது மகிழ்வைத் தருகிறது. பகிர்வுக்கு நன்றி.
மண்ணில் விழுந்த நல்விதை முளைத்தே தீர வேண்டும். காலந்தாழ்ந்தாவது, மழை நீரைக் குடித்தவுடன். இதுவும் அப்படித்தான். வெகு நாள் உங்கள் மனமெனும் பூமியில் இருந்து இன்று முளைத்து, தளிராடி, மகிழ்விக்கிறது. இன்னும் நிறைய சீரிய படைப்புகளைப் படையுங்கள்..வாழ்த்துக்கள் ஐயா!
உங்கள் கதைக்கு ஒரு பெண் பாத்திரம் தேவை” என்றும் பகர்ந்தார்.
How he (Dhivakar) suggested only one Sir?. Generally he brings in two. Vamsadhara-Vinayani, Kadhyayini-Avantika, Radhai-Noble.
The name Uravel ozhikka ozhiyathu is so sweet so the story. Vazhthukkal Thiru Ramaswamy Sampath. – Dhevan.
அருமை. எனக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை பாராட்ட. நல்ல நடை. இன்னும் நிறைய எழுதுங்கள்.
உங்களை ஊக்குவித்த நண்பன் திவாகருக்கும் நன்றி.
தமிழும் பக்தியும் கலந்து விட்டால் அங்கே இலக்கியச் சுவைக்குப் பஞ்சமே இல்லை.
வாழ்த்துகளும், பணிவன்பான வணக்கங்களும் ஐயா.