கை வேலை
நடராஜன் கல்பட்டு
“சார் சௌக்கியமா சார்?”
“நான் சௌக்கியமா இருக்கேம்பா. ஆமாம் நீ யாருப்பா? தெரியலையே எனக்கு?” மூக்கில் சரிந்திருந்த மூக்குக் கண்ணாடியைத் தூக்கி அது இருக்க வேண்டிய இடத்திற்கு அனுப்பிய படி கேட்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர்.
“சார் என்னெத் தெரியலையா சார்? நான் ஒங்க கிட்டெ இருவது வருசத்துக்கு முந்தி அஞ்சாங் கிளாசு படிச்ச கோவாலு சார்.”
“ஆமாம் இப்பொ நெனெப்பு வருது. எங்கிட்டெ ரெண்டு கோவாலு படிச்சாங்க. ஒத்தன் கருப்பா இருப்பான். அவனெ எல்லாரும் ‘கருப்பு கோவாலூ கருப்பு கோவாலூ’ ன்னு கூப்பிடுவாங்க. இன்னொருத்தன் கொஞ்சம் சிவப்பா இருப்பான். அவெனெ மத்தவங்க ‘சேப்பு கோவாலூன்னு’ கூப்பிடுவாங்க. நீ என்னவோ கருப்பும் இல்லெ. செவப்பும் இல்லெ. மா நிறமா இருக்கே. எந்த கோவாலு நீ?”
“நான் செவப்பு கோவாலு சார். வெய்யிலுலெ சுத்தி சுத்தி வேலெ செய்யுறதாலெ கொஞ்சம் கருத்து போயிட்டேன் சார்.”
“என்னெ வேலெ செய்யுறெ அப்பிடி வெய்யிலெ சுத்தி கருத்து போறாப்புளெ?”
“நீங்க படி படீன்னு சொன்னப்போ சரியாப் படிக்கலே. அஞ்சாங் கிளாசோட நின்னூட்டேன். படிக்காதவனுக்கு எவன் சார் வேலெ குடுக்குறான். இப்போ எதோ கைலெ கெடெச்செ வேலெ பாக்குறேன் சார். அதான் என்ன வேலெ கைலெ கெடெய்க்குதே அதெச் செய்யுறேன் சார். இன்னிக்கி ஒங்களெப் பாத்ததும் ஒங்க வீட்டுக்கு வந்து ஒங்களையும் அம்மாவையும் காலுலெ உளுந்து வணங்கி ஆசி வாங்கிக்கணும்னு தோணீச்சு. அதான் ஒங்க கூடவே ஊடு வரெ வந்திருக்கேன் சார். அம்மாவையும் கூப்பிடுங்க சார்.”
சமையல் உள்ளே சென்று மனைவியை அழைத்து வருகிறார் ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்.
அவர்கள் காலில் விழுந்து வணங்குகிறான் கோவாலு.
ஆசிரியரின் கண்கள் பனிக்கின்றன. வாழ்த்துகிறார் பழைய மாணவனை மனமாற, “நல்லா பல காலம் வாழணும்பா!” வாழ்த்தியவர் தொடர்கிறார், “என்ன ஒரு மரியாதை என் மேலெ ஓனக்கு! ஒரு ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இருக்குற பந்தமே அலாதி தான்! கொஞ்சம் இரு கோவாலூ. நல்ல வெய்யிலுலெ வந்திருக்கே. அம்மாவெ மோரு கொண்டு வரச் சொல்லுறேன். அதெக் குடிச்சூட்டு போ. இன்னும் எத்தினி தூரம் அலையணுமோ ஒனக்கு.”
ஆசிரியரின் மனைவி மோரு கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக் குடித்து விட்டு கோவாலு, “சார் வரேன் சார். ரொம்ப நன்றி சார்” என்று சொல்லி நகர்கிறான்.
“ஏம்மா பர்வதம் இங்கெ டிவி மேஜெ மேலெ எம் பர்செ வெச்சிருந்தேனே அதெ நீ எடுத்து எங்கெனா வெச்சியா?”
“நான் பாக்கலீங்களே.”
“என்னது நீ பாக்கலையா? அய்யோ அதுலெ தானே இப்பொ வங்கிலேந்து வாங்கி கிட்டு வந்த ஐயாயிரம் ரூவா வெச்சிருந்தேன். ஆண்டவா…..”
சாய்கிறார் நாற்காலியில் ஆசிரியர்.