பெண்ணுக்கு பெண்ணே எதிரி
சித்திரை சிங்கர்
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் பெண்கள் வாழத்தகுதியான நாடு என்ற பட்டியலில் நமது நாட்டுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது கண்டு வெட்கமாக இருக்கிறது. நமது நாட்டு சுதந்திர கொடியினை தாங்கி பிடித்துக்கொண்டு நிற்பவள் நமது பாரதமாதா என்று பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது நாடு. கூட்டுக்குடும்பங்களில் பல பெண்களின் பொறுமை காரணமாகத்தான் இன்றும் இந்திய குடும்ப வாழ்க்கை முறைகளை வெளிநாட்டு பெண்களும் விரும்பி இந்திய கணவர்களை தேடி வந்து இந்திய பாரம்பரியமான முறையில் திருமணமும் செய்துகொள்வது அவ்வப்போது பத்திரிக்கைகளில்/தொலைகாட்சிகளில் செய்திகாக வருகிறது. பெண்களுக்கு மரியாதை கொடுப்பதிலும் நமது இந்திய நாட்டுக்கு ஈடு இணை இல்லை என்பதே பலரின் எண்ணம். இருப்பினும் புள்ளிவிவரப்படி இன்றைய நிலையில் பெண்கள் வாழத்தகுதியில் கடைசி இடம் என்பது மனதுக்கு வேதனையாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இன்றைய பெண்கள்தான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அந்த காலத்தில் இருந்து இன்று வரை பெண்களை ஒரு போகப் பொருளாகவே நமது நாட்டு ராஜா ராணி கதைகளிலும், தொடர்ந்த காலங்களிலும் சொல்லி சொல்லி மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்கள், நமது முன்னோர்கள். சமீப காலமாகத்தான் பெண்களின் திறமைகள் வெளிப்பட்டு பெண்களுக்கு ஒரு தனி இடம் கிடைக்க ஆரம்பித்து உள்ளது. அந்த தனி இடங்களும் நகர்ப்புறங்களிலும் படித்த பெண்கள் மத்தியிலும் மட்டுமே…! நமது சமுதாய அமைப்பு ஒருவகையில் பெண்கள் ஆண்களை சார்ந்து வாழும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தாலும், சமுதாயத்தில் நன்கு அனைத்து தரப்பு மக்களிடம் செல்லும் சினிமா உலகில்… வருகின்ற திரைப்படங்கள் அனைத்துமே ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக்கி திரைப்படங்களின் வசூலை பாதிக்காதவாறு எடுக்கும் விதம் மாற வேண்டும். இதற்கு பெண்களும் கொஞ்சம் கூட எதிர்ப்பு காட்டாமல் பணம் ஒன்றினை மட்டுமே கருதி நடித்து வருவதும் கொடுமைதானே.
சமீபத்தில் ஒரு நடிகை ஒரு படத்தில் ஒரு ஐந்து நிமிடங்கள் நடிப்பதற்கு “இருபத்தி ஐந்து லட்சம்” சம்பளம் வாங்கியதாக செய்திகள் வந்துள்ளது. இதிலிருந்து என்ன தெரிகிறது….? பெண்களின் தாழ்வுக்கு காரணம் பெண்கள்தான் என்பது தெளிவாக தெரிகிறது. அதுவும் குறிப்பாக திரைப்படங்களில் அறுபது வயது கதாநாயகனுடன் இருபத்தி இரண்டு வயது கதாநாயகி ஜோடியாக நடிக்க ஒப்பு கொள்ளாமல் தவிர்க்கவேண்டும். (இதை கலை நோக்கில் பார்க்கவேண்டும் என்று கூறுபவர்கள் தங்கள் வீட்டு பெண்களை இது போல நடிக்க ஒப்புகொள்வார்களா..?) இதை பெண்கள்தான் செய்ய வேண்டும்.
அம்பிகா – ராதா சகோதரிகள் நடிக்கவந்த பின்பு கவர்ச்சி நடிகைகளின் இடம் காணமல் போனதை தமிழகம் மறக்காது….! திரைப்படங்கள் இன்று மக்கள் மத்தியில் அதிகமாக அதிகமாக ஊடுருவி இருப்பதால் எந்த ஒரு செய்தியும் திரைப்படங்கள் மூலமாக மக்களை சுலபமாக சென்று அடைந்துவிடும் என்பதால் திரைப்படங்களை உதாரணமாக்கி எந்த ஒரு கருத்தையும் சொல்லவேண்டி உள்ளது. கணவன் அன்புடன் வாங்கி வரும் புடவையினை விட குஷ்புவும் த்ரிஷாவும் படங்களில் கட்டிவரும் உடைகளைத்தான் இக்கால பெண்கள் விரும்புகிறார்கள்.
மேலும், முந்தைய கால கட்டத்தை விட இப்போது பெண்களுக்கு உரிமைகளும் பதவிகளும் அதிகமாகவே கிடைத்து வருகிறது. அந்நிய நாட்டு நிறுவனங்கள் கூட ஆண்களை விட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் வேலையில் சேர்த்து கொள்கிறார்கள். விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்களில் பெரும்பாலானவர்கள் மூலக்கதையினை பார்த்தால் ஒரு பெண்ணின் துணை கண்டிப்பாக அங்கு இருக்கும். பெண் சிசுகொலைகள் கூட பெண்களால் பல இடங்களில் நடத்தப்படுகிறது. கள்ளிபாலை கொடுப்பவள் கிராமங்களில் ஒரு வயதான மருத்துவச்சியாகதான் இருக்கும். இதற்காக ஆண்களை உயர்த்தி சொல்லவில்லை. பெண்களிடம் எதிர்ப்பு சக்தி கொஞ்சமாவது வர வேண்டும்.
அத்தோடு வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் தங்களின் உடை விசயத்திலும் கொஞ்சம் கட்டுபாட்டுடன் நடந்து கொள்ளவேண்டும். பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம். பெண்களின் உடைகள் பார்ப்பவர்களின் கண்களை உறுத்தாத அளவுக்கு நாகரீகமாக இருக்க வேண்டும். இதனால் பல குற்றங்கள் தடுக்கப்படும் என்பது பாசமான உண்மை.
இதுவரையில் போனது போகட்டும் என்றாலும் இனி வருங்காலங்களில் “பெண்ணுக்கு பெண்ணே எதிரி” என்ற நிலை மாறிட மாதர் சங்கங்கள் தங்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.
பெண்கள் முதலில் தங்களிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்துகொண்டால் வருங்காலத்தில் இப்போது கடைசி இடத்தில இருக்கும் இந்தியா கண்டிப்பாக முதலிடம் பிடிக்கும் என்பதில் ஐய்யமில்லை. என்ன நான் சொல்வது சரிதானே…?
ரொம்பச் சரியா சொன்னீங்கோ சார், அம்மிணிகளுக்கு எதிரி அம்மணிகளேதான்னு .
நன்றி முகில்.
சமூகத்தின் வரலாறு பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் எழுதப்பட்ட பரிதாபத்துக்குரிய கட்டுரை.