நாகேஸ்வரி அண்ணாமலை

அங்கு என்று நான் இங்கு குறிப்பிடுவது அமெரிக்காவை; இங்கு என்று குறிப்பிடுவது இந்தியாவை. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள சில முரண்களைப் பல முறை எழுதியிருக்கிறேன். இன்னொரு முறை எழுதாமல் இருக்க முடியவில்லை. இவை நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள்.

முதலில் உணவகங்கள் பற்றி. அமெரிக்காவில் உணவருந்தப் போவது உணவருந்துவதற்காக மட்டுமல்ல. பல நேரங்களில் நண்பர்கள், உறவினர்கள் சேர்ந்து ஒன்றாகக் கூடி உணவருந்திக்கொண்டே பல விஷயங்களைப் பற்றி பேசுவதற்காக, விவாதிப்பதற்காகப் போவார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மனவேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிய நினைத்தால் அதற்கு முன் சில விஷயங்களைப் பிள்ளைகளுக்குத் தெரியாமல் பேசித் தீர்க்க விரும்பினால் ஓட்டலுக்குப் போவார்கள். ஓட்டலில் யாரும் மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசலாம். அவர்களை எழுந்து வெளியே போங்கள் என்று சொல்ல மாட்டார்கள். சில உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழியுமாதலால் முன்கூட்டியே இடங்களை ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆனால் அங்கும் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதி இல்லை.

ஓட்டலுக்குள் நுழைந்தவுடனேயே நாமாகச் சென்று எந்த மேஜையிலும் உட்கார்ந்து விட முடியாது ஒரு மேஜையைத் தயார் செய்த பின்பே – புதிய மேஜைவிரிப்பு மாற்றுவது போன்ற காரியங்கள் முடிந்த பின்பே – வந்திருப்பவர்களை மேஜைக்கு அழைத்துச் செல்வார்கள். நாம் மேஜையின் அருகில் சென்று உட்காரும் போதே மேஜை சுத்தமாக இருக்கும். இந்தியாவில் ஐந்து நட்சத்திர ஒட்டல்களில் இப்படி இருக்கலாம். மற்ற உணவகங்களில் கூட்டமுள்ள நேரம் என்றால் அடித்துப் பிடித்துக்கொண்டு போய் மேஜைகளில் இடம் பிடிக்கிறார்கள். இந்த நேரங்களில் மேஜை சுத்தம் செய்யப்படாமலே இருக்கலாம். நாம் உட்கார்ந்து சுத்தம் செய்யச் சொன்ன பிறகே சுத்தம் செய்வார்கள். சில நாட்களுக்கு முன்னால் ஒரு ஒட்டலுக்குப் போனபோது ஏற்பட்ட அனுபவம் இது. ஒரு மாவட்டத் தலைநகர். அந்த ஊரிலேயே பெரிய, பேர்பெற்ற உணவகம். அதில் ஏஸி செய்யப்பட்ட அறையில் இடம் காலி இல்லை. ஏஸி செய்யப்படாத அறையில் ஏகப்பட்ட கூட்டம். காலியாக இருக்கும் மேஜைகளை வேகமாகப் போய்ப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதன் பிறகு வெயிட்டர்கள் வருவதற்குத் தாமதம். அவர்கள் உணவைப் பரிமாறும் விதம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. தண்ணீர்க் குவளையிலிருந்து தம்ளருக்க
ுள் தண்ணீரை ஊற்றுவதற்குள் வெயிட்டர்கள் கைகள் தண்ணீரைத் தொடாமல் இல்லை. உணவை இலையிலோ தட்டிலோ பரிமாறும்போது அவை சுத்தமாக இருக்குமா என்று சொல்ல முடியாது. பரிமாறுவதிலும் ஒரு ஒழுங்கு கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் உண்டு முடிக்கும் முன்பே தங்கள் முறைக்காகக் காத்திருப்பவர்கள் எங்கள் மேஜையைச் சுற்றி நின்றுகொண்டு ‘சீக்கிரம் உண்டு முடித்து எழுந்திருங்கள்’ என்று சொல்லாமல் சொல்வது போல் நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் மூவரில் கடைசியாக உண்டு முடித்தவரை அவர்களே எழுந்து விடச் சொல்வார்கள் போல் தோன்றியது. நிதானமாக ரசித்துச் சாப்பிட முடியவில்லை.

இரண்டாவதாக நம் கழிப்பறைகள். ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் நான் ஒரு முறை ‘இந்தியாவிற்குப் போக இவ்வளவு தூரம் ஆசைப்படுகிறீர்களே. அங்கு நீங்கள் பிரயாணம் செய்யும் போது கழிப்பறை வசதிகள் நன்றாக இருக்காதே என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண் ‘இந்தியாவில் கழிப்பறையைத் தேடிக் கண்டுபிடித்து உபயோகிப்பது ஒரு சவால்’ என்றார். இந்தச் சவாலை எத்தனை முறை ஒரு பெண் சந்திப்பது? நானும் பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சீனாவில் கிராமப் பகுதிக்குப் போயிருந்த போது கூட அங்கிருந்த நிலை இந்தியாவில் இப்போது இருப்பது போல் மோசமாக இல்லை. இப்போது மிகவும் மாறியிருக்கலாம். மற்ற எந்த நாடுகளிலும் கழிப்பறைகள் இந்தியாவில் போல் அசுத்தமாக இருந்ததில்லை. மேலும் பொது இடங்களிலெல்லாம் கழிப்பறை இருக்கும்; பலர் வரும் கடைகளிலும் அலுவலகங்களிலும் இருக்கும்.

மதுரையிலிருந்து மைசூர் வரும் வழியில் பேருந்தை மலையில் ஒரு இடத்தில் நிறுத்துவார்கள். பேருந்திலிருந்து இறங்கியவுடனே அப்படி ஒரு துர்நாற்றம் அந்தப் பகுதி முழுவதையும் சூழ்ந்திருக்கும். அதைச் சகித்துக்கொண்டு கழிப்பறையைத் தேடிச் சென்றால் அதன் நிலையைப் பார்த்து மயங்கி விழாத குறைதான். அதற்குக் கட்டணம் வசூலித்துக்கொண்டு ஒரு வயதானவர் வேறு உட்கார்ந்திருப்பார். இந்த இடத்தில் சிறிய ஓட்டல்கள் வேறு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வியாதிகள் எவ்வளவு வேகமாகப் பரவும்! இந்தியர்களாகிய நமக்கு நோய் தடுப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் இந்தச் சூழ்நிலை நம்மைப் பாதிப்பதில்லை போலும். மனிதக் கழிவுகளை வேகமாக மாற்றும் ஆராய்ச்சியை மைக்ரோஸாப்ட் நிறுவனர்களில் ஒருவராகிய பில் கேட்ஸ் ஊக்குவிக்கிறார். நாமும் பொது இடங்களில் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள ஏதாவது செய்யக் கூடாதா? பொது இடங்களில் சுத்தமான கழிப்பறை கட்டுவது முதல் படி. ஆண்கள் பொது இடங்களைப் அசிங்கப்படுத்துகிறார்கள். பெண்கள் கஷ்டத்தை யாரும் கண்டு கொள்வதில்லை.

அமெரிக்காவில் ஒரு வேலையை முடித்துக் கொடுக்க ஒரு நாளைக் குறிப்பிட்டால் அந்த நாளில் சரியாக முடித்து விடுவார்கள். சிலர் ஓரிரு நாட்கள் முன்னதாகவே முடித்து விடுவார்கள். ஆனால் இந்தியாவில் அந்தப் பேச்சிற்கே இடமில்லை. இப்படிக் குறித்த நேரத்திற்குள் முடிக்காமல் இருப்பது தையல் கலைஞர்களுக்குக் கைவந்த கலை. ஒரு மாறுதலுக்காகக் கூட குறித்த நேரத்தில் கொடுப்பதில்லை. அரசு அலுவலகங்களில் கேட்கவே வேண்டாம். பத்து முறை இழுத்தடித்துக் கொடுத்தால் நம் அதிர்ஷ்டம்.. அவர்கள் வரச் சொன்ன நேரத்திற்குப் போனாலும் அவர்கள் அவர்களின் இடங்களில் இருப்பதில்லை. ‘ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அவர்களை வரச் சொல்லி இருக்கிறோமே, அப்போதாவது இடத்தில் இருக்க வேண்டுமல்லவா’ என்று நினைத்துப் பார்ப்பது கூட இல்லை. ஏன் நம் அரசு அலுவலர்கள் இப்படிப் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள்? தாங்கள் சேவை செய்ய வேண்டியவர்களிடம் விட்டேற்றியாக நடந்து கொள்கிறார்கள்? இதற்கெல்லாம் விடிவு எப்போது?

அடுத்தது திருமணம். அமெரிக்காவில் திருமணம் என்றால் பல மாதங்களுக்கு முன்பே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்குகிறார்கள். எத்தனை விருந்தினர்களை அழைப்பது என்பதை முன்கூட்டியே யோசித்து, யோசித்து முடிவு செய்கிறார்கள். ஓரளவிற்குமேல் போகக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். நூறு எனப்தே பெரிய எண். அத்தனை பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்புகிறார்கள். அத்தனை பேர்களுக்கு மட்டுமே ஓட்டலில் விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். நம்மை அழைத்திருக்கிறார்கள் என்றால் நாம் மட்டும்தான் போக வேண்டும். வேறு யாரையும் உடன் அழைத்துச் செல்ல முடியாது. ஓட்டல்களில் திருமணங்கள் நடக்குமாதலால் டைனிங் ஹாலில் உள்ள மேஜைகளில் எல்லோருடைய பெயர்களையும் அவரவர்களுக்குரிய இடங்களில் எழுதி வைத்து விடுவார்கள். இதனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் விருந்தினர்கள் அவர்களுக்குரிய இடத்தில் சென்று அமர்ந்து கொள்வார்கள். வரிசையில் நிற்பது, அடித்துப் பிடித்துக்கொண்டு பந்தியில் இடம் பிடிப்பது என்பதெல்லாம் இல்லை.

இந்தியாவில் அதிக பட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் ஏற்பாடுகளை ஆரம்பிப்பார்கள். நான்கே நாட்களில் பையனை முடிவுசெய்து திருமண்த்தை முடித்த ஒரு பெண்ணின் தந்தையை எனக்குத் தெரியும். இது கொஞ்சம் அபூர்வம்தான் என்றாலும் ஒரு மாதத்திற்குள் பல கல்யாணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. விருந்தினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை. அமெரிக்கர்கள் போல் வரையறுத்துக்கொண்டு அழைப்பதில்லை. ஒரு முறை எங்கள் வீட்டிற்கு எங்களைத் திருமணத்திற்கு அழைக்க வந்தவர் அப்போது அங்கிருந்த இன்னொரு நண்பருக்கும் அழைப்பிதழைக் கொடுத்து வைத்தார். நிச்சயமாக வர மாட்டார்கள் என்று தெரிந்தாலும் அழைப்பிதழைக் கொடுக்கத் தவறுவதில்லை. அப்படி அழைத்த பிறகு விருந்தினர் யாரும் தங்கள் நண்பர்களையோ அல்லது தெரிந்தவர்களையோ அழைத்து வந்தாலும் ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கேட்பதில்லை என்பதோடு அவர்களையும் அன்போடு உபசரிப்பார்கள். எதிர்பார்த்ததற்கு மேல் விருந்தினர் வந்து விட்டால் வேகவேகமாகக் கூடக் கொஞ்சம் சாதத்தையும் காய்கறிகளையும் சமைத்துச் சமாளிப்பார்கள்.

நாங்கள் திருமண விருந்திற்குச் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. சில நாட்களுக்கு முன் ஒரு திருமண வரவேற்பிற்குச் சென்றிருந்தோம். மாப்பிள்ளைதான் எங்களை நண்பர். அவர்தான் விருந்திற்கு அழைத்திருந்தார். வந்திருந்த அத்தனை விருந்தினர்களையும் சமாளிப்பதற்கு அந்தத் திருமண மண்டபம் பெரியதாக இல்லை. மதியம் 11-2 மணி வரை வரவேற்பு என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்ததால் ஒரு மணி அளவில் சென்றால் கூட்டம் குறைவாக இருக்கும் என்று அனுமானித்துக்கொண்டு ஒரு மணிக்கு மண்டபத்தை அடைந்தோம். ஆனால் மணமக்களை வாழ்த்துவதற்கு அப்போதும் விருந்தினர் கூட்டம் வரிசையில் நின்றிருந்தது. வரிசையில் நின்று எங்கள் முறை வந்ததும் மணமக்களை வாழ்த்திவிட்டு வந்தோம்.

விருந்து உண்ணப் போகும்போது அங்கும் பெரிய கூட்டம். வாழ்த்தப் போகும் போதாவது வரிசை என்ற ஒன்று இருந்தது. இங்கு அதுவும் இல்லை. ஓட்டலில் நடப்பது போலவே எல்லோரும் அடித்துப் பிடித்துக்கொண்டு இடம் தேட வேண்டியதாயிற்று. ஒரு பந்தியை முடித்துவிட்டு இடத்தைச் சுத்தப்படுத்திப் பின் அடுத்த பந்திக்கு ஆட்களை அனுப்புவது போன்ற எந்த கிரமமான ஏற்பாடும் இல்லை. சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்கள் முடிக்கும் முன்பே அருகில் போய் நின்று கொள்ள வேண்டியதாயிற்று. விருந்திற்குப் போகும் விருந்தினர்களை இதை விட நல்ல முறையில் விருந்துண்ண அழைத்துச் செல்ல முடியாதா?

மருத்துவ உதவி பெறுவதில் அங்கும் இங்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அமெரிக்காவில் 47 கோடிப் பேர் – அதாவது ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கு – இப்போது மருத்துவ இன்சூரன்ஸ் இல்லாமல் இருக்கிறார்கள். இன்சூரன்ஸ் இருப்பவர்களுக்கு நல்ல வைத்திய வசதி கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தியாவில் போல் நினைத்த நேரத்தில் நமக்கு வேண்டிய மருத்துவர்களைப் பார்க்க முடியாது. தீராத வலி என்றால் உடனடியாக அவசரச் சிகிச்சை பிரிவிற்குப் போகலாம். ஆனால் மற்ற எந்தத் தொந்தரவு என்றாலும் முதலில் நமக்கென்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முதல்நிலை மருத்துவரைத்தான் அணுக வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் உதவி நமக்குத் தேவையா என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். தேவை என்றால் ஸ்பெஷலிஸ்டிடம் அனுப்ப ஏற்பாடு செய்வார். அந்த ஸ்பெஷலிஸ்டிற்கு எப்போது நேரம் ஒதுக்க முடிகிறதோ அப்போது நேரம் கொடுப்பார். சில சமயங்களில் நம்மைப் பார்க்க வேண்டிய மருத்துவர் நமக்கு நேரம் ஒதுக்கி அந்த நாள் வருவதற்குள் நம் வியாதி நம்மை விட்டுப் போயே போயிருக்கலாம். சில சமயங்களில் அவசர சிகிச்சைப் பிரிவிற்குப் போகும் அளவிற்கு நமக்கு உபாதை இல்லையென்றாலும் ஒரு மருத்துவரைப் பார்க்கும் தேவை இருக்கலாம். இப
்படி இரண்டும் கெட்ட உடல்நிலையில் இருக்கும்போதுதான் இந்தியாவில் இருந்தால் இப்போதே போய் மருத்துவரைப் பார்த்து விடலாமே என்று அங்கலாய்க்கத் தோன்றும்.

அமெரிக்காவில் சில வசதிகள்; இந்தியாவில் சில வசதிகள். இரண்டையும் இரண்டு இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது. கிடைக்கும் வசதிகளைக் கிடைக்கும் இடத்தில் அனுபவித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கை முறை என்றாலும் சில அடிப்படைப் பண்புகள் எல்லோருக்கும் பொதுவான தேவை அல்லவா?

 

படத்திற்கு நன்றி:

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.