நூ. த. லோகசுந்தரம்

*மாணிக்க வாசகரே ‘வடுகபிள்ளை’ யாம்* 

மாணிக்கவாசகரே குரக்குத்தளி கல்வெட்டில் குறித்த ‘வடுகபிள்ளை’ ஆகும். சுந்தரரின் முருகன் பூண்டி பதிகப் பாடலில அவ்வூரில் வடுகரே நிறைந்தனர் எனக் கண்டோம். வடுகர் ஆவதலால்தான் அந்நாயனார் புகழ் நன்கு பரவிய போது 12-13 நூற்றாண்டு பாண்டியன் காலத்தில் தன் இனம் சார்ந்த மணிவாசகருக்கு எனத் தனியாக ஓர் படிமமைத்து அதன்முன் நாளும் விளக்கெரிக்க குரக்குத்தளி தெற்கு வளாகத்தில் வாழ்ந்த தோயா வஸ்திர செட்டிகளில் பாளையநல்லூர் வெந்நாயகன் செட்டி ஆழ்வானா சேரமான் தோழன் சந்தியா விளக்கு ஒன்றுக்குத் தானமளித்துள்ளான்.

(இணைப்பில் கல்வெட்டு படத்தினைக் காண்க) அதனில் காணும் வரிகள் இவ்வாறு உள்ளது.

“ஸ்வஸ்திஸ்ரீ சுந்தரபாணடிய தேவர்க்கு யாண்டு 3-வது வீரசோழ வாநாட்டு முகுந்தனுடையார் குரக்குத்தளி ஆளுடையார் கோயில் வடுகபிள்ளையாருக்கு இந்நநாயனார் திருமடைவளாகம் தெற்கில் தெருவிலிருக்கும் தோயா வஸ்திர செட்டிகளில் பாளைய நல்லூர் வெந்நாயகன் செட்டியாழ்வாநாந சேரமான் தோழன் வைத்த சந்தியா விளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின.. இக்கோயில் காணிஉடைய…. அப்பன்..வீர..”

மணிவாசகருக்கு திருவாதவூருடன் தொடர்பு காட்டப்பட்டாலும் கோகழி பஞ்சப்பள்ளி பெருந்துறை குடநாடு என வடுக/கொங்கின் தலங்களைக் குறித்தவரும், குதிரைத் தொடர்புள்ள வடுகரும் இவரே. கீழே காணும் சான்றுகளை கண்டு ஓர்ந்து, தேர்க.

(1) திருவாசகத்தில் 5 இடங்களில் குறிக்கப்படும் தலம் *கோகழி*. ஐயமின்றி கல்வெட்டுச் சான்று வரலாறு உள்ள அப்பெயருடைய ஊர் கன்னட நாட்டில் இன்றும் உள்ளது. பெல்லாரி மாவட்டம் அரப்பன அல்லி) அதனை அறியாத நிலையில் வேறு வழியின்றி அது இது ஆகலாம் என பெயரை மனம் போல் பகுத்துப் பொருள் கொண்டு பெருந்துறை, சீர்காழி, திருவாவடுதுறை எனும் தலங்களைக் காட்டுகின்றனர். ஆனால் கோகழி வடுகநாட்டு சைவநெறி (வீரசைவம் தோன்றுவதன் முன்னோடி) நன்கே தழைத்தோங்கிப் பெருகிய திருப்பருப்பதம் (சிறீசைலம்) திருப்புராந்தகம், ஓங்காரம், மகாநந்தி, அயோகந்தி, காம்பீலி அமராவதி என வரும் வடுகர்வாழ் புலத்தே உள்ளதாகும். மறைமலை அடிகள் தன் மணிவாசகர் கால ஆய்வு நூலில் வீரசைவமடங்கள் திருவாசகத்தைப் பெரிதும் போற்றி வந்துள்ளதால் அவர் வீரசைவ மரபினர் என்பார். இன்றும் தமிழக வீரசைவ மடங்களின் வடுகத் தொடர்பு எவரும் மறுக்க முடியாததே.

(2) பூவலம், நந்தம்பாடி, தர்பணம் / சாந்தம்புத்தூர், வேலம்புத்தூர், கல்லாடம், குவைப்பதி, கவைத்தலை, பட்டமங்கை, சந்திரதீபம், ஓரியூர், என தேவாரம் குறிக்காத தமிழகத்தே காணாத தலங்களைக் குறித்துள்ளவர் மணிவாசகரே.

(3) “குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைக்
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்..” 27 கீர்த்தித் திருவகவல்

இதனில் தெளிவாகவே உயர்ந்த நிலமாகும் குடநாடும் குதிரையும் குறித்தமைக் காண்க. தென்னிந்திய தீபகற்பத்தே மேற்கமைந்த வடுக (கன்னட) நாடு கிழக்கு பகுதியைக் காட்டிலும் உயர்ந்து மேடுபள்ளம் நிறைந்ததுமான நிலவாகு கொண்டது. அதனால் அங்கு வாழ்ந்த மக்கள் தமிழகம் போல் உருளும் சக்கர ஊர்திகளை எளிதாகப் பேணாது குதிரைகளையே பெரிதும் வளர்த்துப் பரிமாவாகக் கொண்டனர். எனவே குதிரைகள் வளர்ப்பினில் நன்கு அறிந்தவராகும் ஓர் வடுகரைக் குதிரை வாங்க முகவராகக் கொண்டான் பாண்டியன். மேலும் அவர் குதிரை வாங்கச் சென்றது பெருந்துறை. இஃது பாண்டியநாட்டு கிழக்கினில் அமைந்தது எனக் கொள்கின்றனர் ஏனெனில் அரபு நாட்டில் இருந்து கடல்வழிதான் குதிரைகள் வந்தன என்பது அவர்கள் கொண்ட கருத்து ஆனால், தன் திருவண்டப் பகுதி

“கருமா முகிலில் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையில் ஏறித்
திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய”

என திருப்பொருந்துறைத் தலம் ஓர் மலையின்/குன்றின் அருகுள்ளாதாகவே காட்டுகின்றது. அணித்து வரும் ‘கருமாமுகில்’ ‘வரை’ ‘ஏறி’ ‘மின்ஒளி’ எனும் சொற்கள் அஃது உருவகமாகாது மலை/குன்று ஆகும் என்பதனை உறுதி செய்கின்றது. பாண்டிய நாட்டுப் பெருந்துறை அருகு குறிக்கும் அளவிற்குக் குன்று ஏதும் இல்லை. கொங்கு நாட்டுப் பெருந்துறை அருகே குன்று உள்ளது. திருப் பெருந்துறையில் அவர் ஓர் சைவச்சான்றோர் உருவில் வந்த (குதிரை ஊர்ந்த நிலை) இறைவனை சந்தித்து வயப்பட்டு அவருக்கு ஆட்பட்டு கைப்பொருள்களை எல்லாம் செலவிட்டுப் பாண்டியனிடம் பெரிதும் இடருற்றார் என்பது வரலாறாகக் காண்கின்றோம். ஆனால்,

“பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது ” 39

கீர்த்தித் திருஅகவல் வரிகள் குதிரைகளை விற்றார் எனவும் பொருள் கைமாற்றத்தில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியதையும் காட்டுகின்றன.

அந்நாளில் கொங்கின் மேற்கமைந்த மலைத்தொடருக்கு அப்பாலும் வடக்கிலுமுள்ள வடுக நாட்டிலிருந்து சந்தைக்கு வரும் குதிரைகள் தமிழக எல்லையில் விற்பனைக்கு கிடைக்கக்கூடிய இடத்திற்கு ஏகும் வழியில் கொங்குநாட்டு பெருந்துறை அமைந்தது ஆகலாம்.

கன்னியாகுமரி முதல் சூரத் வரையிலான தென்னிந்திய மேற்குக் கடற்கரையில் தொடராக நீண்டு உயர்ந்த மலைத்தொடர் காண்பதால் தமிழகம் நுழைய பாலக்காட்டு கணவாய் ஓன்றுதான் கிரேக்கம் ரோமானியம் பாரசீகம் எனும் மேல்நாட்டு வாணிபத் தொடர்புகள் புக எளிதான இடமாகும். எங்கும் இல்லாது பெருமளவில் கிரேக்க ரோமானிய நாணயப் புதையல்கள் இப்புகுவழியில் கிடைத்துள்ளன. எனவே கொங்குநாடு மேல்நாட்டு வாணிபப் பெருவழியில் அமைந்தமை எவரும் மறுக்க இயலாதது. ஆக கடல்வழி வந்து கொங்கு நாடு வழியாக வந்த குதிரைகளின் வாணிபத் தொடர்பினில் மாணிக்க வாசகர் கொங்கிற்கு ஏகினக்கண் பெருந்துறை வந்தார் எனவும் கூறலாம்.

(4) பிணக்கு-படைஎடுப்பு-போர் என்றே தம்காலத்தைப் பகிர்ந்த தமிழக அரசர்கள் யானை குதிரை மரம் எனும் படைக்கலப் பொருள்களுக்கு மலைவளம் மிக்க கொங்கு/வடுகநாட்டினை நாடி அதன் மேல் படை கொண்டு பலகாலும் சென்றமை இயல்பே.

(5) திருவாசகத்தின் 51 நூல்களில் 18 திருப்பெருந்துறையில் அருளியது என காணலாம். இந்நூற்பாடல் வரிகளில் யாங்கணும் திருப்பெருந்துறை கடற்கரை தொடர்புடை இடமாகக் காணவில்லை. நிலபுல வருணனைகள் யாவும் வயலும் பொழிலும் சூழும் எந்த இடத்திற்கும் பொருந்துவனவாக உள்ளன.

(6) நம்பியாண்டார் நம்பி தன் ‘கோயில் திருப்பண்ணியர் விருத்த’த்தில் தில்லையின் பெருமை காட்டும்போது மணிவாசகரை ‘திருவாதவூர் சிவபாத்தியன்’ என குறித்தார். மணிவாசகர் கடை நாட்களில் தில்லை வந்து ‘திருக்கோவையார் அரங்கேறியது. வந்தபின் அவர் இயற்றியதாகக் காணும் 27 நூல்களில் ஞான முதிர்ச்சியையும் காணலாம். நம்பிகள் அறிந்தவரை வாதவூர் அவர் தொடர்புடைய ஊர் எனும் கருத்தில் குறித்தார் எனலாம். ஆனால் பட்டினத்தடிகளின் “திருந்திய அன்பில் பெருந்துறைப்பிள்ளை” என வரும் ‘திருவிடைமருதூர் மும்மணிக்கோவை’ வரி ‘வடுகபிள்ளை’ எனும் வழக்கிற்கு இணையாகவே உள்ளது. ‘சிவபாத்தியன்’ எனும் சொல் சைவநெறி உள்மரபில் ஓர் காலினைக் சுட்டுவதாகலாம்.

(7) உலகப்போர் எழுந்தபோது ஆங்கிலேய அரசு குதிரைகளின் பயனைப் பெருக்க எண்ணி மைசூர் இராஜ்ய எல்லை விட்டுத் தன் எல்லைக்குள்ளேயே, ஓசூரில், குதிரைப் பண்ணை ஒன்று அமைத்தமை, வடுகரின் (கருநாடகர்) குதிரை வளர்ப்பு அறிவையும், வளர்க்கப் பொருந்தும் இனமும், தட்பவெப்பமும், கருத்தில் கொண்டுதான் என்று உலகப்போரில் பணியாற்றிய என் தந்தையார் கூறிய செய்தி ஆகும். இதனால் வடுக நாட்டுடன் அண்மைக்கால குதிரைத் தொடர்பும் பெரிதென்பது நன்கு விளங்கும். இந்நாள் சாலை தானூர்திகள் பெருகி குதிரை வளர்ப்பு குன்றிப் போனது. எனினும் இன்றும் 2/3 சக்கர கால்மிதிவண்டிகளின் பயன் மேடும் பள்ளமும் உள்ள நில அமைப்பினால் கேரளத்திலும், கருநாடக, மகாராஷ்டிர பகுதிகள் பலவற்றில் வளர இயலவில்லை என்பர்.

1 thought on “குரக்குத்தளி (பாகம்-2)

  1. ஐயா நான் நீலகிரியின் படுகர் இனத்தைச் சேர்ந்தவன். நான் அறிந்து இங்கு சுமார் 2000 ஆண்டுகளாக நாங்கள் இருக்கிறோம். எங்களது பழைய (ஆரம்பக் கட்ட) வரலாற்றைக் கூற முடியுமா?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க