நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-12)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

சுமதி அக்காவிடமிருந்து வந்த தகவல் கல்யாணியை மிகவும் கவலையுறச் செய்தது. அந்தத் தகவல் வரும் வரை எப்படியும் தான் அனுப்பிய பணம் தன் கைக்கு வந்து விடும் என்ற சிறு நம்பிக்கை அவளுள் இழையோடியது. இப்போது அதுவும் இல்லை. சுந்தரத்திடம் இன்னமும் அவள் எதுவும் சொல்லவில்லை. அவனும் எங்கே முன் போல இருக்கிறான்? எந்நேரமும் ஏதோ சிந்தனை. சாதாரணமாக இருந்திருந்தால் கல்யாணியிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பிடித்துக் கேட்டிருப்பான். ஆனால் இப்போது அவன் கவலை அவனுக்கு.

வரவர மேனேஜரின் போக்கு விசித்திரமாக இருந்தது. அவர் நடத்தையிலிருந்து மேனேஜர் தன்னை சந்தேகிக்கின்றாரோ? என்ற எண்ணம் முதல் முதலாக ஏற்பட்டது. ஏன் இந்தச் சந்தேகம்? யாரால் வந்தது? என்பதெல்லாம் தெரியாத மூடு மந்திரமாயிருந்தது. சுந்தரமும் மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்? என்று சும்மா இருந்தான். ஆனால் அவன் மனம் மட்டும் ஆபீசில் தனக்குத் தெரியாமல் ஏதோ நடக்கிறது என்று ஓயாமல் கவலைப் பட்டுக் கொண்டேயிருந்தது. அவன் மனம் அதில் மூழ்கியிருந்ததால் கல்யாணியின் மாற்றங்களை அவன் கவனிக்கவில்லை. அதே போலக் கல்யாணியும் தன் பிரச்சனைகளில் மூழ்கிக் கிடந்ததால் சுந்தரத்தின் கவலையை உணர முடியவில்லை. ஆனால் நிகில் தன் தாய் தந்தை இருவருமே நார்மலாக இல்லை என்பதைக் கண்டு கொண்டான். என்ன பிரச்சனையோ? இந்த நிலைமை எதில் போய் முடியுமோ? என்று அவன் பங்குக்கு அவன் கவலைப் பட்டான்.

இந்த நிலையில் தான் கல்யாணியின் நாத்தனார் செல்வி, இங்கு வந்து ஒரு வாரம் தங்கியிருக்கப் போகிறாள் என்று சுந்தரம் சொன்னான். செல்வியின் கணவர் வேலை விஷயமாகக் கல்கத்தாவுக்கு 10 நாட்கள் டூர் போகிறார். மகன் அகிலும் காலேஜிலிருந்து அழைத்துப் போகிறார்கள் என்று ஒரு வாரம் டூர் போகப் போகிறான். செல்விக்கு தான் மட்டும் ஏன் வீட்டில் கொட்டக் கொட்டத் தனியாக உட்கார்ந்திருக்க வேண்டும்? என்று தோன்றவே அண்ணன் சுந்தரத்துக்கு ஃபோன் செய்து ஒரு வாரம் தங்க வரப் போவதாகத் தெரிவித்தாள்.

செல்வி வருவது குறித்து சுந்தரத்துக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அவனுடைய வேலை நெருக்கடியில் அவன் “வரியா செல்வி? ரொம்ப சந்தோஷம்மா” என்று மட்டும் கூறி ஃபோனை வைத்து விட்டான். இதுவே செல்விக்கு என்னவோ போல இருந்தது. சரி அண்ணியிடம் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். நிறைய வருடங்கள் கழித்து அண்ணன் வீட்டுக்குப் போகப் போகிறோம் என்ற சந்தோஷம் அவளுக்கு. பலமுறை சென்று வந்திருந்தாலும் தங்குவதற்கென்று இப்போது தான் பல வருடங்களுக்குப் பிறகு போகிறாள்.

ஏகப்பட்ட பிளான் போட்டாள். அண்ணியுடன் ரங்கநாதன் தெருவுக்குச் சென்று ஷாப்பிங் செய்ய வேண்டும். லீவு நாளில் கார் வாடகைக்கு எடுத்துக் கொண்டு மாமல்லபுரம், காஞ்சிபுரம் எல்லாம் சென்று வர வேண்டும். அண்ணி கையால் வித விதமாகச் செய்து சாப்பிட வேண்டும். தான் புதிதாகக் கற்றுக் கொண்ட தந்தூரி சிக்கன் செய்து அனைவரையும் அசத்த வேண்டும் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டினாள்.

கல்யாணிக்கு செல்வி வரும் விஷயத்தைச் சொன்னான் சுந்தரம். எப்போதும் அவளுக்கும் செல்விக்கும் இடையே நல்ல நட்புதான் நிலவியது என்றாலும், இம்முறை இந்தச் சூழ்நிலையில் ஏன் வருகிறாள்? என்று தான் தோன்றியது கல்யாணிக்கு. யாருக்கும் ஃபோன் செய்து தன் பணம் என்ன ஆனது என்று கேட்க முடியாதே? தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது பற்றி பேச முடியாது. எப்போதும் தன் நாத்தானாரின் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கும் கல்யாணி இம்முறை ஏன் வருகிறாள்? என்று நினைத்துக் கொண்டாள்.

செல்வியும் வந்து விட்டாள். வந்த உடனேயே கல்யாணி முன் போல இல்லை என்பதைக் கண்டு கொண்டாள். “வா செல்வி!” என்று சுரத்தில்லாமல் அழைத்து விட்டு தன் பையைக் கூட வாங்காமல் கிடு கிடு வென்று உள்ளே போன அண்ணியைத் தொடர்ந்து செல்வியும் உள்ளே சென்றாள். சுந்தரம் ஆபீஸுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனும் “வாம்மா” என்ற ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக் கொண்டது வித்தியாசமாகப் பட்டது.

அதை எதையும் பொருட்படுத்தாத செல்வி மனம் கொள்ளா உற்சாகத்தோடு

“அண்ணி! நான் என்னென்ன பிளான் வெச்சுருக்கேன் தெரியுமா? இந்த ஒரு வாரமும் ஜாலியாப் போகப் போகுது. நாம ரெண்டு பேரு மட்டும், ஆம்பிளைங்களைக் கூப்பிட வேண்டாம். ஷாப்பிங் போலாம் அண்ணி. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே கலர்ல பொடவை வாங்கிப்போம். நம்ம ரெண்டு பேருக்குமே பொம்பளப் புள்ளைங்க இல்ல. இருந்தா விதம் விதமா வளையல் தோடு, டிரெஸ்சுன்னு வாங்கலாம். என்ன் அண்ணி?”

தன் கவலையில் மூழ்கியிருந்த கல்யாணி தன்னையும் மீறி “ஆமா! இப்போ அது ஒண்ணு தான் குறச்சல்” என்று கூறி விட்டாள். கலகலவெனப் பேசிக் கொண்டிருந்த செல்வியின் பேச்சு ஸ்விட்ச் போட்டாற் போல அடங்கி விட்டது. “ஏன் இப்பிடிப் பேசுறாங்க அண்ணி. ஒரு வேளை நான் வந்தது பிடிக்கலையோ?” என்று நினைத்தாள் செல்வி. ஒன்றும் பேசாமல் கையிலிருந்த பையைக் கொண்டு அறையில் வைத்தாள்.

வெளியில் வந்தவளைப் பார்த்து கல்யாணி ” டிஃபன் சாப்பிடலாமா?செல்வி? ” என்றாள்.

“நீங்க சாப்பிடும்போது சேர்ந்து சாப்பிடுறேன் அண்ணி”

“நான் இப்பத்தான் சாப்பிடப் போறேன். வா உக்காந்து சாப்பிடு.” என்றவள் ஆளுக்கொரு தட்டு வைத்தாள்.

“என்ன அண்ணி டிஃபனுக்கு?”

“இடியாப்பம், குருமா”

மௌனமாக இருவரும் சாப்பிட்டனர். “கூட ரெண்டு வெச்சுக்கோ செல்வி. இடியாப்பம் குருமான்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமே” என்று அண்ணி சொல்லுவாள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனாள் செல்வி. கல்யாணி பாட்டுக்கு ஏதோ சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணி விட்டு எழுந்து போய் விட்டாள். செல்விக்கானால் நல்ல பசி. கல்யாணி கை கழுவி விட்டு வந்து தனக்குக் கம்பெனி கொடுப்பாள் என்று நினைத்த எண்ணம் பொய்யானது. கல்யாணி பாட்டுக்கு கம்ப்யூட்டரில் போய் உட்கார்ந்து கொண்டாள் செல்வி. அவமானம் தாங்க முடியாமல் பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு தானும் ஏதோ சாப்பிட வேண்டுமே என்று சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டாள் ச்.

கல்யாணி இன்னும் கம்ப்யூட்டரில் நோண்டிக் கொண்டிருந்தாள்.

“ஏன் அண்ணி? அப்டி என்ன முக்கியமான வேலை? என் கிட்டக் கொஞ்சம் பேசிக்கிட்டு இருக்கலாம் இல்ல?”

“இல்ல செல்வி. இந்த ஃபைல் இன்னிக்கே அனுப்பியாகணும். ஏற்கனவே லேட். “

“என்ன வேலை அண்ணி இது? “

“அதெல்லாம் உனக்குச் சொன்னாப் புரியாது”

“ஏன் அண்ணி இப்டி பட்டு பட்டுன்னு பேசறீங்க? நானும் தான் படிச்சுருக்கேன். சொன்னா என்ன? என்னால புரிஞ்சிக்க முடியாதா?”

“சரி சொல்றேன். நான் ஒரு ஆபீஸ்ல பார்ட்டைமா வேலை பாத்துக்கிட்டு இருக்கேன். இண்டர் நெட்ல போயி அவங்களுக்குத் தேவையான தகவல்களை எடுத்துக் குடுக்கறது என் வேலை. அதுக்கு ஒரு ஃபைலுக்கு இவ்ளோன்னு காசு.”

“பரவாயில்லையே? வீட்டுலயே இருந்து சம்பாதிக்க முடியுமே? எப்டி அண்ணி இந்த வேலை பத்தி உங்களுக்குத் தெரிஞ்சது?”

“எல்லாம் அன்னிக்கே ஃபோன்ல சொன்னேனே செல்வி! ஏன் இப்டி வேலை நேரத்துல தொந்தரவு செய்யற? கொஞ்சம் பேசாம என்னை வேலை பாக்க விடுறியா?”

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டாள் செல்வி. மனத்தினுள் குமைந்து கொண்டிருந்தாள். “நாம வந்தது தப்பு. என்ன காரணமோ தெரியல அண்ணி ரொம்பக் கோவமா இருக்காங்க! போகப்போக சரியாயிடுமா? இல்ல நான் வீட்டுக்கு சீக்கிரமே கெளம்ப வேண்டியது வருமா?தெரியலையே?” என்று நினைத்தவள் சும்மா உட்கார்ந்து போரடித்ததால் டிவியை ஆன் செய்தாள்.

சற்று நேரம் பேசாமல் இருந்த கல்யாணி

“என்ன செல்வி? நான் வேலை பாத்துட்டு இருக்கேன்ல எனக்கு இடைஞ்சல்னு தெரியாதா? பிளீஸ் டிவியை ஆஃப் பண்ணு” என்றாள்.

“என்ன அண்ணி நீங்க? டிவியும் பாக்க விட மாட்டேங்கறீங்க? என் கூட பேசிக்கிட்டும் இருக்க மாட்டேங்கறீங்க? நான் என்ன தான் செய்ய?”

“ஒரு அரைமணி நேரம் வேணா படுத்து எந்திரி செல்வி! அதுக்குள்ள நான் முடிச்சுடுவேன்! அப்புறமா நாம பேசலாம் என்ன? ” என்றாள் தன்மையாக.

உடனே சந்தோஷம் தொற்றிக் கொண்டது செல்வியை. “அப்பாடா! அண்ணி கோவமா இல்ல! ஏதோ வேலை டென்ஷன்னால அப்டி பேசியிருக்காங்க. ” என்று சமாதானமானாள் செல்வி.

சொன்னது போலவே ஒரு அரை மணி நேரத்தில் வந்து விட்டாள் கல்யாணி. கல்யாணிக்கு எப்போதுமே செல்வியை மிகவும் பிடிக்கும். தன்னை விட வயதில் சிறியவளான நாத்தனார் மீது ஒரு தனிப்பாசம் தோழமை உணர்வு எப்போதுமே உண்டு. தன்னுடைய பிரச்சனையில் சிக்கி அவளைச் சரியாக வரவேற்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப் பட்டாள் அவள்.

“அண்ணி நாளைக்கு சீக்கிரமே சமச்சு வெச்சுட்டு ரெண்டு பேரும் டி.நகர்ப்பக்கம் போலாமா? ரங்கனாதன் தெருவுக்குப் போய் ஜாலியாச் சுத்துவோம்”

“நாம என்ன காலேஜ் பசங்களா? ரங்கனாதன் தெருவுக்குப் போயி என்ன செய்யப் போற?”

“சரவணா ஸ்டோருக்குள்ள சும்மா நுழஞ்சி பாப்போம். ஹேர் பேண்டு, கிளிப்புன்னு வாங்க சாமானா இல்ல?”

“இல்ல செல்வி! நான் வரல! நீ மட்டும் வேணா போயிட்டு வா”

“ஏன் அண்ணி அப்டி சொல்றீங்க? முன்னெல்லாம் எப்படா ரங்கனாதன் தெருவுக்குப் போலாம்னு இருப்பீங்க?”

“அது ஒரு காலம். எப்பவும் அப்டியே இருக்க முடியுமா?”

“என்ன அண்ணி என்னவோ ரொம்ப வயசானவங்க மாதிரி பேசறீங்க? சரி அதை விடுங்க! உங்க வேலையைப் பத்திச் சொல்லுங்க?”

கல்யாணிக்கு மீண்டும் கோபம் வந்தது. “என்ன இவள் மீண்டும் மீண்டும் தன் வேலையைப் பற்றியே கேட்கிறாள்?” என்று எரிச்சலானவள்,

“அதான் அப்பவே சொல்லிட்டேனே செல்வி? திருப்பித் திருப்பி எத்தனை தடவை சொல்ல?”

“இல்லண்ணி! நீங்க இண்டெர்னெட்டெல்லாம் கத்துக்கிட்டு கலக்குறதா அண்ணன் சொல்லிச்சு. அதான் கேட்டேன். எங்கே கத்துக்கிட்டீங்க அண்ணி?”

“பக்கத்துல உள்ள ஒரு இன்ஸ்டிட்யூட்ல கத்துக்கிட்டேன்”

“மாசம் எவ்ளோ கட்னீங்க?”

“மொத்தமா ஐயாயிர ரூவா கட்னேன்னு நினைக்கிறேன்”

“அடேயப்பா! ஐயாயிரமா? அவ்ளோ செலவழிச்சுப் படிச்சு யூஸ்ஃபுல்லா இருக்கா அண்ணி?”

“ம்! இருக்கு”

“மாசம் எத்தனை ரூவா வருமானம் வரும்?”

“பத்துலருந்து, பன்னண்டாயிரத்துக்குள்ள வரும்”

“அப்போ ஒரே மாசத்துல போட்ட முதலை எடுத்துடலாம்னு சொல்லுங்க! ஏன் அண்ணி? நானும் படிச்சா, உங்க ஆபீசுல எனக்கும் பார்ட் டைமா வேலை கிடைக்கும் இல்ல?”

“ம்! கிடைக்கும்”

“என்ன அண்ணி நான் எது கேட்டாலும் ஒரு வார்த்தையில பதில் சொல்றீங்க? உங்களுக்கு என்ன ஆச்சு?”

“ஒண்ணும் ஆகலியே”

“பாருங்க! திரும்பவும்! அப்டியே தான் பேசறீங்க! சரி அதை விடுங்க! இண்டெர்னெட்ல எத்தனையோ ஏமாத்து வேலையெல்லாம் நடக்கறதாப் பேசிக்கறாங்களே அது பத்தியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா அண்ணி?”

இந்தக் கேள்வி கல்யாணியைத் தூக்கிவாரிப் போடச் செய்தது. “இவ ஏன் இதெல்லாம் கேக்கறா? ஒரு வேளை ஏதாவது விஷயம் தெரிஞ்சி நம்மளை ஆழம் பாக்குறாளோ?” என்ற அர்த்தமில்லாத பயம் வந்து சூழ்ந்து கொண்டது. கல்யாணி பேசாமல் இருந்ததைப் பார்த்து விட்டு,

“என்ன அண்ணி திரு திருன்னு முழிக்கறீங்க? என்ன விஷயம்? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் செல்வி.

செல்வியின் சிரிப்பைப் பார்த்ததும் “சந்தேகமே இல்ல, இவ விஷயம் தெரிஞ்சு தான் கேக்கறா. என் வாயால நான் எதுவும் சொல்ல மாட்டேன். வந்ததுல இருந்து நான் வேலை பாக்குறது, இண்டெர் நெட், இ மெயில், ஏமாத்து வேலை இதைப் பத்தியே தான் பேசிட்டு இருக்கா. எப்டியோ விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு எங்கிட்ட நைசா நடிக்கறா! இரு இவளுக்குச் சரியான பாடம் கத்துக் குடுக்கறேன்” என்று மனதுள்ளே கருவினாள்.

கல்யாணிக்கு எந்நேரமும் தன் யோசனையாகவே இருந்ததால் செல்வி சாதாரணமாகக் கேட்ட கேள்வி கூட இவளைக் குறி வைத்துத் தாக்குவது போல இருந்தது. அவளால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை அவள் கட்டுப்படுத்தி செல்வியோடு சாதாரணமாகப் பேசியிருப்பாளானால் எல்லாம் சரியாகி இருக்கும். கண்ணில் கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு விஷயத்தைப் பார்த்ததால் எல்லாமே கறுப்பாகத் தெரிந்தது அவளுக்கு.

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே செல்வி! வந்ததுலருந்து ஏன் நான் வேலை பாக்குறதைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கே?”

“என்ன சொல்றீங்க அண்ணி? நான் சாதாரணமாத்தானே கேட்டேன்”

“நீயா சாதாரணமாக் கேட்ட? எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்காத! உனக்குப் பொறாமை. அண்ணி இவ்ளோ சம்பாதிக்கறாளேன்னு! நான் சம்பாதிச்சது எல்லாம் போயாச்சு. இப்போ திருப்தியா உங்களுக்கெல்லாம்?”

“என்ன அண்ணி வார்த்தை தடிக்குது? “

“தடிக்காமே? நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் அண்ணி ஏன் அப்டி? அண்ணி ஏன் இப்டின்னு கேட்டுக்கிட்டே இருக்கியே?”

இப்போது செல்வியின் பொறுமை எல்லை மீறியது.

“நானும் தான் வந்ததுலருந்து பாத்துக்கிட்டேயிருக்கேன். வந்தவளை வான்னு கூப்பிட நாதியில்ல. நான் என்னமோ உங்க வீட்டு சாப்பாட்டுக்கு அலஞ்சா மாதிரி நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே எந்திரிச்சுப் போனீங்க. அதையும் பொறுத்துக்கிட்டேன், அப்புறம் நான் டிவி போட்டப்போ வெடுக்குன்னு சொன்னீங்க அதையும் பொறுத்துக்கிட்டேன். அதெல்லாம் போகட்டும்னா வெளியில கூப்பிட்டப்போ நான் உங்களுக்கு செலவு இழுத்து விட்டுருவேனோன்னு பயந்து வர மாட்டேன்னுட்டீங்க.”

“என்ன விட்டா பேசிட்டே போவே போல இருக்கே? உன்னை யாரும் இங்க கவனிக்காம இல்ல”

“ஆமா! கவனிச்ச லட்சணந்தான் தெரியுதே? அண்ணன் பேருக்கு வான்னு சொல்லிட்டு போயிடுச்சு. அதைக் குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம்? நான் வரதுக்கு முந்தி நீங்க என்னைப் பத்தி என்னென்ன சொன்னீங்களோ? யாரு கண்டா?”

“என்ன? என்ன? வாய் ரொம்ப நீளுது? நாங்க ஒண்ணும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குடும்பத்தை ஒவ்வொத்தர் மாதிரி பிரிக்கறவங்க இல்ல”

“அப்ப நான் குடும்பத்தைப் பிரிக்கறவன்னு சொல்றீங்களா?”

“நான் அப்டியெல்லாம் சொல்லவேயில்ல! அவங்க அவங்க மனசாட்சிக்குத் தெரியும். நான் என்ன சொல்லணுமாக்கும்”

“உங்களுக்கு என்ன அண்ணி தெரியும்? அப்டி என்ன செஞ்சு உங்க குடும்பத்தைப் பிரிச்சுட்டேன் நான்?”

“அதான் வந்ததுலருந்து கம்ப்யூட்டர்ல கிளாஸ், இண்டர் நெட்ல ஏமாத்துன்னு எகத்தாளமாக் கேக்குறியே? அதெல்லாம் என்னவாம்?

“நான் சாதாரணமாத்தான் ஏதோ கேட்டேன். அதை ஏன் நீங்க இவ்ளோ பெரிசு பண்றீங்க? அப்போ விஷயம் என்னவோ இருக்கு. எங்கியோ ஏமாந்துருக்கீங்க. நீங்க ஏமாந்ததுக்கு என்னைப் பிடிச்சு ஏறினா எல்லாம் சரியாயிடுமோ? என்னை என்ன இளிச்சவாய்னு நெனச்சீங்களா? உங்க கோவத்துக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.”

“நீ ஏன் பயப்படப் போற? நீ தான் எமகாதகி ஆச்சே? உன் புருஷனுக்கே பயப்பட மாட்டியே” என்று சொல்லி விட்டு உடனடியாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் கல்யாணி. “சே! என்ன வார்த்தை பேசி விட்டோம்? ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறோம். பாவம் செல்வி. எவ்வளவு ஆசையாக வந்தாள். அவளிடம் போய்க் கத்தி சண்டை போட்டு! சீசீ! அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கல்யாணி நினைத்த நொடி செல்வி ஆவேசம் வந்தவள் போல ரூமிற்குள் சென்று பையை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.

“நான் இங்க தங்கறது உங்களுக்குப் பிடிக்கல்லன்னா வெளிப்படையா எங்கிட்ட சொல்லியிருக்கலாம். நான் வந்திருக்கவே மாட்டேன். எனக்கு என்ன வீடு வாசல் இல்லியா? தனியா இருக்கறதுக்கு உங்க கூட இருக்கலாம்னு ஆசையா வந்தேன் பாருங்க என் புத்தியைச் செருப்பால அடிக்கணும். உங்க புத்தி தெரிஞ்சு போச்சு எனக்கு. இனிமே இந்த வீட்டுப் பக்கம் தலை வெச்சுப் படுக்க மாட்டேன்” என்று அழுது கொண்டே சொன்னவள் கதவைப் படாரென்று சாத்தி விட்டுப் புயலெனப் புறப்பட்டுப் போய் விட்டாள்.

செல்வி போன பிறகு தான் தான் செய்த காரியம் உறைத்தது கல்யாணிக்கு. அவளுக்கும் அழுகையாக வந்தது. “எல்லாம் பாழாப் போற இந்த இண்டர் நெட்டால தான். நான் ஏன் அதைப் போயி படிச்சேன். இப்போ கெடந்து ஏன் அவஸ்தைப் படுறேன்? அவரு வந்து கேட்டா என்ன பதில் சொல்ல?” என்றெல்லாம் யோசித்துக் குழம்பி ஓவென்று அழத்துவங்கினாள் கல்யாணி.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி:http://www.hul.co.in/aboutus/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.