அபிமன்யுவின் சக்கர வியூகமும் செம்மொழி மாநாடும்

3

அண்ணாகண்ணன்

crowd in Kovai semmozhi entrance

பாரத போர் நடந்த போது 13ஆம் நாள் போரில் பாண்டவர்களுள் ஒருவனான அருச்சுனனின் மகன் அபிமன்யு, கௌரவர்களின் சக்கர வியூகத்தினுள் நுழைந்துவிட்டான். ஆனால் உள்ளே சென்ற பிறகு வெளியே வருவதற்கு அவன் கற்கவி்ல்லை. எனவே, அவன் மாண்டான்.

செம்மொழி மாநாட்டிலும் இத்தகைய ஒரு சூழலைக் கண்டேன். மாநாட்டின் முதல் நாள் (ஜூன் 23), தொடக்க விழா. அதைத் தொடர்ந்து, இனியவை நாற்பது என்ற பெயரில் வரிசையாக நாற்பது அலங்கார ஊர்திகள் சாலைகளில் பவனி வந்தன. தொடக்க விழாவைக் காணவும் அணிவகுப்பினைக் காணவும் இலட்சக்கணக்கானோர் கூடினர். காலையிலிருந்து முற்பகல் வரை பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால், அலங்கார ஊர்தி அணிவகுப்பு முடிந்த பிறகு, வெளியே செல்வதற்குப் பொது வாகனம் ஏதுமில்லை. பேருந்து, தானி (ஆட்டோ), மிதி ரிக்சா, மாட்டு வண்டி என எதுவும் கிடையாது. கூடுதல் கட்டணம் செலுத்த மக்கள் தயார் என்ற போதும், எந்த வாகனமும் கிட்டவி்ல்லை. இலட்சக்கணக்கான மக்கள், சுமார் 10 கி.மீ. நடந்து சென்றால் தான் வேறு பொது வாகனத்தைப் பிடிக்க முடியும் என்ற நிலை. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள்… என எந்தப் பேதமும் இல்லாமல், எல்லோரும் நடந்தாக வேண்டிய நிலை.

இரவு வீட்டிற்கு அல்லது விடுதிக்குச் சென்று சாப்பிடுவோம் எனக் கிளம்பியவர்கள் பலரும் பசியுடன் 10 கி.மீ. நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இனிமேல் என்னால் நடக்க முடியாது எனப் பலரும் ஆங்காங்கே உட்கார்ந்தனர். எவ்வளவு நேரம்தான் உட்காருவது என எழுந்து சிறிது தூரம் நடந்தனர். இவ்வாறு நடக்க முடியாதவர்கள், பேருந்து நிறுத்தங்களில் பல மணி நேரங்கள் காத்திருந்தனர். இத்தனைக்கும் காரணம், அணிவகுப்பு முடிந்ததும் பேருந்துகள் உள்ளிட்ட பொது வாகனங்கள் அனுமதிக்கப்படாமையே.

இங்கு, என் சொந்த அனுபவத்தையும் குறிப்பிட வேண்டும்.

நாங்கள் மாநாட்டுக்குக் கட்டுரை படிக்க வந்த பேராளர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக 7 பேர்கள், முதல் நாள் நிகழ்வின்போது, உள்ளேயே காத்திருக்க நேரிட்டது. சிலருக்கு அடையாள அட்டை வந்து சேரவில்லை. அந்த அட்டை இருந்தால்தான் அடுத்த நாள் நிகழ்வில் பங்கேற்க முடியும் என்ற நிலை. எனவே, அவற்றைப் பெற்ற பிறகு, நாங்கள் இரவு சுமார் 9 மணி அளவில் மாநாட்டு வளாகத்தை விட்டு வெளியே வந்தோம். அப்போது, அலங்கார ஊர்தி அணிவகுப்பு முடிந்திருந்தது. விடுதியிலிருந்து எங்களை அழைத்து வந்த பேருந்து, போய்விட்டிருந்தது. நாங்கள் வெளிச்செல்ல வேறு வாகனங்களுக்காகக் காத்திருந்தோம். எந்தப் பொது வாகனமும் இல்லை.

ஓரிருவர் மட்டும் அமர்ந்திருந்த நிலையில் பல பேருந்துகள், நிற்காமல் சென்றன. அவை, எங்களைப் போன்ற தனிக் குழுவினருக்கானவையாக இருக்கலாம். சிறிது தொலைவு சென்றால் பேருந்துகள் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் நடக்கத் தொடங்கினோம். எங்கள் 7 பேரில் என்  நான், 64 வயதுடைய என் அம்மா, முனைவர் துரையரசன், அவரின் மனைவி – இரண்டு குழந்தைகள், முனைவர் பட்ட ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் இருந்தோம். நாங்கள் சுமார் 3 கி.மீ. தொலைவு நடந்தும் எங்களுக்கு எந்த வாகனமும் கிடைக்கவில்லை. நாங்கள் மிகவும் களைத்துப் போனோம். அடுத்த நாள் காலை, முதல் அமர்வில் முதல் பேச்சு, என்னுடையது. இப்போது போய் ஓய்வெடுத்தால் தான் அந்த அமர்வில் என்னால் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை. என் அம்மாவுக்கு நீரிழிவு, மூட்டு வலி உள்ளிட்ட சில சிக்கல்கள் உண்டு. அவர் தன்னால் இனி நடக்க முடியாது என உட்கார்ந்துவிட்டார். குழந்தைகளின் நிலையும் அதுவே.

பிறகு நான், நண்பர் உமாபதிக்குச் சொ்ல்லி, அவர் ரெத்தினகிரிக்குச் சொல்லி, ரெத்தினகிரி ஒரு மகிழுந்தில் வந்து சேர்ந்தார். அந்தச் சிறு வாகனத்தில் நாங்கள் 7 பேரும் சமாளித்து அமர்ந்தோம். அப்போது நேரம் இரவு சுமார் 11. மாநாட்டு அரங்கிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இருந்த எங்கள் விடுதிக்கு 11.30 மணி அளவில் வந்து விழுந்தோம். எங்களைக் கொண்டு சேர்க்க ரெத்தினகிரி கிடைத்தார். ஆனால், இலட்சக்கணக்கான மக்கள் வாகனம் இன்றி, நடந்து வந்ததைக் கண்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மாநாட்டின் உள்ளே நுழைவோருக்குப் பேருந்து வசதி உண்டு; வெளியே செல்வோருக்குப் பேருந்து வசதி  இல்லை என்ற நிலை, அபிமன்யு, சக்கர வியூகத்திற்குள் அகப்பட்டது போன்றதே. இத்தகைய அவதி, பெருங்கூட்டங்கள் கூடும் பல மாநாடுகளிலும் அடிக்கடி நிகழ்கிறது. ஆனால், எத்தனை முறைகள் அவதிப்பட்டாலும் அரசு அல்லது மாநாடு கூட்டுவோர், இதில் தேவையான அக்கறையோடு செயல்படுவதில்லை. ஆர்வ மிகுதியால் மக்களும் மீண்டும் மீண்டும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.

இறுதி நாளான ஜூன் 27 அன்று நிறைவுரை ஆற்றிய தமிழக முதல்வர் கருணாநிதி, மாநாட்டுக்கு வந்தோர் நலமுடன் வீடு திரும்பினார்கள் என்ற செய்தி கேட்ட பிறகே நான் நிம்மதி அடைவேன் என உருக்கமாகக் குறிப்பிட்டார். மிகவும் பொறுப்பான பேச்சு. ஆனால், முதல் நாள் அன்று இருந்து நிலைமை வேறு. கூட்டத்தைக் கூட்டுவதோடு ஏற்பாட்டாளர்களின் கடமை முடியவில்லை. வந்தவர்கள், மீண்டும் சென்று சேருவது வரை அவர்களுக்குப் பொறுப்பு உண்டு.

இத்தகைய தருணங்களில் மக்கள் என்ன செய்ய முடியும்?

எனக்குத் தோன்றும் உடனடி உபாயம், இதுவே. ஒரு சிறு கருவி தேவை. தசாவதாரம் படத்தில் வைரஸ் ஆய்வு நிகழும் ஆய்வகத்தினுள் செல்வதற்கு விஞ்ஞானிகள், கைப்பிடியுடன் கூடிய ஒரு சிறு உருளையைப் பயன்டுத்தியதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதே போன்ற பயன்பாட்டினைத் தரும் மிக மலிவான கருவி ஒன்று தேவை. இது, மிகவும் எடை குறைவாக இருக்க வேண்டும். மடித்து, பையில் வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும். இதனைச் சேமக் கலன் கொண்டும் இயக்கலாம். அல்லது சூரிய ஒளி மூலமாகவும் இயக்கலாம் என்ற வகையில் தயாரிக்க வேண்டும்.

இதே கருவியின் இன்னொரு மாதிரியில் மிதிவண்டி போல மிதித்தும் இயக்கும்படி வடிவமைக்கலாம். இது, சாலைகளில் மட்டுமின்றி, மாநாட்டு அரங்கில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒரு கி.மீ. தள்ளிப் போக வேண்டும் எனில் அங்கும் பயன்படு்த்தலாம். இவ்வாறான ஒரு கருவி, மக்களுக்கு உடனடித் தேவை. பேருந்துக்கும் தானிக்கும் செலவிடும் தொகையை இதற்கு மக்கள் செலவிடலாம். நின்றுகொண்டே செல்வதற்குப் பதில் உட்கார்ந்தும் செல்ல வழி வகை காணலாம். இதன் மூலம் வேகமாகச் செல்ல முடியாவிடினும், குறைந்தபட்சம் நடக்கும் வேலையை மிச்சப்படுத்தலாம். அதன் மூலம், வேகமாகக் களைப்படைவதைத் தவிர்க்கலாம். இந்தக் கருவியை உருவாக்க, பொறியாளர்கள் முயல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அபிமன்யுவின் சக்கர வியூகமும் செம்மொழி மாநாடும்

  1. A simple and crisp article to the point. you proved your unbiased writing and genuine social interests. thank you.

  2. World wide people use convey belts in expos and major conferences to enable the visitors move around without spending much energy.

    – Simulation

  3. தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் துயரங்களைக் கூட நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள்…
    நம்ம வசூல் ராஜாக்களுக்கு (போ.கா) இனிப்பான செய்தியையும் முன் வைத்திருக்கிறீர்கள்… புதுப்புது வாகனங்கள் கண்டுபிடிப்பதும் மக்கள் அதனை போக்குவரத்திற்குப் பயன் படுத்துவதும் அதன் மூலம் அவர்களின் பைகள் நிரம்புவதும் அட அட அட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *