செம்மொழி மாநாட்டின் உதவித் தட எண்: 7373000000

0

அண்ணாகண்ணன்

செம்மொழி மாநாட்டின் அவசர உதவிக்காகப் பின்வரும் உதவித் தட எண்கள் அறிவிக்கப்பெற்றன:

7373111111
7373666666
7373222222
7373444444
7373001001
7373000002
7373000000

இவை ஏர்செல் நிறுவன எண்கள். இவற்றுள் 7373000000 என்ற எண், ‘தமிழ் வளர்க்க வந்தோருக்கு வழிகாட்டி’ என்ற அறிவிப்புடன் பல இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. பேருந்துகளின் பின்புறங்கள், தட்டிகள், அறிவி்ப்புப் பலகைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், அரசின் செய்திக் குறிப்புகள் எனப் பல இடங்களிலும் இந்த எண்களைக் காண முடிந்தது.

இந்த எண்கள், மிக உதவிகரமாக இருந்தன. நான் 7373000000 என்ற எண்ணை அழைத்து, என் தேவையைச் சொன்னபோது, அதற்குத் தக்க தீர்வு உடனே கிட்டவில்லை என்ற போதும், இன்னொரு எண்ணைத் தந்து பேசச் சொன்னார்கள். நம் பிரச்சினைக்குத் தீ்ர்வு கிடைக்கிறதோ, இல்லையோ, நாம் கேட்பதற்கு ஓர் இடமாவது இருக்கிறது என்ற நிறைவு, பலருக்குக் கிட்டியிருக்கும்.

என் கேள்வியெல்லாம், இதுதான். மாநாடு முடிந்த பின், ஏன் இந்த எண்ணைக் கைவி்ட்டீர்கள்? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, குறிப்பிட்ட கால இடைவெளியில்  நடக்க உள்ளது; இதற்கென மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைய உள்ளது. மரபணுப் பூங்கா, புத்தக வெளியீடு, ஆவணக் காப்பகம், அறிவியல் தமிழ் மேம்பாடு, தமிழ் மொழிபெயர்ப்புகள்……. என ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

அப்படி இருக்க, இவை பற்றிய செய்திகளை மக்கள் தொடர்ந்து அறியும் வண்ணம், இந்த உதவித்தட எண்களை அப்படியே வைத்திருக்கலாமே. குறைந்தபட்சம் 7373000000 என்ற எண்ணையாவது, செம்மொழித் தமிழுக்கான நிலையான உதவித் தட எண்ணாக வைத்திருக்கலாம். இப்போதும் காலம் கடந்துவிடவி்ல்லை. அந்த எண்ணை மீட்டு, செம்மொழிக்கு ஒதுக்க ஆவன செய்யலாம்.

பொருளாதார நோக்கில், அந்த எண்ணைப் பிரபலப்படுத்த ஆன செலவு, எடுத்துக்காட்டுக்கு ரூ.10 இலட்சம் எனில், ஒரு மாதம் மட்டுமே அந்த எண் பயனில் இருக்குமானால், ஒரு மாதத்திற்குப் பிறகு, ரூ.10 இலட்சத்தின் பயன் முடிந்ததாகப் பொருள். இதே எண்ணைச் செம்மொழித் தகவல்களுக்கு என நிரந்தரமாக ஒதுக்கினால், ரூ.10 இலட்சத்தின் பயன் நீடிக்கிறது என்று பொருள்.

கி்ட்டிப்புள் ஆட்டத்திலிருந்து ஓர் எடுத்துக்காட்டு. கில்லித் தண்டினைக் கொண்டு, புள்ளினைத் தட்டி, அந்தரத்தில் எழுப்பி, ஒரு முறை தட்டினால் ஒரு கில்லியாகும். அந்தப் புள்ளினைக் கீழே விழ விடாமல் மீண்டும் மீண்டும் தட்டினால், பல கில்லிகளை அடிக்கலாம். இங்கு நான் வேண்டுவதும் அதுவே.

செம்மொழி மாநாட்டுக்கு என ஒதுக்கிய எண்ணை விட்டுவிடாமல், மீண்டும் மீண்டும் அதே கருவில் பயன்பாட்டில் வைத்தால் ஆதாயம் கூடும். மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவிடப்படும் ஒவ்வொரு சிறு தொகையும் பல பயன்களை ஈட்ட வேண்டும். அதாவது, ஒரே கிளப்பலி்ல் பல கில்லிகள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *