தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 6
இன்னம்பூரான்
பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!
பகுதி 1:
‘தாரு ப்ரஹ்மன்’ தரிசனம் கிடைப்பது மஹாபாக்யம். 12 வருடங்களுக்கு ஒரு முறை பூரி ஜெகன்னாத் தெய்வ உருவங்களை மாற்றுவார்கள். மரத்தினால் செய்த உருவங்கள். தலைமை பூஜாரியின் கனவில், கானகத்தில் இறை உறைந்திருக்கும் மரம் காட்டப்படும். அதைப் பூஜித்து, சம்பிரதாயப்படி வெட்டி, இரதத்தில் கொணர்ந்து சிலாரூபங்கள் வடிக்கப்படும். அவர் கனவில் வந்தது தாரு (மரம்). பாமரனாகிய யான் அங்கு சென்று தொழுதது, ஜெகன்னாத பெருமாள். இந்த நுட்பத்தைத் திருமூலர் உணர்த்திய சூத்திரத்தைப் பாருங்கள்.
‘மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’
இதற்கு மேல் இங்கு ஆன்மீகமும் தெய்வீகமும் பேசினால், உதை தான் விழும். ஏனெனில், மறைக்கப்பட்டது முழுப் பூசணிக்காய். அது மறைந்தது சோற்றில். முற்றிலும் முரணான அலைவரிசையில் டப்பாங்குத்து ஆடும் செப்பிடு வித்தை. முழுப் பூசணிக்காயைச் சோற்றில்…
இது பால்கூட்டு பண்ணுவாளே, அந்த பூசணிப் பிஞ்சு அன்று. கல்யாண பூசணியாக்கும். பெத்த பூசணி. காணுமே. என்னடா இது? கண்ணைக் கட்ற வித்தையாயிருக்கு என்று வியப்பு மேலிட, கண்களைச் சுழற்றுகிறீர்களா? ஆமாம். இந்த காண்ட்ராக்ட்டுகள் பின்னால் ஒரு மெகா-பில்டப்பே இருக்கிறது. டெண்டர் நோட்டீஸ்லே அந்த வேலைக்கு ஒரு எஸ்டிமேட் (தோராயமான செலவுத் தொகை) போட்டிருக்கும். அது தான் டெண்டர்களை மதிப்பீடு செய்வதற்கு அளவுகோல். நான் பார்த்த வரையில், முக்காலே மூணு வீசம், இந்த எஸ்டிமேட் எல்லாம், வை.மு.கோ. நாவல்களைப் போல கற்பனைச் செல்வங்கள் – காண்ட்ராக்டர்களுக்குச் செல்வம்.
பெண் வாசனை அறியாத ரிஷ்யசிருங்கர் லகுவாக மோஹனாஸ்திரத்தைத் தொடுத்தாரல்லவா. அதே மாதிரி, அறியாப் பிள்ளையான நான் பொதுப்பணித் துறையின் லீலா வினோதங்களின் மீது தொடுத்த கணைகள் பல. உக்காய் வந்து சேர்ந்தேன், ஒரு மாதம் நாகார்ஜுன சாகர் திட்டத்தில் பயிற்சிக்குப் பிறகு. (அங்கு நான் கைமண்ணளவு கூட கற்றுக்கொள்ளவில்லை. பள்ளியில் கெட்ட வார்த்தைகள் கற்றுக்கொண்டு வரும் மாணவனைப் போல, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை ஓரளவு அங்கு கண்டுகொண்டேன்.)
சூரத்திலிருந்து 50 / 60 மைல். வழியில் பர்தோலி சர்தார் வல்லபாய் படேலையும், ஸோன்கட் கோட்டை சிவாஜி மஹராஜையும் நினைவுக்குக் கொணர்ந்தன. அன்னியன் என்பதைப் எனக்குப் பல குறிப்புகளால் உணர்த்தினர். ஆஃபீஸர் காலனியில் எனக்கு ஒரு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தாலும், எனக்கு அத்வானத்தில் ‘பூத்’ பங்களா! பகலில் தெரு நாய்கள், மாலையில் நாக ஊர்வலம், இரவில் எலிகள் கொண்டாட்டம். ‘டங்க்! டங்க்!’: பேயின் நடமாட்டம்! ஜீப்பில்லாத அதிகாரி முப்புரிநூல் இழந்த பார்ப்பனன் மாதிரி. ஊஹூம்! தரல்லையே. கோப்புகள் நம்மை எட்டிப் பார்க்காது. ஸோ வாட்! சிறுசுகளா! நாங்களும் தனிக்காட்டு ராஜா – ராணியாக ஜாலியாக இருந்து வந்தோம். டோண்ட் கேர்!
அரசு விதிகள் எல்லாம் ஈயடிச்சான் காப்பியா! அவங்களுக்கு தெரியாமலே, ரேட்டு பட்டியலுக்கு (schedule of rates), நிதி ஆலோசகரின் சம்மதம் பெறவேண்டும் என்று ‘தேளைத் தூக்கி மடியில் விட்டுக்கொண்டிருந்தார்கள்’ (ஒரு மேலாண்மை எஞ்சீனியரின் திருவாக்கு). இந்தத் தடிமன் ஆன ரேட்டுப் பட்டியல் தொகுப்புகள், ஒரு அலமாரியை அடைக்கும். அவை தான் டெண்டர் மஹாத்மியத்தின் மூலாதாரம்; அப்பழுக்கில்லாத நடைமுறைச் சாத்தியம் என்று பீற்றிக்கொண்டார்கள். ‘டெக்னிகல்’ இல்லாதவர்களுக்குப் புரியாது. உமக்கு வேண்டாம் என்றார்கள். உக்காய் அணைக்கட்டு திட்டம் 1965இலியே ரூபாய் 100 கோடி. இருக்கும் 10 டிவிஷன்களில் நம்பர் 1: கட்டடங்களுக்கு; அதிகப்படியாக 2 / 3 கோடி; மற்ற 97 / 98 கோடி அணை சம்பந்தம். கட்டட டிவிஷனிலிருந்து, (என் அறைக்கு எதிர் வாடை) ஒரு லோடு ரேட்டுப் பட்டியல் தொகுப்புகள் வர மாதமிரண்டு பிடித்தது. அணை கட்டுபவர்கள் அப்படி மூலாதாரம் ஒன்றுமில்லை; அது சாத்தியமில்லை என்று சாதித்தனர்.
யானும், பெருந்தன்மையுடன், பெரும்பாலான கட்டடங்கள் முடிந்து விட்டதால், ‘டிவிஷன் 1க்குப் பராமரிப்பு வேலை தான்; அவர்களின் ரேட்டு பட்டியலை பார்வையிடப் போவதில்லை; டெண்டர்களுக்கு என் சம்மதம் நாடினால் போதும். அந்த டிவிஷனில் ஆள் குறைப்பு தேவை’ என்று சொல்லிவிட்டு, அவர்களின் வசவுக்கு ஆளாயினன். அது போதாது என்று அணைக்கட்டு டெண்டர்களின் மதிப்பு போடும் விதம் என்னே? என்னே? என்று வினவினேன்.
அடேங்கப்பா? எழுதப்படாத தடா ஒன்று இருந்தது. என்னுடன் பேசுபவர்கள் சந்தேஹிக்கப்படுவார்கள் என்று. அது தளர்க்கப்பட்டது போலும். இஞ்சினீயர்கள், அதிலும் வாசாலகர்கள், போட்டா போட்டி போட்டுக்கொண்டு என்னுடன் உறவு கொண்டாடினார்கள். என் வினாவுக்கு, ஆளுக்கொரு விடை அளித்தார்கள். சுருங்கச் சொல்லின், 95% விழுக்காடு ஒப்பந்தங்களுக்கு ரேட்டுப் பட்டியல் கிடையாது. ஒவ்வொன்றின் தொகையோ, கோடிக்கணக்கில். ஆனால், டெண்டர் ஆவணங்களில், பக்கம், பக்கமாக ரேட்டு அலசல் (rate analysis), கணக்குச் சாத்திரம், சூத்திரங்கள், வரை படங்கள் சஹிதமாகப் பரிமளிக்கும்.
தலைமை இஞ்சினீயருக்கு ஒரு மடல்:
“ஐயா! நமது அணைக்கட்டு சம்பந்தமான ரேட்டுப் பட்டியல்களையும், ரேட்டு அலசல்களையும், நிதி ஆலோசகன் என்ற முறையில் ஆராய்ந்தேன். தற்காலம் நமது ரேட்டுப் பட்டியல்களுக்கு வேலையில்லை. விட்டு விட்டேன். கோடிக் கணக்கான செலவு சம்பந்தமான ஒரு ரேட்டு அலசலிலும் அடித்தளம் இல்லை. எல்லாம் ஊகத்தின் அடிப்படையில். என் ஆய்வில் தவறு இருக்கலாம். அவ்வாறு இருந்தால், அதைத் திருத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நூறு பக்கங்களில் என் ஆய்வு; அதை அனுபந்தமாக இணைத்துள்ளேன். தங்கள் உண்மையுள்ள… ‘ப்ளா’ ப்ளா’ ‘ப்ளா! (blah!…) இன்று வரை பதில் இல்லை. உறவு முறிந்தது, தற்காலிகமாக; உடன் இருந்தோம் (கோ-எக்ஸிஸ்டன்ஸ்!), நான்கு வருடங்கள். எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை.
சரி. உவமைக் கட்டை அவிழ்ப்போம். சோறு: தடிமன் ஆன ரேட்டுப் பட்டியல் தொகுப்புகளும், கணக்குச் சாத்திரம், சூத்திரங்கள், வரை படங்கள் சஹிதமாக டெண்டர் ஆவணங்களில், பக்கம், பக்கமாக ரேட்டு அலசல்களும். பூசணிக்காய்: ஆதாரமில்லாமல், ஊகித்து டெண்டர் விடுவதால், பிற்பாடு, ‘ங’ப் போல் வளைவது எளிது. தணிக்கைத் துறைக்குத் தண்ணி காட்டலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ‘கடப்ஸில்’ வீசலாம்.
பகுதி 2:
பகுதி 1க்குச் சான்றாக: தற்காலத் தமிழ்நாட்டு டெண்டர் விளம்பரம் ஒன்று, குருட்டாம்போக்கில் அலசப்படுகிறது. அந்தரங்கங்களில் செல்ல வாய்ப்பு இல்லாததால், நான் எல்லை கடக்கவில்லை. உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன். கேட்டால், சந்தேஹ நிவாரணம்.
தமிழ்நாட்டு அரசு ெண்டர்களை http://www.tenders.tn.gov.in என்ற தளத்தில் காணலாம். கீழ சூரிய மூலை வகையறா வாய்க்கால்களில் காவேரி நீர் சேர, துகிலி கிராமத்தில் ஒரு சிறிய தடுப்பு அணைக்கட்டு. மேல் விவரங்கள், நுணுக்கங்கள் உள்பட, 60 பக்கங்கள்.
மேலெழுந்தவாரியாக படித்தால் கூட, வெளிப்படையாக தெரிய வரும் உரசல்கள் ஜாபிதா பின்வருமாறு:
1. ஒப்பந்தத் தொகை: ரூ. 87,13,176.10/- => என்னே துல்லியம்!); (பத்து பைசா தள்ளுபடி)
2. ஏப்ரல் 20, 2011 பிரகடனம்; அதிகாரபூர்வமான தளத்தில் ஒரு வார தாமதத்திற்கு பிறகு, ஏப்ரல் 28, 2011 அன்று. => இதற்கே ஒரு வாரம்! டெண்டர் மனுவை கேட்டவர்களுக்கு எல்லாம், மே 6, 2011க்குள் தர இயலுமோ?
3. டெண்டர்கள் மே 6, 2011 அன்று மாலை 3 மணிக்குள் போட்டாக வேண்டும். => என்ன அவசரமோ? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். பத்து நாள் கெடு! ஆண்டவா!
4. அரை மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்படும். ஏன் இந்த தாமதம் ஐயா! 3.01 மணிக்கு திறந்தால், முறைகேடுகளைத் தவிர்க்கலாமே!
5. வந்ததடா ஆபத்து! நிபந்தனை 4 (b), நான் என்றோ குஜராத்தில் ஒழித்த (புனர்ஜென்மம் எடுத்ததோ?) மூடு மந்திரம்! அதற்காக ஒரு படிவமே, 23ஆம் பக்கத்தில்! [மீள் பார்வை: ‘… எட்டு பேர் டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். ‘மலை முழுங்கி மஹாதேவனுக்கு’ தான் கொடுக்கவேண்டும் என்று தீர்மானம். அப்படியானால், ‘மலை முழுங்கி’ [(+) %] / [(- %)] சின்னங்களுக்கு எதிரே காலியிடம் இட்டு சீல் செய்து, நல்ல பிள்ளையாக, பெட்டியில் போட்டு விடுவார். குறிப்பிட்ட தேதியன்று, சீல் உடைத்து, மொத்தத் தொகைகளையும் படிக்கும்போது, ஐயாவின் டெண்டர் இறுதியில் வாசிக்கப்படும். வாசிப்பவரோ, கணக்குப் புலியாகிய டிவிஷனல் அக்கவுண்டண்ட். ‘மலை முழுங்கி’யின் டெண்டரை எடுக்கும் வரை, மற்றவர்களின் மொத்தத் தொகையை மனத்தில் கொண்டு, கிடுகிடு வேகத்தில் கணக்குப் போட்டு, இவரின் டெண்டர் காலணா குறைவாக இருப்பதைப் போல [+%] அல்லது [-%] வாசித்து விடுவார்.]’ எனவே, அன்பர்களே! வேண்டப்பட்டவனுக்கு அடிக்கலாம் லக்கி ப்ரைஸ்…
6. நிபந்தனை: மூன்று மாதங்களுக்குள் வாபஸ் வாங்கக் கூடாது (அ-து; முடிவெடுக்க அத்தனை நாட்கள் ஆகலாம்.) ஆனால், வேலையை ஒரு வருடத்துக்குள் முடிக்க வேண்டும். (மழைக் காலம் வந்து படுத்தக் கூடாது என்றால், மே மாதமா டெண்டர் கேட்பது!)
7. அவசரக் கோலம் அள்ளித் தெளித்தால் போல. காலாகாலத்தில் கேட்டிருந்தால், ஒப்பந்த ரேட்டு குறையுமில்ல.
8. இந்த ஒப்பந்தத்தில் 13 வேலைகள்; ஒவ்வொன்றிற்கும் ரேட்டு, வேலை அளவு, செலவினம் எல்லாம் விலாவாரியாகப் போட்டிருந்தாலும், நாங்கள் அதற்கெல்லாம் பொறுப்பு அல்ல என்று பிரகடனம்.
9. முத்தாய்ப்பாக, எந்த டெண்டரையும் காரணம் கூறாமல் புறக்கணிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற முழக்கம். சட்டப்படி இது செல்லாது.
10. சொல்லுணமா? என்ன? தோண்டின குழியில் நிற்பதின் பெயர் ‘பிணம்’ என்று?
(தொடரலாமா?)
========================================
படங்களுக்கு நன்றி: http://www.thamilworld.com, http://www.123rf.com, http://guj-nwrws.gujarat.gov.in, http://wn.com/Kollidam_River
அன்பின் இ ஐயா,
ஒவ்வொரு வரிக்கும் ஒரு முடிச்சு போட்டு எழுதும் கலை தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆச்சரியமாக இருக்கிறது. அலங்கார வார்த்தைகள் இல்லாமல், கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதையும், முடிச்சுகளுடன் சுவாரசியமாக்கி, தங்களுடைய ஆழ்ந்த படிப்பு ஞானத்தையும், ஒப்பீடு மூலமாக மேலும் சுவரசியமாக கட்டுரையை எடுத்துச் செல்லும் வல்லமைக்கும், அதை அழகான படங்களுடன் மேலும் மெருகூட்டியிருக்கும் வல்லமை இதழுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா. ……
சரியானது எது என்று சொல்லப்படும் வரை
தவறானது எது என்று சொல்லமுடியவில்லை.
அன்பன்
கி.காளைராசன்