நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3

2

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)

இடைவெட்டு

Subashini Thirumalaiநாஞ்சிலாரோடு அமைந்த இப்பயணத்தில் ஒரு சிறிய இடைவெட்டு. மன்னிக்கவும். இதுவரை அவரோடு பயணித்ததில் அவரது எல்லாப் படைப்புகளிலும் அவரைத்தான் கதாநாயகனாய், கதைப் பொருளாய் உணர்கின்றேன். எந்தவித விரைவுத் தொலைத் தொடர்பற்று இருந்த காலத்தில், ஊர்விட்டு ஊர்வந்து, தன் மொழிவிட்டு புதுமொழியின் ‘நா’ அசைவில் அமர்ந்துகொண்டு, பிழைப்பின் வலிக்கு உழைப்பை உவந்தே நல்கி, ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொழுது, நகர்ந்து செல்லும் தெற்கத்திய இரயில், இவரை நாஞ்சில் நாட்டுக்கும் பம்பாய்க்குமாய் இட்டுச் சென்று மீண்டும் விட்டு விடுகிறது.

இவரது வாழ்வின் ஒவ்வொரு கண்ணியில் பிறந்த கனிகள் நாவல்களாக, சிறுகதைகளாகத் தோன்றின. அவை ஏதாவது ஒரு பரிசிலைப் பெற்றுத் தந்து, மக்களின் அங்கீகாரத்தை வெளிப்படுத்தின. இலக்கியம் படித்து, இலக்கியம் படைக்க வாராது, தன் வாழ்வியலை, வாழ்வை இலக்கியமாகப் படைத்துக்கொண்டிருக்கிறார். கடந்து 35 ஆண்டுகளாக, போகிற போக்கில் நறுக்கென்று மனத்தைத் தைத்தாற்போல் சொற்கள் வந்து விழுகின்றன. அதுவும் பாங்காய்த்தான் படைப்பில் அமர்ந்து விடுகின்றன.

சொல்லிச் சொல்லித் தீராதவை, கட்டுரைகளில் பதிவு செய்யப்படுகின்றன. கதைகளிலும் கதைப் பொருட்களுக்கு இசைவான தகவல்கள் அடுக்கப்படுகின்றன. அத்துணையும் அவரது உழைப்பு. கட்டுரையின் தலைப்பு எதுவாயினும், அதற்குத் தேவையான அளவுத் தகவல்கள் கடைசிச் சொட்டு வரை அப்படியே அள்ளி வைக்கிறார். இதில் அவர் தாம் விவசாயியின் மகன் என்று நிருபிக்கிறார். இவரது உழைப்பின் பிரமிப்பினுடே இவரது கட்டுரைகளில் பயணிக்கிறேன். நீங்களும் அந்தப் பிரமிப்பை அனுபவிக்கலாம். வாருங்கள், நண்பர்களே.

நாஞ்சில் நாடன் கட்டுரைகள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

‘காலச்சுவடு’ வெளியீடு இது. 120 பக்கங்கொண்ட டெமி வடிவத்தில் வெளிவந்திருக்கின்றது. ஓவியர் ஜீவாவின் கோட்டோவியங்கள், இதற்கு உயிர் அளித்திருக்கின்றன. நாஞ்சில் நாடனின் பேராசிரியர் காந்தியவாதி, சமூகவியல் ஆய்வாளர் முன்னுரை அளித்தது மேலும் மதிப்பு பெறுகிறது.  ஆசிரியருடைய முன்முகத்துடன் 12 கட்டுரைகள் இதில் அடக்கம். இறுதி விடைமுகம் ஒன்றும் அளித்து முடிந்திருக்கிறார். காலம் நிகழ்த்திய மாற்றங்களைக் கூறும் நூல்.

‘நாஞ்சில் நாட்டின் கிடப்பு’ என்னும் முதல் கட்டுரை, அதன் அமைந்த இடத்தைப் பற்றிப் பகிர்கிறது. கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில்  நாட்டைச் சொல்வார்கள். உத்தேசமாகச் சொன்னாலும் இன்று நாஞ்சில் நாடு என்று வழங்கப்பெறுவது கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும். பிற மாவட்ட அரசியல், கலை, இலக்கிய ஆய்வாளர்கள் கருதுவது போல, மொத்த கன்னியாகுமரி மாவட்டமுமே நாஞ்சில் நாடு எனக் கொள்வது சரியானது அல்ல. வடக்கிலும் வடக்கிழக்கிலும் வடமேற்கிலும் மலைகள் சூழ்ந்த பகுதியும் ஆன செழிப்பான நிலத் துண்டு நாஞ்சில் நாடு எனக் கொள்ளலாம்.

நாஞ்சில் நாட்டு முதன்மைக் குடிகள் வெள்ளாளர்களும் சாம்பவர்களும் ஆவார்கள். சாணர் என்று அழைக்கப்படும் நாடகர்கள் பின்னாளில் வந்தவர்கள். இந்நாட்டு வெள்ளாளர்கள், மருமக்கள் வழியினர், மக்கள் வழியினர் சைவர் என மூன்று வகையினர் உண்டு. திருமணச் சடங்குகளுக்கும் சாவுச் சடங்குகளுக்கும் வைத்தியன் என்றும், நாசுவன் என்றும், குடிமகன் என்றும் அழைக்கப்பட்ட நாவிதர்களுக்கு முக்கியமான பங்கு இருந்தது. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களிடையே வரதட்சணையும் கல்யாணச் செலவுகளும் அதிகம்.

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கைவெற்றிலை கைமாறுதல், நிச்சயதார்த்தம், தாலிக்குப் பொன்னுருக்கு, கல்யாணம், நாலாம் நீர், ஏழாம் நீர், உடன் மறுவீடு, மறுவீடு, இரண்டாம் மறுவீடு, ஆடித் தங்கல், தீபாவளிப் படி, கார்த்திகைச் சீர், சூல் அழைப்பு, பாண்ட சுத்தி, குழந்தைக்குச் சோறூட்டல், பிறந்த நாள், காது குத்து, பிறந்த முடி எடுத்தல் என்று எந்தச் சடங்கையும் தளர்த்துவதாக இல்லை” என்று வெள்ளாளர் குடிகளின் வாழ்வியலைப் பற்றி விளம்புகிறது.

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். அதனினும் மரபு ரீதியாக மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைப் பற்றிக் கட்டுரையில் மிகவும் விளக்கமாகக் கொடுத்திருக்கிறார்.

அப்பகுதி ஊர்களின் அமைப்பை விளக்குகிறார். நடுவில் கோவில், சுற்றிலும் தெருக்கல், குறுக்கு முடுக்காக வெள்ளாள ஊர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று ஊர்களின் அமைப்பை விளக்குகிறார். அங்குள்ள வீடுகளைப் பற்றி விளக்கும் போது, அவை கொல்லம் அல்லது மங்களூர் ஓடுகள் அமைந்த கூரையுடன் கூடிய வீடுகளாகவும், சுற்றுக் கட்டுடனும், தட்டிப் போட்ட மட்டுப்பாகவும், பூமுக வீடுகளாகவும் இருந்தன என்று நாஞ்சிலார் கூறுகின்றார்.

“தெருவில் இருந்து வாசல், தெருப் படிப்புரை, உள்ளே நடுவில் முற்றமும் நான்கு புறமும் படிப்புரைகளும் படிப்புரைகள் எல்லாம் விளிம்புகளில் கருங்கல் வரிகள் பாவியவை. பிறகு தாய்வீடு, அரங்கு, நெல்போடும் பந்தயப் புரை, அடுக்களை, மேலே தட்டட்டி போட்டு மட்டுப்பா என. முற்றம் என அழைக்கப்பட்ட இடைவழிக்குப் பல உபயோகங்கள். கன்றுக் குட்டியைப் பிரித்துக் கட்டிப் போட, நெல்குத்த உரலும் தோசைக்கு மாவரைக்க ஆட்டுரலும் போட, திருமணத்துக்கு மண மேடை போட, சமைந்த பெண்ணின் தலைக்குத் தண்ணீர் விட, வற்றல் வடகம் பிழிந்து காயப் போட, இறந்தவரைக் குளிப்பாட்ட, சுற்றி நின்று ‘அம்மாடி தாயாரே’ அடிக்க, மாற்றுலக்கை போட்டு வெஞ்சனம் இடிக்க, கிழக்குப் பார்த்து அடுப்புக் கூட்டிப் பொங்கலிட…” என்று வீட்டினுள் இருக்கும் அமைப்பை அழகாய் அடுக்குகிறார்.

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். அதனினும் மரபு ரீதியாக மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைப் பற்றிக் கட்டுரையில் மிகவும் விளக்கமாகக் கொடுத்திருக்கிறார்.

“ஆண்களும் பெண்களும் எழுதப் படிக்கத் தெரிந்தவராய் இருந்தனர். எல்லாச் சிற்றூர்களிலும் சுதந்திரத்துக்கு முன்பே பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஊருக்கு ஏழெட்டுப் போர் இன்டர்மீடியட், ஸ்கூல் ஃபைனல், எஃப்.ஏ. படித்தவர்கள் இருந்தனர். கிறிஸ்துவப் பாதிரிமார்கள், திருவிதாங்கூர் மன்னர்கள் ஏற்படுத்திய உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன.”

படித்தவர்கள் அனேகம் இருப்பினும் வேலைக்குப் போனவர்கள் மிகவும் குறைவு. அவ்வாறு வேலைக்குப் போனவர்களும் தவறு செய்து தன் சமூகத்திற்குக் கெட்ட பெயர் வாங்கிவிடக் கூடாது என்றிருந்தனர். பக்தி இருந்தது பயமற்று இருந்தனர். கடவுள் வழிபாடு பற்றி விரிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். மேலும், குலதெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, சாஸ்தா வழிபாடு ஆகியவை இவர்களுக்கு இருந்திருக்கிறது. கோடைக் காலங்களில் கோவில்களிலும் வீட்டுப் படிப்புரைகளிலும் கம்ப இராமாயண வாசிப்பு இருந்திருக்கின்றது. திருவிழாக் காலங்களில் இசைக் கச்சேரிகள் நடந்தேறி இருக்கின்றன. அவர்களுக்கு இசையறிவும் இருந்திருக்கின்றது என்று கூறுகிறார்.

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் மரபு ரீதியான மொழியறிவு, இசையறிவு எல்லாம் அறுபட்டுப் போனதற்குத் திராவிட இயக்கங்களின் தாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கைவசமிருந்த நுண்கலைகளையும் வெகுஜனக் கலைகளையும் பார்ப்பனக் கலைகள் என்று கூறிய துஷ்பிரச்சாரமும் வெறுப்பேற்றலும் நடைபெற்றது என்பது இன்று வரலாறு என்று வருத்தப்படுகிறார்.

தெருவில் எவரேனும் குடிசையின் கூரைக்கு ஓலை கட்டிக்கொண்டிருந்தால், அவ்வழி போவோர் தானாக முன்வந்து, ஓலையை எடுத்துக் கொடுப்பர். கனத்துச் சுவர் பெய்த அடைமழையில் விழுந்தால், களிமண் குழைத்து அடைக்கும்போதும் வலியவந்து உதவுவார்கள்.

 

nanjil_nadan

“கல்யாணத்துக்கு ஆக்குப்புரையில் கோட்டை அடுப்புப் போட, விறகு சுமந்து அடுக்க, களம் திருத்த, கழிக்கோல் நட்டு ஓலைக் காமணம் போட, தேங்காய் தொலிக்க, காய்கறி வாங்க, நெல் குத்த, கல்யாணத்துக்கு முன்தினம் காய்கறி வெட்ட, தேங்காய் திருவ, தண்ணீர் சுமக்க, வைப்புக்கார ஐயருக்குக் கூடமாட நிற்க, பந்தி விளம்ப, இலை எடுக்க, பாத்திரம் கழுவி அடுக்க… அன்றைக்கு எல்லாம் சம்பளக்காரன் இல்லை.
அதுபோல் பெண்களும் அண்டை அயலார், உறவினர் யாவரும் உழைப்புத் தானத்துக்குத் தயங்கியவர் இல்லை. நெல் அவிக்க, வெஞ்சனம் இடிக்க, மாவிடிக்க, கடைச் சாமான்கள் புடைத்து நாவி அளந்து கட்டி வைக்க, அரிசி புடைக்க, கல் நாவ என ஒரு வீட்டில் பெண்பிள்ளைக்கு மேலுக்கு சுகமில்லை என்றால் கறிக்கு அரைத்துக் கூட்டிப் போட, பக்கத்து வீட்டுக்காரி வருவாள். மண்பானையில் வேகும் மூன்று பக்கா அரிசி வெந்ததும் உலை மூடி போட்டுக் கவிழத்து வடித்துக் கொடுக்க வருவாள். வயிற்றுச் சூலிக்கு உதவுவார் உண்டு. பிள்ளைத் தாய்ச்சிக்குப் பாலூற, பால்பூச்சி மீன் வாங்கித் தருவார் உண்டு. சிவந்த கண்ணில் பிள்ளைப்பால் பீய்ச்சுவார் உண்டு. மண்டையிடிக்கு ஆனைப்பல்லும் சுக்கும் உரைத்து நெற்றியில், உச்சியில் பூச சங்கில் பிள்ளைப் பால் பீய்ச்சித் தருவார் உண்டு. அதற்காகச் சின்னப்பிள்ளைச் சண்டைக்குப் போக மாட்டார்கள் என்றில்லை.

தன் வீட்டில் சர்க்கரைக் கொழுக்கட்டை, வெந்தயக் கொழுக்கட்டை அவித்தாலோ, உளுந்தஞ்சோறு பொங்கினாலோ, உளுந்தங்களி கிண்டினாலோ, வெந்தயக் காடி காய்ச்சினாலோ, வருக்கைச்சக்கை வெட்டினாலோ, பனங்கிழங்கு சுட்டாலோ, நாலு வீடு தாண்டி இருக்கும் வயிற்றுச் சூலிக்குச் சின்னச் சருவத்தில், தலை முந்தியைப் போட்டு மூடி சுடச்சுடக் கொண்டு போய்க் கொடுத்ததுண்டு.”

“பாதுகாப்பு” என்ற பெயரில் பெண்களைச் சிறை வைத்திருந்தனர் வெள்ளாளர். அவர்கள் மரபுரீதியான உணவுப் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டதாகப் பதிவு செய்கிறார் நாஞ்சிலார்.

“உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் சமனப்படுத்த தேவையான சேர்மானங்கள் செய்தனர். எடுத்துக்காட்டாக சக்கை எனப்படும் பலாக்காய் புளிக்கறிக்கு நல்ல மிளகு சேர்த்து அரைக்க வேண்டும் என்பது போல. பிள்ளைச் சுறா மீனை, வெஞ்சனங்கள் வறுத்து அரைத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்பது போல.

தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்பது போல் இன்ன மீனை இன்ன விதத்தில் அரைத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பாடுகள் இருந்தன.

நாஞ்சில் நாடன்

“உக்காந்து திண்ணு ஆயிரத்தை அரையே மாகாணி ஆக்கியவன்” என்று “மொச்சக்கொட்டை தீயலும் சாளைப்புளி மொளகும் வச்சுச் சண்ணுனான்” என்றும் தின்று கெட்டவனுக்கு வசை உண்டு. கிராமத்துக்கு ஒரு “கூட்டவியலு”, “துப்பு வாளை”, “அடைப் பாயசம்” பட்டப் பெயருடன் மனிதர்கள் உண்டு.”

நாட்டு வைத்தியமும் கை வைத்தியமும் இவர்களுக்குக் கைவந்த கலை என்கிறார் நாடன் அவர்கள். வெள்ளாளர்களிடத்தில் வெற்றிலை போடும் பழக்கம் இருந்திருக்கின்றது. ‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’ என்ற பழமொழியை ஈண்டு வைக்கிறார்.

“எந்த மொழியும் புத்தம் புதிய, கருக்கழியாத, செம்புப் பானை போல் இருப்பதில்லை. தூரில் கரி பிடிக்கும், கழுத்துச் சவளும், விலா நசுங்கும், நிறம் மங்கும், கறைபிடிக்கும், காரை சேரும். காலம் தனது பதிவுகளைச் செய்யும். பழையன கழியும் புதியன புகும். ஆனால் நாஞ்சில் மொழிக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கதி துயரமும் சோர்வும் தருவது” என்று ஆசிரியர் கவலைப்படுகிறார். விவசாயம் சார்ந்த சொற்களாக, படம், படங்கு, தரங்கு, சுற்றுப்பூண், சைரு வேப்பந்தாங்கி என்று பட்டியலிடுகிறார். சமையலுக்கு உதவிய பாண்டங்களுக்கும் சிறப்பான பெயர்கள் உள்ளன. அக்காலத்தில் பழையது உண்ணவும், உப்பு போட்டு வைக்கவும் ‘மரவை’ இருந்தது என்கிறார்.

கடந்த காலம் இன்று அவர்களைக் கணக்குக் கேட்கிறது. எல்லா நாஞ்சில் நாட்டுக் கிராமங்களிலும் ஒரு வகை அமைதியின்மை, இளைஞர்களிடையே இருக்கிறது இன்று. அது புயலுக்குப் பிந்தைய அமைதியா அல்லது புயலுக்கு முந்தைய அமைதியா அல்லது புயலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாது தனக்கு இதுதான் விதிக்கப்பட்டது என்ற போதத்தின் கையாலாகாத அமைதியா?

பக்தி உணர்வு அவர்களிடம் திடீரென அதிகமாகி வருகிறது. இந்தத் திடீர் பக்தியின் அடிப்படைக் காரணங்களும் ஆராயப்பட வேண்டியவை. மேலும் பல இளைஞர்கள் இந்து சமய அடிப்படை வாதம் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அது எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதும் எங்கு கொண்டுபோய்ச் சேர்த்தால் என்ன என்பதும் இரு அடிப்படை வேறுபட்ட கவலைகள்.

தன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்ற பிரித்தறி ஆற்றலும் அற்ற இந்தச் சமூகம் நேற்றைச் சுமந்துகொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது. இந்தச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சிலருக்கு அது புலப்படுகிறது. ஆனால் வெகுசனத்துக்குப் புலப்பட வேண்டும்.

தன் சமூகத்தினரைப் பற்றிய இந்த விளக்கமான பதிவு, காய்தல், உவத்தல் இன்றி உண்மையான கவலையுடன் விடை பெறுகிறார். வெள்ளாளன் நாஞ்சில் நாடனுக்கு அக்கறையும் கவலையும் இருக்கத்தானே செய்யும்.

“கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக் கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்நூல்” என்று த. வேலப்பன் கூறுகிறார்.

“நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (காலம் நிகழ்த்திய மாற்றங்கள்) என்னும் நூல், இவரது கட்டுரைகளின் நுழைவாயில் இது. ஒரு வீட்டு முற்றத்தில் ஏற்றிய விளக்கு, எங்ஙனம் வீட்டின் முழுவதும் வெளிச்சம் பரவச்செய்து, ஒன்று விடாது பிரகாசிக்கச் செய்யுமோ அதுபோல் தான் இவரது கட்டுரைகள் பொருள் எனும் விளக்கு, ஒரு அணுவிடாது அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் அடுக்கடுக்காய் ஒளிரச் செய்கின்றது. அழிவிலிருந்து ஒரு அடுக்கை எடுத்தாளும் அதன் கட்டமைப்பைக் குலைத்து விடுவோமோ என்ற அச்சம் எனக்கு இருக்கின்றது. இந்த அச்சத்துடன்தான் அடுத்த நூலுக்கும் பயணமாகின்றேன்.

(பயணம் தொடரும்….

===============================

படங்களுக்கு நன்றி – http://nanjilnadan.wordpress.com, http://thedipaar.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3

  1. please subha
    u concentrate on interview, travellogues, fictions on your own.

    literary criticism is only good for

    the writer who concerned.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *