பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 29
சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
செம்மொழி இளம் அறிஞரும் பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுப்பிய கேள்வி – 3:
உலகளாவிய நிலையில் ஒப்பியல் துறைகளில் நடைபெறும் தமிழ் ஆய்வுகள் குறித்துத் தங்கள் மதிப்பீடு என்ன?
பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்:
ஒப்பியல் இலக்கியத் துறையை மட்டும் இந்தப் பதிலில் எடுத்துக்கொள்கிறேன். இலக்கிய ஒப்பியல், இலக்கியத் திறனாய்வில் ஒரு வகை. ஒரு மொழியின் இலக்கியத்தில் மற்றொரு மொழியின் இலக்கியத் தாக்கம் என்ன என்று பார்ப்பது ஒப்பியல் திறனாய்வில் ஒரு வகை. இதில் ஒரு இலக்கிய ஆசிரியனின் படைப்புக் கலையில் மற்றொரு இலக்கிய ஆசிரியனின் செல்வாக்கைப் பார்ப்பது ஒன்று. பாரதியில் விட்மன் என்னும் ஆய்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இத்தகைய ஒப்பீடு, ஒரே மொழியின் இரண்டு ஆசிரியர்களிடையேயும் இருக்கலாம். ஜெயகாந்தனில் புதுமைப்பித்தன் என்னும் ஆய்வு இதில் அடங்கும். இந்த ஆய்வு சாதாரணமாக வரலாற்றுப் பார்வையில் இலக்கியத்தின் வளர்ச்சியைப் பார்ப்பதாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் நடக்கும் ஒப்பியல் ஆய்வில் பெரும் பகுதி, மேலே சொன்ன இரண்டில் சேரும். முதலாவதில் மற்ற மொழி இலக்கிய ஆசிரியர்களைவிட ஆங்கில இலக்கிய ஆசிரியனோடு ஒப்பிடுவதே அதிகம்.
இந்த வகையைப் பொதுமைப்படுத்தி, ஒரு இலக்கிய வகையின் தாக்கத்தைப் பற்றியும் ஆய்வு அமையலாம். தமிழ் நாவல்களில் ஐரோப்பிய நாவல்களின் செல்வாக்குப் பற்றிய ஆய்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆய்வின் பார்வை செல்வாக்கைப் பற்றி அல்லாமல் வேறுபாடுகளைப் பற்றி இருக்கலாம். வேறுபாடு இலக்கியக் கொள்கையின் அடிப்படையில் அமையும். ஆனால் இலக்கிய வகைகளின் கொள்கைகள் ஒரு மொழியின் இலக்கியத்திலிருந்தே பிறக்கின்றன. நாவல் ஆய்வு ஐரோப்பிய நாவல்களோடு ஒப்பிட்டும், காப்பிய ஆய்வு கிரேக்கக் காப்பியங்களோடு ஒப்பிட்டும் (இடைக்காலத்தில் சம்ஸ்கிருதக் காப்பியங்களோடு ஒப்பிட்டும்) நடப்பது இதனாலேயே.
தமிழ் நாவல்களையோ காப்பியங்களையோ, பிற மொழிப் படைப்புகளைக் குறிக்கோளாகக் கொண்டு, அதை நோக்கிச் செல்லும் வரலாற்றுப் பயணமாகப் பார்க்காமல், தமிழ் இலக்கிய, கலாச்சார வரலாற்றின் விளைவாகப் பார்க்க முடியும். இந்தப் பார்வையில் காலத்தால் முந்திய இலக்கியத்தோடான ஒப்பீடு, இலக்கிய வளர்ச்சி ஆய்வோடு பின்னிப் பிணைந்து விடுகிறது. இந்தப் போக்கில் அண்மைக் காலத்தில் முனைப்பு கூடியிருக்கிறது.
இந்தியாவில் சில பல்கலைக்கழகங்களில் ஒப்பியல் இலக்கியத் துறைகள் இருக்கின்றன. அவற்றில் பல்கலைக்கழகம் உள்ள மாநிலத்து மொழியின் இலக்கியத்தைத் தமிழ் இலக்கியத்தோடோ வேறு இந்திய மொழி இலக்கியத்தோடோ ஒப்பிடுவதாகத் தெரியவில்லை. ஆங்கில இலக்கியத்தோடுதான் ஒப்பீடு. மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில், தென்னாசியத் துறைகளில் தமிழ் இலக்கியம் இந்திய மொழி இலக்கியங்களில் ஒன்று என்ற முறையில் ஒப்பியல் ஆய்வு நடைபெறுகிறது. இந்த ஆய்வு இந்திய இலக்கியங்களின் பொதுக் கூறுகளையும் தனிக் கூறுகளையும் காணும் வகையில் நடைபெறுகிறது.
தமிழ் இலக்கியத்தின் படைப்புகளைத் தமிழ் இலக்கியக் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளை இரண்டு கால நிலைகளில் ஒப்பிடும் ஆய்வும் நடைபெறுகிறது. அகம் என்னும் இலக்கியக் கொள்கை சங்கப் பாடலிலும் கோவைப் பாடலிலும் பயன்படும் விதம் பற்றிய ஆய்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. காலனிய காலத்திற்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் காலனிய காலத்திலும் படைக்கப்பட்ட இலக்கியங்களை ஆய்வது மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த ஒப்பாய்வு இலக்கியச் சூழல், பயிற்சி, ஏற்பு, புரிதல் முதலானவற்றை இரண்டு கால நிலைகளில் ஒப்பிடுவது.
சில அமெரிக்கப் பல்கல்கலைக்கழகங்களில் கல்லூரி மாணவர்களுக்கு உலக இலக்கியங்கள், உலக நாகரிகங்கள் ஆகிய பாடங்கள் உண்டு. இவை அறிமுகப் பாடங்கள். பல பண்பாட்டு இலக்கியங்கள் மொழிபெயர்ப்பில் அறிமுகப்படுத்தப்படும். இந்த அறிமுகத்தில் ஒப்புமை இலைமறை காயாக இருக்கும். மனிதரின் படைப்பாற்றலில், வாழ்க்கைப் பார்வையில், அழகுணர்ச்சியில் சில பொதுப் பண்புகள் உண்டு; அவற்றைப் பல மொழிகளின் இலக்கியங்களின் மூலம் உணரலாம் என்னும் கொள்கையின் அடிப்படையில் இந்தப் பாடங்கள் நடத்தப்படும். இதுவும் ஒரு வகை ஒப்பிலக்கியப் படிப்புதான்.
இந்தப் பாடங்களை நடத்தும் ஆசிரியர்களைப் பொறுத்து, இவற்றில் பொறுக்கி எடுத்த சில தமிழ் இலக்கிய நூல்கள் இடம் பெறுவதுண்டு. பெரும்பாலான இடங்களில் இராமாயணம், மகாபாரதம் இருக்கும்; சிலப்பதிகாரம் இருப்பது அபூர்வம். தமிழ்நாட்டில், மாணவர்களின் மனத்தை விரிவுபடுத்தும் இந்த மாதிரியான ஒப்பிலக்கியப் படிப்பு இல்லை. இளங்கலை மாணவர்களுக்கும் இல்லை; முதுகலை மாணவர்களுக்கும் இல்லை.
=====================================
(தமிழ் மொழி தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)