அருணாச்சல பிரதேச முதல்வர் மறைவுக்கு இரங்கல்
அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு, 2011 ஏப்ரல் 30 அன்று , தவாங் பகுதியில் இருந்து இடாநகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் கேப்டன்கள் ஜே.எஸ்.பாபர், டி.எஸ்.மாமிக், பாதுகாப்பு அதிகாரி யெஷி சோடக், தவாங் தொகுதி எம்எல்ஏவின் சகோதரி யெஷி லாமு ஆகியோரும் சென்றனர். இந்த ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கி நொறுங்கியது.
அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விபத்து நடந்ததால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. 5 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு தவாங் மாவட்டத்தின் லுகுதாங் காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 4 ஆயிரத்து 500 மீட்டர் உயரமுள்ள கெய்லாவில் டோர்ஜி காண்டு மற்றும் 4 பேரின் உடல்கள் கிடப்பது தெரியவந்தது. கடும் பனிப் பொழிவு இருந்ததால் மீட்புப் பணிகள் மெதுவாகவே நடந்தன.
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு டோர்ஜி காண்டுவின் மறைவிற்கு இந்திய குடியரசின் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மக்களே முதன்மையானவர்கள் என்ற கொள்கையில் உறுதியான டோர்ஜி, கல்வி, நலவாழ்வுத் துறைகளுக்கு முன்னுரிமையளித்து அந்த வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் சென்றடைய வேண்டுமெனப் பாடுபட்டவர் என அவர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் இந்தத் துயரமான மறைவிற்கு பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தம் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.
பொதுச் சேவையில் நீண்ட நாட்கள் தம்மையே அர்ப்பணித்துக் கொண்ட அனுபவமிக்க ஒரு சிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டதாக டோர்ஜியின் துணைவியார் ரின்சின் டிரிமாவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையும் அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் துயரமான மறைவிற்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அது தனது தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-
1955ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 3ஆம் நாள் பிறந்த டோர்ஜி காண்டு, ஏழு ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பனியாற்றியுள்ளார்.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல்வர் பொறுப்பேற்ற டோர்ஜி, மாநில அமைச்சரவையிலும் மற்றும் பல்வேறு நிலைகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியுள்ளார்.
தொடக்க முதலே கிராமப்புறங்களில் சமூக நலப் பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு தீவிரமாகச் செயலாற்றி வந்தார்.
குடிநீர் விநியோகம், மின்சாரம், தகவல் தொடர்பு வசதிகள், விவசாயம், கால்நடைத் துறை, பள்ளி, மருத்துவமனை அமைத்தல் போன்றவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி வந்தார்.
தன்னுடைய முன்முயற்சிகள் மூலம் மத்திய மாநில திட்டங்களைச் செயல்படுத்துவதில் உதவியாக இருந்தார் என அமைச்சரவை தனது இரங்கல் செய்தியில் டோர்ஜியைப் பாராட்டியுள்ளது.
===================================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://arunachalipr.gov.in