நாகேஸ்வரி அண்ணாமலை

 

அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு; ஜனநாயக நாடு.  பிரிட்டன் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் தன்னுடைய அரச பரம்பரையை இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறது.  டயானா-சார்லஸ் திருமணம் தோல்வியில் முடிந்தது, டயானா தன்னுடைய காதலனோடு காரில் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு சதியால் கார் விபத்தில் மடிந்தது, இளவரசர் சார்லஸ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரைத் திருமணம் செய்துகொண்டது ஆகிய எல்லாம் ஒரு அரச பரம்பரைக்குரிய செயல்களாக நான் நினைக்கவில்லை.  நான் நினைப்பது இருக்கட்டும்.  பிரிட்டன் தன் அரச பரம்பரையை வெகுவாகக் கொண்டாடுகிறது.  அது தன் நாட்டின் பெருமைக்குரிய சின்னமாகக் கருதுகிறது.  அரசராகப் போகும் இளவரசர் ஹேரியின் மனைவி கருவுற்றது இங்கிலாந்தைப் பொறுத்த வரை பெரிய செய்தி.

அமெரிக்காவிற்கு என்று  ஒரு அரச பரம்பரை இல்லாவிட்டாலும்  தங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது  அந்த நிகழ்ச்சி அரசரின்  முடிசூட்டு விழாவைப் போல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்  போலும்.  ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முன் அந்தப் பதவிக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்வதாக சத்தியம் செய்வதுதான் இந்தத் தொடக்க விழாவின் முக்கிய, அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற, முக்கிய நிகழ்ச்சி.  ஆனால் நாளடைவில் இது பெரிய விழாவாக உருவாகியிருக்கிறது.  பொதுமக்களும் இதை ஒரு பெரிய திருவிழா போல் கொண்டாட நினைக்கிறார்கள்.

இந்தத் துவக்கவிழா ஜனவரி 20-ஆம் தேதி நடைபெற வேண்டும் என்று திருத்தப்பட்ட அமெரிக்க அரசியல் சாசனம் கூறுகிறது.  அன்றிலிருந்துதான் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பதவிக் காலம் ஆரம்பமாகிறது.  முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் 1789-இல் ஏப்ரல் 30-ஆம் தேதி நியுயார்க்கில் பதவியேற்றாராம்.  அப்போது அதுதான் அமெரிக்காவின் தலைநகரம்.  1801-இல் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்ஸன் பதவியேற்ற போது வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவின் தலைநகரமாகியிருந்தது.

அதன் பிறகு மார்ச் மாதம் நாலாம் தேதியை ஜனாதிபதியின் துவக்க விழா நாளாக மாற்றினார்களாம்.  தொலைபேசி, இண்டெர்னெட் ஆகிய வசதிகள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்தல் முடிவுகள் குதிரை வீரர்கள் மூலமாக தலைநகருக்கு வந்துசேர வேண்டுமாதலால் நவம்பர் முதல் செவ்வாய்க் கிழமையன்று (அமெரிக்கா உருவான நாளிலிருந்து நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க் கிழமைதான் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் நாள்; இது வியப்பிற்குரிய விஷயம்தான்) தேர்தல் நடந்தாலும், வாக்குகளைக் கையால் எண்ணி, முடிவை அறிவித்து, தேர்தல் குழுவின் (Electoral College) முடிவுகளையும் தெரிந்துகொண்டு ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டன.  1937-இல் ரூஸ்வெட்டின் இரண்டாவது பதவியேற்பின் போது பதவியேற்பு விழா அரசியல் சாசனம் இருபதாவது திருத்தத்தின்படி ஜனவரி 20-க்கு மாற்றி அமைக்கப்பட்டது.  இந்த இரண்டரை மாதங்கள் புதிதாகப் பதவியேற்பவர் தன்னுடைய மந்திரி சபையையும் மற்ற அதிகாரிகளையும் தேர்ந்தெடுப்பதற்கு அவகாசம் அளிக்கிறது.

துவக்க விழா அமெரிக்க பார்லிமெண்டான கேபிடல்  ஹில்லின் (Capitol Hill) படிகளில் நடக்கும். அமெரிக்க தலைமை நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.  அதன் பிறகு ஜனாதிபதி பொறுப்பை ஏற்றவர் தன் அதிகார பூர்வமான வீட்டிற்குச் செல்வார்.  ஜெபர்ஸன் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் குதிரை மீது வாத்தியக் குழுக்கள் புடைசூழ தன் இருப்பிடத்திற்குச் சென்றாராம்.  அதுதான் இப்போது பெரிய துவக்க விழா அணிவகுப்பாக (Inaugural Parade) உருவாகியிருக்கிறது.  ஜெபர்சனை அடுத்து வந்த ஜேம்ஸ் மேடிசன் காலத்தில் அணிவகுப்பிற்குப் பிறகு துவக்க விழா நடனம் (Inaugural Ball) ஆரம்பித்தது.  இதில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் $4 கொடுத்து டிக்கெட் வாங்கினார்களாம்.  இன்று டிக்கெட்டின் விலை $60. ஆனால், நன்கொடை விலையாக முதலில் $1000-உம், பின், $500-உம் பெறப்பட்டது.  1913-இல் பதவியேற்ற உட்ரோ வில்ஸன் இது அதிகப் பணம் செலவாகும் நிகழ்ச்சி என்று கருதி ரத்துசெய்துவிட்டாராம்.  அவரை அடுத்து வந்த வாரன் ஹார்டிங்கும் அதைத் தொடர்ந்தாராம்.  1949-இல் ஹேரி ட்ரூமன் இதை மறுபடியும் கொண்டுவந்தாராம்.  ஜனாதிபதி கிளிண்டன் காலத்தில் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பதினான்காக உயர்ந்தனவாம்.

பதவிப் பிரமாண விழாவிற்கு ஆகும் செலவுகளை மட்டும்தான்  அரசு செலவழிக்கிறதாம்.  மற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்காகும் செலவுகளை துவக்கவிழா கமிட்டி  தனிப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கிறதாம்.  இந்த முறை ஒபாமாவே 50 மில்லியன் டாலர்கள் வசூலிக்கும்படி கமிட்டி அங்கத்தினர்களிடம் கூறினாராம்.

பல நாட்களாக பதவியேற்பிற்கான  ஏற்பாடுகள் நடந்தன.  மிஷல் ஒபாமாவின் உடைகளுக்காக பல ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப்பட்டன.  (ஆனால் அன்று ஒரு நாள் அதை அணிந்த பிறகு அவருடைய அந்த உடை ஜனாதிபதி ஆவணக் காப்பகத்திற்குச் (presidential archives) சென்றுவிடுமாம்.)  பெரிய ஆடை வல்லுநர்கள் அதைத் தயாரித்தார்களாம். அதன் விலை ரகசியம். ஃபாஷன் பற்றித் தெரிந்தவர்கள் $10,000 இருக்கலாம் என்று மதிக்கிறார்கள். முப்பது வருஷங்களுக்கு முன் ஜனாதிபதியாக இருந்த ரீகனின் மனைவி ஆடைகளில் அதிகப் பணம் செலவழிக்கிறார் என்று மக்களிடையே அதிருப்தி இருந்ததாம்.  இப்போது மிஷல் ஒபாமாவின் உடைகளைப் பற்றி யாரும் குறை சொல்வதாகத் தெரியவில்லை.  இந்த முப்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றம்!

துவக்க விழாவிற்குப் பிறகு அணிவகுப்பு, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.  சுமார் பத்து லட்சம் பேர் வாஷிங்டனின் குளிரையும் பொருட்படுத்தாமல் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.  இது ஒபாமாவின் முதல் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கிஅயில் பாதி.

ஒபாமா தன்னுடைய துவக்க உரையில் (Inaugural Speech) தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் கூறிய வாக்குறுதிகளை மறுபடி கூறினார்.  பலர் அன்றாடத் தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கும்போது சிலர் கையில் மட்டும் பணம் சேருவது நாட்டிற்கே நல்லதல்ல என்றும் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்களை மற்றவர்கள் வெறுக்கும் வரையில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பதாகாது என்றும் அட்சய பாதிரமான அமெரிக்காவிற்கு வர விரும்புபவர்களில் தகுதி இருப்பவர்களை வரவேற்பதே மனிதநேயம் என்றும் அவர் கூறியது அவர் எப்படிப்பட்ட மனித நேயர் என்பதைக் காட்டியது.   சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது பற்றியும் விரிவாகப் பேசினார்.

அவருடைய துவக்க விழாவில் கடவுள் வணக்கம் பாடியவர் ஒரு கருப்புப் பெண்.  கவிதை வாசித்தவர் ஓரினச் சேர்க்கையில் விருப்பமுள்ளவர்.  துணைஜனாதிபதிக்குப் பதவிப் பிரமாணம் செய்வித்த உச்சநீதிமன்ற நீதிபதி போர்ட்டரீகோவிலிருந்து சிறு வயதில் அமெரிக்காவிற்குத் தன் பெற்றோர்களுடன் குடியேறி நியுயார்க்கில் வறியவர்கள் பகுதியில் வளர்ந்து படித்து முன்னேறியவர்.  இவர்களைத் தன் துவக்க விழாவிற்குத் தேர்தெடுத்ததின் மூலம் தான் இவர்களின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதை உலகிற்கு அறிவித்தார். அமெரிக்கா பல வித மக்களையும் அரவணைக்கும் நாடு; அவர்கள் மேலே வர வாய்ப்புகள் அளிக்கும் நாடு என்று காட்டவும் அப்படிச் செய்தார் என்று நினைக்கிறேன்.  White Anglo-Saxon Protestant-களுக்குத் துவக்க விழாவில் முக்கிய இடம் இல்லை (இவர்களை WASP என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள்).  இவர்கள் அமெரிக்காவிற்கு வந்த முதல் குடியேறிகளின் வழி வந்தவர்கள்.  இவர்கள் அமெரிக்கா தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவர்கள்.  இந்த இனத்தைச் சேர்ந்த யாருக்கும் இறை வணக்கம் பாடவோ கவிதை வாசிக்கவோ ஒபாமா இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் எனக்குள்ளே ஒரு நெருடல்.  இந்தத் துவக்க விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் வேண்டுமா?  சிகாகோ நகரின் முக்கிய வீதி ஒன்றில வயதான கருப்பர் ஒருவர் கடுங்குளிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது இத்தனை பணம் இதற்காகச் செலவிட வேண்டுமா?  காந்திஜி பற்றி அதிகம் தெரிந்திராத ஒரு அமெரிக்கப் பெண் என்னிடம் ஒரு முறை ‘டயப்பர் (diaper-சிறு குழந்தைகளுக்கு அவர்களுக்கு விபரம் தெரியும் வரை இடையில் கட்டும் துண்டு) கட்டிக்கொண்டு இருப்பாரே அவர்தானே நீங்கள் குறிப்பிடும் காந்திஜி’ என்று கேட்டார்.  தமிழ்நாட்டிற்கு வந்தபோது இடையில் வேட்டி மட்டும் உடுத்தியிருந்த தமிழ்நாட்டு விவசாயிகளைப் பார்த்த காந்திஜி அன்றிலிருந்து தானும் வேட்டி மட்டும் உடுத்தத் தீர்மானித்தார் என்று அந்தப் பெண்ணிற்கு விளக்குவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.  ஆனால் ஒபாமா காந்திஜியைப் பற்றி முழுவதும் அறிந்தவர்.  அவருடைய எளிமையை வெகுவாகப் போற்றியவர்.  ‘யாரோடு – அவர்கள் உயிரோடு இருப்பவர்களானாலும் சரி அல்லது இறந்துபோய்விட்டவர்களானாலும் சரி – நீங்கள் உணவு உண்ண விரும்புகிறீர்கள்?’ என்று ஒபாமாவிடம் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு மாணவன் கேட்டபோது எந்த விதத் தாமதமும் இன்றி அவர் உடனடியாகக் கொடுத்த பதில் ‘நான் காந்திஜியோடுதான் உணவு உண்ண விரும்புகிறேன். அவர் உண்ணும் உணவு மிகவும் எளிமையானதாக, அளவில் குறைவாக இருக்கும் என்றாலும்’ என்றார்.  அவர் காந்திஜியைப் போற்றுபவர் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?  அவராலேயே ஜனாதிபதி பதயேற்பு விழாவை எளிமையாக நடத்த முடியவில்லை என்றால் அமெரிக்காவின் பகட்டிற்கு அவர் பணிய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது என்பதைத் தவிர என்ன காரணம் இருக்க முடியும்?

பொதுவாக இந்தியாவில்  அரசியல்வாதிகள் தாங்கள்  எளிய வாழ்க்கை வாழுவதாக – அப்படி வாழுகிறார்களோ இல்லையோ – காட்டிக்கொள்வார்கள்.  ஆனால் அமெரிக்காவில் அப்படியில்லை.  எல்லா அரசியல்வாதிகளும் ‘டிப்டாப்பாக’ உடை அணிந்து வருகிறார்கள்.  நூற்றுக் கணக்கில் பணம் செலவழித்து தலை அலங்காரம் செய்துகொள்கிறார்கள்.  (2008 ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜான் எட்வர்ட்ஸ் 8000 டாலர் செலவழித்துத் தலை அலங்காரம் செய்துகொண்டதாகக் கூறினார்கள்.)  அமெரிக்காவில் எல்லோரும் – முதியவர்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் உட்பட – தலை அலங்காரம் செய்துகொள்ளுகிறார்கள் என்பது இன்னொரு விஷயம்.  உடம்பை ஊளைச்சதை எதுவுமில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அமெரிக்க இலக்கணங்களில் ஒன்று.  அதுவும் பொதுவாழ்வில் ஈடுப்பட்டிருப்பவர்கள் உடலை நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் அவர்களுக்கு நாகரிகம் தெரியவில்லை என்று பொதுமக்கள் நினைத்துவிடலாம்.  அதிலும் கருப்பு இனத்தைச் சேர்ந்த ஒபாமாவுக்கும் அவரது மனைவிக்கும் மற்ற வெள்ளையர்கள் போல் நாகரிகமாக இருக்கத் தெரியாது என்று பொதுமக்கள் நினைக்க வாய்ப்பு உண்டு.  மிஷல் ஒபாமா அவர் ஜனாதிபதி மனைவியாக ஆவதற்கு முன்பிருந்ததை விட இப்போது தன்னுடைய உடல் அமைப்பில் அக்கறை செலுத்துகிறார் என்று நான் என்று நினைக்கிறேன்.  தாங்கள் எந்த விதத்திலும் வெள்ளை அமெரிக்கர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று காட்டிக்கொள்வதற்காகவும் பதவியில் இருப்பவர்கள் அப்படி நடந்துகொள்கிறார்கள்.

அமெரிக்காவின் படிமத்தை உலகில் தூக்கிப் பிடிக்க  வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஒபாமாவிற்கு இருப்பதும் அமெரிக்கா தன் பலத்தையும் பணத்தையும் உலகிற்குக் காட்ட விரும்பியதும்தான் துவக்க விழா இவ்வளவு ஆடம்பரமாக அமைந்தது என்று நினைத்துக்கொண்டால் ஓரளவு சமாதானம் கிடைக்கிறது.

http://www.huffingtonpost.com/2013/01/21/inauguration-pictures-2013_n_2492001.html#slide=2008722

http://www.huffingtonpost.com/2013/01/21/inauguration-pictures-2013_n_2492001.html#slide=2009212

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்க முடிசூட்டு விழா

  1. கட்டுரை மிக அருமை. அமெரிக்காவில் இருக்கின்ற என் போன்ற பலரும் முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் வாயிலாகவே நாட்டு நடப்புக்களை இவ்வளவு விரிவாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்கின்றோம் என்றே எண்ணுகின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள்!!

    –மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *