தெரு நாய்
எங்கும் பரவியுள ஈசனுக்கோர் பாமாலை
எழுத முற்பட்டு ஏடெடுத்து அமர்ந்திட்டேன்
“எனைப் பாடு, எனைப்பாடு” என்றொரு குறுக்கீடு
எட்டி நான் பார்த்தேன். ‘சீ, ஒரு தெரு நாய்!’
“உனக்கென்ன தகுதி ? குரைக்காமல் கிட” என்றேன்.
“எங்குமுளன் ஈசன் எனில் என்னிடத்தில் அவன் இலையோ?”
(நாய் தொடர்ந்து கூறியதை நம் மொழியில் தருகின்றேன்.)
“மண்ணில் நான் பிறந்து மாதமொன்று ஆகிறது..
புத்தியைக் கொண்டுந்தன் பிழைப்பை நடத்தென்று
தாயும் விரட்டிடவே தனியன் ஆகிவிட்டேன்.
கால் கொண்டு சேர்த்தது காலையில் இங்கென்னை.
போவோர் பின் போனேன், வருவோர் பின் வந்தேன்.
இங்குள்ள மனிதரை என் நண்பனாய் ஏற்றேன்.
காலை முதல் பட்டினி, அது எனக்குப் பொருட்டல்ல.
எனக்கொரு பிடி சோறு இடினும் இடாவிடினும்
இப்போது வருகின்றான் யாரோ ஒரு வேற்றாள்.
அவனிடமிருந்து உமதுடமை காத்திடுதல்
எந்தன் கடமையென எண்ணிக் குரைக்கின்றேன்.
பணி செய்து கிடப்பதென் கடனென் றுரைத்தது.
நாய் உரைத்த சொல் யாவும் நாயகனின் சொல்லேயாம்.
நாய் வடிவினில் விளங்கும் ருத்திரனுக்கு நம என்ற
வேத மொழி நினைந்து விம்மிதம் எய்தினேன்.
படத்துக்கு நன்றி
http://thedogweb.meu.zoznam.sk/psie-vianoce/
அதனால் தான் தெரு நாய் திரு நாயானது கால பைரவர் ( சிவனின்) பின்னால் ….