புவனேஷ்வர்

 

பல்லவி:th_india_flag

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே – புத்தி

ஆழத்தில் சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

(ஆடுவோமே)

சரணங்கள்:

எங்கள்ம றைகளைப் போற்றி யறிவோம் – நல்ல

முன்னோரின் சொல்வார்த்தை நம்பிநடப் போம்;

அன்னியர்தம் கட்டுக்கதை தள்ளிடுவோமே – எம

துண்மைவர லாற்றைப்பறைக் கூத்திடு வோமே.

(ஆடுவோமே)

செய்தொழிலை யீசனுக்கு என்றுகொடுப் போம் – அதில்

இந்தத்தொழில் மட்டமென்று சொல்ல லொழிப்போம்;

சொந்தத்தொழில் செய்துநம துள்ளம்நிறைப் போம் – பிறர்

மண்ணுக்கினி ஏவற்ப்பணி செய்து மாயோம்.

(ஆடுவோமே)

நாம்வாழும் தேசம்நம தென்று அறிந்தோம் – இந்த

மண்ணில்விளைப் பண்டமது நம்மதுணர்ந் தோம்;

மேலையவர் சந்தைக் கதை விலைபேசோம் – அவர்

ஆசைவார்த்தை கேட்டுமோசம் போக மாட்டோம்;

(ஆடுவோமே)

ஆறுமலைக் காடுயிங்கு பொதுவினில்வை ப்போம் – அதில்

ஆருக்குமிங் குரிமையுண்டு என்று விதிப்போம்;

வீறுகொண்டே தூய்மை பேணிடுவோமே பண்டை

வீரரைப்போ லேயுறுதி மானம் வளர்ப்போம்.

(ஆடுவோமே)

சேற்றதனில் கால்பதிக்க அஞ்சுதல்செய் யோம் – நல்ல

கொல்லைதனில் காய்கிழங்கு கீரை வளர்ப்போம்;

பாலைத்த ரும்நல்ல பசுவளர்த் தேயவள்

தாயெனவே கும்பிட்டுநாம் கொஞ்சி மகிழ்வோம்;

(ஆடுவோமே)

மேற்கிலவர் சொல்லுவதை யாய்ந்துதெளி வோம் – அதில்

கொள்ளுவன கொண்டுமிச்சம் தள்ளிநடப் போம்;

நம்வேர்கள் நாமறிந்து நலஞ்செய்குவோம் – பிறர்

வஞ்சனைகள் பகுத்தறிந்து வழிகாணு வோம்;

(ஆடுவோமே)

பொருளீட்டல் குடும்பத்துக் கென்று வுணர்வோம் – வெறும்

தொழில்மட்டும் வாழ்க்கையில்லை என்றுதெளி வோம்;

உற்றவு றவுகளை நெஞ்சிற்சுமப் போம் – ஒரு

தீங்குவர மாட்டாது பகிர்ந்துண்ணு வோம்;

(ஆடுவோமே)

மாதர்கு லத்துக்குப் போற்றுதல் செய்வோம் – பிறர்

பெண்டிரும்நம் பெற்றவளும் ஒன்றெனச் சொல்வோம்;

கொண்டவுயிர்க் கோமகளே நிறைகுடமென்னக் – கூடிக்

கற்புநெறி நெஞ்சொழுகத் தோழமைகொள் வோம்;

(ஆடுவோமே)

கொண்டவனை நம்பியுயிர் நட்பாகு வோம் – அவன்

வில்லாக நாணாகி நாம்வாழு வோம்;

தாரமவள் தாயுமென நெஞ்சமுரைப் போம் – அவன்

சக்கரம்நாம் மையத்திலே யச்சாகு வோம்;

(ஆடுவோமே)

காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – நல்ல

காதல் நலமெனக ளித்தாடு வோம் ;

காதலது நல்லின்பம் காதலி தெய்வம் – அதில்

ஊறுசுவை யுண்டதுநல் லுயிர்க் கமுதாம்!

(ஆடுவோமே)

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “புதிய சுதந்திரப் பள்ளு

 1. புதிய சுதந்திரப் பள்ளு!

  அழகாக இருக்கிறது… சகோதரரே! பகிர்விற்கு நன்றிகள் பல!

  பொழிந்த கவிதையில் நனைந்த மனதினில் 
  துளிர்த்தது தொடர்கவியென இவ்வரிகளே….
   
  ஏழைக்கு இறங்குவோம் ஏதுமிலா குற்றமதை 
  ஏதிலார் குற்றமென சாற்றும் வழக்கொழிப்போம் 
  தானஞ்செய்வோம் தானென்ற அகந்தை இல்லா 
  ஞானம்பெற்று அதையாவருக்கும் பகிர்வோம்! 

  தியானம் செய்வோம் தீங்கிலா புவனம்பெற
  அயனம் செய்வோம்; அதனில் அன்பென்னும் 
  பயணம் செய்வோம் மானுடம் போற்றும் 
  நயனமதில் அறிவொளி ஏற்றுவோம்! 

  சுதந்திரம்  பெற்றாச்சு அது எப்போது முழுதானதாக இருக்குமென நினைக்கையில் இப்படித் தோன்றுகிறது..

  பெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள 
  உற்றத் தந்திரம் யாதெனக் கூறில் 
  மற்றவர் நலனதுக் கெடாது – யாதும் 
  அற்றவர் நிலை யிலாதுச் செய் 
  கொற்றவர் கொண்டொழுகும் நாளதுவே!

  அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!

 2. வணக்கத்திற்குரிய சிந்தனைகளை வழங்கியிருக்கும் திரு.புவனேஸ்வர் அவர்களுக்கு என் வணக்கங்கள்.

 3. புதிய சுதந்திரப் பள்ளு புரட்சிச் சிந்தனைகளை மனத்தில் பதியன் போடுவதாய் அமைந்துள்ளது. நன்று கவிஞரே….வாழ்த்துக்கள்!!

 4. கவிதையாலேயே மறுமொழி தந்து சிறப்பித்த ஆளாசியம் அண்ணாவுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  பணிவன்புடன்
  புவனேஷ்வர்

 5. மதிப்பிற்குரிய திரு. சச்சிதானந்தம் அவர்களே,
  தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் அடியேனது நன்றிகள்!

  பணிவன்புடன்
  புவனேஷ்வர்

 6. கவிதையை படித்து ரசித்து பின்னூட்டம் இட்டு வாழ்த்திய மேன்மைக்கு நன்றி, மேகலா அவர்களே.

  அன்புடன்,
  புவனேஷ்வர்

 7. நல்லதொரு கவிதை படிக்க தந்த புவனேஷ்வருக்கு நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *