பூமரம்
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)
அடுக்குமாடி
கட்டடத்தின் கீழேதான்
அந்த இடம்
அமைதியைத்தரும்
அந்த இடத்தில்
கவிதையைத்தேடித்தான்
தினமும் வருகிறேன்
முதியோர் அமரும்
மூலையிலிருந்து
படித்துவிட்டுத்திரும்புவது
வழக்கம்
உடற்பயிற்சிக்காக
முதியவர்கள் வந்து
பேசாமலிருப்பதும்
பேசிக்கழிப்பதும் வழக்கம்
வீட்டிலே வேலையே
இல்லாமல்
உடம்பைக்கனக்கவிட்டவர்கள்
கண்டிப்பாக வந்து
அங்கேயிருக்கும்
உடற்பயிற்சிக்கருவிகளோடு
உரையாடுவதும் வழக்கம்
வழக்கத்திற்குமாறாக
மஞ்சள்பூக்களை
உதிர்த்துவிட்டு நின்றது
மரம்
அழகின்வியப்பில்
தேடிக்கொண்டேவந்தேன்
என்னையே தோண்டினேன்
பூக்களைச்
சிரிப்பாகக்கருதினேன்
சிரிப்பை உதிர்த்துவிட்டமனிதனை எண்ணினேன்
சிரிப்பை உதிர்த்துவிட்டு
நிற்கிறது வெறும்மரம்
வெறும் மரமா?
வெறும் மனிதனா?
நாளைக்கும் யோசிக்கலாமே
என
விடுதலையடைந்தேன்
(21.1.2014 பிற்பகல் 1.30க்கு எழுதியது)