நான் அறிந்த சிலம்பு – 131
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி
முன்னிலைப் பரவல்
யானையின் தோலை மேலே போர்த்திக்கொண்டு
புலியின் தோலை இடுப்பிலே உடுத்திக்கொண்டு
காட்டு எருமை அதன் தலைமேல் நின்றாய்;
தேவர் யாவரும் வணங்கிட
வேதங்களுக்கும் அப்பாற்பட்ட
புலப்படாது மறைந்த பொருளாய்
அறிவின் கொழுந்தாகிச் சலிப்பில்லாமல்
என்றும் நிலைத்து நிற்பாய்!
இது என்ன மாயமோ!
வரிகள் உடைய வளைகள் அணிந்த கையில்
வாளை ஏந்திக் கொண்டு
மாபெரும் மகிடாசுரனை அழித்து,
கருமையாக முறுக்காக அமைந்த கொம்பினையுடைய
கலைமானின் மீது நின்றாய்!
இது என்ன மாயமோ!
திருமால் சிவன் பிரம்மன் ஆகிய இவர்களின்
தாமரை போன்ற உள்ளத்தில் தங்கியிருந்து
விரிந்த கதிர்களையுடைய
அழகிய ஜோதியாய் ஒளிவிடும்
விளக்காகி நிற்பாய்!
இது என்ன மாயமோ!
சங்கினையும் சக்கரத்தினையும்
தம் தாமரைக் கைகளில் ஏந்தி
சிவந்த கண்களுடைய சிங்கத்தின் மீது நின்றாய்!
கங்கையைத் தலைமுடியில் அணிந்த
நெற்றிக்கண்ணுடைய சிவபெருமானின்
இடப்பாகம் தன்னில் பெண்ணுருவத்தில்
வேதங்கள் போற்றிட நிற்பாய்!
இது என்ன மாயமோ!
வென்றிக்கூத்து
அவ்விடத்து,
கொன்றைமலரும் துளசியும் ஒன்றாய்க் கட்டிய
மாலையைத் தோள்மேல் சூடி,
அசுரர் துன்பத்தால் வாடும் வண்ணம்
அவர்தம் போர்முனையில்
தேவர்க்கு வெற்றி உண்டாகும் வண்ணம்
தான்கொண்ட குமரிக் கோலத்தில்
வெற்றிக்கூத்தினை ஆடத் தொடங்குவாள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01 – 10
http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html
படத்துக்கு நன்றி:
http://godphotosimages.blogspot.in/2013/01/blog-post_25.html