இந்த வார வல்லமையாளர்!

ஆகஸ்ட் 11, 2014

இவ்வார வல்லமையாளர்கள்
வல்லமைமிகு “வழிகாட்டும் ஒளி” குழுவினர்
வல்லமைமிகு பிரேமா, ரேவதி, சுஜாதா, வைதேகி ஆகியோர்

வழிகாட்டும் ஒளிகள்
பெண்களுக்கெதிரான கொடுமைகளில் இருந்து அவர்களைக் காக்கும் நோக்குடன் வழிகாட்டும் ஒளி’ நிறுவனத்தைத் துவக்கி வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா குழுவினர் மற்றும் அவர்களது சேவையை நமக்கு தனது கட்டுரையின் மூலம் அறிவித்த ‘குங்குமம் தோழி’யின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் இவ்வார வல்லமையாளர்களாக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்கள்.

இவ்வார வல்லமையாளர் விருதிற்காக “வழிகாட்டும் ஒளி” குழுவினரைப் பரிந்துரைத்தவர் வல்லமையின் வாசகர் கவிஞர் காவிரிமைந்தன் அவர்கள். வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்காக ஒருங்கிணைந்து செயலாற்றும் இப்பெண்மணிகளை இவ்வாரத்தின் வல்லமையாளர்களாக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து, வழிநடத்தும் பிரேமா, ரேவதி, சுஜாதா ஆகிய மூவருமே வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள்.

வழிகாட்டும் ஒளிகள்3

நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து அமைதியான குடும்ப வாழ்வை எதிர்நோக்கும் பெண்களில் பலருக்கு அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக  வாழ்க்கை அமைந்துவிடுகிறது.  பலருக்குக் கிடைத்த துணையே துன்பத்திற்கு துவக்க விழாநடத்தும் வேலையைச் செவ்வனே செய்பவர்களாக அமைகிறார்கள்.  உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவத்திற்கு உத்திரவாதம் தருகிறார்கள்.  போதும் இந்த வாழ்க்கை என்று சலிப்படையும் பெண்கள் பலர்.  இவர்களில் ஒருவர் வழிகாட்டும் ஒளியின் தலைவி பிரேமா.

இவர் காதலித்துக் கைபிடித்து பதினைந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவரால் அடைந்த துன்பங்கள் பல.  வேறுவழியின்றி கணவரைப் பிரிந்து வாழ்ந்தவருக்கு கணவராலும் சமூகத்தாலும் தொடர் தொல்லைகள்.  ஆதரவு தந்த அன்புள்ளங்களால் மீண்ட  இவருக்கு மீண்டும் சோதனையாக ஒரு விபத்து.  அதிலிருந்து உயிர் பிழைத்த இவர் தனக்கு மறுவாழ்வு கிடைத்ததன்  காரணம் பிறருக்கு உதவுவதற்காக என்ற முடிவெடுத்து ‘நேசம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, இயலாத மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார்.  அப்பொழுது பெண்களுக்கெதிரான கொடுமைகளில் சிக்கிக் கொண்ட தன்னைப் போன்ற பெண்கள் பலரை சந்திக்க நேர்ந்ததால் அவர்களுக்கு ஆதரவுதர விரும்பி  ‘வழிகாட்டும் ஒளி’யை ஆரம்பித்து வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டும், உறவுகளின்றியும்  தனித்துவிடப்பட்ட பெண்களுக்காக  தனது பணியைத் தொடங்கி இருக்கிறார்.  ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பின் வழியாக அந்தப் பெண்களின் தகுதிக்கேற்ற பணியில் அவர்களை அமர்த்தி, அவர்கள் தங்களது சொந்தக் காலில் நிற்க உதவியிருக்கிறார்.  குடும்பத்தாரால் கைவிடப்பட்டு தனிமையில் தவிக்கும் பெண்களுக்கு ஆறுதலையும், வாழ்க்கையில் வெளிச்சத்தையும் காட்டுகிற ஓர் அமைப்பு  இவருடைய ‘வழிகாட்டும் ஒளி’.

இந்த அமைப்பின் செயலாளர் ரேவதி, எம்.ஏ படித்தவர், பெற்றோர் பார்த்து மணமுடித்து வைக்கப்பட்டவர்.  இவரது கணவருக்குப் படித்த பெண்களின் மேல் நம்பிக்கை இல்லாத காரணத்தினால்  இவரைச் சந்தேகித்து சித்திரவதை செய்திருக்கிறார்.  மனஉளைச்சல் தாள முடியாது தனது படிப்பை மட்டும் நம்பி மூன்று வயது மகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். தனியாக உன்னால் வாழ்ந்து விட முடியுமா என்று கணவர் இட்ட சவாலைப் ஏற்று, ஆசிரியத் தொழில் புரிந்து தனது மகனை வளர்த்து எம்.பி.ஏ. வரை படிக்க வைத்துள்ளார்.  தனது அண்ணனுடன் பணிபுரியும் பிரேமாவின் தொடர்பு கிடைக்க, தன்னைப் போன்று துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு உதவ ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்புடன் தன்னை  இணைத்துக் கொண்டுள்ளார்.

சிறுவயதில் திருமணமான பொழுது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்திராதவர் பொருளாளர் சுஜாதா, வேலைவெட்டி இன்றி நாள்முழுவதும் குடிபோதையில் இருந்த அவரது கணவரால் குடும்பத்தில் அமைதி இன்றிப் புழுங்கியபடி வாழ்ந்திருக்கிறார். அதன் உச்சக்கட்டமாக, குடிபோதையில் சச்சரவு ஏற்பட்டு நடுஇரவில் கணவனால் துரத்தப்பட்டு நடுத்தெருவிற்கு இவர் வந்த பொழுது இவருடன் வெளியேற்றப்பட்டவர்கள் இவரது பத்து வயது மகளும், ஒன்றேகால் வயது கைக்குழந்தையான மகனும்.  நீ தற்கொலை செய்து கொள்ளும் வரை உன்னைத் துன்புறுத்துவேன் என்று அச்சுறுத்திய கணவனுக்கு எதிராக தனது குழந்தைகளுக்காக வாழவேண்டி, பள்ளித் தோழி உதவியுடன் வேலை பெற்று பணி செய்து கொண்டே படித்து எம்.ஏ. முடித்திருக்கிறார். தற்பொழுது பொதுமக்கள் தொடர்புப் பணியாளராக பணிபுரிகிறார். ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் இவர் பிரேமாவை எதிர்கொள்ள, அவரது பணியால் ஈர்க்கப்பட்டு ‘வழிகாட்டும் ஒளி’யின் பொருளாளராக அந்த அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

வழக்கறிஞர், உளவியல் நிபுணர்கள் போன்றவர்களை தங்கள் அமைப்பில் கொண்டு முடிந்தவரை பெண்கள் தங்கள் நிலையைக் கையாள ஆலோசனைகள் வழங்கும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு, அவை உதவாத நிலையில் பெண்களுக்கு மாற்றுவழியாக அவர்களது திறனுக்கேற்ற பணியில் அமர்த்தி தன்னிறைவுடன் வாழ உதவி செய்து வருகிறது.  அல்லல்களில் இருந்து மீண்ட இந்த மூன்று பெண்மணிகளும் தங்களைப் போன்று வாழ்வில் அல்லலுறும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறார்கள். இவர்களது கதைகளையும் ‘வழிகாட்டும் ஒளி’ அமைப்பு பற்றியும் குங்குமம் தோழி இதழில் கட்டுரை எழுதி மக்களுக்கு இவர்களது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் குங்குமம் தோழி பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி அவர்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சிசுக்கொலைக்கு எதிராக தேசிய அளவில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு ‘லாட்லி ஊடக விருது’ என்று அழைக்கப்படும் விருதுகளை வழங்கிவருகிறது. இந்த அமைப்பின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்களை வெளிக்கொணரும் விழிப்புணர்வுச் செய்திக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, சிறந்த படைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ‘லாட்லி ஊடக விருது’கள்  (Laadli Media and Advertising Awards for gender sensitivity) இந்த அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.  குங்குமம் தோழி இதழின் பொறுப்பாசிரியர் ஆர்.வைதேகி, தாம் எழுதிய ‘வழிகாட்டும் ஒளி’ என்ற கட்டுரைக்காக  தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான  லாட்லி ஊடக விருதினைப்  (ஃபார் பெஸ்ட் கேம்ப்பெயின்) பெற்றார். ஆந்திர உயர்நீதி மன்ற நீதிபதி திரு சந்திரகுமாரும், பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஏ.எல்.சாரதாவும் சென்ற 2013 டிசம்பர் 13 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இவ்விருதை வைதேகிக்கு வழங்கினார்கள்.

வழிகாட்டும் ஒளிகள்2

பெண்கொடுமைகளுக்கெதிராக பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களுக்கு ஆதரவான செயல்களைப் புரிந்துவரும் இப்பெண்மணிகள் யாவருமே, தற்கால இளம்பெண்கள். தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்ள நல்ல வழிகாட்டிகளாக இருப்பதற்காகப் பாரட்டப்பட வேண்டியவர்கள். இக்கருத்தை மிக அழகாக தனது பரிந்துரை மடலில் முன்வைத்துள்ளார் கவிஞர் காவிரிமைந்தன். இதோ  அவருடைய ஆக்கப்பூர்வமான பரிந்துரை:

”இல்லற வாழ்க்கை என்கிற ஒன்றை.. மரபு வழியில் தேர்ந்தெடுத்து .. அமைகின்ற துணை சரியில்லாமல் போய்விடும்போது இன்னலுறும் லட்சோபலட்சம் மக்கள்.. தங்கள் வாழ்க்கையை.. கண்ணீரால்தான் எழுதுகிறார்கள்.  விதி என்கிற ஒற்றை வார்த்தையால் சமூகம் அதை அலட்டிக்கொள்ளாமல் மேற்பார்வையிடுகிறது.  கதைகளிலும்.. திரைப்படங்களிலும் மட்டுமல்ல.. இதுபோன்ற சம்பவங்கள்.. கைவிடப்பட்ட அகலிகைகளாக ..  அடுத்த கட்டம் என்ன என்பதை தீர்மானிக்க முடியாதவர்களாக .. வாழ்க்கையே சூனியமாகிவிட்டதாக கருதும் சராசரி பெண்களின் வரிசையில் நின்றுவிடாமல்..  வாழ்ந்து காட்டுவோம் என்று தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்ததோடு..  இதுபோல் ஜீவிக்க முடியாமல் போராடும் பலருக்கும் “வழிகாட்டும் ஒளி ” என்கிற அமைப்பு ரீதியான உங்களின் மேலாண்மை.. வெறும் வார்த்தைகளால் பாராட்டி .. வாழ்த்துக்களால் நிறைவுபெறும் ஒன்றல்ல.

நேர்மையற்ற நெஞ்சம் கொண்டோர்..  தேவையற்ற பழக்கங்களால் வாழ்வைக் கெடுத்துக்கொள்வதோடு தன்னைச் சார்ந்திருப்போர் வாழ்க்கையையும் பாழாக்கும் அவலங்கள் நிறைந்துவரும் இன்றைய சூழலில்..  வழிகாட்டும் ஒளி .. போன்ற அமைப்புகள் தேவையான ஒன்று என்பதை சுட்டிக்காட்டும் அதே நேரம்..  அரசாங்கம் .. மத்திய மாநில அரசுகள்.. இது போன்ற தூய தொண்டாற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி.. அங்கீகாரம் வழங்க வேண்டும்..”

 

 

படங்கள் உதவி:  
ஆர்.சந்திரசேகர்  &  http://tamilscreen.com/laadli-media-award-for-gender-sensitivity-r-vaidehi/

தகவல் உதவி:   
ஆர்.வைதேகி, குங்குமம் தோழி இதழ்

நன்றி:
குங்குமம் தோழி இதழ் வலைத்தளம்
https://kungumamthozhi.wordpress.com/

வழிகாட்டும் ஒளி!
வழிகாட்டும் ஒளி!

குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!
குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!

வழிகாட்டும் ஒளி!
http://dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1210

குங்குமம் தோழி பொறுப்பாசிரியருக்கு விருது!
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=72023

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. அன்புள்ள வல்லமை ஆசிரியர் குழுவினர்க்கு…

  வணக்கம்..  வல்லமையாளர் விருது என்பது ஏதேனும் ஒரு வகையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை நான் அறிவேன்.

  சராசரி மனித வாழ்க்கையில் .. ஏதோ வாழ்ந்தாலே போதும் என்று காலத்தை ஓட்டுபவர்கள் மிக அதிகம்.  வாழ்க்கை பாரம் சுமக்க முடியாமல் விழி பிதுங்கும் எண்ணற்றோர்.   இவர்களைத் தாண்டி இதே சமுதாயத்தில் சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் புரிபவரை ..  பாராட்டும் தன்மை அனைவரிடமும் வளர வேண்டும்.

  வல்லமையாளர் என்கிற விருதை.. வல்லமையாளர்கள் என்று பரிந்துரைக்கும்போது சற்று ஐயம் ஏற்பட்டது.  எனினும்..  ஒரு அமைப்பை இயங்கும் இந்த வல்லவர்களை நாமும் வல்லமையாளர்கள் என்று கௌரவிப்பது தக்கதாய் இருக்கும் என்கிற நம்பிக்கையோடு எனது பரிந்துரை அனுப்பப்பட்டது.

  அனுப்பிய தகவலின் ..  விரிவுரையாக..  குங்குமம் தோழி பொறுப்பாசிரியர் என உரிய தகவல்கள் மேலும் இணைத்து..  முழுமைபெற்ற மாலையாக தொடுத்துள்ளீர்.  ஏதோ விருதாக அல்லாமல் அழகிய முறையில் அறிமுக உரைகளும் ..  அவர்கள் பற்றிய ஆழமான தகவல்களும்..  படிப்பவர் நெஞ்சில் இவருக்கு இவ்விருது ஏற்புடையதே என்று எண்ணத்தக்க வகையில் – தேமொழி என்னும் தோழியே.. உந்தன் கைவண்ணத்தில் மிளிர்கிறது வல்லமை விருதுகள்..

  வாழ்த்துகளும்.. மனம் நிறைந்த பாராட்டுகளும்..

  நன்றியுடன்..
  காவிரிமைந்தன் 

 2. வல்லமையாளர்களுக்கு பாராட்டுக்கள்.

  விரிவான விளக்களுடன் அவர்களுக்கு வாழ்வில் ஏற்பட்ட துயரங்களும் அதை துடைத்து துரத்திய விதத்தையும் நேர்த்தியாக எழுதி இனைந்த தருனங்களையும் குறிக்கோளையும் எழுதி நிமிர்ந்து நின்ற இந்த சாதனை பெண்களை அறிய தந்தமைக்கு நன்றி.

  மீண்டும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் வல்லமையாளர்களுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *