இலக்கியம்கவிதைகள்

நித்தமுமே குழந்தையப்பா!

  -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

   பாஞ்சாலி துயர்தீர்த்தாய்
   பார்த்தனுக்கு உதவிநின்றாய்
   பாரதக் கதைதன்னை
   பக்குவமாய் முடித்துவைத்தாய்!      krishna

   பலவேலை நீசெய்தாய்
   பாதகமாய்த் தெரிந்தாலும்
   பலபேரைத் திருத்துதற்குப்
   பக்குவமாய் மருந்தாச்சு!

   மாமருந்தாம் கீதைதனை
   மாதவனே தந்தாயே
   மாநிலத்தார் கீதையினால்
   மயக்கநிலை தெளிந்தாரே!

   சோதிவடி வானவனே
   சுந்தரமாய் இருப்பவனே
   ஆதியே அரும்பொருளே
   அனைத்துமே நீயன்றோ!

   குழந்தையாய் வந்திடுவாய்
   குதூகலமும் தந்திடுவாய்
   குறையொன்றும் வாராமல்
   குணக்குன்றாய் நின்றிடுவாய்!

   கண்ணா எனவழைத்தால்
   கணப்பொழுதில் வந்திடுவாய்
   எண்ணமெலாம் இருப்பதனால்
   எங்குதான் போய்விடுவாய்?

   அவதாரம் பலவெடுத்தாய்
   அகிலமதைக் காத்துநின்றாய்
   அனைவரது துயர்துடைக்க
   அழைத்தவுடன் வந்துவிடு!

   பால்தந்து மோர்தந்து
   பதமாக வெண்ணைதந்து
   பாலகனாய் நாளுமுனைப்
   பார்க்கின்றோம் நாமுமிங்கே!

   நீகடவுள் நீசக்தி
   நினைப்பெமக்கு இல்லையப்பா
   நீயென்றும் எம்மனதில்
   நித்தமுமே குழந்தையப்பா!!

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. Avatar

  குழந்தையாய் கும்பிடும் வடிவமே 
  கண்ணனாய் வந்தது உண்மையன்றோ?
  குவலயம்தனிலே கோவில்கள் ஆயிரம் 
  கொண்டவன் கோபாலனே..

  அவரவர் செய்திடும் பாவ புண்ணியம் 
  அவனது பார்வையிலே..
  தருமத்தின் பாதையை சமனிடும் 
  சாரதி வருவான் நேரினிலே..

  எழுதும் தமிழில் எண்ண ஜாலங்கள் 
  எல்லாம் கண்ணன்மயம் 
  பழுதிலாப்  பைந்தமிழ் பாருலா 
  காண்பதும் என்றும் உங்கள்வசம்!!

  வாழ்த்துகள்…
  காவிரிமைந்தன் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க