நந்தியின் நினைவுகள்!
சந்தர் சுப்பிரமணியன்
கல்லுள் உறைந்த கனத்த இருளில்
சொல்லே நுழையாச் சூன்ய அடர்த்தி;
இமைப்ப தற்கும் இடமே தங்கே?
சுமக்கும் நினைவு சொல்லையுங் கசக்கும்;
இருளே உலகம், இருளே உடலம்,
இருளே உணர்ச்சி, இருளே உணவும்.
ஆயிர மாயிரம் ஆண்டுகள் பலவாய்ப்
போயின பின்னும் பொதிந்து கிடந்தேன்;
எதுகல் எதுநான் என்றுளம் அறியாப்
புதிராய் விடைநான் புதைந்து கிடந்தேன்
அன்றென் உடலில் அதிசய அதிர்வு;
மென்மலர் என்னொடு முட்டிடும் உணர்வு;
நெஞ்சின் நரம்புகள் நெகிழ்ந்த நொடியில்,
அஞ்சியென் சொற்கள் அமைந்தன நனவாய்;
யாரோ மனிதன் என்னை அழைக்கப்
பாறை முழுதும் பரப்பிடும் உளிச்சொல்;
தட்டத் தட்டத் தளர்ந்ததென் நரம்புகள்,
முட்டவென் உணர்வின் முளைகள் விழிப்பு;
அலைமனம் உளிபோல் அடித்துக் கொள்ளப்
புலன்கள் புலர்ந்தன புதிதாய் மீண்டும்.
ஏதோ அரவம், என்னைச் சுற்றி,
மோதும் சத்தம் மொழியும் புதிராய்;
மென்மைப் பேச்சும் மெல்லுளி வீச்சும்
என்னில் என்னை இனம்பிரித் தெடுக்கும்;
தடவிக் கொடுக்கும் தச்சன் கையால்
உடலின் உணர்வை உணர்ந்தேன் மீண்டும்;
கல்லின் இறுக்கம் கழியும் போதில்
மெல்லிய ஒளியால் மேனி குளிக்கும்;
முதுகை வளைத்துச் சோம்பல் முறிக்க
மெதுவாய்த் தென்றல் மீண்டும் தொட்டது
மீண்டும் பிறந்தேன், மீண்டும் பிறந்தேன்,
காண்பேன் மீண்டும் கண்ணுதல் பாதம்
துன்பச் சுமையது தீரக் கண்டேன்,
இன்பச் சுவையாய் ஈசன் எண்ணம்;
இமையின் பாரம் இறங்க உளியால்,
உமையோன் முன்னே ஒளியாய்ச் சிரித்தான்
மெய்யாய் என்றன் மேனி சிலிர்க்க
ஐயை மீண்டும் அருகிற் கண்டேன்
உச்சம் அளந்த உமையோன் காட்டித்
தச்சன் செயலால் தாயாய் நின்றான்
சோழன் அன்றென் தோளைத் தொட்டே
வாழும் படியாய் வாழ்த்திச் சென்றான்;
வண்ண மெங்கும், வழிபா டெங்கும்,
கண்கள் பூக்கும் கலைநிகழ் வெங்கும்;
ஆண்டான் என்றும் அடிமை என்றும்
தோன்றா தெண்ணம் தொழுதார் தெய்வம்;
மெல்ல நிகழ்வுகள் மெலிந்திடக் கண்டேன்
சொல்லுங் கூட தொலைதற் கண்டேன்;
என்னுள் முன்னர் இருந்த விரைப்பை
முன்காண் மனிதர் மனதுட் கண்டேன்
வருடந் தோறும் வனப்புங் குறைய
பெரிய கோவிற் பெருமை குறைந்தது;
அருளை வழங்கும் ஆண்டவன் சந்நிதி
இருளில் மறையவென் இதயம் நொந்தது;
என்றோ ஒருசிலர் என்முன் வருவார்,
நன்று நன்றென் நயத்தை புகழ்வார்;
ஓதுவார் வாய்ச்சொல் வேதம் எங்கே?
மாதரிங் காடும் நாட்டியம் எங்கே?
போயின யாவும் புதிராய், மெல்ல
ஆயின ஆயிரம் ஆண்டுகள் ஆமே
கல்லை உடைத்துக் கண்டதும் இஃதே,
கல்லாய்ப் மாறிய கள்ள உலகம்;
என்னை வடித்தான் அன்றோர் சிற்பி,
என்றோ வடிப்பான் இந்த உலகை?
உருகும் கல்லும், உணர்வும் விழிக்கும்,
திருவருள் வருநாள் தேடிக் கிடந்தேன்;
பெரிய கோவில் பெருமை இழந்தும்
உரியோர் உளத்தே உணர்வே இல்லை
காலவை இரண்டும் கல்லாற் பிணைய
காலமே எண்ணி காத்துக் கிடந்தேன்
ஒலித்த தொருநாள், ஓளியுங் கூட;
சிலிர்த்தே என்றன் சிந்தை கலைந்தது;
நால்வரின் பாடல் நாலாத் திசையும்,
மேல்வரும் பெண்கள் மேதகு நாட்டியம்
ஓதுவார் பாட்டின் ஒலியெலாஞ் சேர்ந்து
மோதிடக் கல்லை, மோனம் கலைந்தது;
ஆயிரம் மங்கையர் ஆடிட அரங்கில்
ஓயா மகிழ்ச்சி, ஒலியின் கிளர்ச்சி;
ஆகா! இதுதான் ஆயிரம் ஆண்டில்
போகா திருக்கும் புதுமை, தமிழில்
அந்தோ! மகிழ்ச்சி அன்றோர் நாளே!
விந்தை சென்றது விடுத்தென் புறத்தை;
மீண்டும் மௌனம் மேவிய தென்னுள்,
காண்பது மீண்டும் காரிருள் ஒன்றே!
ஐயே எனக்கோர் அருள்செய வேண்டும்,
பொய்யாய் உலகம் போன தின்று;
பொல்லா உலகம் பொய்க்கும் போதில்
கல்லாய் என்னைக் காட்டுக மீண்டும்;
உறைதல் ஒன்றே உணர்வின் துவக்கம்,
உறையும் வணமென் உருசெய் ஐயே!