நான் அறிந்த சிலம்பு – 143

-மலர் சபா

மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

மதுரைப் பதிக்கு இன்னும் எஞ்சியுள்ள வழி பற்றிப் பாணரிடம் கோவலன் வினாவுதலும், அவர் விடை பகர்தலும் 

கோவலனுக்குப் பாணர்கள் பதில் கூறலாயினர்:

“வயிரம் பற்றிய அகில் சாந்தும்
மணம் வீசும் குங்குமப்பூக் குழம்பும், புழுகுக் குழம்பும்
மணம் பொருந்திய சந்தனச் சாந்தும் கத்தூரிச் சாந்தும்
இத்தெய்வமணம் அனைத்தும் பொருந்திய
சேற்றினை அளைந்து…

பூந்தாதுகள் பொருந்திய கழுநீர் மலரையும்    scent
செண்பக மலரையும்
ஒருசேரத் தொடுத்த மாலையோடு
குருக்கத்தி, மல்லிகை, மனைவளர் முல்லை
இவற்றால் தொடுத்த மாலையுடைய
மலர் மஞ்சங்களில் பொருந்தி…

தாளிப்பு முதலிய காரணத்தால்
அடுக்களையில் தோன்றுகின்ற புகையும்
அகன்ற கடைவீதிகளில்
தன் வாணிகம் ஓயாது புரியும்
அப்பம் விற்பவர்கள் அப்பம் சுடும் புகையும்
ஆடவரும் பெண்டிரும்  உண்டாக்கிய
இனிய அகிற்புகையும்
வேள்விச்சாலைகளில் ஓமம் பண்ணுதலால்
உண்டாகின்ற புகையும்
இத்தகைய பலவகைப் புகைகளில் அளாவி…

பங்குபெறும் போரில் எல்லாம் வெற்றி கொள்பவனும்
இந்திரன் அணிவித்த ஆரம் பொருந்திய மார்புடையவனுமாகிய
பாண்டியன் அவன் அரண்மனையில்
மணப்பொருட்களை ஒருசேர அரைப்பதால் எழுகின்ற
அளவிடற்கரியதும் உள்ளத்தைப் பிணிக்கும் இயல்புடையதாயுமுள்ள
இணையற்ற மணங்களின் கலவையை நுகர்ந்து…

புலவர்களின் செவ்விய நாவால் புகழப்படும்
பொதிகைத் தென்றல்போல் அல்லாது
அதைவிடச் சிறந்த மதுரைத் தென்றல்
இங்கே வந்து தவழ்ந்திருப்பது காண்கிறீர்கள் அல்லவா?

எனவே புரிந்துகொள்வீர்:
பாண்டியனின் செழிப்புமிக்க மதுரைமாநகர்
மிகவும் தொலைவில் இல்லை;
அருகில்தான் உள்ளது.
நீங்கள் தனித்து வழியில் சென்றாலும்
உம்மைத் தடுப்பார் எவரும் இருக்க மாட்டார்கள்.”

இங்ஙனம் கூறி அவ்விடத்தைவிட்டுப்
பாணர்கள் அகன்றனர்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 114 – 134
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

படத்துக்கு நன்றி
http://web.prm.ox.ac.uk/bodyarts/index.php/temporary-body-arts/scent/41-scent-cakes.html

 

1 thought on “நான் அறிந்த சிலம்பு – 143

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க