இந்த வார வல்லமையாளர்!
நவம்பர் 10, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு டாக்டர் ஆர்த்தி பிரபாகர் அவர்கள்
சென்ற அக்டோபர் 28, 2014 அன்று தொழில் நுட்பத்தில் உலக சாதனையாக மிக விரைவாகச் செயலாற்றும் மின்னணு மைக்ரோச்சிப் ( the fastest microchip ever made) உருவாக்கப்பட்டதற்கான கின்னஸ் விருது வழங்கப்பட்டது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டதிற்குக் காரணமான “டாக்டர் ஆர்த்தி பிரபாகர்” அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்வதில் வல்லமைக் குழுவினர் பெருமகிழ்சி அடைகிறோம்.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் (United States Department of Defense) ஒரு பிரிவான, “பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை” (Defense Advanced Research Projects Agency – DARPA) என்பது அமெரிக்க இராணுவத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காகத் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இது பெண்ட்டகானின் மிக முக்கிய ஆய்வுப்பிரிவு. அந்நாள் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவரினால் 1958 இல் இரணுவத்தின் தொழல்நுட்ப வளர்ச்சிக்காக நிறுவப்பட்டது. Advanced Research Projects Agency (ARPA) என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த நிறுவனமே இன்றைய உலகளாவிய இணையத் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், தொலைதொடர்பு தகவல் பரிமாற்ற வளர்ச்சிக்கும் மூல காரணமாகும்.
கடந்த இரண்டாண்டுகளாக இந்த ‘டார்ப்பா’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருப்பவர் ஆர்த்தி பிரபாகர் (Arati Prabhakar). தனது ஐம்பத்தைந்து அகவையில் தொழில்நுட்பத்தில் ‘கின்னஸ்’ சாதனைக்குக் காரணமான ஆர்த்தி, மூன்றாவது வயதில் அவரது பிறப்பிடமான டெல்லியில் இருந்து இவரது அன்னையின் மேற்படிப்பின் பொருட்டு பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார். இவரது அன்னை கொடுத்த ஊக்கத்தின் காரணமாக இளம் வயதிலேயே பொறியியல் படிப்பையும், முனைவர் படிப்பையும் முடித்தார். அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கால்டெக்’ (California Institute of Technology – Caltech) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் செயல்முறை இயற்பியலில் (applied physics) முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்குண்டு.
இது போன்ற பல “முதன்முதல் சாதனை” என்ற பெருமைகளை ஆர்த்தி நிகழ்த்தியிருக்கிறார். இவர் தனது 34 வயது முதலாகவே பல பெரிய அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களின் (National Institute of Standards and Technology (NIST), U.S. Venture Partners, Raychem போன்றவற்றில் ) தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் துவங்கியவர். NIST நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகித்த முதல் பெண்மணியும் இவரே, அத்துடன் டார்ப்பாவின் முதல் இந்திய வம்சாவளிப் பின்னணியைக் கொண்ட தலைவரும் ஆர்த்திதான். டார்ப்பாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் ஓராண்டு நிதியான ஏறத்தாழ 3 பில்லியன் டாலர்கள் ஆர்த்தியின் நிர்வாக முடிவின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவருகிறது.
ஐந்தாண்டுகளாக முயற்சி செய்து உருவாக்கப்பட்டு, புதிய கின்னஸ் சாதனை விருதுக்குக் காரணமான இந்தப் புதிய மின்னணு நுண்சில்லின் ஒருங்கிணைந்த மின்சுற்று அமைப்பானது, மின்சமிக்கைகளைப் பெருக்கி ஒரு வினாடிக்கு ஒரு டிரில்லியன் சுழற்சி (அல்லது ஒரு டெஹ்ராஹரட்ஸ்) என்ற முறையில் விரைவுபடுத்துகிறது (the new microchip, or integrated circuit, is a type of “amplifier” for signals, and operates at 1 trillion cycles per second, or 1 terahertz). இந்த விரைவான செயல்திறன் கொண்ட மின்னணு நுண்சில்லு, இரண்டாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மின்னணு நுண்சில்லின் 150 பில்லியன் சுழற்சிகள் கொண்ட 850 கிகாஹர்ட்ஸ் திறன் என்னும் சாதனையை முறியடித்துள்ளது. இதன் விரைவுத் திறனை சராசரி மக்களும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஒரு ஊர்தியில் மணிக்கு 32,000 மைல் வேகத்தில் பயணம் செய்வதற்கு ஒப்பான வேகம் எவ்வாறிருக்கும் என ஒப்பிட்டு அறியலாம்.
ஒரு குண்டூசியின் தலைஅளவே உள்ள மிக நுண்ணிய, அதிகத் திறன் கொண்ட புதிய மின்னணு நுண்சில்லுகள், மிக விரைவான தகவல் தொலை தொடர்பிலும், மிகநுண்ணிய தெளிவான படங்களை உருவாக்குவதிலும், மிகத் துல்லியமான கணினித் திரைகளை தயாரிப்பதிலும், நச்சுப்பொருட்களையும், வெடிமருந்துகளையும் கண்டறியும் கருவிகளின் செயல்திறனிலும், மருத்துவச் சிகிச்சை முறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
உலகின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனத்தை திறம்பட நிருவகிப்பதுடன், தொழில்நுட்பத்தில் கின்னஸ் விருது பெற்று சாதனை நிகழ்த்தியுள்ள திட்டத்தின் முக்கியப் பங்களிப்பாளரான டாக்டர் ஆர்த்தி பிரபாகரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகழ்ச்சி அடைகிறோம்.
படம் உதவி:
Photo courtesy of SRI International and http://www.wired.com/images_blogs/dangerroom/2012/07/Arati_Prabhakar-660×731.jpg
http://i.livescience.com/images/i/000/071/575/original/darpa-world-record.JPG?1414606185
http://2.vsr.veooz.com/assets/images/cached/XHfyMzK-360.jpg
தகவல்கள் பெற்ற தளங்கள்:
Pentagon scientists win first Guinness World Record, by Tanya Lewis, October 29, 2014 –
http://www.livescience.com/48518-worlds-fastest-microchip.html?cmpid=558431
Pentagon scientists win first Guinness World Record, By Colby Itkowitz October 29, 2014 –
http://www.abreakingnews.com/politics/pentagon-scientists-win-first-guinness-world-record-h260587.html
Exclusive: Darpa Gets a New Boss, and Solyndra Is in Her Past, By Noah Shachtman –
http://www.wired.com/2012/07/darpa-solyndra/
Arati Prabhakar –
http://en.wikipedia.org/wiki/Arati_Prabhakar
ComputerHistory: DARPA Director Arati Prabhakar in Conversation with The New York Times’ John Markoff
[https://www.youtube.com/watch?v=JQMhS0oOloc]
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
வல்லமைமிகு டாக்டர் ஆர்த்தி பிரபாகர் அவர்களை வாழ்த்தியதின் மூலமாக நமக்குத்தான் பெருமை.
வல்லமை இதழின் ஆலோசகர் என்ற முறையில், முனைவர் தேமொழியின் அருமையான தேர்வை பாராட்டுகிறேன்.
வல்லமைச் சாதனையாளராய் அறிமுகம் செய்த தேமொழிக்கு முதல் பாராட்டுகள். அமெரிக்க இந்திய வல்லமைத் திறனாளி ஆர்த்தி பிரபாகருக்கு அடுத்து பாராட்டுகள்.
சி. ஜெயபாரதன்
இவ்வார வல்லமையாளராகத் தேர்வு பெற்றிருக்கும் டாக்டர் ஆர்த்திக்குப் பாராட்டுக்கள்! இவரைப் பற்றியும் இவரது சாதனைகளைப் பற்றியும் நன்குத் தெரிந்து கொள்ள உதவிய தேமொழிக்கு நன்றி!