சந்தர் சுப்பிரமணியன்

books55

ஆயிரம் கவிதை நூல்கள்
.. அருஞ்சுவைத் தமிழிற் கண்டோம்
போயின காலம் யாவும்,
.. போயினும் போகா தின்றும்
வாயினில் வழக்கில் நம்முன்
.. வாழ்ந்துகொண் டேயி ருக்கும்
தோயுந்தீங் கவிதை ஏதோ?
.. தொகுத்தனம் கவிதை யாலே (1)

ஊரெலாம் தமதே என்றான்,
.. உறவினர் எவரும் என்றான்,
சாருநற் பண்பும் தீதும்
.. தருவதால் வாரா தென்றான்;
நேரிய வழிகள் எல்லாம்
.. நிறைந்துள கணியன் பாடல்,
நீருள வரையில் வாழும்
.. நிரந்தரக் கவிதை யன்றோ (2)

இனியநற் சொற்கள் அன்பை
.. இயல்புடன் அளிக்கத் தோதாய்க்
கனிகளாய்க் காத்தி ருக்கக்
.. காய்ந்திடும் சொல்லாற் பேச்சை
முனைவதில் பயனே இல்லை;
.. முறையுடன் இனிமை தன்னை
நினையெனும் குறளே மண்ணின்
.. நிரந்தரக் கவிதை யன்றோ (3)

நற்றுணை நமக்கு நீறே
.. ஞானசம் பந்தன் கூற்று;
மற்றெதும் தேவை யில்லா
.. மந்திரம், அதுவும் நீறே
சொற்களிற் சுவையைச் சேர்த்துச்
.. சுந்தர மாகும் நீற்றை
நிற்குமோர் விதமாய்ச் சொன்னான்;
.. நிரந்தரக் கவிதை யன்றோ (4)

வஞ்சியை மாடம் ஏற்றி
.. வளைந்தவள் விழிகள் நோக்க
மிஞ்சிடும் அழகன் தன்னை
.. மிடுக்குடன் நடக்க வைத்துக்
கொஞ்சிடும் அவர்தம் பார்வை
.. கொடுத்தனன் நமது கண்ணில்;
நெஞ்சினுள் கம்பன் தைக்கும்
.. நிரந்தரக் கவிதை யன்றோ (5)

எத்தனை கோடி யென்றான்
.. எழுமெலாம் இறையே என்றான்
சித்தினை அசித்தோ டேற்றும்
.. சிந்தையின் தெளிவி னாலே
பக்தியின் நிலையைப் போற்றி
.. பாரதி வழங்கும் பாடல்
நித்தமும் நெஞ்சில் நிற்கும்
.. நிரந்தரக் கவிதை யன்றோ (6)

கருப்படு பொருளைக் கண்டு
.. கவிதையுள் அதனைக் கூட்டி
உருப்பட வைக்கும் விந்தை
.. உணர்ந்தவன் கவிஞன் என்னும்
பொருட்பட கண்ண தாசன்
.. புதுநிலைக் கணித எண்ணம்
நிரப்பியப் பாடல் ஒன்றே
.. நிரந்தரக் கவிதை யன்றோ (7)

ஓங்கிடும் மொழியிற் சந்தம்
.. ஒலிக்குநல் தொடையைத் தேர்ந்து
பாங்குடன் கருத்தைச் சேர்த்துப்
.. பாட்டினுட் பொருளாய் யாத்துத்
தேங்கிடும் அமுதச் சாறாய்த்
.. தேந்தமிழ்ச் சொற்கள் கோக்க
நீங்கிடா தொலிக்கும் எங்கும்
.. நிரந்தரக் கவிதை அன்றோ (8)

பொட்டினில் அறைந்தாற் போலே
.. புலன்களை எழுப்பச் செய்து,
கொட்டிய முத்தாய்ச் சொற்கள்
.. கொஞ்சிடப் பொருளைக் கூறிச்
சொட்டிடும் தேனாய் நெஞ்சில்
.. சுகந்தரும் சந்தப் பாட்டே
நிட்டையிற் கூட நிற்கும்
.. நிரந்தரக் கவிதை அன்றோ (9)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.