– எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

வாழ்விலே காதல் இன்றேல்
வரட்சியே வந்து நிற்கும்
ஆதலால் காதல் செய்வோம்
அனைவரும் மகிழ்ந்து நிற்போம்!           love

ஆண்டவன் எமக்குத் தந்த
அருங்கொடை காதல் அன்றோ
ஆதலால் காதல் தன்னை
அணைத்துமே நிற்போம் வாழ்வில்!

மாதாவைக் காதல் செய்வோம்
மனமெலாம் குளிரச் செய்வோம்
மாண்புடைத் தந்தை மீது
மறக்காது காதல் கொள்வோம்!

குருதனை எண்ணி எண்ணிக்
குறைவின்றிக் காதல் செய்வோம்
அருமறை போற்றும் அவனை
அனுதினம் காதல் செய்வோம்!

இளசுகள் காதல் என்றும்
இனிப்பாக இருக்கும் என்பர்
பழசுகள் காதல் தன்னில்
பக்குவம் தெரியும் என்பர்!

உலகிலே காதல் செய்வோர்
உண்மையாய் இருந்தே விட்டால்
அழகுடைக் காதல் அங்கு
அருமையாய் மலரும் அன்றோ?

காதலை மோதல் ஆக்கும்
கயவரின் கூட்டம் தன்னைக்
காதலர் தினத்தில் நாங்கள்
மோதியே மிதித்தல் வேண்டும்!

காதலை மனத்தில்  கொண்டு
கண்ணியம் அதனுள் சேர்த்து
வேதனைக் கொடுக்கா நின்று
விருப்பமாய்க் காதல் செய்வோம்!

இருமனம் இணைந்தால் அன்றோ
என்றுமே மலரும் காதல்
இருமலர் ஆக வாழ்வில்
இணைப்பதும் காதல் அன்றோ?

காதலர் தினத்தில் நாங்கள்
காதலைக் காக்க வேண்டில்
காதலைக் கண்போல் எண்ணிக்
காதலை என்றும் காப்போம்!

பூதலம் மீது காதல்
புனிதமாய் இருக்க வேண்டி
மாமலர் கொண்டு நாங்கள்
மாதவன் கோவில் செல்வோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *