அவன், அது , ஆத்மா
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
மீ.விசுவநாதன்
அத்தியாயம் : இரண்டு
வாழையடி வாழை
“அவனது” அப்பா வழித் தாத்தா அ.(நந்தனாராயாணன்) விஸ்வநாத ஐயர். அவரது மனைவி முத்துலட்சுமி அம்மாள். “முத்தம்மை” என்றுதான் அந்த கிராமத்தில் எல்லோரும் அழைப்பார்கள். மகாலட்சுமி போல இருப்பாள். மிகுந்த தர்ம சிந்தனை உள்ளவர். சித்த வைத்தியம் நன்கு தெரியும். கிராமத்தில் எந்த வீட்டில் நிறை மாத கர்ப்பிணி இருந்தாலும் “முத்தம்மை” கைராசியில் நல்ல குழந்தை பிறக்கும். பார்வையில் கனிவும், பழக்கத்தில் அன்பும் நிறைந்தவள் முத்தம்மை. அவளுக்கு பகையே கிடையாது.
தினமும் அதிகாலையில் தாமிரபரணி நதியில் குளித்து விட்டு, வீட்டிற்கு வந்து புடவை மாற்றிக் கொண்டு, துளசிக்கு தண்ணீர் விட்டு, ரேழியில் உள்ள பூஜை விளக்கை ஏற்றி நமஸ்கரிப்பாள். அதற்குப்பின் வீட்டில் உள்ளவர்களுக்கு காப்பி கொடுத்து விட்டு, கையில் ஒரு ஜாடியில் பாலும், ஒரு கிண்ணத்தில் வெத்தலை பாக்கு பழத்துடனும், ஸ்ரீ ஆதிவராகரை தரிசனம் செய்து விட்டுத்தான் மற்ற வேலைகள். வரும் வழியிலேயே ஒரு சுமங்கலிக்கு அந்த வெத்தலை பாக்குப் பழத்தை கொடுத்துவிட்டு, கையில் வைத்திருக்கும் கொஞ்சம் கற்கண்டுத் துண்டுகளை எதிரில் பார்க்கும் குழந்தைகள் கையில் தருவாள். தெருவில் நிற்கும் பசுவையும் . கன்றையும் பிரதக்ஷிணம் செய்து விட்டுத்தான் வீட்டு வேலைகளைக் கவனிப்பாள். அவன் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று வரும் பொழுது கற்றுக் கொண்ட பண்புகள் அனந்தம். சொல்ல மறந்தேனே….முத்தம்மைக்குக் கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர்கள். மிஞ்சியது முத்தம்மையைச் சேர்த்து ஐந்து பேர்கள். அந்தில் ஒரு சகோதரனும் உண்டு.
கூட்டுக் குடும்பம்
அவனது தாத்தா விஸ்வநாத ஐயர் , முத்துலட்சுமி தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். மூத்தவர் மீனாஷிசுந்தரம். அவரை மூக்காண்டி என்றும் கூப்பிடுவார்கள். முதலில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து போனதால் மூன்றாவது குழந்தை பிறந்தால் மூக்குக் குத்து கின்றோம் என்று வேண்டிக்கொண்டதால் மூக்காண்டி என்ற பெயரும் வந்தது. சுந்தரம் என்றே அழைத்து வந்தனர். இரண்டாவது பிள்ளையின் பெயர் கணபதி சுப்பிரமணியன். இளையவர் என்பதால் “சின்னம்பி” என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். இளைய குழந்தைக்குப் பெற்றோர்கள் அதிக பாசம் காட்டும் பொழுது மூத்த குழந்தைக்குக் கோபம் வருவது இயல்பு தானே. அப்படிதான் ஒருமுறை மூத்த குழந்தை சுந்தரம் தனது தம்பியைத் தர தர வென்று இழுத்துச் சென்று மரபீரோவின் அடியில் திணித்து விட்ட நிகழ்ச்சியைச் சொல்லி அந்த வீட்டு உறவினர்கள் இப்போதும் சிரிப்பதுண்டு.
விஸ்வநாத ஐயருக்கு இராமலிங்கம் ஐயர், சிவராம கிருஷ்ண ஐயர் என்ற இரண்டு சகோதரர்களும், குப்பம்மாள் , சோமு என்று இரு சகோதரிகளும் இருந்தனர். தம்பி இராமலிங்கத்திற்கு பார்வதி என்ற மனைவியும், அனந்தநாராயணன், குளத்துமணி ( R.H.K ரமணி என்று எண்கணித ஜோதிடப்படி பிற்காலத்தில் மாற்றிக் கொண்டார்) இரண்டு மகன்களும், விசாலாக்ஷி, சகுந்தலா என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இருந்தனர். கடேசித் தம்பி சிவராம கிருஷ்ண ஐயர் சிலோனில் வேலை செய்து வந்தார். அவரை “கிட்ட சித்தப்பா” என்றுதான் அழைப்பார்கள். அவரது மூத்த தாரம் இறந்து போனதால் அவருக்குப் பிறந்த பெண்குழந்தையான பாலாம்பாளை தனது சகோதரர்கள் பொறுப்பிலேயே விட்டு வைத்திருந்தார். அவர்களும் மிகுந்த அன்போடு வளர்த்து வந்தனர். அழகான அன்பான கூட்டுக் குடும்பம்.
சில வருடங்கள் சென்று தம்பி சிவராம கிருஷ்ணனுக்கு, அவர்கள் வசித்து வந்த அதே வடக்குத் தெருவில் இரண்டு வீடு தள்ளிக் குடியிருந்த நன்கு பழக்கமான குடும்பதில் இருந்து சுப்பலக்ஷ்மி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு இராஜலட்சுமி, சங்கரி என்று இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சிலகாலம் சிலோனில் வளர்ந்து கல்லிடைக்குறிசிகுத் திரும்பி வந்தனர்.
கையும் வாயும் சுத்தம்
அவனது தாத்தா விஸ்வநாத ஐயர், “மானாமதுரை , திருநெல்வேலி” போன்ற ஊர்களில் உள்ள சந்திரவிலாஸ் ஹோட்டலில் தினசரி வரவு செலவு கணக்குப் பார்க்கும் வேலை செய்து வந்தார். அவர் கணக்கில் புலி. கையெழுத்தும் முத்தாக இருக்கும். வாரம் ஒருமுறை அவர் கல்லிடைக் குறிச்சிக்கு வந்து செல்வதுண்டு. சந்திர விலாஸ் ஹோட்டல் மேனேஜர் பெயரும் அ. விஸ்வநாத ஐயர் தான். அவரது மனைவி சங்கரம்மாள், முத்தம்மையின் மூத்த சகோதரியின் மூத்த பெண். அதனால் ஒருவகையில் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் அவனது தாத்தாவுக்கு நெருங்கின உறவுதான். உறவு என்பதால் வேலை செய்யும் இடத்தில் அந்தப் பாசத்தை எல்லாம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். சரக்கு மாஸ்டர் வரவில்லை என்றால் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் விஸ்வநாத ஐயரே சமையலும் செய்யத் தொடங்கி விடுவார் என்று அவனது தாத்தா தனது மேனேஜரை மெச்சுவார். அவருடன் தானும் அந்த ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களுக்கு உணவு பரிமாறியும் எந்த வேலைக்கும் தன்னைத் தயாராக வைத்துக்கொண்டதாகச் சொல்லி மகிழ்வார். அவருக்குக் கையும் வாயும் சுத்தம்.
அந்தச் சந்திரவிலாஸ் ஹோட்டல் மேனேஜர் அ.விஸ்வனாத ஐயர் தான் கல்லிடைகுறிச்சி “திலகர் வித்யாலய உயர் நிலைப் பள்ளிக்கு” நிர்வாகியாகப் பலகாலம் இருந்து அந்தப் பள்ளிக் கூடத்தின் வளர்ச்சிக்குக் காரணமானவர்களில் ஒருவராக இருந்தவர். “விஸ்வநாதையர் சங்கரம்மாள் அறக்கட்டளை” யை ஏற்படுத்தி எத்தனையோ ஏழை மாணவ, மாணவியர்களுக்கு சாதி, மத பேதம் இல்லாமல் புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள் எல்லாம் சரியான காலத்தில் தேவையான குழந்தைகளுக்கு வழங்கி வந்தார். இப்போது அரசாங்கம் தருகிறது. முன்காலத்தில் அது மிக அவசியமாக இருந்தது. “விஸ்வநாதையர் சங்கரம்மாள்” டிரஸ்ட் மூலம் கிடைத்த புத்தகத்தைப் படித்துத்தான் இன்று நான் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறேன் என்று நன்றியோடு சொல்லுகின்ற பழைய மாணவர்கள் பல பேர்களை அவன் பார்த்திருக்கிறான்.
சில வருடங்கள் சென்று அவனது தாத்தா திருநெல்வேலி சந்திரவிலாஸ் ஹோட்டலில் இருந்து செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள சந்திரவிலாஸ் ஹோட்டலுக்கு மாற்றிக் கொண்டு வந்தார். அங்கு வேலை செய்யும் பணியாளர் களிடமும், சாப்பிட வரும் ரயில்வே ஊழியர்களிடமும் மிகுந்த அன்போடு பழகுவார். ஒரு முறை அவன் அவனது தாத்தாவுடன் செங்கோட்டைக்குச் செல்வதற்காக கல்லிடைகுறிச்சி ரயில்வே ஸ்டேஷனில் நுழையும் பொழுதே பிளாட்பாரத்தில் இருந்து வண்டி மெதுவாகப் புறப்பட்டு விட்டது. அவன் கையைப் பிடித்துக் கொண்டு தாத்தா ஓடி வருவதைப் பார்த்து “மெதுவா வாங்க தாத்தா சாமி” என்று கடைசிப் பெட்டியில் இருந்த கார்டு(guard) சுந்தரம் பிள்ளை சிகப்புக் கொடியைக் காட்டி வண்டியை நிறுத்தி தன்னுடைய பெட்டியில் ஏற்றிக் கொண்டு சென்றது அவனுக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஒருவரிடம் எப்படி நாம் பழக வேண்டும் என்பதைப் பெரியோர்களின் நடத்தையில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். அன்பினால் யாரையும் வெல்ல முடியும்.
அவனுக்கு ரயில் என்ஜினும், அதில் இருந்து வெளிவரும் புகையும், அதன் ஒருவித நிலக்கரி வாசனையும் மிகவும் பிடிக்கும். அதை அவனுக்குக் கற்றுத் தந்ததே “செங்கோட்டை” ரயில் நிலையம்தான். அவனது தாத்தா அவனை செங்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் ஆரியங்காவுக்கு, ஸ்ரீ ஐயப்பனை தரிசனம் செய்துவர ஒருமுறை அழைத்துச் செல்லும் பொழுது, அந்தப் புகை வண்டி ஒரு குகையின் வழியாகச் சென்றது. அப்போது சில நொடிகள் ஒரே இருட்டாக இருக்கும். அவனுக்கு பயம் வரக்கூடாது என்று அவனைத் தன்னோடு சேர்த்துக் கட்டி கொண்டு “இப்ப வந்துரும் பாரு வெளிச்சம்” என்று சொன்னது அவனது காதுகளில் இப்போதும் ஒலிக்கிறது.
இன்றும் திருநெல்வேலி ரயில்வே நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவுப் பகுதிக்குப் பக்கத்தில் முதல் பிளாட்பாரத்தில் உள்ள ஒரு சின்னக் கடையில் “சந்திரவிலாஸ்” சிற்றுண்டி வகைகள் கிடைகின்றது. அங்கு கிடைக்கும் உப்புமா, பூரிக் கிழங்கு , வடை, இட்லி எல்லாமே மிகச் சுவையாக இருக்கும். பூரிக்கிழங்கும், உப்புமாவும் சூப்பராக இருக்கும். ஒரு பொட்டலதின் இன்றைய விலை ரூபாய் இருபது மட்டுமே…. இந்த சந்திரவிலாஸ் சுவையைத் தெரிந்த வாடிக்கையாளர்களான காலையில் இரயில் வண்டி இறங்கிவரும் பயணிகளும், மாலையில் சென்னைக்குச் செல்லும் பயணிகளும் நிச்சயம் இதை ஒருகை பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அதன் பெரிய கடை மேம்பாலத்திற்குக் கீழே ஸ்ரீ சாலைக்குமரன் கோவிலுக்கு அருகில் இருக்கிறது. அந்த அழகான முருகனை தரிசித்து விட்டு அப்படியே சந்திரவிலாஸில் ஒரு காபி யாவது குடித்துவிட்டு வருகிற வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சந்திரவிலாஸ் ஹோட்டலின் முதலாளி வெங்கடாசலம் ஐயரின் (பேரன்) மகன் மணி ஐயரின் இளைய மகன் சேகர் தான் இன்று நிர்வகிக்கிறார் என்று அவன் அப்பா கூறக் கேட்டிருக்கிறான்.
அவன் பிறந்தான்
பெரியவர் பிரும்மஸ்ரீ விஸ்வநாத ஐயரின் மகனாகப் பிறந்த மீனாக்ஷி சுந்தரத்துக்கும், கேரள மாநிலம் திருச்சூர் வெள்ளிநேழியில் பிறந்து வளர்ந்து திருநெல்வேலி ஜில்லாவின் கல்லிடைக்குறிச்சிக்கு வாழ வந்த பிரும்மஸ்ரீ சுப்ரமணிய ஐயர், மரகதம் அம்மாள் தம்பதியரின் இரண்டாவது பெண் இராமலக்ஷ்மிக்கும் பிறந்த சீமந்த புத்திரி ஸ்ரீ பார்வதி என்ற பாலா. அவனுக்கு அக்கா என்று முந்திக் கொண்டாள்.
அந்தக் குழந்தை பிறந்து ஐந்து வருடங்கள் கழித்து மன்மத வருஷம் ஆனி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு ஒரு மணி ஐம்பத்து நாலு நிமிஷத்தில் , பரணி நக்ஷத்திரத்திரம் கூடிய சுப தினத்தில் (14.07.1955) கல்லிடைக்குறிச்சி, டுண்டி விநாயகர் தெருவில் 38ம் எண் இல்லத்தில் அவன் பிறந்தான்.
அவன் பிறந்த செய்தியை அவனது அப்பா, செங்கோட்டையில் இருந்த தனது அப்பாவுக்கு (அ. விஸ்வநாத ஐயர்) ஒரு தபால் கடிதம் மூலமாக இப்படித் தெரிவிக்கிறார்:
” ஸ்ரீமது அப்பா அவர்களுக்கு குழந்தை மீனாக்ஷி சுந்தரம் அநேக கோடி நமஸ்காரம். இவ்விடம் யாவரும் ஷேமம். அவிடம் தங்களுடைய தேக சௌக்கியத்திற்கு எழுதவும். இப்பவும் இன்று இரவு ஒரு மணி ஐம்பது நாலு நிமிஷத்தில் சௌ. ராமாள் பிரசவித்து பிள்ளைக் குழந்தை பெற்றாள். சுகப்பிரசவம். குழந்தையும் தாயாரும் சௌக்கியம். பரணி நக்ஷத்திரம் , கொடி சுற்றிப் பிறந்திருக்கிறது. வாஞ்சி அம்மாஞ்சி, அத்தான் முதலியவர்களிடம் சொல்லவும். அம்மா எல்லாவரும் பார்த்து விட்டு வந்தார்கள். குழந்தை நன்றாக இருக்கிறது. சௌகரியப்பட்டால் குழந்தையைப் பார்த்து விட்டுப் போகவும். வேணும் சுபம். லக்ஷ்மீபதி சகாயம்.
பி.கு. அப்பா வரும்பொழுது முடிந்தால் ஒரு சக்கைப் பழம் வாங்கி வரவும்.
yours affectionately,
V. Meenakshisundaram 15 .07.1955
புண்ணியவாஜனத்தன்று வேத மந்திரங்கள் முழங்க அவனுடைய தகப்பனார் தன்னுடைய மடியில் அவனை வைத்துக் கொண்டு, அவனது வலது காதில்,
“விஸ்வநாதன், விஸ்வநாதன் ,விஸ்வநாதன்,” என்று அவனது தாத்தாவின் பெயரை நாமகரணம் செய்தார்…
பெயரைச் சொல்லிக் கூப்பிடக் “கண்ணன்” என்று வைத்தார்கள்.
“அவனை” இறைவன் படைத்தது தமிழ் செயுமாறோ…அவன் அது ஒன்றும் அறியான் பராபரமே…..
(21.01.2015) அவன் அடுத்த வாரம் வருவான் ……….
படங்களுக்கு நன்றி ; அன்னபூரணி