பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

11129746_819039241483610_1321350885_n

திரு. பிலால். எச்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.04.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

39 thoughts on “படக்கவிதைப் போட்டி (8)

 1. மனதில்,கண்களில்,கைகளில் 
  உறுதி காட்டும் சிவப்பு சக்திகள். 
  ஆக்கவும்  தெரியும் 
  தாக்கப் பட்டால் அழிக்கவும் தெரியும் 
  என்கிறார்களோ !

 2. மானுடம் வாழ
  மாண்புடன் நாளும்
  மாலைகள் தரித்து
  மஞ்சளும் ஏகி

  ஆயுதம் ஏந்தி
  ஆண்டவன் வேண்டி
  ஆகமம் பேணி
  ஆதலைச் செய்து

  நாட்டினில் ஊறும்
  கேட்டினைத் தடுக்க
  பூட்டினை உடைத்து
  ஏட்டினை மாற்ற

  நாங்களும் வந்தோம்
  நான்மறை போற்றும்
  நன்மகள் பாடி
  நன்மைகள் பெறவே!

  சாதி எமக்கில்லை; இது
  சந்ததிப் பழக்கம்!
  சாத்திரம் பேணி
  சமத்துவம் பற்ற

  போனவர் தொற்றி
  வருபவர் காக்க
  வாள்கொண்டு ஏற்கும்
  வல்லமைப் பண்பே

  வேறொன்றுமில்லை;
  வீணே வதந்தியைத்
  தடுத்து எங்கள்
  தர்மத்தைக் காப்பீர்!

  மதமென்னும் வழியும்
  மண்சார்ந்த வழியே
  மதமில்லை எமக்கு
  மண்ணின் மாதரும் நாமே!

  அன்புடன்
  சுரேஜமீ

 3.              எங்கள் காவல் தெய்வம்  கருப்பண்ண சாமியை வழிபடுவோம் 
                செந்நிற ஆடை அணிந்து நேர்த்தி கடன் செலுத்துவோம்
                 கையில் வாளும், தண்டையும் ஏந்தி குரவை பாடுவோம்,
                 கருப்பண்ண சாமிக்கு படையல் செய்துடுவோம் வாரீர் ! 

 4. உரிமை தேடி !

  காட்டு ஜாதி ஆயினும், நியாயம் 
  கேட்க வருகிறோம் !
  கத்தி காட்டி மிரட்டியும்
  சத்தியம் காக்கத் திரள்கிறோம் !
  பூர்வ குடியினர் யாமெல்லாம்
  பூரண உரிமை கேட்கிறோம் !
  வாழ எமக்கு ஊழியம்
  வயிற்றை நிரப்ப ஊதியம்.
  பிள்ளை குட்டி படித்திட
  பள்ளிக்கூடம் கட்டுவீர் !
  உம்மைப் போல் நங்களும்
  உரிய வரி தருகிறோம்.
  இந்திய நாடு எமக்கும் நாடே !

  சி. ஜெயபாரதன்

 5. பூர்வீகக் குடிகள் புகார்

  ஆதி திராவிடர் என்றெமை ஆங்கிலேயர்
  ஜாதிப் பிரிவில் சேர்த்தார் !
  காட்டு வாசியாம் நாங்கள் எல்லாம் !
  சாமி பார்க்காதாம் எம்மை !
  கோவில் கதவு அடைத்திருக்கும் 
  பாவிகளாம் நாங்கள் !
  காபி குடிக்கக் கடைக்குப் போனால்
  சிரட்டையில் தருகிறார் !
  தெருவில் நாங்கள் நடந்தால்
  செருப்பைக்
  கரத்தில் தூக்க வேண்டுமாம் !
  படிப்பில்லை எமக்கு !
  பட்டப் பதவி இல்லை எமக்கு !
  வேலை இல்லை எமக்கு !
  வேலை கிடைத்தால் தகுந்த
  கூலி இல்லை எமக்கு !
  காலி வேலை கிடைத்தால்
  கழிப்பறைச் சுத்தம்  அல்லது
  குப்பை அள்ளும் பணி !
  அரை வயிற்றுக் கஞ்சிதான் !
  மானம் இழக்கும் உடுப்பு !
  வானம் பார்த்த கூரை,
  மழை நீர் சேர்க்கும் குடிசை !
  சாக்கடை ஓடும் சந்து !
  விடுதலை நாட்டில் எங்கள் 
  வேதனைப் 
  புராணம் நீளும் கேளீர் !
  வெளியே வாரீர் அமைச்சரே ! 
  நியாயம் கேட்கத் திரண்டு 
  நேரே வந்துளோம் !
  ++++++

  சி. ஜெயபாரதன்

 6. வண்ணத்தை மிஞ்சும் வர்ணங்கள்!

  குருதியில் 
  பச்சை உண்டோ?
  கருப்பு உண்டோ?
  நீலம் உண்டோ?
  ஆனால், உனக்கு மட்டும் 
  ஏதடா
  வண்ணத்தை மிஞ்சும் 
  வர்ணங்கள்?

  எவனோ அன்று 
  பிரித்தாளச் செய்த 
  சூழ்ச்சியை;
  இன்றும் நீ 
  பிடித்துக் கொண்டு 
  இருக்கிறாயே
  மூடனே!

  உன் குருதியின் நிறம் 
  “ஒன்று” என சொல்லிய 
  உன் அறிவு;
  உனக்குள் எப்படி 
  விண்வெளி இடைவெளியில் 
  இப்படி வர்ணத்தை விதைத்தது?

  நடந்த தீயவைகளை,  
  தலைமுறை; தலைமுறையாக 
  எடுத்துச் செல்வதைத் தவிர்த்து;

  நானிலத்தில் “நாம்” எல்லோரும் சமமென்பதர்க்கு,
  நம் அகராதியில் நீக்கப்படவேண்டிய 
  வார்த்தைகள்;
   “தலித்’;
   ‘நாயக்கர்’;
  “நாடார்”;
  “செட்டியார்”;
  “முதலியார்”;
  “அகமுடையார்”;
  “தேவர்”;
  “வன்னியர்”;
  “இன்ன பிற பட்டியல்கள்”;

  அறிவியலில் முன்னேற்றம் காண்பதல்ல அறிவு;
  “அறிவு” இயலில் முன்னேற்றம் காண்பதுதான் அறிவு!

 7. சாதிகள் இல்லையடி பாப்பா என்பது கவிதைக்கும் வேண்டும் இல்லையா!சாதி குறிப்பிடாமல் கவிதை எழுதுங்கள்.

 8. அன்புச் சகோதரி லஷ்மியின் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது.  இங்கு சாதியைக் குறிப்பதற்காக எழுதப்படவில்லை!

  வெறும் வார்த்தைகளாக மக்களை பிரிக்கும் முயற்சியை முறியடிப்பதற்காகக் கையாளப்பட்டுள்ளது என்பதையும்,

  நிச்சயம் இப்படியும் ஒருவர் சிந்திக்கலாம் என்ற தங்களின் கூற்றுக்கிணங்க,

  அடிப்படைப் பிரதியில், இச் சொற்கள் நீக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  

  அன்புடன்
  சுரேஜமீ

 9. மாரியாத்தா எங்களைக் காத்திடுவா

  அம்மனுக்கு வேண்டியே தான்விரதம் இருப்போம் 
         ஆடிமாதம் வந்திடக் கொண்டாட்டம்
  கும்மியடிப் போம்குல வைச்சத்தம் இடுவோம்
         கையிலேதான் தூக்குவோம் ஓர்அறிவாள்
  செம்மையுடை மஞ்சளை யும்தடவிக் கிட்டு
         சுத்திவந்தா நல்லதே எங்களுக்கு 
  மும்மாரி பெய்யவே செய்திடுவா அருள்மிக்(க)
         மாரியாத்தா எங்களைக் காத்திடுவா

  எங்களோட வேண்டுதல் கேட்டவுடன் ஆத்தா
         என்றென்றும் துன்பமே போக்கிடுவா
  தங்கமனம் கொண்டவள் எங்கமாரி யாத்தா
         தவிக்கத்தான் எங்களை விடமாட்டா
  அப்பழுக்கில் லாதவள் தன்கருணை மழையால்
         அன்புடனே எங்களைக் காத்திடுவா
  தப்புசெய்யும் மக்களுக் கேதண்டணை வழங்கி
         தர்மத்தை யேநிலை நாட்டிடுவா

 10. ஆயுதம் கொல்!

  அன்பின் வலியதோர் ஆயுதம் ஏதுண்டு?
  ஆற்றல் பெருகிநல் போற்றல் தழைக்கும்;
  இன்பம் இதுவன்றோ ஞாலம் உயிர்பெறவே
  ஆதலின் ஆயுதம் கொல்!

 11.                                         மஞ்சள்   குங்குமம்  
                                           மங்கலத்தின்
                                           அடையாளம்
                                           சிவப்புச் சேலை
                                           ஆன்மீகத்தின்
                                            அடையாளம்
                                            நாங்கள்
                                           மந்திரவாதிகளோ
                                            தந்திரவாதிகளோ அல்ல
                                             
                                        ஊரில் மழை வேண்டியும்
                                         நேர்த்திக்கடனை
                                          பூர்த்திசெய்யவும்
                                          காளிகோவிலுக்கு
                                          பக்தி சிரத்தையுடன்
                                           பரவசமாய்செல்கிறோம்
                                           எம் மக்கள்எம் ஊரு
                                            எல்லா வளமும் பெற
                                            காளியாத்தாகோவிலுக்கு
                                             கால் ந்டையா போகிறோம்

                        சரஸ்வதி ராசேந்திரன்

                                                
         

 12. உசர வைப்பாய் எங்க ஐயனாரே!!

  ஏந்தி நிற்கும் ஆயுதம் சொல்லும்
    தாங்கி வந்த வலிகள் என்றும்
  ஊரறிந்த வாழ்வே நித்தம் எமக்கு
    உழைத்தால் வயிறு நிறையும் உணவு
  அனுபவம்தான் எங்கள் வாழ்க்கைப் பாடம்
    ஆண்டவன்தான் எங்கள் வழிக்குத் துணை

  எங்களுக்கும் ஒரு ஏக்கம் உண்டு
    என்று எங்கள் வாழ்வு சிறக்குமென்று
  வறுமை வாட்டும் நிலையும் விட்டு
    வளமை வரும் நாளும் எப்போ?
  வாழ்ந்துதானே கொஞ்சம் பார்க்க ஆசை
    வாழ்வே சுகமாய் வானம் வசமாய்!

  உடலைக் கட்டி உள்ளம் பேணி
    மடலைசாமி உன்னை வணங்கி நின்றோம்
  மாலையிட்டு இந்த மண்ணைத் தொட்டு
    மக்கள் நாங்க உன்னை நம்பிவந்தோம்
  கருணை காட்டு எங்க காவல்சாமி
    காலம்யாவும் எங்க வாழ்வு செழிக்க!

  காத்து நிற்போம் உன்வாசல் தானே
    கடந்து செல்ல எங்கள் கஷ்டமெல்லாம்
  பார்த்து செய்யும் சாமி நீதான்
    பாரு எங்க பாதை நல்லா
  ஊரே நிக்க இங்கே உன்முன்னாலே
    உசர வைப்பாய் எங்க ஐயனாரே!!

  அன்புடன்
  சுரேஜமீ

 13. நாட்டு அகதிகள் .. !

  ஏழைப் பெண்கள், படிப்பிலா
  இளமைப் பெண்கள்,
  படித்த பெண்கள், 
  பட்டம் பெற்ற பெண்கள்,
  பகலில் நடக்கும் பெண்கள்
  இரவில் போகும் மங்கையர்,
  கருமை நிறப் பெண்கள்,
  குண்டுப் பெண்டிர்,
  வனப்பு வனிதையர்
  தனித்துப்  போகும் பெண்டிர்,
  கல்லூரி செல்லும் பாவையர்,
  இல்லத்தில் தூங்கும் நங்கையர்,
  பெற்ற தாய், பெண் பிள்ளை,
  தமக்கை, தாரம், மூதாட்டி,
  சொல்லடா ?
  மூச்சு விட முடியுது யார் 
  பேச்சுரிமை யிலா  நாட்டிலே ?
  இருநூறு பள்ளிக்கூடப் பெண்கள்
  கடத்தப் பட்டார் 
  நைஜீரியா நாட்டில் ! 
  கண்டுபிடிப்பார் யாருமில்லை !
  பள்ளிக்குத் துள்ளிச் செல்லும் 
  பாவையர் முகத்தில் 
  அமிலம் ஊற்றித் 
  துடிக்க வைத்திடுவார் 
  ஆணாதிக்க மூர்க்கர் !
  ஆதிக்க அரசு குறட்டை விடுது !
  காவல் துறை 
  வேடிக்கை பார்க்குது !
  யார் மானமுடன் பாதுகாப்பாய் 
  வாழ முடிகிறது
  விடுதலை நாட்டிலே ? 
  இடும்பைகூர் இன்னல் உலகே ! 
  ஆயிரம் ஆண்டுக் காலம்
  அடிமையாய் ஆக்கப் பட்டது 
  தாய்க் குலமே !
  நம்மில் பாதி அளவு
  மனிதக் குலமே !
   
  சி. ஜெயபாரதன்

 14. பெண்ணுக்கு ஓர் ஆயுதம் ..!

  முட்டித் தள்ள கொம்புகள்  
  இட்டான் பசுவுக்கு !
  தேளுக்கு வாலில் கொடுக்கு!
  பல்லில் விஷம் வைத்தான்
  பைங்கண் அரவுக்கு !
  பறவைக்கு இறக்கை,
  மீனுக்கு நீச்சல்,
  மானுக்கு ஓடும் கால்கள்;
  ஆனால் ஈசன் 
  பெண்ணுக்கு என்ன தந்தான் 
  அல்லும், பகலும்
  ஆடவரால் தாக்கப் பட்டு,
  தொல்லை யுற்று 
  துவளும் உலகிலே ?

  சி. ஜெயபாரதன்

   

 15.      படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா
             
                நம்பிக்கை
          ———————
     நம்பிக்கை மனம் இருத்தி
     நாம் எடுத்தோம் இக்கோலம்
     எங்களது மாரியாத்தா
    இரங்கிவந்து அருளிவிடு.

 16.     படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

              நல்லவை விழைய !
          —————————
     கத்திஎடுப்பது கலாசாரமல்ல
     ஈட்டிஎடுப்பது ஏற்றதுமல்ல
     யாவுமேஅன்னை உருவமாயெண்ணி
     நாமிங்குஏந்துறோம் நல்லவைவிழைய.
    

 17. ஆயுதம் ஏந்தி நிற்கின்றோம்

  ஆத்திரத்திற்கே உரித்தான

  சிவப்பாடை உடுத்தியுள்ளோம் !

  மங்களம் நிறைந்த

  மஞ்சளையும் அணிந்துள்ளோம் !

  கோபத்தின் அடையாளம் எல்லாம்

  எம் புறத்தில் கொண்டுள்ளோம் !

  ஆனால் – அன்பும் கருணையும்

  அகத்தில் நிறையவே கொண்டுள்ளோம் !

  அமைதியையும் பொறுமையையும்

  அதிகமாகவே செயலாற்றுகின்றோம் !

  எங்கள் அகத்தையே முகமும்

  இங்கே பறைசாற்றுகிறது !

  ஆயுதம் சுமந்து நின்றாலும்

  அமைதியையே இறைவனிடம்

  இறைஞ்சி நிற்கின்றோம் !

  சக்தி வடிவம் நாங்கள்

  எந்நாளும் ஆக்க சக்தியாய்-

  ஊக்க சக்தியாய் திகழ்வோம் !

  நானிலம் நலமுடன் விளங்க

  நல்லெண்ணங்களை மனங்களில்

  வித்தாக்கிடுவோம் !

 18. தோரணங்கள் 

  வேடங்கள் தேவை யில்லை
  வேல்விழிப் பெண்டிர்க்கு !
  உதட்டில் எதற்கு
  சிவப்பு வர்ணம் ?
  முகத்தில் எதற்கு 
  வண்ணப் பூச்சு ?
  வைர மூக்குத்தி தேவையா ?
  விழியோரக் கரையில் 
  வேண்டாம் நிறப் பூச்சு !
  விரல் நகங்களில் எதற்கு
  மருதாணிச் சிவப்பு ?
  கழுத்தில் தொங்க வேண்டுமா 
  காசி மாலை ?
  காதுகளில் மின்னத் தேவையா
  வைரத் தோடுகள் ?
  விதவை ஏன் கட்ட வேண்டும் 
  வெண்ணிற ஆடை ?
  நெற்றியில் இட வேண்டுமா 
  குங்குமப் பொட்டு ?
  பூக்கள் கூந்தலில் எதற்கு ? 
  வேலியான
  தாலி தேவையா ? 
  போட்டுக் கொள்வீர், ஆனால்
  தேவை யில்லை !
  இயற்கை எழில் என்னை 
  மயக்க
  கண்ணிய உடுப்பு தவிர
  வெளித் தோரணம் வேண்டுமா
  பெண்ணுக்கு ?

  சி. ஜெயபாரதன்

   

 19. செஞ்சாந்து பொட்டிட்டு செவ்வாடை மேலுடுத்தி 
  மஞ்சளிலே நீராடி மங்களமாய் – அஞ்சாமல் 
  வஞ்சியரும் வில்லுடன் வாளேந்தி ஆடிவர 
  தஞ்சமுற கெஞ்சும் சனம் .

 20.      படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

             கிறுக்கென்று எண்ணாதீர் !
         —————————————-

      கிராமத்தார் வழிபாட்டை 
      கிறுக்கென்று எண்ணாதீர்
     மனதிலெழும் பக்திதனை
     மறுவின்றி காட்டிடுவார்

      அவர்கோலம் பார்ப்பதற்கு
      அகோரமாய் இருந்திடினும்
     அருளுணர்வு அவரிடத்தில்
     அடைக்கலமாய் இருக்கிறது !

 21.     படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

          பக்திகொள்ளல் தவறாமா ?
      —————————————–
  கண்ணப்பன் பக்தியைநாம்
  எண்ணியே பார்த்துவிடின்
  கையில்கத்தி வைத்துள்ளார்
  பக்திகொள்ளல் தவறாமா

  சிறுத்தொண்டர் வெட்டியதால்
  சிவனருளைப் பெற்றாரே
  அவர்வழியில் இவரெல்லாம்
  ஆயுதத்தை ஏந்துகிறார் !

 22. பெண் சீண்டல்.

  படிப்பில்லா ஏழ்மைப் பெண்கள் 
  பார்வைக் கொலுப் பொம்மைகளா ? 
  படத்தில் போட்டு 
  பாவையருக்குப்
  பாக்கள் எழுதுவது சரியா ? 
  ஒரு சொல் கேளீ ர் !
  கேலிப்படம் இனி வேண்டாம்
  வாலிப பெண்டிருக்கு ! 
  பெண் சீண்டல்  செய்வது 
  கண்ணிய மில்லை 
  உலகத்தீரே !

  சி. ஜெயபாரதன் 

 23. சுடல மாடா…. சூரக்காளி…
  சொகத்தக் காக்கும் சொரிமுத்தையா ….
  ஆலமுனி அய்யனாரே…
  அருளத் தரும் நாகாத்தம்மா..

  ஊருன்னு பேரு வச்ச  
  காட்டுலதா எங்க வாழ்க்க.. 
  எங்க சோறு ஒஞ் சோறு…
  எங்க காய்ச்சல் ஒங் காய்ச்சல்…!

  வக்கத்த மனுசக் கூட்டம் – நாங்க 
  வச்சித்தா கும்புடுறோம் 
  நிக்க வச்சும்… நிறுத்தி வச்சும்…!

  ஆடம்பரக் கோவிலில்ல – காவி 
  அடிச்சிவிடக் காசுமில்ல…!
  மாம மச்சா உறவு சொல்லி 
  மந்திரம் பாட  வழியுமில்ல…..

  ஆலமரத்தடிக் கீத்துக் கூடு 
  அதச்சுத்தியொரு காரச் செவரு..
  மஞ்ச வேட்டி இடுப்புத் துண்டு 
  மச மசன்னு கம்பங் கூழு…

  ஆட்டுக்கறி சாரயமுமா 
  ஆக்கிவச்ச நெல்லுச்  சோறு….!
  பச்சப் பயிரும் சீமப் பாலும்
  படச்சி வச்சோம் வருசம் மூணா……

  பஞ்சாமிர்தம் ஊட்டலையே…
  சந்தனக் கூழும் ஊத்தலையே…
  ஆடம்பரத் தொட்டிலுல…..
  ஆட்டிவிட்டு விசிறலையே…..

  இத்தனக் கொறயிருந்தும் 
  இரும்புத் தூணா காத்து நிக்கெ…
  தலமொறையத் தவறாம 
  தழைக்க வச்சிப் பாத்து நிக்கெ…!

  எஞ்சாமி… எஞ்சாமி..
  எங்காதுக்குள்ள சொல்லிப்புடு..
  மறுவீடு மாமியா வீடுன்னு 
  எங்கிட்டும் போகாம 
  இங்கனயே நிக்கிறியே…. !

  சாமிக்குள்ளயும் சாதியிருக்கா………. ?

 24. படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

                    கள்ளமிலை
                  ——————
          அருவருக்கும் அவருருவம்
          அருளவர்க்குள் அமர்ந்திருக்கு
          உருவமெலாம் விறைப்பாகும்
          உள்ளமதில் கள்ளமிலை !
        

 25. சக்தியின்றி சிவமில்லை..!

  மங்கலச் சின்னமாம் மஞ்சளும் குங்குமமும்
  மங்களச் செவ்வாடையில் முப்பெருந்தேவியர்

  காளியின் ரூபமும் காளிங்கக் கோலமும் பூண்டு
  சூளுரைச் சிந்தையில் சூழ்நிலைக் காவல் கொண்டு

  கேடென்றறிந்த நெஞ்சம் துஞ்சாது எதற்கும்
  அஞ்சாது துண்டாக்கும் ஆயுதம் கையேந்தி

  மனோசக்தியாம் புலியவளின் தூரப்பார்வையில் குறி
  கேலிக்குறியோ கேள்விக்குறியோ ஆவதில்லை..
  என்றென்றும் ஆக்க சக்தியவளின் பின்புலங்கள்
  பவளருத்திர மணிமாலையாய் வெற்றிவாகை

  சூடியாடும் சிவமயமாய் ஆண்சிங்கங்களின்
  அணிவகுப்பே பேசும்படம் கூறும் மொழி..!

 26. மங்கலங்கள் உடல் நிறைக்க மங்களத்தேவிகள்
  பலியிட்டு படையலிட்டு பாசுரங்கள் பாடிவிட்டு
  பாங்குடனே பக்திதனை பரமனுக்கு பகர்ந்திட்டு
  ஆதிமுதலாய் ஆன்மிகம் அடியொற்றியே
  பாதத் திருச்சதங்கைகள் வீரவாள் ஏந்தியும்
  கொடுஅருவாள் கொடுமையைக் கேள்வி கேட்டதும்
  கோபங்கள் மறந்த மனம் சாந்தமானது
  கூடிநின்று கண்ட மக்கள்கூட்டம் ‘குறி’ கேட்டது…!

 27. அருள்வாக்கு தேவதைகள்

  மங்கலங்கள் உடல் நிறைக்க
  மங்களத் தேவிகள் பலியிட்டு
  படையலிட்டு பாசுரங்கள் பாடிவிட்டு
  பாங்குடனே பக்திதனை
  பரமனுக்கு பகர்ந்திட்டு
  ஆதிமுதலாய் ஆன்மிகம்
  அடியொற்றியே பாதத்
  திருச் சதங்கைகள் வீரவாள்
  ஏந்தியும் கொடுஅருவாள்
  கொடுமைகளைக் கேள்வி
  கேட்டதும் கோபங்கள்
  மறந்த மனம் சாந்தமானது
  கூடிநின்று கண்ட கூட்டம்
  ‘குறி’ கேட்டது…!

 28. அருள்வாக்கு தேவதைகள்
  ஆதி காலம் தொட்டு
  வழி வழியாய் கொண்ட பக்திப்
  குல தெய்வ வழிப்பாட்டில்
  மங்கலங்கள் உடல் நிறைக்க
  மங்களத் தேவிகள் பலியிட்டுப்
  படையலிட்டு பாசுரங்கள்
  பாடிவிட்டு பாங்குடனே
  பக்திதனை பரமனுக்குப்
  பகர்ந்திட்டு வீரவாள்
  ஏந்தி ‘சாமியாடி’க்
  கொடு அருவாள்
  கொண்டு கொடுமைகள்
  களைய முறையிட்டுக்
  கேள்வி கேட்டதும்
  மலையேறிய சக்தியினைச்
  சூடங்கள் கொளுத்திக்
  கோபங்கள் தணிக்க
  மனம் சாந்தமானது
  சூழ்ந்து கண்ட கூட்டம்
  அருள்வாக்குப் பெறவே
  காத்திருந்தது..!

 29. மாறாதது…

  செவ்வாடை மேலுடுத்தி செந்தூரப் பொட்டிட்டு
  எவ்வாறு வந்தாலும் அஞ்சாதே- இவ்வுலகில்,
  என்றும் புதுமை புகுந்திடாத பக்தியதும்
  நின்று வளரும் நிலைத்து.

  -செண்பக ஜெகதீசன்…

 30. கொலுப் பொம்மைகள்

  முகப் பூச்சு எதற்கு முழுமதி
  முகத்துக்கு ?
  நெற்றியில் பூச வேண்டுமா 
  நேரடி மஞ்சள் பட்டை ?
  பக்திச் சின்னமா இவை
  பார்வைப் பிறவிகளா பாவையர் ?
  கேலிப் படமாய் இடும்
  போட்டிக் கோலமா இவர் ?
  வல்லமை வலைத் தகுதியில்
  வந்துள்ள  
  இந்திய வனிதையரா இவர் ?
  இது பெண்டிர்
  அழகுப் போட்டியா ?  
  அல்லது
  “அக்ளி” போட்டியா ?
  படக்கவிதைப் போட்டியை
  தரக் குறைவாக்கி 
  இடம் மாறி வந்த
  நிழற்படமே !

  சி. ஜெயபாரதன்

 31.               படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

           ஈரமாம் நெஞ்சுடையார்
      ————————————
      ஈரமாம் நெஞ்சுடையார்
      வீரமதை வெளிக்காட்டி
     கோரமாய் நின்றிடினும்
     குன்றாமல் பக்திசெய்வார்

     ஊரெல்லாம் கூடிவந்து
     உருவேற்றி நின்றுவிட
    பாரிலவர் வாழ்வதற்கு
    பக்தியுடன் பணிந்திடுவார் 

 32.     படக்கவிதைப்போட்டி  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

          நினைப்பெல்லாம் !
       —————————–
    வரம்வேண்டி நிற்பதற்கு
    உரம்கொண்டு நிற்கின்றார்
    நிறம்மாறி நின்றிடினும்
    நினைப்பெல்லாம் கடவுளிடம் !

 33. மரம்வெட்ட போன மறத்தமிழன் மேனி  
  மரமாகிச் சாயத் துடித்தோம் –சரமாரி 
  எனவே பொழிந்த எதிராளித் தோட்டா 
  சினம்கண் டெழுந்தோம் சிவந்து 

  உயிரெடுக்குந் தெய்வ உருவெடுத்து விட்டோம் 
  கயிறாய் திரித்திடுவோம். தமிழன்  –உயிரை  
  பயிராய் அறுக்கும் பகைவன் திமிரை 
  தயிராய்க் கடைவோம் துணிந்து.

  காட்டு மகமாயி காளி வழிகாட்ட 
  நாட்டில் நலிந்த தமிழரினி –கூட்டுக் 
  குயில்போல் குமுறும் நிலைமாறறிக் காட்ட
  எயிலாய் இருப்போம் இணைந்து.
  (எயில் –அரண்) 

  மெய்யன் நடராஜ் (இலங்கை)

 34. பெண்மையின் உரு
  அன்பாய் அரவணைக்கும்
  இன்பத் தாய்மையவள் !
  கனிவாய்க் கணவன் தோள்
  இனிதாய்ச் சேரும் இணையவள்!
  ஈன்றெடுத்த பெற்றோர்க்கு
  நன்றாம் அன்பு செயும் சேயவள்!
  உடன்பிறந்த சகோதரர்க்கு
  கடன் மறவா அன்பின் சாட்சியவள்!
  உற்ற சுற்றங்களுக்கெல்லாம்
  நற்றவமாய் நயந்துதவும் உறவு அவள் !
  அன்பின் திருஉருவாய் ஆளும் பெண்மை
  இன்னல் படுவோர்க்கு இரங்கும் பெண்மை
  தீமை கண்டு கொதித்தெழும் பெண்மை
  ஊமை மடந்தையாய் காதல் செய் பெண்மை
  இன்னும் பற்பல சக்தியாய் உலகினில் பெண்மை
  மன்னிடும் நன்றாய் பல் ‘உரு ‘ கொண்டு !

  புனிதா கணேசன்
  17.04.2015

 35.          பசக்கவிதைப்போட்டி. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண். .. அவுஸ்த்திரேலியா

            எழும்பக்தி
        ———————

          கோலங்கள் மாறலாம்
          கொடுங்கத்தி எடுத்திடலாம்
          ஆழ்மனத்தில் எழும்பக்தி
          அவரையாட்டி நிற்கிறது !

 36. சிகைதொடு வர்ணமும் சேர்ந்திட மாலையும்
  கூர்நிறை வாளொடு ஆயுதம் ஏந்தினோம்; 
  மண்ணில் கொடுமைகள் நீங்கியென்றும் -மாதரும் 
  பேணிட வாழ்வு சிறந்து!

 37. தலை முறைக்காக

  பெண்ணைப் பெருந்தெய்வம் என்று சொன்ன நாட்டிலின்று
  கண்ணைச் சுடும் காட்சிகள்தான் எத்தனை எத்தனை
  அன்னை என்றார் ஆண்டவனில் பாதியென்றார் இன்று
  அரக்கராய் மாறிவிட்டதே அவர்தம் கொடுஞ்செய்கை -அதனால்தான்
  வளயல் அணியும் கைகளில் இன்று வாளேந்தினோம்
  களையெடுக்க அல்ல கயமையின் கருவறுக்க!

  படிப்பறியா பழங்குடியினர் என்றா எம்மைப் பார்கின்றீர்
  பாவையருக்கு பேதம் பார்த்தா பாவங்கள் செய்கின்றார்
  படித்தப் பெண் என்றாலும் பள்ளியறியார் என்றாலும்
  பண்புகளைத் தொலைத்துவிட்டு பாதகம் செய்கின்றார்-அதனால்தான்
  அன்பான அணங்குகள் இன்று ஆயுதங்கள் ஏந்தினோம்
  அச்சமூட்ட அல்ல அநியாயக் காரர்களை எச்சரிக்க!

  ஆயிரம் சூலத்திடையே எங்கள் அம்மை யவள் வழிபாடு
  அப்போதே வைத்துவிட்டார்கள் முன்னோர்கள் விழிப்போடு
  அநீதிகள் பெருகும்போது ஆயுதமாகிவிடு இல்லையெனில்
  அடுத்தத் தலைமுறைக்கும் ஆபத்தென்றார்-அதனால்தான்
  கலை யுரைத்த கைகளில்  இன்று கருவிகள் கொண்டோம்
  தலைகள் எடுக்க அல்ல எங்கள் தலை முறையை காக்க!

 38. சிங்காரப் பைங்கிளியாய்
  பாடிப் பறக்கின்ற குயில்களின்
  கைகளில் நானா!
  யாரை வெட்டிச் சாய்க்க
   மங்கல மஞ்சள்
  செந்தழலாய் போர்க்கோலம்!
  வெள்ளியாய் மின்னிடவே
  ஆசை இங்கு எனக்கு!
  நுனிபரவ இரத்தங்கள்
  வேண்டாம் இனி எனக்கு!
  தீவிரவாத மதங்களின்
  வெற்றுச்சாயங்களின் சிவப்பால்
  அருவிநீர்கூட அலுப்பாய்
   காய்ந்து கிடக்கிறாள்!
  கவி பாடிப் புறப்படுவோம்
  சுதந்திரச் செந்நீரால் கழுவிய பாரதத்தின்
  தீவிரவாதச் செல்லரித்த மரமனங்களை
  வெட்டிச் சாய்க்க மட்டுமே புறப்படுவோம்
  என்றே உறுதியிட்ட மங்கையரே!
  மண்ணுலகில் படைத்திட்ட
  அனைத்தையும் அன்பே வழிநடத்தும்.
  அகிம்சையால் அகிலத்தை ஆள
  தூக்கிய என்னைத் தூர எறிந்து
  தூரத்துமரத்தின் ஆணியில்
  தொங்கவிடப்பட்ட புத்தரின் வழி நடப்போம்.

 39. சூனியக்காரிகளா ?

  தாய்மையின் தனிப் பொலிவில்
  சேய்கள் வளர்க்கும் பொறுப்பு மேற்கொண்டு 
  குடும்ப விளக்காய் ஒளிரும்,
  கோபுரச் சுடரொளிப் பெண்டிரை 
  கோரமாய் அலங்கரித்து 
  சூனியக் காரிகளாய்ப் படமெடுத்து
  மானம் இழக்க 
  வல்லமையில் இழிவாய்
  படக்கவிதை எழுதப் போட்டிதனை
  அமைப்பதா ?

  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *