பஞ்சாபி மூலம் – அம்ருதா பிரீதம்
ஆங்கிலம் வழி தமிழில் – ராகவன் தம்பி

சிலிர்ப்புடன் படர்ந்தது மெல்லிய காற்று. உன் மூச்சுக் காற்று அதில் கலந்ததனால் இந்தச் சிலிர்ப்பு காற்றில் கலந்து இருக்கலாம். காற்றின் திசை பார்த்து நிற்கும் மரங்களின் இலைகள் நடுங்கத் துவங்கின. எலும்பு மற்றும் சதையால் உருவான ஜடமான நான், நீண்ட நேரமாக ஸ்தம்பித்து ஜடமாக நின்றுகொண்டிருந்தேன். ஒரு கணம், திடீரென்று, என்னுடைய ஜடத்தன்மை என்னை விட்டுக் கரைவதை உணர்ந்தேன். வெளியில் வீதியைப் பார்த்தேன். நீ கடந்து எங்கோ சென்றுகொண்டிருந்தாய். இந்த வீதியில் மனிதர்கள் பலர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் உன்னுடைய நடையில் மட்டும் ஒரு தனித்துவம் மிளிர்ந்தது போலத் தெரிந்தது.

நீ நடந்தபோதும் ஒரு நொடி தயங்கி நின்றபோதும் உன்னுடைய காலடி அந்த வீதியுடன் ஏதோ ஒரு உரையாடலை நிகழ்த்தியது போலத் தோன்றியது. அங்கே கிளம்பி, புழுதியைப் பல நாட்கள் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

ஒருநாள், என் வீட்டின் வாயில் கதவுக்கு எதிரில் உள்ள மரத்தின் கீழ் நீ நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு குறுகிய கணத்தில் அந்த மரத்தில் முதன் முறையாகப் பூக்கள் மலர்ந்து விரிந்து சிரிப்பதைக் கண்டேன்.

அந்த மலர்களைப் பல நாட்கள் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு கோடையின் பிற்பகல் நேரத்தில், நீர் நிரம்பி வழியும் ஏதோ ஒரு கிணற்றுக்கு வழி கேட்பதைப் போல, என் வீட்டின் முன்பக்கக் கதவுக்கு எதிராக நீ நின்றிருந்தாய்.

ஆச்சரியத்திலும் திகைப்பிலும் அந்தக் கதவு உன்னிடமிருந்தும் என்னிடமிருந்தும் தன்னைப் பூட்டிக்கொண்டது. நீ வாயிலை உற்று நோக்க, அது உயிர்ப்பு கொண்டு எழுந்தது.

நான் உள்ளே சென்று ஒரு மண்கலயத்தில் நீரை மொண்டு வந்தேன். நீ அமைதியாக உள்ளே வந்து, பருகினாய்.

நீ எங்கிருந்து வந்தாய் என்றோ, எங்கே போகிறாய் என்றோ நான் என்றும் அறிந்துகொண்டது இல்லை. என் வீட்டைக் கடந்து நீ போகவேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. ஒவ்வொரு முறையும் நீ தாகத்துடன் இருப்பாய். கலயத்தில் நீரை நிரப்பி உன் முன்னால் வைப்பேன்.

“என் பெயர் யுரேனஸ்”, என்று தண்ணீரைக் குடிப்பதற்கு முன்பு ஒரு நாள் சொன்னாய். நீ காலி செய்த குவளையை உன்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு, “நான் கையா” என்றேன்.

நீ என் வீட்டின் கீழ்த்தளத்தை மட்டுமே பார்த்து இருக்கிறாய். முதல் தளத்தைப் பார்த்தது இல்லை. ஆனால் ஒருநாள், படிக்கட்டுகளை உன்னுடைய கண்கள் மேய்வதைப் பார்வையால் தொடர்ந்தேன். படிகளில் ஏறிக்கொண்டே நீ சுவரின் மீது உன் கைகளை வைத்தாய். எனக்குள் ஒரு பூகம்பம் சுருண்டு ஊடுருவியது.

படிக்கட்டுகள் முடியும் இடம், படுக்கை அறைக்கு இட்டுச் செல்லும். கொடிகள் அடர்ந்த ஒரு அலங்கார வளைவு ஒன்று அதன் மேலாக இருக்கும்.

பசுமையான கொடிகள் அடர்ந்த அந்த வளைவின் கீழ் நீ ஒரு கணம் நின்றாய்.

நான் தீயை மூட்டத் தொடங்கினேன்.

உனக்குப் பரிமாறுவதற்கு முன்பு உணவைச் சூடுபடுத்த விரும்பினேன். ஒரு கணம் தயங்கி உன்  முகத்தைப் பார்த்தேன்.

கடவுளே!

உன் முகத்தில் சூடேறியிருந்தது. ஒருவேளை தீயின் சுவாலைகள் முகத்தில் பிரதிபலித்ததினால் அப்படி இருக்கலாம். மூட்டப்பட்ட தீயில் இருந்து சில கங்குகள் பறந்து என் காலடியில் விழுந்தன. வெறும் கால்களால் அவற்றை நசுக்கினேன்.

நடுங்கும் கரங்களுடன் சூடான உணவை உனக்குப் பரிமாறினேன். ரொட்டியைப் பிய்க்கும்போது உன்னுடைய விரல்களும் லேசாக நடுங்குவதைப்  பார்த்தேன். எனக்குள் கிளர்ந்து எழும் பூகம்பத்தை மறைத்துக்கொண்டேன் – அந்த பூகம்பத்தை என்னில் இருந்து வெளியில் பிய்த்து எடுப்பதுபோல நீ என்னை உற்றுப் பார்த்தாய்.

மூலையில் தீ கங்கு விட்டு ஒளிர்ந்துகொண்டிருந்தது. ஜூவாலைகள் நம் முகங்களில் பிரதிபலித்தன.

நான் வசிக்கும் மூன்று தளங்கள் கொண்ட வீட்டின் அடித்தளத்தில் யாரும் காண முடியாத ஒரு இருட்டறை உள்ளது. நீ விட்டுச் சென்ற அந்த இரவில் என்னுடைய இருபது வயது இளமையைத் தேகத்தில் இருந்து பிய்த்து எடுத்து அந்த இருட்டறையில் மிகவும் பத்திரமாக வைத்தேன்.

உனக்குத் தேவைப்படும்போது அதனை உன்னுடைய பார்வைக்கு வைக்கலாம் என்று நினைத்தேன். அதனை உனக்காகவே பிரத்யேகமாக வைத்திருக்கிறேன்.

ஒரு சிறு கேவல், மார்பில் கிளர்ந்து தொண்டையில் இறங்கி என்னுடைய உதட்டை விட்டுப் பிரியும்போது ‘யுரேனஸ்’ என்று என் காதுகளை அவை நிரப்பியபடி சின்னஞ்சிறு வார்த்தைச் சிற்பங்களாகக் கிளம்பும்.

என் இரவுகளும் பகல்களும் உன்னுடைய பெயரின் ஒலியைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் மீண்டும் வந்தாய். அன்று உன் கால்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி நடைபோட்டன. கீழ்த்தளமா அல்லது மேல் தளமா என்ற தயக்கம் ஏதும் அவற்றுக்கு இல்லை. பல நாட்களான காத்திருப்பு மற்றும் திறக்கப்படாத புத்தகங்களின் நிசப்தமான பக்கங்களுடன் சிதறி இருக்கும் என்னுடைய இரண்டாவது தளத்துக்கு நீ வந்தாய்.

நீண்ட நேரம் அமைதியாக நின்றிருந்தாய்.

புத்தக வரிசையில் இன்னும் ஒரு புத்தகத்தை சேர்த்தது போல இருந்தது. ஒரு புத்தகத்தை மிருதுவாகத் திறந்து அதன் முதல் பக்கத்தைப் பார்ப்பது போல உன்னருகில் வந்து உன்னுடைய கையைத் தொட்டேன். நீ சிரித்தாய்.

அனைத்துப் பக்கங்களையும் உன் கண்களும் அனைத்து ஞானத்தையும் உன் உதடுகளும் என்னில் அள்ளிப் பருகின.

என் உதட்டின் எல்லாப் பக்கங்களையும் வாசிக்க முயல்வது போல என்னை அன்று முத்தமிட்டாய்.

அப்படியே என்னுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு என்னை நடுத்தளத்துக்கு இழுத்துப் போனாய். பச்சைக் கொடிகள் படர்ந்த அந்த அலங்கார வளைவைக் கடந்து என்னுடைய அறையில் நுழைந்தோம்.

நரம்புகள் புடைத்த வலுவான உன்னுடைய கரங்களால் நீ படுக்கை விரிப்பை மிருதுவாகத் தடவிக் கொடுத்தாய்.

என்னுடைய இறந்த  காலம் என்பது நீண்ட தனிமையான நாட்களாகவும் எதிர்காலம் என்ற ஒன்றில் என்னதான் இருக்கிறது என்று தெரியாமலும் இருந்தேன். ஆனால் நிகழ்காலத்தில் ஒரு கணம் கிளர்ந்து என்னுடைய இறந்த காலத்தை ஒரு கையாலும் எதிர்காலத்தை இன்னொரு கையாலும் இறுக அணைத்துக்கொண்டது.

அந்தக் கணம், இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்குத் தன்னைப் படர விட்டுக்கொண்டது.

இதற்கு முன்பு என்னைப் போலவே நீயும் ஒரு சதைச் சுவராகத்தான்  இருந்தாய். ஆனால் இப்படி சதைச் சுவரும் சேறும் எப்படிப் பிணைந்து  கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு நதி, இன்னொரு நதியுடன் இணைவது போல என்னை நீ சந்தித்தாய். நம்முடைய நீர்ப்பரப்பின் மேல் பல அன்னங்கள் நீந்தி விளையாடிச் சென்றன.

நதிகள் வற்றும்போது அவை மீண்டும் நிலமாகின்றன. நீ என்னுடன் இருந்தபோது ஒரு ஓடையாக உணர்ந்தேன். நீ என்னை விட்டுச் சென்றதும் பாழ் நிலமாக வற்றிவிட்டேன். நான் வெறும் புழுதியாக – சதையும் புழுதியும் கலந்த ஒரு பெண்ணாக இருந்தேன்.

அந்த இரவுக்குப் பிறகு, அதற்குப் பின்னான ஒவ்வொரு இரவிலும் என்னுடைய கர்ப்பப் பையில் ஓர் அழுகுரலைக் கேட்கிறேன்.

நீண்ட காலத்துக்கு இந்த இடத்தை நீ மறந்துவிட்டாய். ஒரு இரவில் என்னுடைய கர்ப்பப் பையில் அழுகுரலைக் கேட்டதும் நான் கீழே சென்று இருட்டறையில் கர்ப்பப் பையினையும் அழுகுரலையும் வைத்து விட்டு வந்தேன்.

ஆமாம். என்னுடைய இருபது வயதின் இளமையை வைத்த அதே இருட்டறையில் இவற்றையும் நான் வைத்துவிட்டு வந்தேன்.

சில நேரங்களில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு அந்த இருட்டறைக்குப் போவேன். அங்கே நான் முன்பு வைத்துச் சென்ற என்னுடைய இருபது வயதின் இளமையை உற்று நோக்குவேன்.

அல்லது அங்கே நான் வைத்துச் சென்ற என் கர்ப்பப்பையின் அழுகுரலை உற்றுக் கேட்பேன். என்றாவது என்னை நீ பார்க்க வரும்போது உன்னுடைய கரங்களைப் பற்றிக்கொண்டு இந்த இருட்டறைக்கு உன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நீ திரும்பி வந்தாய்.

ஆனால் இம்முறை தனியாக வரவில்லை. உனக்குச் செய்ய வேண்டிய காரியங்களும் போகவேண்டிய இடங்களும் நிறைய இருந்தன. ஒரு நொடியில் வந்து அவசரமாகக் குவளையில் நீர் கேட்டுக் குடித்துப் போனாய்.

இருட்டறையைக் காண உன்னை அழைத்தேன். ஆனால் மீண்டும் வருவதாக உறுதியளித்துவிட்டுச் சென்றாய்.

உன் வாக்கினை ஒரு சிறு மலரைப் போல மிருதுவாக எடுத்து என் உள்ளங்கைகளுக்குள் புதைத்துக்கொண்டேன். பல ஆண்டுகளாக அது என்னுடைய உள்ளங்கையில் மலர்ந்து விரிந்தே இருந்தது.

ஆனால் உள்ளங்கையின் சதை என்பது வெறும் சதை மட்டுமேதான். பூமியைப் போல அது நிரந்தரத் தன்மையோடு இருப்பது இல்லையே.  காலப் போக்கில் அது சுருக்கம் காணுகிறது. கட்டாந்தரையாக மாறும்போது அதன் மீது உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து போகின்றன.  ஒருநாள் இருட்டறைக்குப் போய் அந்த வாடிப் போன மலரை வைத்துவிட்டு வந்தேன்.

இரண்டாவது தளத்தின் அறையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு புத்தகம் மட்டும் காணாமல் போய்விட்டது.

என் இருட்டறையைப் பற்றிய கதையைச் சொல்லும் புத்தகம் அது. பழங்கதைகள் மற்றும் புராணங்களையும் நினைத்துப் பார்க்க ஆர்வம் கொண்டவர்களுக்குக் கிரேக்க புராணங்களில் வரும் யுரேனஸ் என்ற ஆணையும் கையா என்ற பெண்ணையும் கண்டிப்பாகத் தெந்து இருக்கும்.   கையாவின் கர்ப்பத்தில் முகிழ்த்து விளைந்த குழந்தைகளை யுரேனஸ் மண்ணில் புதைத்து வருவான். கையாவுக்கு மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஆனால், கையா இன்றும் வாழ்ந்து வருகிறாள் என்பது யாருக்கும் தெரியாது. அவள் யுரேனஸ்ஸைக் காதலித்தாள். தன்னுடைய கர்ப்பத்தை ஒரு இருட்டறையில் வைத்தாள். கர்ப்பத்தில் ஒலிக்கும் குழந்தையின் அழுகுரலை அவள் கேட்டாள்.

பிறக்கும் குழந்தைகள் மட்டுமே அழவேண்டும் என்பதல்ல.

சிலவேளைகளில் பிறக்காத குழந்தைகளும் அங்கே அழக்கூடும்.

=======================
நன்றி: The Little Magazine

படத்திற்கு நன்றி: BBC

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *