நடராஜன் கல்பட்டு

 

ஆன்மீகமும் நானும் என்னும் தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுத நினைக்கிறேன்.  எனது நோக்கம் யார்மனதையும் புண்படுத்துவதோ அல்லது அவர்களை என் வழிக்குத் திருப்ப வேண்டும் என்பதோ இல்லை.  இவ்விஷயம்குறித்து என் மனதில் தோன்றிய மற்றும் தோன்றும் சில கருத்துக்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்என்ற அவாவில்தான் இதைத் தொடங்குகிறேன்.

 

எனக்குப் பத்துப் பன்னிரெண்டு வயதிருக்கும் போது எனது தந்தை எனக்கும் எனது மூன்று அண்ணன்களுக்கும் கையெழுத்துப் பிரதிகள் தயார் செய்து கொடுத்தார்.  சுமார் ஏழு பக்கங்களைக் கொண்ட அதில் பிள்ளையார், முருகன், சிவன், விஷ்ணு, ராமர், பார்வதி, சரஸ்வதி, சனீஸ்வரன் இவார்கள் மீதான சமிஸ்கிருத துதிப் பாடல்கள் இருந்தன.  அவற்றை காலையிலும் மாலையிலும் எங்களை படிக்கச் செய்வார்.  இது நடந்தது எழுபத்தைந்து எண்பது வருடங்களுக்கு முன்பு.  சிறு வயதில் கற்றவை என்பதால் மனப் பாடம் ஆகிவிட்டன அந்தப் பாடல்கள்.

 

மேலே சொன்னவற்றோடு பின் நாட்களில் ஒரு மராட்டிய ஆன்மீகவாதி சொல்லித் தந்த ஒன்று (சொற்களில் இருந்து அது கண்ணன் மீதானது என்று நினைக்கிறேன்), மங்களூரில் இருந்து பேருந்தில் உடுப்பி சென்ற போது பக்கத்து இருக்கையில் பயணித்த ஒருவர் சொல்லிக் கொடுத்த திருப்பதி வெங்கடாசலபதி மீதான பாடல் ஒன்று மற்றும் என் மனைவி தினமும் சொல்லும் துதிப் பாடல்களில் இருந்து காசி அன்னபூரணி மீதான ஒரு பாடல் இவை மூன்றும் சேர்ந்து கொண்டன.

 

அன்றிலிருந்து இன்று வரை நான் தினமும் காலையில் எழுந்து பல் துலக்கிய உடன் செய்யும் முதல் வேலை வீட்டில் உள்ள இறைவன் படங்களுக்கு முன்னே மேற்சொன்ன துதிப் பாடல்களை ஒரு முறை மனதுக்குள் சொல்லி வணங்குவதுதான்.

 

எனது சித்தப்பா மகன் ஒருவன்.  என்னை விட இரு வயது பெரியவன்.  மாம்பலம் ஸ்டேஷனில் இருந்து இறங்கியதும் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள முதல் வீட்டில் (அது ஒரு காலத்தில் என சித்தப்பா வீடு)புத்தகக் கடை வைத்திருந்தான். விஸ்வனாத் அண்ட் கம்பெனி என்ற பெயரில்.

 

வியாபாரி என்றால் அவ்வப்போது பண முடையோ வேறு கஷடங்களோ வரத்தானே செய்யும்.  அவன் சொல்லுவான், நடராஜா எனக்கு ஒரு மனக் கஷ்டம்னா நான் நேரெ வட பழனி கோவிலுக்கு நடந்து போவேன்.  முருகனெச் சுத்தி வர போது என் மன்சுலெ இருக்கற கஷ்டத்தெச்  சொல்லுவேன்.  அங்கெ இருக்கறது சாமியா இருந்தா என் கஷ்டத்தெத் தீத்தூடுவார்.  இல்லெ சில பேர் சொல்றாப்புளெ அது வெறும் கல்லா இருந்தா அப்பொவும் அது எனக்கு நல்லது தான் பண்ணும்.  எப்படீங்கறெயா?  அது மனுஷன் மாதிரி என் கஷ்டத்தெ இன்னோரு ஆளு கிட்டெ போய், டேய் விஸ்வனாதன் பணக் கஷ்டத்துலெ இருக்கான்.  அவன் கிட்டெ ஜாக்கிறதையா இருந்துக்கோன்னு சொல்லி அவனையும் பணப் பைய இறுக்கி முடிச்சுப் போட வைக்காது என்பான்.

 

விஸ்வனாதனை நான் இவனல்லவோ ஒரு உண்மையான நடைமுறை தெரிந்த ஆன்மீகவாதி,  இறைவன் மீது என்ன ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறான் என்று நினைப்பேன்.

 

பெரும் பணச் சிலவு செய்து ஒரு கோவிலுக்குப் போகிறோம்.  பல மணி நேரம் வரிசையில் நின்று இறைவன் சன்னதி அடைகிறோம்.  இறைவன் உருவத்தினை நாம் காணுமுன் வெளியேற்றப் படுகிறோம் அங்கு இருப்பவர்களால்.

 

தெய்வ வழிபாடென்பதே இன்நாட்களில் ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது.  இறைவன் பெயர் சொல்லி பணம் சேர்ப்பவர்கள் பலர்.  ஊரை ஏமாற்றுபவர்களும் பலர்.

 

எனது தந்தை இறந்த மறு வருடம்.  ஒரு பிரபல உபன்யாசம் செய்பவருக்குப் பாத பூஜை நடந்தது நாங்கள் குடி இருந்த வீட்டின் சொந்தக் காரர் வீட்டில்.  “பக்கத்து வீடுதானே போய் வரலாம் வா” என்றழைத்தாள் என் அன்னை.  ஆன்மீகம் பற்றிய என் சிந்தனைகளே தனி.  முதலில் வர மறுத்தேன்.  பின் என் அம்மாவின் பிடி வாதத்தினால் அவளை அழைத்துக் கொண்டு சென்றேன்.

பூஜை முடிந்தது. பெரியவர்‘ (?) எல்லோருக்கும் தீர்த்தம்கொடுத்துக் கொண்டிருந்தார்.  வரிசையில் எனக்கு முன் என் தாயார்.  அவர் பெரியவரைநெருங்கிய போது பக்கத்தில் இருந்த ஒருவர் குறுகே கையை நீட்டித் தடுத்தார், “தலை மழிக்காத விதவைக்குத் தண்ணீர் பெரியவர் கொடுக்க மாட்டார்” என்ற கடுஞ்சொற்களோடு என் அம்மாவை வரிசையை விட்டு நீங்கச் சொன்னார்.

“இங்கு வந்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்து என்னை அழைத்து வந்தது என் தாய்..  அவளுக்கில்லாத பிரசாதம் எனக்கும் வேண்டாம்” என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினேன. அன்று வீட்டிற்கு வந்தபின் நான் பேசிய வார்த்தைகளை இங்கு எழுத முடியாது.

 

இறைவனிடம் உங்கள் விண்ணப்பத்தினை அளிக்க வேண்டுமா?  அதற்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை.  நீங்களே நேராக உங்கள் கோரிக்கைகளை அவன் முன் வைக்கலாம்.

 

 

(தொடரும்……)

 

நடராஜன் கல்பட்டு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.