செப்டம்பர் 28, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு கிரண் சேத்தி அவர்கள்

Kiran Bir Sethi

வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர் எனப் பாராட்டப்படுபவர் திருமிகு “கிரண் பிர் சேத்தி” (Kiran Bir Sethi) அவர்கள். தான் வாழும் சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் தன்னார்வத் தொண்டர்களாகவும், அத்துடன் மாற்றம் கொண்டு வருபவர்களைக் கண்டறியும் வினையூக்கி (catalysts)களாகவும் விளங்கும் பலரை வல்லமை விருது கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் இடம் பெரும் ‘கிரண் சேத்தி’ அவர்கள் அகமதாபாத்தில் உள்ள ‘ரிவர்சைடு பள்ளி'(The Riverside School, Ahmedabad) யின் நிறுவனர் மற்றும் இயக்குநராக கல்விப்பணியில் மறுமலர்ச்சி செய்து வருகிறார். உலகளாவிய அளவில் நடத்தப்பெறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ (Design for Change) என்ற திட்டத்தை, இந்தியாவில் இவர் அமைப்பு முன்னெடுத்து நடத்திவருகிறது. இந்த அமைப்பு நடத்தும் ‘புராஜக்ட் எக்ஸ்போ’ (Design for Change – DFC I CAN School Challeng) என்ற போட்டியை ஆண்டு தோறும் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தி, சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறது. பள்ளி மாணவர்களை ஆய்வில் ஊக்குவிக்கும் இந்தச் செயல் ஓர் அருமையான முயற்சி. தேசிய அளவில், 8 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள பள்ளி (நடுநிலைப்பள்ளி வரை பயிலும்) மாணவர்களுக்காக நடக்கும் இந்தப்போட்டியில் ஆண்டுதோறும் பல பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்ட பங்கேற்கிறார்கள்.

Design for Change World

இந்த ஆண்டு கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வத்தில் “இயற்கை கிருமிநாசினி” தயாரித்து அதனைப் போட்டிக்கு சமர்பிக்கிறார்ககள். இவர்களின் இந்த முயற்சிக்காக ஏழாம் வகுப்பு மாணவர்களான நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோரையும், அவர்களுக்கு ஊக்கமூட்டி உதவி வரும் பள்ளியின் கணித ஆசிரியர், சத்யபிரபா தேவி ஆகியோரையும் வல்லமை இதழ் சார்பில் பாராட்டுகிறோம். அன்றாடம் சுகாதாரத்திற்காக நாம் பயன்படுத்தும், ‘சோப்பு’, ‘ஷாம்பூ’ உள்ளிட்ட கிருமிநாசினி அனைத்தும் வேதிப் பொருட்களால் ஆனவை. இவற்றால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு தோல் நோய்களும் வருகின்றன. இவற்றைக் கணக்கில்கொண்டு இயற்கை முறையில், கிருமி நாசினி தயாரித்துள்ளதாக இம்மாணவர்கள் தமிழ் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளனர். செம்பருத்தி, சோற்றுக்கற்றாழை, வேப்பிலை, திருநீற்றுப்பத்து, கற்பூரவல்லி ஆகியவற்றைக் கலவையாக்கி, இயற்கை கிருமி நாசினி தயாரித்து; அத்துடன், இவை அதிக நாள் மக்கள் பயன்படுத்த வசதியாக, எலுமிச்சையையும் இயற்கை கிருமிநாசினியில் சேர்த்துள்ளார்கள். சுத்தமாக்குவதுடன் பாதிப்பும் தராத இவர்களது இயற்கை கிருமிநாசினியை சுற்றுவட்டாரப் பள்ளிகளிலும் பயன்படுத்த இவர்களே தயாரித்தும் வழங்கியுள்ளார்கள்.

Tamil_News_large_1348855 (1)

இந்தத் தமிழக மாணவர்களைப் போன்று ஆர்வமுள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஆராய்ச்சிக் கோணத்தில் வளர்த்துவரும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ அமைப்பும், அதனை முன்னெடுத்து நடத்தி வரும் கிரண் சேத்தியின் பணியும் பாராட்டிற்குரியவை.

கிரண் சேத்தியின் கல்வி மறுமலர்ச்சி முயற்சிகள் உலக அளவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக அளவில் ‘வர்கி அறக்கட்டளை’ (Varkey Foundation) சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதுக்கான (Global Teacher Prize in the Global Education & Skills Forum 2015) இறுதிப்பட்டியலில் ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்தவர்களில் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளார் கிரண் சேத்தி. இந்தப் பரிசு, தங்களது தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு, மிகச் சிறப்பாக சேவையாற்றிய ஆசிரியருக்கே வழங்கப்படும். ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவோர்க்காக வழங்கப்படும் இந்தப் பரிசு ஒப்பீட்டில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படக்கூடிய ஒன்று என்பதும், இதற்காக சுமார் 5000 ஆசிரியர்கள் வரை அனைத்துலக அளவில் பரிந்துரைக்கப்படுவர் என்பதும் இதன் சிறப்பு.

Kiran Bir Sethi3

Kiran Bir Sethi4

Kiran Bir Sethi5

Kiran Bir Sethi2

பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்றும், இவர் முதல் நாள் ஒரு ஆராய்ச்சியாளரின் பார்வையில் பாடம் சொல்லித் தரும் முயற்சியை மேற்கொண்டால், மறுநாள் ஒரு கலைஞராகவும், அதற்கும் அடுத்த நாள் ஒரு கதை சொல்லியாகவும் மாறி பாடம் நடத்தும் முறையைக் கடைப்பிடிப்பதாகவும் கூறும் கிரண் சேத்தி, மாணவர்களை இவ்வாறு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், அவர்கள் தாங்களே முயன்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

தனது மகன் கல்வியில் எதிர்கொண்ட கட்டுப்பாடுகளையும் சவால்களையும் கண்ட பின்னர், அகமதாபாத்தில் ரிவர்சைட் பள்ளி என்ற பள்ளியைத் துவக்கி, 2001 ஆம் ஆண்டு முதல், மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் முறையை மாற்றி அமைப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.

TED இந்தியாவின் சொற்பொழிவாளர், பல அயல்நாட்டுக் கருத்தரங்குகளில் சிறப்பு சொற்பொழிவாளர் என்ற வகையில் சமூக அளவில் மாற்றம் தர வேண்டிய கல்வியின் அவசியம் பற்றிய கருத்துகளை முன்னிறுத்தி வருகிறார். இவரது பள்ளியில் இவர் கடைபிடிக்கும் மாற்றம் நோக்கிய புதுமையான கல்விமுறை பாடத்திட்டங்களுக்காக 2009 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ‘கால் டு கான்சயின்ஸ்’ (Call to Conscience) விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியை முன்னெடுத்தது மட்டுமல்லாது, ‘அப்ரோச்’ (aProCh) என்ற அமைப்பைத் துவக்கி, நகரத்தைச் சிறுவர்களுக்கான பாதுகாப்பான இடமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டதற்காக 2008ம் ஆண்டின் அசோகா (Ashoka Fellow in 2008) விருதைப் பெற்றார். சமூகத்தில் கல்வியின் வழி இவர் மாற்றம் கொண்டு வரச் செய்யும் முயற்சிகளுக்காக இந்த ஆண்டு, ஏசியா சொசைட்டியின் ‘கேம் சேஞ்சர்’ விருதுக்காகவும் (Asia Society’s, 2015 Asia Game Changer of the Year) பரிந்துரைக்கப்பட்டார்.

இந்திய மாணவர்களின் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ள கிரண் சேத்தியை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம், கிரணுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

_____________________________________________________________________________________________

கட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:

கட்டுரைக்குத் தகவல் தந்து உதவிய தளங்கள் (Resourses):
http://www.globalteacherprize.org/
http://asiasociety.org/asia-game-changers
http://asiasociety.org/asia-game-changers/kiran-bir-sethi
http://www.ted.com/speakers/kiran_sethi
http://www.schoolriverside.com
https://en.wikipedia.org/wiki/The_Riverside_School,_Ahmedabad

The Importance of a Teacher in Society
http://www.newindianexpress.com/education/The-Importance-of-a-Teacher-in-Society/2015/02/23/article2681963.ece

இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1348855

Info on DFC I CAN School Challenge – தகவல்:
இணையதளம்: http://designforchangeindia.com/
ஃபேஸ்புக்: https://www.facebook.com/designforchangeindia?fref=nf
யூடியூப்: https://www.youtube.com/user/icandfc
போட்டி மற்றும் போட்டியின் விதிமுறைகள்: http://www.dfcworld.com/file2015/asia_society_press.pdf
மின்னஞ்சல்: india@dfcworld.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.