நடராஜன் கல்பட்டு

எனக்கு என்றுமே ஆன்மீகவாதிகளைக் கண்டால் ஒரு காரணம் புரியாத வெறுப்பு. அவர்களிடம் எதோ ஒரு சக்தி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை நான். அதை அவர்களில் பலரும் தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவே உபயோகிக்கிறார்கள் என்று தோன்றும். இந்நாட்களில் சில ஆன்மீக வாதிகள் மக்களுக்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், வைத்திய சாலைகள், மக்களின் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்ற நல்ல காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். அது மிகவும் நல்லதொரு விஷயம்.

‘உங்களுக்கு இறைவனைக் காண வேண்டுமா? அவன் உங்கள் உள்ளேயே இருக்கிறான். மற்றெல்லா உயிர்களிடத்தும் உறைகிறான். அவனைக் காண எங்கும் அலைய வேண்டாம். எவர் உதவியையும் நாட வேண்டாம். உண்மையாய் இருந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பினைப் பொழி. அது போதும்’ என்று தோன்றும் எனக்கு.

1973ல் விஜயவாடாவில் நான் பணிபுரிந்து வந்தேன். ஒரு நாள் அன்றைய தினசரியுடன் ஒரு துண்டுப் பிரசுரம் வந்தது. “பிரும்மச்சாரி ஹரிதாஸ், விஞ்ஞானத்தில் மேல் நிலைப் பட்டதாரி, ஸாஹா இன்ஸ்டிட்யூட்டில் அணு விஞ்ஞானத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர், பகவத் கீதை சொற்பொழிவுகள் ஆற்றுவார். இன்று மாலை 6-00 மணி அளவில் …… அரங்கில் துவங்குகிறது. நாளை காலை 7-00 மணி அளவில் உபநிஷத் வகுப்பும் தொடங்குகிறது. சின்மயா மிஷன், விஜயவாடா” என்று.

என்னுள்ளே ஒரு ஆர்வம். “படித்தது அணு விஞ்ஞானம். பேசப்போவது பகவத் கீதையும், உபநிஷத்தும் பற்றியா? அப்படி என்ன பேசப் போகிறார் இவர்? நான் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும். அவர் பேசுவதைக் கேட்க வேண்டும். ஆன்மீகம் பற்றிய எனது சந்தேகங்களை அவரிடம் கேட்க வேண்டும்” என்று நினைத்தேன்.

அன்று மாலை 5-30 மணிக்கு நான் கிளம்பத் தயார் ஆகிக் கொண்டிருந்தேன். அப்போது வாசல் கதவினைத் திறந்து கொண்டு வேறொரு எண்ணைக் கம்பெனி நண்பர் ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவர் பல நாட்களாக எங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர். ஆனால் வரவில்லை. கடைசியாக அவரை நான் சந்தித்த போது, “இன்னும் பத்து நாட்களுள் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வராவிட்டால் நான் இனி என்றுமே உங்கள் வீட்டிற்கு வரமாட்டேன்” என்று சொல்லி இருந்தேன்.

“எங்ஙேயோ கிளம்பிக் கொண்டிருக்கிறாய் போல இருக்கிறது. நாங்கள் இன்னொரு நாள் வருகிறோம்” என்றபடி திரும்ப முயன்றார். நான், “இல்லை இல்லை. வாருங்கள் உள்ளே” என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றேன். மனைவியிடம் இரவு உணவும் தயார் செய்யச் சொன்னேன். அவர்களும் உள்ளே வந்தார்கள்.

பல விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் பல சமயம் அவர் கேட்ட கேள்விகளுக்கும் நான் அளித்த பதில்களுக்கும் சம்பந்தம் இல்லாதிருந்தது. காரணம் அன்று என் உடல் அங்கு இருந்ததே ஒழிய என் உள்ளம் கீதை சொற்பொழிவு நடந்து கொண்டிருந்த அரங்கில் இருந்தது. நண்பரும் என் தவிப்பைப் புரிந்து கொண்டு கிளம்புவதாகச் சொன்னார். அவரைத் தடுத்து நிறுத்தினேன்.

மறு நாள் காலை………..

தொடரும்……

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.