பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: இருள் நீக்கும் பல்மீனும் காய்கலாவாகும் நிலா
ஆயிரவ ரானு மறிவில்லார் தொக்கக்கான்
மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார்
பாயிரு ணீக்கு மதியம்போற் பன்மீனுங்
காய்கலா வாகு நிலா.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால்,
மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்;-
பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
காய்கலாவாகும் நிலா.
பொருள் விளக்கம்:
ஆயிரக்கணக்கான அறிவற்றவர் ஒன்று திரண்டாலும், பரந்து விரிந்திருக்கும் இப்பெரிய உலகில் மாட்சிமை பொருந்திய அறிவிற்சிறந்த ஒருவரைப் போல விளங்க மாட்டார். (அது போலவே) பரவியுள்ள இருளைப் போக்கும் வெண்மதி போல, பல விண்மீன்கள் ஒருங்கிணைந்தாலும் நிலவைப்போலக் காய்ந்து ஒளிதர அவற்றால் இயலாது.
பழமொழி சொல்லும் பாடம்: அறியாமை கொண்டோர் ஆயிரமாயிரம் பேர் ஒன்று திரண்டாலும், அறிவில் சிறந்துள்ள ஒருவருக்கு ஒப்பாக மாட்டார். அறிவிற் சிறந்தவரின் சிறப்பை எடுத்துரைக்க விரும்பிய வள்ளுவர்,
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். (குறள்: 430)
அறிவுடையவர் எல்லாச் செல்வமும் உடையவராக உலகத்தாரால் மதிக்கப்படுவார், அறியாமை சூழ்ந்தவர் ஒருவர் எத்தனைச் செல்வம் பெற்றிருப்பினும் அவர் ஒன்றும் இல்லாதவராகவே கருதப்படுவார் என்கிறார்.
பாமரன்னுக்க ஒரு நர பார்ப்பனுக்கை மூணு நர
இந்த பழமொழிக்கு விளக்கம்