பவள சங்கரி
ஆண்டவன் படைப்பில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழும் வகையில் சில பாகுபாடுகளுடன் படைக்கப்பட்டிருந்தாலும், பெண் என்ற அந்த படைப்பு மட்டும் பெரும்பாலும் வாதத்திற்கும், கிண்டலுக்கும் பல சமயங்களிலும் ஆளாவதும் நிதர்சனம். பொதுவாகவே உலகளவில் இதில் எந்த வேறுபாடும் இல்லை என்றே சொல்லலாம்.
பிரபல பெண்ணிய ஆய்வாளர் கேட்மில்லட் என்பவரின் ஒரு சுவாரசியமான புனைவு… ஒரு மரக்கிளையில் ஒரு பறவை சுகமாக ஒரு கூட்டில் வாழத் துவங்குகிறது. அதற்கு சிரமம் என்றால் என்னவென்றே தெரியாமல் நேரத்திற்கு உணவும் கிடைக்கிறது. ஆனால் ஒரு நாள் புயல் வீச புகலிடமும் இன்றி, பிழைக்க வழியறியாது மாண்டே போனதாம்!
ஒரு பெண்ணின் நிலையை சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறந்தது முதல் ஆண்களை அண்டிப்பிழைக்கும்படி பழக்குகிறார்கள். தந்தை, கணவன், சகோதரன், மகன் இப்படி ஏதோ ஒரு உருவில் ஆண்மகனின் பாதுகாப்பில் சுகமாக வாழப் பழகுபவள், சுயசிந்தனை என்பதே அறவே இல்லாத இல்லத்தரசியாக முடிசூட்டப்படுகிறாள். இந்த நிலையில் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தால், உறவுகள் விலகிச் செல்ல ஆரம்பித்தால் அப்பெண்ணின் நிலை என்னவாக இருக்கும்.. கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்ற இருளில் சிக்கித் தவிக்கும் நிலையே உருவாகும் என்பதில் ஐயமேது?
இன்றளவிலும், இந்த நவீன யுகத்திலும், இது போன்று பெண்கள் எங்கும் இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? தாய், மகள், மனைவி, சகோதரி என்ற பாதுகாப்பு வளையம் இருக்கும்வரை மட்டுமே வாழ்க்கை சுகமாகத்தான் பயணிக்கிறது.. அதன் பிறகு…?

Leave a Reply