இரா.முருகனின் அச்சுதம் கேசவம்!

0

erm

அச்சுதம் கேசவம் (நூல் ஒன்று) முன்னுரை

பெருங்கதையாடலின் காலம் முடிந்து விட்டது. பெருங்கதையாடல் நீடு வாழ்க.

கிராண்ட் நெரேடிவ், மெடா நெரேடிவ் என்றெல்லாம் பெயர் கொடுத்துச் சுட்டப்பட்டு  எழுத்தில் புனைவை இழைத்து வடித்த, நூறு நூறு ஆண்டுகளாக இங்கேயும் எங்கேயும் நிலவி வந்த, வாசாலகமாகப் பெரிய கதை சொல்லும் முறை அரசியல், சமூக, கலாசார, தொழில்நுட்ப மாற்றங்களின் நேரடியும் மறைமுகமுமான விளைவாக விடைபெற்றது.

பின் நவீனத்துவச் சான்றோரான ழான் ஃப்ரான்ஸ்வா லியோதாவும் ஃபூகோவும் அவதானிக்கா விட்டாலும், அறிவிக்காவிட்டாலும் பெருங்கதையாடல் ஓய்ந்து தானிருக்கும். மகத்தான கதாநாயகர்கள், எழுதப்படும் இலக்கியத்தின் பக்கங்களில் இருந்து நழுவி வீழ்ந்து காணாமல் போயிருப்பார்கள். பெரும் பயணங்களும், பெரிய நிகழ்வுகளும், பெரியது கண்டு உவக்கும் வாழ்வியலும், வாழ்வியல் சார்ந்த பெரிய குறிக்கோள்களும்,  பெரிய ஜனக் கூட்டத்தை பருந்துப் பார்வையில் அடைக்கும் கண்ணோட்டமும்,  மற்ற கதையாடல்களையும் மாற்றுப் பொருள் கோடலையும் அனுமதியாத போக்கும்காலம் கடந்து உயிர்த்திருக்காது.

அதிகாரக் கட்டமைப்புகளின் பிரம்மாண்டத்தையும் சர்வ வியாபகமான தன்மையையும் கோடிட்டுக் காட்டும், சிறப்பித்துத் தொழ வைக்கும் பெருங்கதையாடல் ஒழுங்கமைதியின்மையையே சீலமாகக் கொண்டு உயிர்க்கும் உலகின் அடிப்படைத் தன்மையைப் புறந்தள்ளுவது என்பதால் மட்டும் களையப்பட வேண்டியதில்லை. புதியன புகுதலும் பழையன நீங்குதலுமான உலக வழக்கு காரணமாகவும் இது நிகழ வேண்டியது.

மெடா நேரேடிவ் ஓய்ந்த, யானை இறந்த  புனைவுப் பரப்பில்,  நூறு நூறு குறுங்கதையாடல்கள் வாழ்வின் சகல பரிமாணங்களையும்  எழுத்து உணர்த்த வழி செய்து  பன்முகத் தன்மை வாய்ந்த உரையாடலையும் கருத்தாக்கத்தையும் சமூக விமர்சனத்தையும் வன்மையோடு முன்னெடுத்துப் போகத் துணை புரிகின்றன.

அரசூர் நாவல் வரிசையில் மூன்றாம் புனைவு அச்சுதம் கேசவம். மாந்திரிக யதார்த்தமும் பெரிய கதையாடலுமாக முதல் இரண்டு நாவல்களான அரசூர் வம்சமும், விஸ்வரூபமும் கற்பித்துக் கொண்ட இலக்கு நோக்கி நகர்ந்தன. இவற்றில், ஏழு இழைகளாக, நாற்பதாண்டு கால அளவில், ஏழெட்டு கதைக்களனில் நிகழும் விஸ்வரூபம் கதை சொல்ல, சகலமானதையும் சகலமானவர்களையும் இணைத்து நடத்திப் போகும் பெருங் கதையாடல் துணை நின்றது. அந்த ஆசுவாசத்தை நீடிக்க அடுத்த நாவல் அதேபடிக்கு எழுத முடியாது.

ஒவ்வொரு அரசூர் நாவலும் அதன் முந்தைய, பின் வரும் நாவல்களோடு நிகழ்வு மற்றும் கதா பாத்திர அடிப்படையில் அடர்ந்து சார்ந்திருப்பதைத் தவிர்க்கிறேன். எனக்கு மூன்று தலைமுறை முந்தியவர்களை அவர்களின் வழி வந்தவன் என்று துதித்து வணங்கும் போது நான் அவர்களில் இருந்து வேறுபட்டவன் என்பதை மரியாதையோடும் ஆசுவாசத்தோடும் நினைவு கூறத் தவறுவதில்லை நான்.  வேறுபடுதலே நான் எழுதும் ஒவ்வொரு நாவலையும் அதனளவில் பொருளமைதி கொள்ளச் செய்கின்றது. தனித்து இயங்கச் செய்கிறது. அதற்கே உரித்தான வாசக அனுபவமளிக்கிறது. வேற்றுமையும் வேண்டும் இம்மாநிலத்தே, தோழரே.

அச்சுதம் கேசவம் நாவல் மற்ற அரசூர் நாவல்களோடு காலம், கதை மாந்தர், கருப் பொருள் இவற்றோடு கதையாடலிலும் முற்றிலும் மாறுபட்டது. குறுங்கதையாடலைக் கதை சொல்ல இங்கே கைகொண்டிருக்கிறேன். நாவலுக்கே உரித்தான தனித்தன்மையோடு, அந்தந்தக் கதாபாத்திரம் சார்ந்த, அத்தியாயப் பகுப்புகளிலூடும் முழுமை நோக்கிச் செய்யப்பட்டது இது.  இந்தச் சிறு கதையாடல்கள் கதையோட்டத்தைத் தம் போக்கில் முன் செலுத்துகின்றன.

அரசூர் வம்சம் எழுதும் போது விஸ்வரூபமும் அச்சுதம் கேசவமும் அந்த வம்சத்தின் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளின் கதையைச் சொல்ல எழுதுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நகுயுக் மெஹ்ஃபஸின் கெய்ரோ முந்நாவல் வரிசையைப் படிக்கும் போது, குறிப்பாக அந்த மூன்று கெய்ரோ நாவல்களின் இறுதிப் புதினமான சர்க்கரை வீதி நாவலைப் படிக்கும்போது அரசூர் முந்நாவல்களுக்கான விழைவு பிறந்தது. சர்க்கரை வீதி போல் எனக்கு அச்சுதம் கேசவம், மூன்றிலும் முக்கியமான நாவலாகிறது. நான் வாழும் காலகட்டத்தில் இந்நாவல் நிகழ்வது தற்செயலானதே.

அச்சுதம் கேசவம் நாவலின் கதாபாத்திரங்களுடைய இயக்கமும் உறவும் நட்பும் அடுத்த அரசூர் நாவலான ‘‘வாழ்ந்து போதீர்’ ஆகத் தொடரும்.  தொடர்ந்து நிச்சயித்த இலக்கை நோக்கிக் கதையை நகர்த்தும். அங்கங்கே லெய்ட்மோடிவ் (Leitmotif) ஆக வந்து இறங்கி ஆடும் மயில், கதை பறக்கவும் கைகொடுக்கலாம்.

தொடரும் இயக்கத்தையும், மற்ற வெளிகளையும், சூழலையும் புனைவின் வழி மெய்ப்பித்து நிகழ்த்தும் அச்சுதம் கேசவம் பகுதி-இரண்டில் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.

அன்புடன்

இரா முருகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.