நான் அறிந்த சிலம்பு – 228

-மலர்சபா

மதுரைக் காண்டம்அழற்படு காதை

நெருப்பினால் நேர்ந்த துன்பம் மிருகங்களின் நிலை

பசுக்களும் அவற்றின் கன்றுகளும்
பரவுகின்ற நெருப்பில் அகப்படாமல்,
அறம் சார்ந்த வாழ்வு வாழும்
அகன்ற தெருக்களை அடைந்தன.

வீரம் மிக்க கொடிய ஆண் யானைகளும்
இளம் பெண் யானைகளும்
விரைந்து செல்லும் குதிரைகளும்
மதிற்புறம் சென்றன.

மடந்தையரின் நிலை

சந்தனம் தோய்ந்த
நிமிர்ந்த இளமையும் அழகும் உடைய மார்பையும்
மைபூசிய பெரிய கண்களையும் உடைய மகளிர்
செப்பின்கண் இடப்பட்ட
தேன்மிக்க நல்ல மணம் கமழும்
மொட்டவிழ்ந்த அழகிய மலர்கள் நெருங்கக் கட்டி
மணம் கமழும் கூந்தலில் சூடும்போதுsilambu
அதிலிருந்து சிதறிய தாதும்,
குங்குமம் பூசிய மார்பில் இடப்பட்ட
தம் மார்பில் அணிந்திருக்கும்
பசிய முத்துவடத்திலிருந்து
ஊடலால் அவிழ்ந்து உதிர்ந்த முத்துக்களும்
கொட்டிக் கிடக்கும் தூய மலர்ப்படுக்கையில்
தம்முடைய காதலருடன் உண்டான
ஊடல் தீர்வதற்கு ஏற்ற காலத்தை
எதிர்பார்த்துக் காமவிளையாட்டுகள் ஆடுவதற்கு
வழியின்றி நெருப்புக்கு அஞ்சி மனம் கலங்கினர்.

குழந்தைகளுடன் மகளிர் வெளியேறுதல்

தேமல் பரவிய அல்குலையும்,
மணம் வீசும் கூந்தலையும் உடைய மகளிர்
மழலைச் சொல் பேசும் செவ்வாய் உடைய
குறுக நடக்கும் புதல்வர்களை
அவர்கள் உறங்கும் பஞ்சணையில் இருந்து எழுப்பி,
தலைமுடி வெண்மையாக நரைத்த
முதிய பெண்டிருடன்
தீயால் வாடாமல் வெளியேறினர்.

 

 

 

About மலர் சபா

மதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். பாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும். Malar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க