திருஆதனூர் – அருள்மிகு ஆண்டளக்கும்  அய்யன் பெருமாள் திருக்கோவில்

ag

மார்கழி பிறந்தது மாநிலம் மகிழ்ந்திட

மனத்தேர் இழுத்தே வந்தேன் மாதவா!

மரக்கால் எடுத்து மங்கலம் பகிர்ந்திட

மறுக்காமல் வருக மங்கையை அணைத்து !

 

பகடைகள் ஆடிடும் பன்னிரு மாதங்கள்

பகலவன் பார்வையில் பறந்திடும் பனித்துளி

பாற்கடல் நித்திரை விலக்கியே பரமனே

பரிவுடன் வந்திடு மார்கழி மணாளனே!

 

ஆயிரம் பசுக்களின் ஆனந்த தரிசனம்

ஆதனூர் அண்ணலின் ஆலயம் உறைவிடம்

பாயிரம் படைத்த பக்தர்கள் அனுபவம் 

தாயிடம் சேர்ந்திடும் கன்றுகள் வைபவம் !

 

பாதைகள் மாற்றிடும் பார்வைகள் விலக்கி

போதையில் வந்தேன் ஆதனூர்  நோக்கி !

சாதனை  வேண்டேன் வேதனை நீக்கு

போதனை போதும் பார்த்தனின் சாரதி !

 

பிணக்குகள் நிறைந்த வாழ்க்கையின் வழியில்

கணக்குகள் எண்ணிலா காலங்கள் எழுதும்

கடந்த ஊழ்வினை காத்திடும் நல்வினை

கடமையில் சேர்த்திடு காளிங்கக் கண்ணா !

 

சாமரம் வீசியே செந்தமிழ்ச் சொற்களால்

சந்நிதி வந்தேன் செங்கமலிச்  சீதரா !

முன்னிரு  மாதவா ! பின்னிரு நாரணா !

பொன்னிரு பாதங்கள் போற்றுவேன் பணிவுடன் !

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *