Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (11)

க. பாலசுப்பிரமணியன்

ஆசையில் அலைபாயும் மனம்

திருமூலர்-1

மண்ணாசை எவ்வளவு ஒரு மனிதனைக் கெடுத்து அவனுடைய உண்மையான சுதந்திரத்தை பறித்துக் கொள்ளுகிறதோ, அதுபோல் பெண்ணாசையும் அவனை அழிவின் எல்லைக்குக் கொண்டு சென்று விடுகின்றது. ஒரு மனிதனுடைய உணர்வுகளுக்கு அவனை அடிமையாக்கி கண்ட இடத்தில் எல்லாம் காமத்தைத்  உண்டாக்கி  ஒரு மிருகமாக அவனை ஆக்கி விடுகின்றது. ஒரு பெண்ணைத் தாய்மையின் வடிவாகவும் வாழ்க்கைத துணையாகவும் பார்க்க மறுக்கும் மனம் அதை ஒரு போதைப் பொருளாக நினைத்து தன் வாழ்வின் குறிக்கோளைத் தொலைத்து விடுகின்றது.

தன் மனைவி ரத்னாவளியிடம் அளவற்ற அன்புகொண்ட துளசிதாஸ் அவளைப் பிரியமுடியாமல் தவித்தார். ஒரு முறை மனைவியால் ஒதுக்கப்பட்ட அவர் , “இந்த அன்பை நீங்கள் ராமனிடம் காட்டக்கூடாதா” என சொல்லிக்கேட்க ராமபிரானின் அடிமையாக அவனைத் துதித்தே தன் வாழ்வினைக் கழித்தார்.

பட்டினத்தாரைப் பற்றியோ சொல்லவேண்டிய அவசியமே இல்லை. வாழ்க்கையில் போகத்தில் தன்னையே இழந்த அவருக்கு ஞானம் கிடைத்தவுடன் வாழ்க்கைப் பாதையில் மாற்றம் கண்டார்.

சிற்றம்பலமும் சிவனும் அருகிருக்க

வெற்றம்பலம் தேடி விட்டோமே – நித்தம்

பிறந்த இடம் தேடுதே பேதைமட நெஞ்சம்

கறந்த இடம் காணுதே.

என வருந்தினார்

இதே போன்று பத்ரகிரி சுவாமிகளும் புலம்புகின்றார்

கால்காட்டி  கைகாட்டி கண்கள் முகம் காட்டி

மால்காட்டும் மங்கையரை மறந்திருப்ப தெக்காலம்? .

ஒவ்வொரு பூவிலும் தேனைத் தேடும் வண்டு போல் மானிட மனம் சுகம் தேடி அலைகின்றது. தன் மனைவியை விட்டொழிந்து மற்ற பெண்களிடம் சுகம் நாடும் மானுடரை திருமூலர் இவ்வாறு சாடுகின்றார்:

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே

காத்த மனையாளைக் காமுறுங் காளையர்

காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்

ஈச்சம்பழத்துக் கிடருற்றவாறே.

இப்படிப்பட்ட மனிதருடைய மனம் ஒரு போதைக்கு அடிமையானவன் எவ்வாறு அதிலிருந்து வெளிவரக் கஷ்டப்படுவானோ அதுபோல் துயறுருவான் எனக் கூறுகின்றார்

“மருள் கொண்ட மாதர் மயலுறு வார்கள்

மருள் கொண்ட சிந்தையை மாற்ற தில்லாறே..”

காட்டாறு போன்று நம்மை அடித்துச் செல்லும் இந்த ஆசைப் போராட்டத்திலிருந்து நம்மை நாம் எப்படி காத்துக்கொள்வது? அது முடியக்கூடிய செயலா?

மனிதர்களின் இந்த துயர நிலையைக் கண்ட தாயுமானவ சுவாமிகள் பாடுகின்றார்:

ஆசை என்னும் பெரும்காற்றூடு இலவம் பஞ்சு

எனவும் மனது அலையும் காலம்

மோசம் வரும்; இதனாலே கற்றதும்கேட்

டதும்தூர்ந்து. முக்திக்கு ஆன

நேசமும்நல் வாசமும் போய்ப் புலனாய் இல்

கொடுமை பற்றி நிற்பர்; அந்தோ

தேகபழுத்த அருள்பழுத்த பராபரமே !

நிராசை இன்றெனில் தெய்வம் உண்டோ?

ஆனால் ஆசையை நம்மால் அடக்க முடியுமோ? அமரர்களுக்குக் கூட அது மிகவும் கடினமான செயல் என்பதை சுட்டிக்காட்டும் திருமூலர் கூறுவதென்ன?

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

திருமூலரின் ஒவ்வொரு பாடலும் மனித வாழ்க்கையின் நெறிமுறைகளுக்கு ஒரு ஒளிவிளக்காகத் திகழ்கின்றது.

தொடரும்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (1)

 1. Avatar

  ஆசை துறந்தால் அகிலம் உனக்கு , கவிஞர் வைர முத்துவின் திரைப்படப்பாடல் ,1995, முத்து , ஒருவன் ஒருவன் முதலாளி
  உலகில் மற்றவன் தொழிலாளி
  விதியை நினைப்பவன் ஏமாளி அதை வென்று முடிப்பவன் பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகிறது.
  ஆசையை அடக்குவது கடினம் தான். ஆனால் ஆசையை துறக்கலாம்..நண்பர் திரு க.பாலசுப்ரமணியன் , ஆசையை பற்றி பட்டினத்தார், திருமூலர் கூறிய கருத்துக்களை நயம்பட மேற்கோள் காட்டியதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
  நன்றி வணக்கம்
  நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்

Comment here