கற்றல் ஒரு ஆற்றல் -88
க.பாலசுப்பிரமணியன்
கற்றலும் சுயகட்டுப்பாடும்
ஒரு மனிதனுக்கு எவ்வளக்கெவ்வளவு தன்னம்பிக்கை தேவையோ அதே அளவுக்கு அவனுக்கு சுயகட்டுப்பாடும் தேவை. பல நேரங்களில் மாணவர்கள் வளரும் பருவங்களில் அதிகமான தன்னம்பிக்கையோடு வளர்ந்தாலும் சுயகட்டுப்பாடு இல்லாததால் வாழ்க்கையின் சிறப்பான குறிக்கோள்களையும் வெற்றிப்படிகளையும் தவற விட்டுவிடுகின்றார்கள். காலம் தவறியபின் வருந்தும் நிலையில் அவர்கள் தள்ளப்படும் பொழுது தங்களுடைய சுயகட்டுப்பாடின்மையையும். வெளி கட்டுப்பாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளாமல் தவறுகளை தொடர்ந்து செய்ததையும் நினைத்து வேதனைப்படுகின்றனர். ‘சுயகட்டுப்பாடு’ என்பது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் ஒரு வேலி. அது நம்மைப் பல துயரங்களிலிருந்து சரியான நேரங்களில் காப்பாற்றும். சுயகட்டுப்பாடு இயலாமையின் அறிகுறி அல்ல. அது ஒரு மனிதனின் பயத்தையோ அல்லது அறியாமையையோ காட்டுவதாக எண்ணுதல் தவறான கருத்தாகும். ஒரு கருத்தையோ அல்லது நிகழ்வையோ நன்றாக ஆராய்ந்து அறிவுப்பூர்வமாக நாம் எடுக்கும் ஒரு முடிவே சுயகட்டுப்பாடாகும். கற்கும் காலங்களில் இதை நல்ல அறிவாற்றல் மூலமாகவும் முடிவெடுக்கும் திறன்கள் மூலமாகவும் நாம் வளர்த்துக்கொள்ளலாம். சுயகட்டுப்பாடு இல்லாத மனிதர்கள் திக்குத் தெரியாத காட்டில் வழி தேடுவது போல் வாழ்க்கையில் அலைவது பல நேரங்களில் பார்க்க முடிகின்றது.
வளரும் பருவங்களில் சுயகட்டுப்பாட்டிற்கான நெறிகளை வளர்ப்பதற்கு பள்ளிகளை விட பெற்றோர்களின் பங்கே முதன்மையாகவும் அவசியமானதாகவும் தென்படுகின்றது. வீடுகளில் உள்ள பழக்க வழக்கங்கள் சுய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்தால் அதுவே மறைமுகமான கற்றலின் வித்தாக அமைந்து அத்துடன் சார்ந்த திறன்களையும் பழக்கங்களையும் வளர்ப்பதற்கு ஏதுவாக அமையும். பல வீடுகளில் தங்கள் குழந்தைகளின் மீது அளவற்ற அன்பு காட்டும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவி செய்வதாகக் கருதி அல்லது தங்கள் அன்பின் வெளிப்பாட்டாகக் கருதி கட்டுப்பாடற்ற சூழ்நிலைகளுக்கு வழி வகுக்கின்றனர். பிற்காலத்தில் இந்தப் பழக்கங்களுக்கு அடிமையான வளரும் குழந்தைகள் அந்தச் செயல்களுக்கு மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பது மட்டுமின்றி அவைகளைத் தங்கள் இயலாமையின் அறிகுறியாக ஏற்றுக்கொள்கின்றனர். சுயகட்டுப்பாட்டிற்கு குழந்தைகளை உருவாக்குவது எந்த வகையிலும் அவர்களிடம் நம்முடைய அன்பின் குறைபாடாகக் நினைக்கக் கூடாது. உண்மையில் அது அவர்களை பிற்காலத்தில் பல எதிர்மறையான விரும்பத்தகாத சூழ்நிலைகளிலும் நிகழ்வுகளிலும் தடுமாற்றமின்றி சந்திப்பதற்குத் தேவையான உள்ளத் திறனை வளர்ப்பதற்கு உதவும்.
சுய கட்டுப்பாடு என்பது ஒரு தனி மனிதனின் சுதந்திரத்திற்கோ தேடலுக்கோ விருப்பு வெறுப்புக்களுக்கோ அல்லது மகிழ்விற்கோ எதிர்மறையான கருத்து அல்ல. மாறுதலாக, அந்தத் தேடல்களையும் அதற்கான முயற்சிகளையும் சுயகட்டுப்பாடு பாதையிட்டு வளப்படுத்தி சிறப்புற உதவி செய்யும்.
வீடுகளில் பெற்றோர்கள் கற்றலின் ஒரு பகுதியாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கக் கூடிய சில முக்கியமான சுயகட்டுபாட்டுத் திறன்கள்:
- தங்கள் இடங்களைத் தாங்களே தொடர்ந்து சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்
- தங்கள் துணிமணிகளை தாங்களே சுத்தப்படுத்தி தயாரித்து வைத்துக்கொள்ளுதல்
- பள்ளிகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டில் சரியான முறையான இடங்களில் வைத்துப் பாதுகாத்தல்
- தாங்கள் உணவுண்ட இடங்களையும் பொருள்களையும் தாங்களே சுத்தப்படுத்துதல்
- தங்கள் நேரங்களை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்துதல்
- தங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடித்தல்
- தங்களுக்குத் தேவையில்லாத உறவுகளையும் பேச்சுக்களையும் தவிர்த்தல்
- புறம்பேசுதலைத் தவிர்த்தல்
- நேர்மையற்ற செயல்களுக்குத் துணைசெல்லாது இருத்தல்
- தங்களுடைய தேவைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுதல்
- மற்றவர்களுடைய எண்ணங்களுக்கோ அல்லது பொருள்களுக்கோ விருப்பமுற்று அடிமையாகாமல் இருத்தல்
- சரியான நேரங்களில் சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு உடல்நலம் காத்தல்
- தினசரி ஒரு முப்பது மணித்துளிகளுக்காவது உடற்பயிற்சி செய்தல்
- நித்தம் சிறிது நேரம் மனத்தை அலைபாயாமல் நிறுத்த தியானப் பயிற்சி செய்தல்
- தங்கள் உறங்கும் இடங்களையும் நேரத்தையும் சிறப்பாக முறைப்படுத்துதல்
கற்றல் என்பது வெறும் புத்தகங்களை சார்ந்த அறிவு ஈட்டல் மட்டும் அல்ல. சிறப்பான வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதே கற்றலின் அடிப்படை நோக்கமாகும்.
இந்த சுய கட்டுப்பாட்டுத் திறன்களையும் பழக்கங்களையும் கற்றலின் ஒரு பகுதியாக நாம் ஏற்றுக்கொண்டு மேன்மைப்படுத்திக்கொள்ளும் பொழுது வாழ்வின் பிற்காலத்தில் அது பல நல்ல போற்றலுக்குடைய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.
உதாரணமாக, சுயகட்டுப்பாடுள்ளவர்களின் கீழ்கண்ட திறன்கள் சிறப்படைவதாக மனநல வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
- இலக்குகளின் தெளிவு
- தெளிவான செயல் முறைகள்
- ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன்
- மன அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பு
- நேரம் பேணுதல்
- தோல்விகளில் துவளாமை
- தொடர் முயற்சிக்கும் வல்லமை
- பொருள்வளங்களைப் பேணும் திறன்
- சிந்தனைச் சீரமைப்பு
- மன நிறைவு
சுயகட்டுப்பாட்டின் மூலம் தன்னை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்திக் கொள்ளாத ஒருவனால் எப்படி மற்றவர்களை கட்டுப்படுத்தவோ ஒழுங்குபடுத்தவோ முடியும்? சப்பானிய சிந்தனையாளர் லா-திசு என்பவர் கூறுகின்றார் : “மற்றவர்களை வெற்றிபெற படை தேவை. தன்னை வெற்றிகொள்ள வலிமை தேவை.” (Conquering others requires Force; Conquering the self requires strength- Lao-Tzu)
இந்த வல்லமைக்கு வலிமைக்கும் கற்றல், வீட்டிலும் பள்ளியிலும் வழி வகுத்தல் மிக்க அவசியம்.
தொடருவோம்