Advertisements
Featuredஇலக்கியம்கவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி (122)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

20562921_1393331930721002_1911738997_n

ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.08.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (5)

 1. Avatar

  தலைமுறை
  ______________

  வையகம் என்ன வென்று
  வாழ்ந்து பார்த்து அனுபவித்த
  என் நாட்களவை நிறைவடையும்
  வயோதிக வேளை தன்னில்

  என்ன தான் உலகென்று
  வாழ்ந்து பார்க்க வந்தவன் நீ
  என் னுலகாக மாறியெனைப்
  புதுப்பித்து உயிர் ப் பித்தாய் ….

  என்னுள் மறைந் திருக்கும்
  குழந்தை யதை எழுப்பிவிட்டு
  உன்னுள் தொலைக்கச் செய்யும்
  மாயம் உந்தன் விளையாட்டு !!!!

  எத்தனை கவலைகள்
  எண் ணத்தில் இருந்தாலும்
  அத்தனையும் மறைந்து விடும்
  முத்தே உன் மொழிகேட்டு….

  தத்தித் தத்தி நடந்து வந்து
  “தாத்தா” யென்றழைக் கையிலே
  என் “தலைமுறை”- யே உனைவாரி
  முத்தம் வைக்கத் தோன்றுதடா

  தாத்த னுக்கும் பேரனுக்கும்
  நடுவி லிருக்கும் நல்லுறவு
  தொடக்கத் திற்கும் முடிவிற்குமான
  தொடர்கதையின் ஒரு தொகுப்பு

  ஓய்வெடுக்கும் வயதி லென்னை
  ஓயாமல் உன்தன் பின்னே
  ஓட வைக்கும் ஓவியமே கேள்
  ஒர் அவாவும் எனக்குள் ளுண்டு

  அன்று துளிர்த் தெழுந்து
  அகிலம் காண ஆசைப்படும்
  பச்சைப் புல்வெளி மேல்
  படர்ந்திடும் ஓர் சருகாய் …

  அனைத்தும் அடங்கி ஆடி ஓய்ந்து
  உடல்விட்டு எந்தன் உயிர்நீங்கும் பொழுது
  வலி யேதும் அறியாமல்; உனை நீங்கிப் பிரியாமல்
  இன்பமே எல்லை யென்று இளைப்பாற வேண்டும்
  .
  .
  .
  .
  உன் மடிமீது நானும்
  என் தலை கோதி நீயும் !!!!

 2. Avatar

  காலைக் கதிரவனின்
  ஒளி முத்துக்களைக் 
  வயிற்றில் தாங்கியபடி 
  வளைந்து மிளிர்ந்தன புற்கள்
  அவற்றின் கண்களிலோ பெருமிதம்
  பசுமைகளுக்கெல்லாம் தாமே
  குத்தகை எடுத்தது போல பெருமிதம்
  கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் பசுமை
  தூர நின்ற மரத்தில் 
  பழுத்துச் சுருங்கிய இலையொன்று
  இனித் தாக்குப்பிடிக்கவியலாத நிலையில்
  விடுதலையடைய வீசிய காற்று
  அதனை எடுத்துச் சென்று
  தூரத்திலிருந்த பசும் தரையில் போட்டது
  தீண்டத் தகாதவனைப் போல
  பசுமைகள் கொக்கரித்தன
  ஏளனமாகப் பார்த்தன
  இலை மெதுவாகப் பேசியது
  என் தாய் மிக வலிமை மிக்கவள்
  இன்று முளைத்து நாளை கருகும் புல்லல்ல அவள்
  அவள் பல நூறு ஆண்டுகள் வாழ்வாள்
  பிறப்பு போல இறப்பு நிச்சயம் அது ஒரு நாள் உனக்கும் புரியும் என்றது

  ராதா மரியரத்தினம்
  03.07.17

 3. Avatar

  நிலை இல்லா நிலை: இலையாய் நான் இருந்த கதை
  கேளாயோ பச்சைப் புல்வெளியே!
  பூமித்தாய் மடியினிலே விதை ஒன்று
  அழகுச் செடியாய் பிறந்ததம்மா!
  அச் செடியில் தளிர் இலையாய் இருந்து
  வந்த தங்க மகன் நானம்மா!
  மொட்டோடும், மலரோடும்

  ஆடி மகிழ்ந்ததும் நிசமம்மா!
  காயோடும், கனியோடும்
  களித்துக் கிடந்ததும் உண்டம்மா!
  மரப் பெண்ணின் மானம் காக்க
  நானே ஆடையாய் இருந்ததும் உண்டம்மா!
  காற்றுத் தேவன் ஆணைப்படி
  பூமியில் விழுந்தேன் நானம்மா!
  புதிய இலைகள் வாழ்வதற்கு!
  பழைய இலை நான் உதிர்ந்து விட்டேன்!
  சருகாய் நானும் உலர்ந்து விட்டேன்!
  மண்ணில் கலந்து மறையுமுன்னே!
  மனதில் பட்டதை சொல்லி விட்டேன்!
  நிலையாமை ஒன்றே நிலை என்னும்
  உண்மை நானும் உணர்ந்து விட்டேன்!
  மனிதர்கள் உணர்ந்திட நான் உரைத்தேன்!
  வாழ்ந்து முடித்த மனிதர்களே!
  வாழ்க்கை தத்துவம் தெளிந்திடுங்கள்
  இளைய தலைமுறைக்கு இடம் கொடுங்கள்!
  இளைய தலைமுறையே, மூத்த தலைமுறை
  இளைப்பாற, இதமாய் அவர்களை தாங்கிடுங்கள்! !!

  ,
  ,

 4. Avatar

  எது நிஜம் ?

  சி. ஜெயபாரதன், கனடா.

  கண்ணைக் கவரும்
  பச்சைப் புல்தளம் நிஜமா ?
  அல்லது
  கருகிப் போன சருகுதான்
  நிஜமா ?
  சிரசிலிருந்து கீழே விழுந்தால்
  உரோமத் துக்கு
  ஒரு மதிப்பில்லை !
  பச்சைக் கம்பளப் பின்புலம்
  நிஜமா ?
  போலிப் பின்புலம் !
  நீர் வறண்ட பாலையில்
  வேர் விடுமா
  ஆல மரம் ?
  பச்சைப் புல் எல்லாம் கரிந்து
  நரையாகி
  ஒருநாள் சருகாகும் !
  சருகெல்லம் மீண்டும் கண்கவர்
  பச்சை இலை ஆகுமா ?
  பிறந்த ஒவ்வொன்றும் பசுமையாய்
  இளமையில் கவர்ந்து
  முதுமையில் கூனிக் குறுகிச்
  சருகாய்ப் போகும்
  இதுவே விதி !

  +++++++++++++++++

 5. Avatar

  நிலையல்ல…

  பச்சையாய்த்தான் இருந்தேன்,
  பழுத்துதிர்ந்து சருகனேன் இன்று..

  உயரத்திலிருந்தேன் ஒயிலாக,
  உதிர்ந்த சருகாய் இன்று..

  பரிகாசம் செய்யாதே
  பச்சைப் புல்லே,
  பச்சை நிரந்தரமல்ல
  உன்
  பகட்டும் நிரந்தரமல்ல..

  வான்மழை பொய்த்தால்
  வாடிவிடுவாய் நீ,
  மனிதன் நினைத்தால் நீ
  மாண்டுவிடுவாய்..

  காற்று வந்தது,
  கொண்டுசென்றது சருகை-
  கதைசொல்ல வேறிடத்தில்…!

  -செண்பக ஜெகதீசன்…

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க