அங்கம் -5 கட்சி -4

வானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல்
வைர நெஞ்சில் அடிக்குது பேரிடிச் சத்தம்
நாட்டின் வடிவைச் சிதைக்குது பேய்ப்புயல்
நகர்த் தெருவை நிரப்புது பெருமழை!

**************

பாதிக் கோளத்தில் (பரிதியின் மறைவால்)
இறந்து விட்டன இயற்கை நிகழ்ச்சிகள்!
வேதனைக் கனவுகள் சீரழிக் கின்றன,
திரைமறைவில் எழுந்திடும் துக்கமதை.

வில்லியம் ஷேக்ஸ்பியர் [மாக்பெத்]

(சீஸர்) மரணத்தால் மட்டும் தீரும் சிக்கல்.
சினமில்லை எனக்குத் தனித்த முறையில்
குடிமக்கள் நலத்தை எண்ணுபவன் நான்
முடி சூட்டுவார் பேராசைச் சீஸருக்கு.
முடி சூட்டுவீர் சீஸருக்கு! பிறகு அவரை
உடை வாளால் குத்தி நான் ஊடுருவ
விடை தருவீர் எனக்குடனே அனுமதி! ….

(புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

“உறங்கு  கின்றாய், விழித்தெழு புரூட்டஸ்!
நோக்கிடு உன்னை நீயே, ரோமுக் காகப்
போராடு! உரையாடு! தீர்த்திடு பிரச்சனை
ஓர் வேந்தர் ரோமை ஒடுக்கி ஆள்வதா?” …

(காஸ்ஸியஸின் கடிதம்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சதியே! புன்சிரிப்பில் ஒளிந்து கொள். பாயப்
பாயப் பதுங்கிக் கொள், பணிவுத் தன்மையில்,
பாதையில் நடந்தால்  மெய்யுரு தெரிந்திடும்
காரிருளும் உன்னை காட்டிக் கொடுத்திடும்! ….

(புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சீசரின் ஒற்றை உறுப்பே ஆண்டனி! …
தேச நேசர் நாமெல்லாம் அறிவீர்!
நாசக் கொலைஞர் அல்லர்  நாம்!
சீசரின் பேரா சைக்கு எதிரிகள் நாம்!
உறுப்பை அறுப்பது நம்பணி யன்று! …..
மறுக்க வேண்டும் மார்க் ஆண்டனி!
சீசரின் சிரம் அறுக்கப் பட்ட பிறகு
செய்வ தென்ன வீண் உறுப்புகள் ?

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

ரோமாபுரியில்

 

தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்.

 

நேரம், இடம்

 

சீஸர் பட்டாபிசேகத்திற்கு முந்தைய தினம். நள்ளிரவு வேளை. ரோமாபுரியில் புருட்டஸின் மாளிகைத் தோட்டம்.

 

நாடகப் பாத்திரங்கள்புரூட்டஸ், புரூட்டஸின் மனைவி போர்ஷியா. புரூட்டஸின் பணியாள் லூசியஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மற்றும் சில சதிகாரர்கள்,

 

காட்சி அமைப்பு

 

மார்ச் பதினாங்காம் தேதி இரவு. பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை அனைத்தும் தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. புரூட்டஸ் தோட்டத் தாழ்வாரத்தின் கீழ் உலாவி வண்ணம் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தாழ்வாரத்தில் மெழுகுவர்த்திகள் எரிந்த வண்ணம் உள்ளன.

புரூட்டஸ்: [தனக்குள் பேசியபடி] எப்படி அந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பது? சீஸரின் மரணத்தால்தான் ரோமுக்கு விடுதலை என்றால் அப்படியே ஆகட்டும்! எனக்குச் சீஸர் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பில்லை! பகையில்லை! வேற்றுமை யில்லை! குடிமக்கள் நலமே எனது குறிக்கோள்! ஆதலால் வேந்தராகச் சீஸரை முடிசூட்டுவது முறையன்று. அவரைக் கொன்றுதான் அதைத் தடுக்க வேண்டும் நான்!

[அப்போது பணியாள் லூசியஸ் ஒரு சுருள் கட்டோடு வருகிறான்]

லூசியஸ்: பலகணி வழியாகப் போகும் போது என் கண்ணில் தெரிந்தது. யாரோ சொருகி வைத்த காகிதச் சுருளிது. ஏதோ அவசரசத் தகவல் போல் தெரிகிறது. [சுருளைப் புரூட்டஸ் கையில் கொடுத்து உள்ளே போகிறான்]

புரூட்டஸ்: [மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் படிக்கிறார்] “புரூட்டஸ்! நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்! விழித்தெழு! உன்னையே நீ ஆராய்ந்து செய்! ரோமுக்காக உரையாடு! குடியாட்சிக்குப் போராடு! செம்மைப் படுத்து ரோம் ஆட்சியை! விழித்தெழு புரூட்டஸ், விழித்தெழு!”

[கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது]

புரூட்டஸ்: “விழித்தெழு புரூட்டஸ், விழித்தெழு!” விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். யாரோ கதவைத் தட்டுகிறார்! லூசியஸ்! கதவைத் திறந்து யாரென்று பார்! .. காஸ்ஸியஸ் என் நெஞ்சின் கதவைத் தட்டியது முதலாக சரிவரத் தூக்க மில்லை எனக்கு!

[லூசியஸ் மீண்டும் வருகிறான்]

லூசியஸ்: காஸ்ஸியஸ் வந்திருக்கிறார். உங்களைக் காண விரும்புகிறார்.

புரூட்டஸ்: தனியாக வந்திருக்கிறாரா?

லூசியஸ்: இல்லை! கூட்டமாக வந்திருக்கிறார்கள். முகத்தை மூடியிருப்பதால் மற்றவர் யாரென்று தெரியவில்லை!

புரூட்டஸ்: உள்ளே தோட்டத்துக்கு அழைத்து வா. [லூசியஸ் போகிறான்] ஓ சதியே! நீ ஒளிவ தெங்கே? புன்னகையிலும், பணிவுப் போர்வைக் குள்ளேயும் பதுங்கிக் கொள்! வெளியே நீ தலை நீட்டினால், காரிருள் கூட உன்னைக் காட்டிக் கொடுத்திடும்!

[காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, தீசியஸ், மெத்தலஸ், திரிபோனியஸ் ஆகிய சதிகாரர் அனைவரும் முக்காடு முகத்துடன் நுழைகிறார்கள்]

காஸ்ஸியஸ்: அர்த்த ராத்திரியில் உங்களை எழுப்பி விட்டோமா? மன்னிக்க வேண்டும் புரூட்டஸ்!

புரூட்டஸ்: நட்ட நிசியானாலும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஏனோ இன்று உறக்கம் வரவில்லை எனக்கு! அறிமுகப் படுத்துவீர் காஸ்ஸியஸ். இவர்களில் பலரைத் தெரியாது எனக்கு!

காஸ்ஸியஸ்: பயங்கர இந்த இரவில் பண்பாளர் யாரும் தூங்க முடியாது. அறிமுகம் செய்கிறேன் புரூட்டஸ். யாவரும் உங்கள் மீது மதிப்பு வைத்திருப்பவர். இவர் திரிபோனஸ், இவர் தீசியஸ், இவர் காஸ்கா, இவர் சின்னா, இவர் மெத்தலஸ்.

புரூட்டஸ்: வரவேற்கிறேன் அனைவரையும். கைகளை நீட்டுவீர். [ஒவ்வொருவருவர் கையையும் குலுக்கிறார்]

காஸ்ஸியஸ்: [எல்லோரையும் பார்த்து அழுத்தமாக] நாமெல்லாம் இன்று உறுதிமொழி உரைப்போம்.

புரூட்டஸ்: வேண்டாம், உறுதி எடுக்கத் தேவை யில்லை! எல்லாரது துணிச்சலை நம்புவோம். நமது பணிக்கு யாரும் உறுதி கூறத் தேவை யில்லை! கோழைகள்தான் உறுதிமொழி கூற வேண்டும்! நெஞ்சில் உரமில்லாதவர்தான் உறுதி எடுக்க வேண்டும். உன்னத மானது நமது நாட்டுப் பணி! உறுதி எடுக்கத் தேவை யில்லை அதற்கு! நம்பத் தக்க தீரர் அனைவரும், காஸ்ஸியஸ்!

காஸ்ஸியஸ்: சிசேரோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்! சேர்த்துக் கொள்ளலாமா நம்முடன்?

காஸ்கா: சேர்த்துக் கொள்ள வேண்டும் சிசேரோவை. முதிய நபர் அவர். அவரது நரைத்த முடி அனுபவம் நமக்கு உதவும். அவரைச் சேர்ப்பதால், அவரைப் பின்பற்றுவோர் ஆதரவும் கிட்டும் நமக்கு.

புரூட்டஸ்: வேண்டாம் நமக்கு சிசேரோ. நம் சதித் திட்டம் அவர் காதில் விழக் கூடாது! செவிடன் காதில் ஊதிய சங்கொலி ஆகும் அது. வீண் முயற்சி! பிறர் சொல்வதைப் பின்பற்றுபவர் அல்லர் சிசேரோ!

காஸ்ஸியஸ்: சரி வேண்டாம், விட்டுத் தள்ளுங்கள் சிசேரோவை.

தீசியஸ்: சீஸர் ஒருவரைத்தான் தீர்த்துக்கட்ட வேண்டுமா? வேறு யாரையும் கொல்ல வேண்டுமா?

காஸ்ஸியஸ்: [சிந்தித்து] சீஸரின் ஆருயிர்த் தோழர் மார்க் ஆண்டனியை விட்டுவிடுவது சரியா? ஆண்டனி சூட்சிக்காரர்! நம் திட்டத்தைப் பற்றித் தெரிந்தால், நிச்சயம் நிறுத்த முயல்வார் ஆண்டனி! அவரை விட்டுவிடுவது சரியில்லை! சீஸரோடு ஒன்றாகச் செத்து வீழட்டும் ஆண்டனியும்!

புரூட்டஸ்: அது பெரும் குருதிப்போர் ஆகிவிடும், காஸ்ஸியஸ்! நாம் கசாப்புக் கடைக் கொலைகாரர் அல்லர்! நாட்டு நேசர் நாமெல்லாம்! தலையைத் துண்டித்த பிறகு அங்கத்தை வெட்டுவதில் என்ன பலன்? மார்க் ஆண்டனி சீஸருக்கு வெறும் உறுப்புதான்! நாமெல்லாம் எதிர்ப்பது சீஸரின் பேராசைக் குணத்தை! சீஸரின் அங்க உறுப்புகளைத் துண்டு துண்டாக்குவது நம் தொழிலில்லை! சீஸரின் குருதி ஆறாய் ஓடப் போகிறது! அருமை நண்பர்களே! அஞ்சாமல் துணிச்சலோடு சீஸரைத் தீர்த்துக் கட்டுவோம்! ஆங்காரமாய்க் கொல்ல வேண்டாம்! பண்பாடு படைத்துவர் நாமெல்லாம்! கோரக் கொலைகாரர் அல்ல நாம்! மார்க் ஆண்டனியை மறந்து விடுங்கள்! சீஸர் தலை கீழே உருண்ட பிறகு, அவரது வலது கரமான ஆண்டனி என்ன செய்வான்? அழுவான்! தொழுவான்! ஏன் சீஸரோடு தானும் விழுவான்!

காஸ்ஸியஸ்: [சற்று அழுத்தமுடன்] ஆயினும் ஆண்டனிக்கு அஞ்சுகிறேன் நான்! அவர் சீஸர் மீது கொண்டுள்ள அன்பு ஆழமாக வேரூன்றியது! ஆண்டனியை நானென்றும் நம்புவதே யில்லை, புரூட்டஸ்! சீஸர் மாண்டதும் ஆண்டனி என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது!

புரூட்டஸ்: அருமைக் காஸ்ஸியஸ்! ஆண்டனியைப் பற்றிக் கவலைப் படாதீர்! சீஸர் செத்ததும் உடலை வைத்து அழுவதற்கு ஆண்டனி போவான்! அப்புறம் மனமுடைந்து ஆண்டனியும் சாவான்.

திரிபோனியஸ்:னாம், புரூட்டஸ் சொல்வதே சரி, அஞ்ச வேண்டாம் ஆண்டனிக்கு! அவர் மடியத் தேவையில்லை! நமது குறி சீஸர் மட்டுமே.

[அப்போது டங், டங் கடிகார மணியோசை கேட்கிறது]

புரூட்டஸ்: [சற்று தயங்கி] கேளுங்கள் மணியோசையை!

காஸ்ஸியஸ்: மூன்று மணி ஆகிறது. கிழக்கு வெளுப்பதற்குள் நாம் கலைய வேண்டும்.

திரிபோனியஸ்: போகும் நேரம் வந்து விட்டது.

காஸ்ஸியஸ்: [சற்று கவலையுடன்] சீஸர் காலை மக்கள் மன்றத்துக்கு வருவாரா என்பது சந்தேகமே! பேரிடி, பெருமழை, பேய்ப்புயல், மின்னல் ஆகியவற்றைப் பார்த்துப் பயப்படுவார் சீஸர்! நிரம்ப சகுனம் பார்ப்பவர் சீஸர்! இன்று ராத்திரி வானத்தில் நடக்கும் கோர நாட்டியங்கள் அவரை வெளியில் வராமல் நிறுத்தி விடலாம்! அல்லது அஞ்சிவிடும் கல்பூர்ணியாவே அவரைத் தடுத்து விடலாம். என்ன செய்யலாம்?

தீசியஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! நானவரை இழுத்துக் கொண்டு வருவேன். அவரிடம் சக்கரையாகப் பேசி அழைத்து வருவேன்! உயர்வு நவிற்சியில் அவரைப் புகழ்ந்தால், மனிதர் மெழுகாய் உருகிடுவார்! முகத்துதியில் அவரைக் கவர்வது எளிது! சீஸர் முகத்துதிவாதிகளை அறவே வெறுப்பவர்! ஆனால் முகப் புகழ்ச்சி செய்தால் வேம்பாய் இருப்பவர் கரும்பாய் மாறுவார்!

காஸ்ஸியஸ்: கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பவன் அல்லவா நீ? சீஸரை மக்கள் மன்றத்துக்கு இழுத்து வரும் பணி உன்னுடையது! அதே சமயத்தில் சீஸர் அருகில் வராமல் ஆண்டனியை ஒதுக்க வேண்டுமே? யார் செய்ய முடியும் அதை?

மெத்தலஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! அழகியைக் கண்டால் மெழுகாகிப் போவார் ஆண்டனி! எனக்குத் தெரிந்த பேரழகி ஒருத்தி ஆடல் புரிய வந்திருக்கிறாள். அவளது காந்த விழிகளைக் காட்டிச் சில மணிநேரம் ஆண்டனியைத் தாமதிக்க வைக்கிறேன்! அவள் மேனி அழகு ஆண்டனியைக் கட்டிப் போட்டுவிடும்! அந்த பணியை நான் அழகாகச் செய்து முடிப்பேன்.

காஸ்ஸியஸ்: விடியப் போகிறது! கிழக்கு வெளுத்து விட்டது! நமது திட்டமும் தலைதூக்கி விட்டது! நாமெல்லாம் நீங்கும் வேளை வந்து விட்டது! மெய்யான ரோமானியராய் நம்மைக் காட்டிக் கொள்ளும் நேரம் வந்து விட்டது! போய் வாருங்கள் தோழர்களே! வாயைத் திறக்காதீர்! வாளைக் கூர்மை ஆக்குவீர்!

புரூட்டஸ்: ஆம் அருமை நண்பர்களே! உங்கள் முகமும், வாயும் நம் திட்டத்தைக் காட்டி விடக் கூடாது!

[அனைத்துச் சதிகாரரும் புரூட்டஸ் தோட்டத்தை விட்டுப் போகிறார்கள். தூக்கம் கலைந்து புரூட்டஸின் மனைவி போர்ஷியா வருகிறாள்.]

போர்ஷியா: [கவலையுடன்] முக்காடு போட்டு முகத்தைக் காட்டாமல் போகும் அவர்கள் யார்? விடிந்தும், விடியாத இந்தக் காலை வேளையில் நமது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் யார்? என்னைப் பார்த்தும், பாராமல், வாய்மூடி வணக்கம் கூடச் சொல்லாமல் நழுவிச் செல்லும் அந்த அநாகரீக மனிதர்கள் யார்? என்ன சொல்ல வந்தார் அனைவரும்? ஏன் நீங்கள் அதிகாலையில் எழுந்து வந்தீர்? ஏன் உங்கள் முகம் கரிந்து போய் உள்ளது? மின்னல் அடித்து விட்டதா உங்கள் முகத்தில்?

புரூட்டஸ்: [ஆச்சரியம் அடைந்து] நீ ஏன் அதிகாலையில் எழுந்து வந்தாய்? தூக்கம் ஏன் கலைந்தது உனக்கு? காலைத் தூக்கம் கலைந்தால், உனக்குத் தலை சுற்றுமே?

போர்ஷியா: அதே கேள்விகளை நான் உங்களைக் கேட்கிறேன்? நள்ளிரவுத் தூக்கம் இல்லா விட்டால், உங்களுக்கும் நல்ல தில்லையே! உறக்க மில்லாத உடம்பு வலுவின்றிப் போகுமே! உங்கள் முகம் சோகத்துடன் காணப் படுவதின் காரணம் என்ன? சொல்லுங்கள் எனக்கு!

புரூட்டஸ்: போர்ஷியா! உடம்புக்கு நலமில்லை எனக்கு. உறக்கம் வரவில்லை எனக்கு.

போர்ஷியா: என்ன? உடம்புக்கு நலமில்லையா? உடம்புக்குச் சுகமில்லை என்றால் படுக்கையில் அல்லவா ஓய்வெடுக்க வேண்டும்? பத்து ஆட்களுடன் என்ன உரையாடல் வேண்டிக் கிடக்கிறது? புரூட்டஸ¤க்கு நலமில்லையா? நலமில்லாதவர் அதிகாலைக் குளிரில் நடமாடினால் என்ன ஆகும்? உடல்நலம் மேலும் குறையுமே! உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒரு நோய் உள்ளது! எனக்கது தெரிந்தாக வேண்டும். உங்கள் ஆருயிர் மனைவிடம் உங்கள் சிரமத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடாதா? ஏழெட்டுப் நபர்கள் ஏன் முகத்தை மூடி வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார்? சொல்லுங்கள் நடந்ததை? நான் உங்கள் மனைவி அல்லவா? [மண்டியிட்டு மன்றாடுகிறாள்]

புரூட்டஸ்: கண்மணி போர்ஷியா! மண்டி யிடாதே! மன்றாடாதே! எனக்கொன்றும் கொடிய நோயில்லை! வெறும் தலைவலிதான்!

போர்ஷியா: [வியப்புடன்] வெறும் தலைவலியைச் சொல்லவா இத்தனை தயக்கம்? நம்ப முடியவில்லை என்னால்! எதையோ சொல்ல மறுக்கிறீர்! எதையோ சொல்லக் கூடாதென்று மறைக்கிறீர்! நான் உங்கள் மனைவி என்பதையும் மறக்கிறீர்! உண்டி படைப்பதற்கும், படுக்கையில் ஒட்டி உறங்குவதற்கும் மட்டுமா உங்களுக்கு மனைவி? போர்ஷியா மனைவில்லை! வெறும் உடல் விருந்தாளி உங்களுக்கு!

புரூட்டஸ்: [போர்ஷியாவை அணைத்துக் கொண்டு] அப்படி சொல்லாதே போர்ஷியா? ஆருயிர் மனைவி நீ! அன்பு மனைவி நீ! ஆசை மனைவி நீ! அழகிய மனைவி நீ! அறிவுப் பெண்மணி நீ! போகப் போக நீயே தெரிந்து கொள்வாய்!

போர்ஷியா: அன்பு மனைவி, அழகு மனைவி, அறிவு மனைவி என்றெல்லாம் அடைமொழி கொடுத்து என்னை நீங்கள் ஏமாற்றுகிறீர்! நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தராமல் மறைக்கிறீர். அவர்கள் யாரென்று சொல்லுங்கள்! யாரிடமும் நான் கூறப் போவதில்லை.

புரூட்டஸ்: போகப் போகத் தெரிந்து கொள்வாய் போர்ஷியா! [அப்போது கதவைத் தட்டும் அரவம் கேட்கிறது] பார்! போர்ஷியா உள்ளே போ! யாரோ வருகிறார்? உள்ளே போ! நிம்மதியாக இரு!

[போர்ஷியா உடனே உள்ளே போகிறாள். லூசியஸ் ஆழ்ந்து தூங்குகிறான். புரூட்டஸ் கதவைத் திறக்கச் செல்கிறார்]

புரூட்டஸ்: யாரது மீண்டும் என்னைக் கலக்க வருகிறார்? முதலில் சதிக் கூட்டம்! அப்புறம் போர்ஷியா! அடுத்தினி என்னை யார் ஆட்டி வைக்க வருகிறார்? ஒருநாள் உறக்கம் போனது உயிர் போனது போல் உணர்கிறேன்! விதியே! சதி யாரை விழுங்கப் போகிறது? சீஸரையா? அல்லது புரூட்டஸையா? விதவை ஆகப் போவது கல்பூர்ணியாவா? அல்லது போர்ஷியாவா? சதி கால் முளைத்து நடக்க ஆரம்பித்து விட்டது! அந்த பூதத்தை யாராலுமினி நிறுத்த முடியாது!

*********************

அங்கம் -5 காட்சி -5

மகத்தான மரணம், மர்மமான மரணம்
புகட்டலாம் அதனை இரு விதங்களில்
என்றோ ஒருநாள் சாவது உறுதி
எப்படிச் சாவு வரும் நமக்கு
எப்போது சாவு வரும் நமக்கு
என்பதி லில்லை உறுதி!

ஸொகியால் ரின்போச், திபெத் வேதாந்தி

கடலில் பயணிக்க ஒரு படகையும்,
குடியிருந்து வாழ ஒரு வீட்டையும்
முடிவு செய்வது போல நான்
வாழ்வு யாத்திரை முடிக்க
தேர்ந்தெ டுப்பது மரணத்தை!

செனேகா, ரோமன் வேதாந்தி

வானும், பூமியும் வாழ்த்திடும் சீஸரை!
வீணாய்க் கலக்கம், ஏனோ அறியேன்?
நற்கனவே கல்பூர்ணியா கண்டது நேற்று!
முற்றிலும் தவறு துர்க்கனா வென்பது! …

தீஸியஸ்

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

 

நாடகப் பாத்திரங்கள்:

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

நேரம், இடம்: சீஸர் பட்டாபிசேக தினம். அதிகாலை வேளை. ரோமாபுரி சீஸரின் மாளிகையில் படுக்கை அறை.

நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், சீஸரின் மனைவி கல்பூர்ணியா, பணியாள், செனட்டர் தீஸியஸ்

காட்சி அமைப்பு: மார்ச் பதினைந்தாம் தேதி அதிகாலைப் பொழுது. இராப்பகலாய்ப் பயங்கரப் புயல், இடி, மின்னல், பேய்மழை தலை விரித்தாடி ரோமாபுரியைக் கொந்தளிக்க வைக்கின்றன. சீஸர் மெத்தையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அருகில் உறங்கும் கல்பூர்ணியா பயங்கரக் கனவுகள் கண்டு கலங்கிப் புரண்டு அலறுகிறாள். சீஸர் தூக்கம் முறிந்து அதிர்ச்சியுடன் எழுந்து ஒன்றும் புரியாது நடமாடுகிறார்.

ஜூலியஸ் சீஸர்: வானமும், பூமியும் ஏனின்று கொந்தளித்துக் கூக்குரல் போடுகின்றன? மூன்று தரம் கல்பூர்ணியா தூக்கத்தில் அலறி விட்டாள்! “ஐயோ சீஸரைக் கொல்கிறார்” என்று மும்முறைக் கத்தி விட்டாள், கல்பூர்ணியா! பாழாய்ப் போன ராத்திரி அவளுக்குப் பயங்கரக் கனவுகளைக் காட்டி உலுக்கி விட்டது! யாருக்கு நெஞ்சுறுதி உள்ளது சீஸர் மீது வாளை வீசிட? அஞ்சாதே கல்பூர்ணியா! நான் உயிரோடுதான் உள்ளேன்! உன் கனவுக்கு ஓர் அர்த்த மில்லை! உன் கணவரைக் கொல்லும் எந்தப் பகைவனும் ரோமாபுரியில் இல்லை? அஞ்சாதே கண்ணே! அலறாதே கல்பூர்ணியா! …. யாரங்கே?

பணியாள்: [உள்ளே விரைந்து] பிரபு! நான்தான் உங்கள் பணியாள். என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்?

ஜூலியஸ் சீஸர்: போ! ஆலயப் பாதிரிகளைக் கண்டு விலங்குகளைப் பலியிடச் சொல்! குருதியைத் தொட்டு பின்னால் என்ன நடக்கப் போகுதென்று அவரை அறியச் சொல்! சொல்லும் தகவலைக் கேட்டு வா! சீக்கிரம் போ!

பணியாள்: அப்படியே செய்கிறேன் பிரபு!

[பணியாள் போகிறான். கல்பூர்ணியா கண்விழித்துப் பயமுடன் எழுந்து கவலையுடன் சீஸரை அண்டுகிறாள்]

கல்பூர்ணியா: [சோக முகத்துடன்] என்ன சொல்கிறீர் பிரபு? வெளியே போகக் கூடாது நீங்கள்! வீட்டுப் படியைத் தாண்டி வெளியேறக் கூடாது நீங்கள்! வெளியேற விடமாட்டேன் நான்! நான் கண்ட தீக்கனா என் நெஞ்சைப் பிளந்து விட்டது!

ஜூலியஸ் சீஸர்: ஏனப்படிச் சொல்கிறாய்? எனக்கென்ன நேரப் போகுது? என்னை பயமுறுத்துபவை முதுகுப் புறத்தில்தான் நிகழும். முகத்தைப் பார்த்தால் பயந்து ஓடிவிடும்.

கல்பூர்ணியா: பிரபு! சகுனங்களைப் பொருட் படுத்தாதவள் நான். ஆயினும் அவையின்று எனக்கு அச்சம் ஊட்டுகின்றன. பயங்கரக் கனவுகள் வந்து என்னை வாட்டுகின்றன. குழந்தை யில்லாத எனக்கு நீங்கள் ஒருவர்தான் உறவு! அந்த உறவு பறிபோவதாய்க் காட்டுது என் கனவு! என்ன சொல்வேன் என் அன்புக்குரியவரே! எப்படிச் சொல்வேன் என் ஆருயிரே! உங்கள் உயிருக்கு ஆபத்து என்றெண்ணும் போது என் எலும்பும், சதையும், ஆத்மாவும் ஆடுகின்றன! என்னிதயம் வில்லடி பட்ட பறவைபோல் துடிக்கிறது! கனவிலே உங்களைச் சுற்றிக் கூரிய கத்திகள் நெருங்கிடக் கண்டேன்! வீதியில் ஒரு வேங்கை குருதி
சிந்தி வீறிட்டு ஓடுவதைக் கண்டேன்! பிரேதக் குழிகளில் எழுந்த பிணங்கள் உம்மைத் தழுவிக் கொள்வதைக் கண்டேன்! வானத்தில் பிசாசுகள் போரிட்டு மக்கள் மன்றத்தில் குருதி பொழியக் கண்டேன்! பேய்களும், பிணங்களும் தீயைக் கையில் ஏந்தித் தெருவெல்லாம் சுற்றி வரக் கண்டேன்! அவை எல்லாம் அடிவயிற்றைக் கலக்கி அச்சமும் பீதியும் அடைகிறேன்! மக்கள் மன்றத்துக்கு நீங்கள் போக வேண்டாம்! போகக் கூடாது! போக விடமாட்டேன்!

ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] வரப் போகும் முடிவை யாரால் தடுக்க முடியும்? வருவது வந்தே தீரும்! வராததைக் கனவில் கண்டு வருமென நீ வருந்தலாமா? வரும் என்று நீ எதிர்பார்ப்பது வராது! வராது என்று வாளா விருக்கும் சமயம் வந்திடும் அது! விதியின் விளையாட்டு வேடிக்கையானது, மர்மமானது! பராக்கிரமன் சீஸர் அவற்றுக் கெல்லாம் பயந்தவனில்லை! அழைப்பை ஒப்புக் கொண்ட நான், மன்றத்துக் கின்று போகத்தான் வேண்டும், கல்பூர்ணியா! நீ கண்ட அபசகுனங்கள் சீஸருக்கு மட்டுமல்ல! ரோமானியர் அனைவருக்கும் எச்சரிக்கை அவை!

கல்பூர்ணியா: உண்மை! முற்றிலும் உண்மை! உங்களுக்கு ஆபத்தென்றால் அது ரோமா புரிக்குத்தானே எச்சரிக்கை! பிச்சைக்காரன் செத்தால் வான்மீன் வருவதில்லை! சாவு மணி அடிப்பதில்லை! ஆனால் ஓர் வேந்தன் மாண்டால், வான மண்டலமே வெடித்துப் பிளக்கிறது!

ஜூலியஸ் சீஸர்: கல்பூர்ணியா! ஆறிலும் சாவு! நூறிலும் சாவு! பிறப்பும், இறப்பும் நாணயத்தின் இரு முகங்கள்! கோழையர் மரணம் வருவதற்கு முன்பாகப் பன்முறை மடிவார்! வல்லவன் ஒருமுறைதான் சுவைக்கிறான் மரணத்தை! ஆச்சரியமாக உள்ளது! மரணம் மனிதனின் முடிவென்று அறிந்தும் ஏனவன் அதற்கு அஞ்சி ஒளிய வேண்டும்! அஞ்சி ஒளிந்தாலும், அவரை மரணம் தேடிப் பிடித்திடும்! யார் அதைத் தடுப்பார்? யார் அதிலிருந்து தப்புவார்? யார் அவரைக் காக்க முடியும்?

[பணியாள் அப்போது ஓடி வருகிறான்]

பணியாள்: பிரபு! சகுனத்தை விளக்கும் ஆலய ஜோதிடர் பலியிட்ட பிறகு சொன்னார், மன்றத்தில் உங்களுக்கு ஆபத்து வரலாம் என்று!

ஜூலியஸ் சீஸர்: [அலட்சியமாக] ஆபத்து வரும் என்று உறுதியாகச் சொல்ல வில்லையே! வரலாம் என்றால் ஐயப்பாடு அல்லவா தொனிக்கிறது! தெய்வப் பீடாதிபதிகள் என்னைக் கோழையாக்க முயல்கிறார். சீஸர் ஒருபோதும் அஞ்சி ஒளிவ தில்லை! அபாயத்துக்குத் தெரியுமா, அபாயத்தை விட நான் அபாயமானவன் என்று! பராக்கிரம சீஸர் பயந்து பின்தங்க மாட்டான்.

கல்பூர்ணியா: [கெஞ்சலுடன்] பிரபு! ஊக்கமும், உறுதியும் உங்கள் அறிவை மீறுகிறது! துணிவும், பலமும் உங்களைக் குருடாக்குகிறது! சீஸரை நிறுத்தியது, கல்பூர்ணியாவின் அச்சம் என்று எண்ணிக் கொள்வீர்! அது என் முடிவாகட்டும்! மார்க் ஆண்டனியை அனுப்பி, சீஸருக்கு உடல்நல மில்லை என்று மன்றத்தில் அறிவிக்கச் சொல்வீர்! உங்கள் காலில் விழுந்து மன்றாடுகிறேன். [சீஸர் முன்பு மண்யிட்டு அழுகிறாள்]

ஜூலியஸ் சீஸர்: [கேலிச் சிரிப்புடன்] “சீஸருக்கு நலமில்லை! மன்றத்துக் கின்று வரமாட்டார்!” என்று மார்க் ஆண்டனி சொன்னால், என்ன கேலிக் கூத்தாக இருக்கும்? செனட்டர் எல்லாரும் அதைக் கேட்டுச் சிரிக்காமல் இருப்பாரா?

[பணியாள் வந்து செனட்டர் தீஸியஸ் வந்துள்ளதாக அறிவித்த பிறகு, தீஸியஸ் உள்ளே நுழைகிறார்]

தீஸியஸ்: வணக்கம், மேன்மை மிகு தளபதியாரே! வணக்கம், மாண்பு மிகு கல்பூர்ணியா அம்மையாரே! நான் தளபதியை மக்கள் மன்றத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்! நீங்கள் தயாரானதும் உங்களுடன் வர புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சில செனட்டர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஜூலியஸ் சீஸர்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] நன்றி தீஸியஸ், நல்லது, பூரிப்படைகிறேன்! சரியான சமயத்தில் வந்திருக்கிறாய்! செனட்டருக்கு என் நன்றியை எடுத்துரை! ஆனால் மன்றத்துக்கு நான் வர முடியா தென்று சொல்! முடியா தென்பது சரியல்ல! மன்றத்துக்கு வரப் போவதில்லை என்று சொல்!

கல்பூர்ணியா: [சட்டென] சீஸருக்கு உடல்நல மில்லை என்று சொல். சுகமின்றி சீஸர் வீட்டில் படுத்திருக்கிறார் என்று சொல்!

ஜூலியஸ் சீஸர்: [தயக்கமுடன்] சீஸர் பொய் சொல்லாமா? கூடாது! கூடவே கூடாது! பேரவைக்கு சீஸர் வரப் போவதில்லை என்று சொல்!

தீஸியஸ்: [தயக்கமுடன், கெஞ்சலில்] பராக்கிரம பிரபு! ஏதாவது ஒரு காரணம் நான் சொல்ல வேண்டாமா? அல்லது மன்றத்தில் என்னைப் பார்த்து எல்லாரும் கைகொட்டிச் சிரிக்க மாட்டாரா?

ஜூலியஸ் சீஸர்: காரணம் என்ன? என் மன விருப்பம் என்று சொல்! செனட்டருக்கு அது போதும். ஆனால் உனக்கு மட்டும் உண்மைக் காரணம் சொல்கிறேன், நீ எனக்கு விருப்பமானன் என்னும் முறையில். கல்பூர்ணியா கெட்ட கனவு கண்டு என்னைத் தடுத்து விட்டாள்! நிறுத்தி என்னை வீட்டில் தங்க வைத்திருக்கிறாள். அவளது பயங்கரக் கனவில் என் சிலையைக் கண்டாளாம்! சிலை மீதிருந்து பல குருதி ஊற்றுக்கள் பீச்சி எழுவதைக் கண்டாளாம்! ரோமானிய மூர்க்கர் சிரித்துக் கொண்டு அந்தக் குருதியில் கைகளைக் குளிப்பாட்டினாராம்! அவற்றைக் கண்டதில் அச்சம் கொண்டு என்னை போக வேண்டாமெனத் தடுத்து மன்றாடுகிறாள்!

தீஸியஸ்: [சிரித்துக் கொண்டு] வானமும், பூமியும் முன்கூட்டி சீஸரை வாழ்த்துவதைத் தவறாகப் புரிந்திருக்கிறார்! வானம் கொட்டி முழக்குது! பூமி புயலடித்துப் பூரிக்குது! மழை நீர்ப் பூக்களைத் தெளிக்குது! நீரும், நிலமும், வானும் ஒருங்கே சீஸரை வேந்தராக வரவேற்குது! சீஸர் சிலையில் பீறிட்டெழும் குருதி, ரோம சாம்ராஜியத்தை விரிவாக்க அவர் செய்த தியாகத்தைக் காட்டுகிறது! பராக்கிரமப் பிரபு! கல்பூர்ணியா நேற்று கண்டது நற்கனவே! துர்க்கனவாய் எடுத்துக் கொள்வது சரியல்ல!

ஜூலியஸ் சீஸர்: [பேருகையுடன்] பார்த்தாயா கல்பூர்ணியா! தீஸியஸ் கூறும் விளக்கமே சிறந்ததாய்த் தெரியுது எனக்கு! உன் பயங்கர விளக்கம் தவறு! ஆலயப் பீடாதிபதிகள் சொன்னதும் தவறு! தீஸியஸ் சொல்வதே சரி. … தீஸியஸ்! நான் மன்றத்துக்கு வருவதாகச் செனட்டாரிடம் சொல்!

கல்பூர்ணியா: [கண்ணீர் வடித்து] மகா பிரபு! தீஸியஸ் சொல்வதுதான் தவறு! என் மனதில் அப்படித் தோன்ற வில்லை! வல்லமை மிக்க விதி உங்களை வலை போட்டுப் பிடிக்கிறது! தீயஸிஸ் சொல்வதில் தீமை ஒளிந்துள்ளதாகத் தெரியுது எனக்கு! போகாதீர் பிரபு, போகாதீர்!

தீஸியஸ்: பிரபு! செனட்டார் யாவரும் சீஸருக் கின்று பொற்கிரீடம் அணிவிக்கப் போவதாய்த் தீர்மானம் செய்துள்ளார்! தாங்கள் வரப் போவ தில்லை என்றால் அனைவரும் வருந்துவார்! பிறகு மனம் மாறி விடுவார். பெருஞ்சினங் கொண்டு மன்றத்தைக் கலைத்து விடுவார்! “தள்ளிப் போடுங்கள் பட்டாபிசேக நாளை, கல்பூர்ணியா நற்கனவு காணும் வரை!” என்று எள்ளி நகையாடுவார்! பிரபு! தங்கள் தலையை ஒப்பனை செய்த தங்கக் கிரீடம் தயாராக உள்ளது, மன்றத்தில்! தங்களை வேந்தராக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார் செனட்டார்! வாருங்கள் மன்றத்துக்கு! வந்து ஏற்றுக் கொள்வீர் வெகுமதியை! பராக்கிரம சீஸரே! உமது பொற்காலமிது! உமது மகத்தான பாராட்டு விழா இது! ஒருமுறைதான் வருமிது! விட்டுவிடாதீர் வீராதி வீரரே!

ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] எத்தகை அவமானத்தை எனக்கு உண்டாக்கி விட்டாய் கல்பூர்ணியா? உன் கனவைக் கேட்டு நான் ஒளிந்து கொள்வதா? தீஸியஸ்! வருகிறேன் மன்றத்துக்கு! மகிழ்ந்திடு கல்பூர்ணியா! …. யாரங்கே? கொண்டுவா எனது மேலங்கியை! குளித்து, முழுகி, ஆடை அணிந்து நான் தயாராக வேண்டும்! ….(மெதுவாக) ஆனால் தீஸியஸ்! இங்கு நடந்த அர்த்தமற்ற வாதங்களை வெளியில் எவருக்கும் சொல்லாதே! கல்பூர்ணியா என்னைத் தடுத்து நிறுத்தினாள் என்று யாரிடமும் கூறாதே! கெட்ட சகுனங்களைக் கண்டு சீஸர் அஞ்சினார் என்று எள்ளி நகையாட எவருக்கும் இடங் கொடாதே! … போ! சீஸர் மன்றத்துக்கு வருகிறார் என்று பறைசாற்று! என் பொற்காலம் உதயமாகட்டும்!

[தீஸியஸ் போகிறான்]

*********************

அங்கம் -5 காட்சி -6

பல்வித முகக் கவசம் பூண்டது மரணம்!
மரணம் அறிவிக் காது வரும் தருணம்!
வெடியோ, கடலோ, வெந்திடும் தீயோ,
இடியோ, மின்னலோ, வாளோ, கயிறோ
முடிவில் சாவது முன் தெரி யாது!

*************

உலகப் பகட்டினில் உழலும் போது,
நிழலாய்ப் பின்வரும் சாவினை அறியாய்!
இடிபோல் தாக்கும் மனிதனை மரணம்,
தடாலெனத் தலையில் அடித்து! ….

மரணப் படுக்கையில் புரள்வோன் ஆயுளை
மருத்துவர் நீட்டலும் அரிதே! உந்தன்
குருதேவர் கூட்டலும் அரிதே!

ஜெட்ஸன் மிலரேப்பா, திபெத் கவியோகி

இலையுதிர் காலத்து முகில்போல்
நிலை யிலாதது நமது வாழ்வு!
கதக்களி போல் துவங்கி முடிவது,
மனிதரின் பிறப்பும் இறப்பும்!
வானில் அடிக்கும் மின்னல் வீச்சே,
மானிடக் கால இறுதிக் காட்சி !
செங்குத் தான மலைமே லிருந்து
உருண்டு வீழும்,
நதி போன்றதே நமது வாழ்வு!

கௌதம புத்தர் (கி.மு.560-480)

கவனம் வைப்பீர் சீஸர்! புரூட்டஸ் மீதும்,
காஸ்ஸிஸ் மீதும் நம்பிக்கை வேண்டாம்.
காஸ்கா அருகிலே வராதீர்!
தீஸியஸ் உம்மை நேசிக்க வில்லை!
சின்னா மீது ஒருகண் வைப்பீர்!
அன்னார் மனத்திலும் உள்ள தொன்றே!
கடவுள் உம்மைக் காத்திட வேண்டும்! ……
என் மடலைப் படித்தால் சீஸர் தப்புவார்!
இன்றேல் விதியால் சதிக்கிரை யாவார்! ..

[ஆர்டிமிடோரஸ், சீஸரின் நண்பன்]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

நெஞ்சுக்கும், நாவுக்கு மிடையே,
நிற்குது மாபெரும் மலையே!
ஆடவன் உள்ளமும், ஆயிழை உறுதியும்
கூடவே என்னுடன் கொண்டுள்ளேன்!
எத்தனைக் கடினம் இரகசியம் காப்பது
உத்தமப் பெண்ணான ஒருத்திக்கு? ..

[போர்ஷியா, புரூட்டஸின் மனைவி]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

 

நேரம், இடம்

 

சீஸர் பட்டாபிசேக தினம். காலை வேளை. ரோமாபுரியில் கிளியோபாத்ரா தங்கி இருக்கும் அரசாங்க விருந்தினர் மாளிகை.

 

நாடகப் பாத்திரங்கள்

 

கிளியோபாத்ரா, சிறுவன் சிஸேரியன், சேடிகள், ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் சில செனட்டர்கள்.

 

காட்சி அமைப்பு

 

மார்ச் பதினைந்தாம் தேதி காலைப் பொழுது. கிளியோபாத்ரா தன்னையும், மகனையும் ஒப்பனை செய்து கொண்டு மக்கள் மன்றத்துக்குச் செல்லத் தயாராக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறாள். ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் சில செனட்டர் புடைசூழ மக்கள் மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்.

கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] கண்மணி! இன்றைக்குக் கொண்டாட்ட நாள்! உன் தந்தை ரோம் சாம்ராஜியத்துக்குச் சக்கரவர்த்தியாக மகுடம் சூடப் போகிறார்! ஒருகாலத்தில் இப்படி நீயும் ரோமாபுரிக்குப் பெரு வேந்தனாய் முடிசூட்டப் படுவாய்! நீயும், நானும் அந்த கோலாகல விழாவை நேராகக் காணப் போகிறோம். உன் தந்தை முதலில் நம்மைக் காண வருகிறார். அவருக்குப் பின்னால் நாமும் போகப் போகிறோம்!

சிஸேரியன்: [தாயைச் சுட்டிக் காட்டி] நீங்கள் எகிப்துக்கு மகாராணி! தந்தை ரோமாபுரிக்கு மகாராஜா! நான் எகிப்துக்கும் மகா இளவரசன்! ரோமுக்கும் இ ளவரசன் அல்லவா?

கிளியோபாத்ரா: [சிரித்துக் கொண்டு] சரியாகச் சொன்னாய் கண்மணி! [கன்னத்தில் முத்தமிடுகிறாள்] உலகை ஆளப்போகும் நீ எதிர்கால அலெக்ஸாண்டர்! மகா, மகா இளவரசன்! நீ சைனாவைப் பிடிக்க வேண்டும் தெரியுமா?

சிஸேரியன்: சைனாவுக்கு வழி தெரியாதே எனக்கு! அரிஸ்டாடில் மாதிரி எனக்கொரு குரு, முதலில் பாதை காட்டிக் கொடுக்க வேண்டுமே! கத்திச் சண்டை தெரியும் எனக்கு! ஏற்றி விட்டால் குதிரை ஓட்டத் தெரியும் எனக்கு!

கிளியோபாத்ரா: அலெக்ஸாண்டிரியாவில் ஏற்பாடு செய்திருக்கிறேன், உனக்கொரு குருவை. கணித மேதை பித்தகோரஸ் வம்சாவளியில் வந்தவர்! உனக்குக் கணிதம், வான சாஸ்திரம், வரலாறு, பூகோளப் பாடம் அனைத்தும் சொல்லிக் கொடுப்பார்!

[அப்போது சேடி ஒருத்தி சீஸர் வருவதை அறிவிக்கிறாள். சீஸர் செனட்டர்களை வாசலில் நிறுத்தி விட்டு கிளியோபாத்ரா மாளிகைக்குள் நுழைகிறார். கிளியோபாத்ரா எழுந்து சென்று சீஸரை வரவேற்கிறாள். சிஸேரியன் ஓடிச் சென்று சீஸர் கையப் பற்றுகிறான். மகனைத் தூக்கி முத்தமிடுகிறார் சீஸர். கிளியோபாத்ராவையும் முத்தமிடுகிறார்.]

ஜூலியஸ் சீஸர்: கண்ணே! கிளியோபாத்ரா! மன்றத்துக்குப் போகிறேன் நான். நீ மகனைக் கூட்டிக் கொண்டு வருகிறாயா, என் முடிசூட்டு விழாவைக் காண!

கிளியோபாத்ரா: [மகிழ்ச்சியுடன்] நானும், மகனும் வந்திருப்பது கோலாகல விழாவில் கலந்து கொள்ளத்தானே! உங்கள் பின்னால் என் தூக்கு ரதமும் வரும். நான் வராமல் போவேனா? என்ன கேள்வி யிது?

ஜூலியஸ் சீஸர்: [சற்று கவலையுடன்] ஆனால் கல்பூர்ணியா வரப் போவதில்லை மன்றத்துக்கு! நானங்கு போவதும் பிடிக்க வில்லை அவளுக்கு!

கிளியோபாத்ரா: [ஆச்சரியமுடன்] ஏன் கல்பூர்ணியா வரப்போவ தில்லை? நீங்கள் போவது ஏன் அவளுக்குப் பிடிக்க வில்லை? நான் உங்களுக்கு அருகில் இருப்பேன் என்று வருந்துகிறாளா?

ஜூலியஸ் சீஸர்: என்னருகில் நீ இருப்பது அவளுக்கு வெறுப்பூட்ட வில்லை! நேற்றடித்த பயங்கரப் புயலிடி, மின்னல் அவள் மனதைப் பாதித்து விட்டது! படுக்கையில் பயங்கரக் கனவு கண்டு பலமுறை அலறி விட்டாள்! அந்தக் கனவில் என் சிலை மீதிருந்து குருதி பீறிட்டெழுவதைக் கண்டாளாம்! ரோமாரியில் பலர் தீப்பந்தங்கள் ஏந்தி வீதியெங்கும் பதறி ஓடுவதைக் கண்டாளாம்! வானிலிருந்து மலர் வளையம் ஒன்று பாம்ப்பியின் சிலைக் காலடியில் விழுவதைக் கண்டாளாம்! என்னுயிருக்குப் பயந்து என்னைத் தடுத்து நிறுத்த முயன்றாள்!

கிளியோபாத்ரா: [ஆச்சரியமும், அச்சமும் கலந்து] அப்படியா! இப்போது நினைவுக்கு வருகிறது. எனது சூனியக்காரியும் ஒருமாதிரியாகச் சொன்னாள்! இப்போது புரிகிறது எனக்கு! பாம்ப்பியின் சிலை அடியில் மலர் வளையம் விழுந்ததா? அப்படி என்றால் உங்கள் பகைவர், உயிரிழந்த பாம்ப்பி உங்களைப் பலி வாங்கப் போவதாகத் தெரிகிறது எனக்கு! அவள் அஞ்சியது சரியே! சீஸர்! நீங்கள் மன்றத்துக்குப் போவதில் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது எனக்கு!

ஜூலியஸ் சீஸர்: [கவலையுடன்] எனக்கு கனவில் நம்பிக்கை யில்லை! ஆனால் உன் சூனியக்காரி என்ன சொன்னாள்? எனக்குச் சகுனத்தில் நம்பிக்கை யில்லை! ஆனால் அவள் கூற்றை விளக்கமாய்ச் சொல்!

கிளியோபாத்ரா: இன்று காலை கடவுளைத் தியானிக்கத் தீ வளர்த்த போது சூனியக்காரி கண்மூடிச் சொன்னது: “ரோமுக்குக் கெட்ட காலம் வருகுது! ரோமானியர் தீ ஏந்தி தெருவெங்கும் ஓடப் போகிறார்! ரோமா புரியை விட்டுச் சிஸேரியனை அழைத்துப் படகில் போவேன் என்றாள்!” எனக்கு அப்போது ஒன்றும் புரிய வில்லை! சீஸர்! என் நெஞ்சில் அச்சம் உண்டாகுகிறது. நீங்கள் மன்றத்துக்குத் தனியாகப் போவது சரியாகத் தெரிய வில்லை! ஆண்டனியை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். சீஸர்! எனக்கும், நமது மகனுக்கும் கூட ஆபத்து உண்டாகலாம்! பாதுகாப்போடு இருக்க வேண்டும் நீங்களும், நாங்களும்!

ஜூலியஸ் சீஸர்: [சிரித்துக் கொண்டு] அஞ்சாதே கிளியோபாத்ரா! எனக்கும் அச்சத்தை உண்டாக்காதே! உனக்கொன்றும் நேராது. எனக்கொன்றும் விளையாது! கல்பூர்ணியா போல் பேசி நீயும் என்னைத் தடுக்கிறாய்! சகுனங்களைக் கண்டு நான் அஞ்சி ஒளிபவனில்லை! கிளியோபாத்ரா! போர்க் களத்தில் நாற்புறத்திலும் பகைவர் முன்பாகவே நடமாடிய நான், யாரைக் கண்டும் அஞ்சுபவனில்லை! ரோமானிய செனட்டர் யாவரும் என்னாட்டு மாந்தர்! அன்னியர் அல்லர்! ஏனவர்க்கு நான் அஞ்ச வேண்டும்? நான் தினமும் அஞ்சி அஞ்சிச் சாகும் தெரு மனிதன் அல்லன்!

கிளியோபாத்ரா: எனது தெய்வத்தை நான் வணங்குகிறேன்! உங்கள் தெய்வத்தை நீங்கள் வழிபடுங்கள்! உங்கள் உயிருக்கு ஆபத்தென்றால், எங்கள் கதி என்னவாகும்? மன்றத்தில் எங்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் அல்லவா? அன்னியரான நானும் மகனும் கவனமாகக் கண்விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் உங்களுக்கு நேர்ந்தால், எங்களுக்கும் ரோமில் ஆபத்து விளையலாம்! மன்றத்துக்கு நான் மகனுடன் செல்வதைப் பற்றி இப்போது சிந்திக்கிறேன்!

ஜூலியஸ் சீஸர்: [கம்பீரமாக] கிளியோபாத்ரா, எனக்கொன்றும் நேராது! உனக்கொன்றும் நேராது! பட்டம் சூட்டும் விழாவில் நீ பங்கெடுக்காமல் போனால், மிக்க வேதனைப் படுவேன் நான்! மனதை மாற்றாதே கிளியோபாத்ரா! நீ வர வேண்டும். என் புதல்வன் வர வேண்டும்.

[அப்போது தீஸியஸ் உள்ளே நுழைகிறான்]

தீஸியஸ்: மேதகு அதிபதி அவர்களே! நேரம் நெருங்கி விட்டது! நீங்கள் போகும் நேரம் வந்து விட்டது! செனட்டார் மன்றத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். வாருங்கள் போகலாம்!

ஜூலியஸ் சீஸர்: [கிளியோபாத்ராவையும், மகனையும் முத்தமிட்டு] நான் போகிறேன் கல்பூர்ணியா! பின் தொடர்ந்து நீயும், மகனும் வாருங்கள்!

[தீஸியஸ் உடன் வர, புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ் மற்றும் செனட்டார் பின்வர சீஸர் மக்கள் மன்றம் நோக்கிச் செல்கிறார்]

*********************

அங்கம் -5 காட்சி -7

ஜூலியஸ் சீஸர் கொலை.

 

சீரோங்கும் ரோமாபுரிச் செம்மை நிலத்தில்,
சீஸர் செத்து வீழும் முன்பாக,
பிரேதங்கள் குழியைக் காலி செய்து
ஆடை உடுத்தி வீதியில் ஆடின,
வானில் காணும் விண்மீன் ஒளிபோல்!
பரிதியில் சிதறிய குருதித் துளிபோல்!
கடல் தேவன் நெப்டியூன் கடாட்சம் படும்
கிரகணப் பரிதியின் பிரளய நாள்போல்!

 

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஹாம்லெட் நாடகம்]

தேடிச் செல்லாதே உன் மரணத்தை!
தேடி வருதே உன்னை மரணம்!
தேடிச்செல், மரணம் பூரணமாகும்
திக்கினை நோக்கி!

டாக் ஹாம்மர்ஷோல்டு.

மரணம் என்பது என்ன?
உணர்ச்சி அதிர்வு கட்கு ஓய்வு!
ஆசைகளின் அந்திமப் பிரிவு!
சிந்தனைக் கோலங் கட்கு முடிவு!
உடலின் உழைப்புக்கும் விடுப்பு!

மார்கஸ் அரேலியஸ்

அஞ்சா நெஞ்சன் என்பவன் மெய்யாய்
அஞ்சாத மனிதன் அல்லன், என்பேன்!
அது மடமை, தர்க்க ரீதியில் தவறு!
மகத்துவ மனம் பயத்தைத் தணித்து,
இயற்கையில் நேரும் விபத்தை ஏற்று,
தயங்காது செல்பவன் அஞ்சா மனிதன்!

ஜோவானா பைல்லி, நாடக மேதை, கவிஞர்

அந்தோ! செத்ததும் செல்வ தெங்கோ?
புதைந்து பனிமூடி முடங்குவ தெங்கோ?
கண்காணா, காற்றிலாச் சிறையுட் பட்டு,
பயங்கர மரண மென்று அலறுவதோ?
கொடுமையிலும் மிகக் கோரம் அந்தோ!

வில்லியம் ஷேக்ஸ்பியர் [Measure for Measure]

ஏற்றி வைத்த மெழுகு வர்த்தி ஒருநாள்,
காற்றில் அணைந்து விடும் குப்பென!
நேற்று சுவாசித்து வாழ்ந்தவன் சாம்பல்,
ஆற்றில் கரைந் தோடு மின்று!

ரோமாபுரியில்

 

தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

 

நேரம், இடம்

 

சீஸர் பட்டாபிசேக தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடுகிறது. பாம்ப்பியின் சிலைக்குக் கீழ் பெரிய ஆசனம் போடப்பட்டு உள்ளது. பக்கத்து மேடையில் தங்க மகுடம் ஒன்று வைக்கப் பட்டுள்ளது. மன்றத்துக்குப் போகும் மேற்படிக் கருகில் கிளியோபாத்ராவின் புதிய சிலை ஒன்று உருவாக்கப்பட்டு மன்றத்துக்கு வருவோரை வரவேற்க நிறுத்தப் பட்டுள்ளது.

 

நாடகப் பாத்திரங்கள்

 

ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா மற்றும் பல ரோமானிய செனட்டர்கள்.

 

காட்சி அமைப்பு

 

மார்ச் பதினைந்தாம் தேதி பகல் வேளை. ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் மற்றும் சில செனட்டர்கள் புடைசூழ மக்கள் மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். வழியில் ஜோதிட நிபுணன் சீஸர் முன்பாக எதிர்ப்படுகிறான்.

ஜூலியஸ் சீஸர்: [மன்றத்தின் அருகில் நின்று ஜோதிட நிபுணனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்து] என்னப்பா! மார்ச் பதினைந்தாம் தேதி வருது, வருது என்று எனக்குப் பயமூட்டினாயே! அதுவும் வந்தாயிற்றே! ஒன்றும் நேர வில்லையே எனக்கு!

ஜோதிடர்: மேதகு சீஸரே! பதினைந்தாம் தேதி இன்னும் கடந்து செல்ல வில்லை என்பதை மறக்காதீர்!

ஜூலியஸ் சீஸர்: ஜோதிடரே! நான் எதற்கும் அஞ்சி ஒளிய மாட்டேன். பயங்காட்டியே பிழைக்கும் நீ இனி என்கண் முன் எதிர்ப்படாதே! எதிரே கண்டால் உன்னைக் காலால் எற்றி விடுவேன்! கண்முன் நில்லாமல் ஓடிப் போய்விடு!

ஜோதிடன்: [விரைந்து போய்க் கொண்டே] இதுதான் கடைசி முறை. நானினி உங்களைக் காணப் போவதில்லை! நீங்களும் என்னைக் காண மாட்டீர் இனிமேல்! [ஓடிப் போகிறான்]

ஆர்டிமிடோரஸ்: [சீஸரை நிறுத்தித் தலை வணங்கி] மேதகு அதிபதி! வாழ்க நீடூழி! என் பட்டியலைத் படித்துப் பாருங்கள்! கட்டாயம் நீங்கள் வாசிக்க வேண்டும்! உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என்னும் அட்டவணை இது. தயவு செய்து படியுங்கள்!

தீஸியஸ்: [சீஸர் முன் தலை வணங்கி] தளபதி வாழ்க! முதலில் என்னுடைய விண்ணப்பத்தை படியுங்கள். அவசர மில்லை அவன் பட்டியலுக்கு! என் பிரச்சனை முக்கிய மானது! படியுங்கள் இதை முதலில்! யார் உங்கள் நண்பர் என்று ஒருவன் எழுதிக் காட்ட வேண்டுமா? ரோமில் உங்களுக்குப் பகைவர்கள் கிடையா.

ஆர்டிமிடோரஸ்: வாசிக்க வேண்டாம் அதை! உங்களை முதலில் அண்டியவன் நான்தான்! முதலில் வந்தவனுக்கு முதலிடம் அளிப்பீர்! தீஸியஸ் பிரச்சனையை தீர்க்க முடியாதது! என் பட்டியல் உங்களைப் பாதிக்கும்! ஏன் ரோமாபுரியையே பாதிக்கும்! ஒதுக்கித் தள்ளுங்கள் அவனை! எனது பட்டியல் பாதுகாப்பு நபர்களைச் சுட்டிக் காட்டும்! அவசரம் பாருங்கள்! அவசியம் பாருங்கள்! அலட்சியம் வேண்டாம்!

காஸ்ஸியஸ்: போடா போ! உன் பட்டியலுக்கு என்ன அவசரம்? பாதையில் சீஸரை நிறுத்தி பட்டாபிசேக நேரத்தை வீணாகக் கடத்துகிறாய்! உன் விண்ணப்பத்தை மன்றத்துக்கு வந்து பின்னர் காட்டு!

[சீஸர் தொடர்ந்து நடக்கிறார். மன்றத்தை அடைந்து பாம்ப்பியின் சிலைக்கருகில் உள்ள ஆசனத்தில் சீஸர் அமர்கிறார்.]

பொப்பிலஸ்: [சீஸரை நெருங்கி மண்டியிட்டு] மேதகு மன்னா! அடியேன் வணக்கம்! நீண்ட காலம் நீங்கள் வாழ வேண்டும்! எனக்கொரு கோரிக்கை! நிறைவேற்ற வேண்டும்! உங்கள் பட்டாபிசேக நாளென்று எனக்கோர் வேண்டுகோள் உள்ளது!

காஸ்ஸியஸ்: [புரூட்டஸிடம் மெதுவாகத் தடுமாறி, ஆங்காரமாய்] புரூட்டஸ்! நமது ரகசியம் கசிந்து யார் காதிலும் பட்டுவிடக் கூடாது! நமது திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும்! நமது மர்மச் சதி சீஸர் காதுக்கு எட்டுவதற்குள், நம் கத்திகள் முந்திக் கொள்ள வேண்டும். நமது சதித் திட்டம் வெளியானால், குத்திக் கொண்டு நான் செத்து வீழ்வேன்! புரூட்டஸ்! கால தாமதம் கூடாது! கத்திகள் விஷ நாக்குகளை நீட்ட வேண்டும், சீக்கிரம்!

புரூட்டஸ்: சற்று பொறு காஸ்ஸியஸ்! புறாவைக் கூண்டில் அடைத்தாகி விட்டது! கையில் பிடிபட்ட புறா நம்மிட மிருந்து தப்ப முடியாது! நாம் அனைவரும் சீஸரைச் சுற்றி முற்றுகை இட வேண்டும்! நேரம் வந்து விட்டது, காஸ்ஸியஸ்! உறங்கும் வாளை ஓசையின்றி உருவுங்கள்!

காஸ்ஸியஸ்: [மெதுவாக] புரூட்டஸ்! அதோ பாருங்கள்! நமது முதல் திட்டம்! காலத்தை அறிந்தவன் திரிபோனஸ்! ஆண்டனியைப் பின்புறமாய்க் கடத்திப் போகிறான்! … [காஸ்காவை நெருங்கி] சரியான சமயம்! சட்டெனச் செய்! சீஸரின் பின்பக்கம் செல்! அங்கே காத்து நில்! முதலில் நீதான் சீஸரின் முடிவு விழாவைத் துவங்க வேண்டும்! போ, காஸ்கா போ! பூனைபோல் நடந்து புலிபோல் தாக்கு! யானை சாகாது ஓரடியில்! அடுத்து அடிமேல் அடி வைப்பது நாங்கள்! போ, காஸ்கா போ! கால தாமதம் வேண்டாம்!

மெத்திலஸ்: [திடீரென சீஸர் காலில் விழுந்து] பராக்கிரமச் சக்கரவர்த்தி! பாராளும் வேந்தே! வல்லமை மிக்க பிரபு! உலகம் சுற்றிய உங்கள் உன்னத பாதங்களில் விழுகிறேன்! என் தமையன் மீது பரிவு கொள்ள வேண்டும்!

ஜூலியஸ் சீஸர்: சக்கரை மொழிகளில் என்னை மெழுகாக்க முனையாதே! கூழைக் கும்பிடு போட்டு வாளை நீட்டாதே! நீ எதற்கு என்னை நெருங்கி வருகிறாய் என்று தெரியும் எனக்கு! நாடு கடத்தப் பட்ட உன் தமையனுக்காக எதுவும் என்னிடம் கேளாதே! அவன் தேசத் துரோகி! தேசத் துரோகிகளை விலங்குபோல் வேட்டையாட வேண்டும்! உயிரோடு அவனை நான் விரட்டியதற்கு நீ பூரிப்படைய வேண்டும்! சீஸர் அவனைத் தண்டித்தது காரணமோடுதான்! போய்விடு!

மெத்திலஸ்: [தலையைத் திருப்பி] மாபெரும் மக்கள் மன்றத்தில் என் குரலுக்கு வேறு ஆதரவு கிடையாதா? என் சகோதரனை மீண்டும் அனுமதிக்க எனக்கு வழிமொழிபவர் எவரு மில்லையா? [எழுகிறான்]

புரூட்டஸ்: [தலை குனிந்து] உங்கள் கரத்தை முத்த மிடுகிறேன் சீஸர், முகத்துதிக்காக இல்லை! மெத்தலஸ் தமையனை நீங்கள் மன்னித்து, மீண்டும் ரோமானிய பிரஜையாக மாற அனுமதிப்பீர்!

ஜூலியஸ் சீஸர்: [ஆச்சரியத்துடன், சினத்துடன்] புரூட்டஸ்! தேசத் துரோகியை நீயுமா மன்னிக்கச் சொல்கிறாய்? மெத்தலஸ் அயோக்கியன்! அவன் தமையன் அவனை விட அயோக்கியன்! அவனை நீ ஆதரித்து மன்னிக்கச் சொல்வது அதை விட அயோக்கியத்தனம்! [புரூட்டஸ் எழுந்து பின் செல்கிறான்]

காஸ்ஸியஸ்: [சட்டென முன் வந்து தலைவணங்கி] மன்னிக்க வேண்டும் சீஸர்! மெத்தலஸ் தமையனை மன்னிக்க வேண்டும் நீங்கள்! தவறுவது மனித இயல்பு! மன்னிப்பது தெய்வ இயல்பு! ஆனால் தண்டிப்பது அரச இயல்பு என்று சொல்ல மாட்டேன் நான்! மெத்தலஸ் தமையனின் தண்டனையை நீக்கி நாடு திரும்ப அனுமதிப்பீர்!

ஜூலியஸ் சீஸர்: காஸ்ஸியஸ்! உன்னைப் போல் நானிருந்தால், உருகிப் போவேன் நானும் ஒருகணம்! பிறரை மாற்ற உன்னைப் போல் பிரார்த்தனை செய்தால், நானும் மெழுகாய்ப் போவேன்! ஆனால் நானொரு துருவ நட்சத்திரம்! அதன் நிலைப்பு மாறாது! அதன் இருப்பிடம் மாறாது! அதன் ஒளிவீச்சு மாறாது! அதுபோல் என் மனமும் மாறாது! அவன் தமையன் வாழ்நாள் முழுதும் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்! ¡வனுக்கு விடுவிப்பில்லை!

சின்னா: [காஸ்ஸியஸ் எழுந்து நகர, மண்டியிடுகிறான்] சீஸர்! சீஸர்! சீஸர்! பரிவு கொள்வீர்! மன்னிப்பீர்! பரிதவிக்கும் பாபியை வர அனுமதிப்பீர்!

ஜூலியஸ் சீஸர்: ஒலிம்பஸ் மலையை யாரும் நகர்த்த முடியாது! அலை, அலையாய் படை எடுத்தாலும், மலையை யாரும் தள்ள முடியாது! ஓநாயை வேங்கை வேட்டையாடத்தான் செய்யும்.

[திடீரெனப் பின்னாலிருந்து கத்தியால் முதுகில் குத்துகிறான் காஸ்கா. ஆவென அலறுகிறார் சீஸர். செனட்டார் அனைவரும் ஆவேசமுடன் எழுந்து, பயந்துபோய் ஆரவாரம் செய்கிறார்கள்.]

காஸ்கா: [ஆங்காரமாய்க் கத்தியை உருவி] ஏன் முடியாது? வேங்கையின் மூச்சை நான் நிறுத்த முடியும்!

[அடுத்தடுத்து தீஸியஸ், சின்னா, காஸ்ஸியஸ், திரிபோனஸ், மெத்தலஸ் ஆகியோர் சீஸர் உடம்பைக் குத்திக் கிழிக்கிறார். சீஸர் தடுமாறிக் கொண்டு புரூட்டஸ் உதவியை நாடி மெதுவாய்ச் செல்கிறார். சட்டெனத் திரும்பிய புரூட்டஸ் தன் கைவாளை உருவி, சீஸரின் வயிற்றில் பாய்ச்சுகிறான்.]

ஜூலியஸ் சீஸர்: [கண்ணீர் சிந்தச் சிந்த] நீயுமா புரூட்டஸ்? பிறகு சீஸர் சாக வேண்டியதுதான்! [பொத்தென பாம்ப்பியின் சிலைக் காலடியில் சீஸர் விழுந்து உயிரை விடுகிறார். மக்கள் மன்றத்தில் கூச்சலுடன் செனட்டர்கள் அங்குமிங்கும் பயந்து ஓடுகிறார்கள்.]

சின்னா: [கையில் வாளை உயர்த்தி] விடுதலை! விடுதலை! ரோமுக்கு விடுதலை! ஏதேட்சை அதிகாரம் ஒழிந்தது! தெருவெல்லாம் முரசடிப்பீர் செனட்டர்களே! செத்தொழிந்தான் சீஸர்! கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது! தேச நேசர்கள் மேடையில் பேசுவார்! வெற்றி நமக்கு! விடுதலை நமக்கு! நல்ல காலம் நமக்கு!

[தீஸியஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் அனைவரும் குருதி சொட்டும் வாளை உயர்த்திக் கொண்டு செத்து வீழ்ந்த சீஸரின் உடலைச் சுற்றி வருகிறார்]

*********************

அங்கம் -5 காட்சி -8

மன்னித் திடுவாய் என்னை!
மண்ணில் துவளும் குருதித் துண்டமே!
கசாப்புக் கடை கொலைஞர் முன்னே
கனிவாய், கோழைபோல் காட்டிக் கொண்டேன்!
காலச் சரித்திர அலை யடிப்பில் என்றும்
மேலாய் நிமிர்ந்து வீழ்ந்த சிதைவுப் பிண்டமே! …

[ஆண்டனி]

 

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

ஓ! பராக்கிரம சீஸரே!
இந்தக் கீழ் மண்ணிலா கிடக்குதுன் மேனி?
உந்தன் வெற்றி, கீர்த்தி, வீராப்பு, மகிமை
சிறுத்துப் போய் இப்படிச் சீரழிந்ததோ?
எந்த உலகும் எனக்குவப் பூட்டா,
இந்த யுகத்தின் உயர்ந்த ஆத்மா ஏகிச்
சிந்திய குருதி ஓடிய தளம்போல்! …

[ஆண்டனி]

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

சீஸரை எதிர்த்தது ஏனெனக் கேட்பின்
நான் தரும் பதில் இதுதான்: நான்
சீஸரைக் குறைவாய் நேசிக்க வில்லை!
நேசித்தேன் ரோமைச் சீஸர்க்கும் மேலாய்!
சீஸர் வாழ்ந்து நாம் அடிமையாய்ச் சாவதினும்,
சீஸர் செத்து ரோமர் விடுதலை மேலாம்!
நேசித்த சீஸரை நினைத்தழு கின்றேன்!
பராக்கிர சீஸரைப் பாராட்டு கின்றேன்,
பேராசை பிடித்ததால், குத்தினேன் வயிற்றில்!
மதிப்பு வல்லமைக்கு! மரணம் பேராசைக்கு!
நாட்டை நேசிக்கா நபரிங்கு உளரோ? ….

(புரூட்டஸ் சொற்பொழிவு)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

விதியின் கொடுமை அறிவோம்.
ஒருநாள் நாம் சாவது உறுதி!
காலத்தை நீடிக்க மனிதர் ஏன்
கவனம் திருப்பிட வேண்டும் ? ….

(புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

மானிட துயர்த்தீ ஓர் பயங்கரச் சக்தி
செப்பணிடும் பண்பை, அறிவை, ஆத்மாவை!
புதுப்பிக்கும் மானிட மகத்து வத்தை!
அதுவே படைப்பின் கண்படா ஆணிவேர்!
ஆக்கப் படுவது அருக முடியாது
அச்சம் ஊட்டலாம்! நம்பிக்கை நீக்கலாம்!
முரணாய், முறிவாய், புரட்சியாய்த் தோன்றலாம்!

பெக் எலியட் மாயோ, பெண் கலைத்துவ மேதை

நினைவில் வைத்திடு நடக்கும் நண்பனே!
உனைப் போல்நான் இருந்தேன் ஒருநாள்!
எனைப்போல் நீயும் ஆவாய் ஒருநாள்!
எனைத் தொடர்ந்து வரத் தயாராய் இரு!

ஒரு கல்லறை வாசகம்

நாடகப் பாத்திரங்கள்:

ரோமாபுரியில்: தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

 

நேரம், இடம், கட்டம்சீஸர் பட்டாபிசேக தினம். பகல் வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடியுள்ளது. பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் சீஸர் படுகொலை செய்யப்பட்டு குருதி ஓட விழுந்து கிடக்கிறார்.

 

நாடகப் பாத்திரங்கள்

 

ஜூலியஸ் சீஸர், தீஸியஸ், புரூட்டஸ், ஆண்டனி, காஸ்ஸியஸ், காஸ்கா மற்றும் பல ரோமானிய செனட்டர்கள்.

 

காட்சி அமைப்பு

 

மார்ச் பதினைந்தாம் தேதி பகல் வேளை. தீஸியஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா, மெத்தலஸ், திரிபோனஸ், ஆர்டிமிடோரஸ், பொப்பிலஸ் மற்றும் சில செனட்டர்கள், குத்தப்பட்டுச் செத்துக் கிடக்கும் ஜூலியஸ் சீஸர் உடலைச் சுற்றிலும் நிற்கிறார்கள். செனட்டரும், பொது மக்களும் பயந்து போய் ஓடுகிறார்கள்.

சின்னா: [கையில் வாளை உயர்த்தி] விடுதலை! விடுதலை! ரோமுக்கு விடுதலை! ஏதேட்சை அதிகாரம் ஒழிந்தது! செத்தொழிந்தான் சீஸர்! தெருவெல்லாம் முரசடிப்பீர் செனட்டர்களே! கொடுங்கோல் ஆட்சி ஒழிந்தது! நாட்டு நேசர்கள் மேடையில் பேசுவார்! வெற்றி நமக்கு! விடுதலை நமக்கு! நல்ல காலம் நமக்கு!

காஸ்ஸியஸ்: மேடையில் ஏறிப் பேசு சின்னா! [வாளை உயர்த்தி] விடுதலை முழக்கம் ரோமாபுரி முழுவதும் ஒலிக்க வேண்டும்! குரலை உயர்த்து! கதவுகளை ஊடுறுவி உன் விடுதலை முழக்கம் செல்ல வேண்டும்!

புரூட்டஸ்: செனட்டர்களே! பொதுமக்களே! பயந்து ஓடாதீர்! உங்கள் உயிருக்குப் பங்கமில்லை! நமது பகைவர் செத்து வீழ்ந்தார்! எங்கள் கடமை முடிந்தது! ஓடாதீர்! உங்களை யாரும் தாக்கப் போவதில்லை! உங்களுக்காக, ரோமா புரிக்காகச் சீஸரை வீழ்த்தினோம்.

காஸ்ஸியஸ்: மேடையில் நின்று பேசுங்கள் புரூட்டஸ்! பண்பாளர் உங்கள் மொழிக்கு மதிப்புண்டு!

புரூட்டஸ்: [திடீரென] எங்கே ஆண்டனி? கடத்திப் போனவர் என்ன ஆனார்? சீஸர் செத்து வீழ்ந்தது தெரியுமா ஆண்டனிக்கு?

திரிபோனஸ்: புரூட்டஸ்! ஆண்டனி தன் இல்லத்துக்கு ஓடி விட்டதாய் அறிந்தேன்! சீஸர் கொல்லப் பட்டதை யாரோ சொல்லி யிருக்க வேண்டும்! பிரளயம் வந்து விட்டதாய் எண்ணி வீதியில் ஆண், பெண், சிறுவர், முதியோர் அலறிக் கொண்டு ஓடுகிறார். ஆண்டனியும் அப்படி ஓடிவிட்டார்.

புரூட்டஸ்: விதியின் விளையாட்டை நாம் அறிவோம். ஒருநாள் நாம் சாவது உறுதி! ஆயுளை நீடிக்க மனிதர் கனவு காண்பது விந்தையே!

காஸ்கா: ஏன் புரூட்டஸ்? இருபது வருட ஆயுளை ஒருவன் வெட்டி விட்டால், அத்தனை வருட மரணப் பயம் அகற்றப் படுகிறது!

புரூட்டஸ்: அப்படியானால் மரணம் வரவேற்கப்பட வேண்டிய நன்மையாயிற்றே! சீஸருக்கு அத்தகைய வெகுமதி அளித்ததைக் கொண்டாடுவோம். அவரது மரணப் பயத்தைக் குறைத்தோம்! நண்பர்களே! சீஸரைச் சுற்றி வட்டமாய் வாருங்கள்! நமது கரங்களைச் சீஸர் குருதியில் குளிப்பாட்டுவோம்! முழங்கை வரையிலும் பூசிக் கொள்வீர்! கை வாளையும் குருதியில் மூழ்க்குவீர்! குருதி சிந்தச்சிந்த அவ்வாளை உயர்த்திக் கொண்டு அங்காடித் தெருவில் நாம் நடந்து செல்வோம்! எல்லாரும் ஒருங்கே முழக்குவோம்: ரோமுக்கு விடுதலை! சமாதானம்! குடியரசு!

காஸ்ஸியஸ்: ரோமாபுரிக்கு விடுதலை அளித்த வீரரென்று நம்மை வருங்காலம் பாராட்டும்! வரலாற்று நூல்களில் நமது பெயரைப் பதிவாக்கி நிரந்தர மாக்கும்! ரோமாபுரி நகரில் நமது சிலைகளை நட்டு மதிப்பளிக்கும்! நம் எல்லாரையும் புரூட்டஸ் வழிநடத்த, அவருக்கு ஆதரவு அளிப்பீர்! ஒதுங்கி நிற்பீர்! முன்னே செல்லட்டும் புரூட்டஸ்! பின்பற்றிச் செல்வோம் நாமெல்லாம்! ரோமாபுரி பெற்றெடுத்த பண்பாளர், பராக்கிரசாலி நமது புரூட்டஸ்! அங்காடி வீதிக்கு அவர் பின்னால் செல்வோம்.

புரூட்டஸ்: [மெதுவான குரலில்] அமைதி! பேச்சை சற்று நிறுத்துவீர்! … யாரிங்கே வருவது? அதோ ஆண்டனியின் வேலைக்காரன்.

[ஆண்டனியின் வேலையாள் நுழைகிறான்]

வேலைக்காரன்: [புரூட்டஸ் முன் மண்டியிட்டு] என் பிரபு இப்படித்தான் உங்களை வணங்கச் சொன்னார். புரூட்டஸ் பண்பாளர், உண்மையாளர், வல்லவர், அறிவாளி என்று பாராட்டுகிறார். சீஸரைத் தைரியசாலி, பராக்கிரசாலி, திறமையான ஆட்சியாளர் என்று போற்றுகிறார். புரூட்டஸை நேசிப்பதாகவும், மதிப்பதாகவும் சொல்கிறார் அவர். சீஸருக்கு அவர் பயந்ததாகவும், ஆனால் நேசித்ததாகவும், மதித்ததாகவும் சொல்கிறார். உங்களைச் சந்திக்க அவர் வருவதில், உங்களுக்கு விருப்பம் உண்டா என்று கேட்கச் சொன்னார். பிரச்சனைகளைத் சமாதானமாய்த் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். சீஸரைக் கொலை பண்ணியது சரியா என்று மனமுடைகிறார். சீஸர் வீழ்ந்ததை மார்க் ஆண்டனி விரும்ப வில்லை! ஆயினும் நன்னம்பிக்கையுடன் உங்களிச் சந்திக்க விழைகிறார் என் அதிபதி! அவர் வருவதற்கு அனுமதி தருவீரா?

புரூட்டஸ்: அனுமதி உண்டு ஆண்டனிக்கு! உன் அதிபதி உயர்ந்த ரோமன்! அழைத்து வா எங்களிடம்! அவருக்கு ஒரு தீங்கும் நேராது! எந்த இடரின்றி அவர் திரும்பிச் செல்லலாம்! போ, அவரை உடனே அழைத்து வா! அன்றும் அவர் எங்கள் நண்பர்தான்! இன்றும் அவர் எங்கள் நண்பர்தான்!

[வேலைக்காரன் போகிறான்]

காஸ்ஸியஸ்: [கவனகாக] புரூட்டஸ்! பழைய ஆண்டனி வேறு! புது ஆண்டனி வேறு! ஆண்டனி எப்படி மாறிப்போய் உள்ளார் என்று நமக்குத் தெரியாது! குத்துப்பட்டு செத்துக் கிடக்கும் சீஸரைப் பார்த்தால், ஆண்டனி இதயம் கொதித்து நம்மை எதிர்த்தால் என்ன செய்வது? தனியாக வராமல், ரோமானியப் படையுடன் வந்து நம்மைத் தாக்கினால் என்ன ஆவது? சிந்திக்காமல் சீஸரின் தோழனை நாம் நண்பன் என்று எதிர்பார்க்கலாமா?

புரூட்டஸ்: கவலைப் படாதே காஸ்ஸியஸ்! நம்மைத் தாக்கும் திட்டம் உடையவன் முதலில் தன் பணியாளை அனுப்பி நம்மிடம் அனுமதி கேட்க மாட்டான்! திடீரென நம்மைத் தாக்க மாட்டானா? … அமைதி! ஆண்டனி வருவது போல் தெரிகிறது.

[ஆண்டனி தனியாக நுழைகிறார். அவரது விழிகள் கீழே வீழ்ந்து கிடக்கும் சீஸரை முதலில் காண்கின்றன]

ஆண்டனி: [சீஸர் உடலை நெருங்கி மண்டியிட்டுக் கண்ணீருடன்] அந்தோ, பராக்கிரம சீஸரே! படுத்துள்ள இடம் இத்தனைக் கீழான மண் தளமா? உங்கள் வெற்றி, கீர்த்தி, வீராப்பு, மகிமை எல்லாம் குறுகிப் போய் இத்தனை கீழான நிலைக்குச் சிறுத்து விட்டதா? [புரூட்டஸை நோக்கி] பெருந்தன்மை கொண்டவரே! யார் யாரெல்லாம் இன்னும் தம் உயிரைப் போக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளீர்? யார் யார் குருதி எல்லாம் சீஸர் குருதியுடன் கலக்க வேண்டும் என்று வரிசைப் படுத்தியுள்ளீர்? உமது வாளில் குருதி உலர்வதற்குள் வேலையை முடித்து விடுவீர்! ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும், இப்படி ஒரு தருணமும், தளமும் வாய்க்கா எனக்கு! இந்த யுகத்தின் மகத்தான ஆத்மாவின் அருகிலே நானும் அடங்கிப் போவது, பூரிப்பு அளிக்கும் எனக்கு!

புரூட்டஸ்: [பரிவுடன்] அப்படி எண்ணாதே ஆண்டனி! உன் மரணத்தை எங்களிடம் கேட்காதே ஆண்டனி! நீ ஓர் உயர்ந்த ரோமன்! சீஸரை வீழ்த்தி நாங்கள் ரோமின் விடுதலையைக் காத்தோம்! எங்கள் கைவாள் விடுதலை அளிப்பது! கசாப்புக்கடை அரிவாள் போல் ஆடுகளின் கழுத்தை அறுப்பபை அல்ல! குருதி சிந்திடும் எங்கள் கத்தியைப் பார்க்காதே! குணமுள்ள எமதினிய இதயத்தைப் பார்! எமக்கு நீ பகைவன் அல்லன்! நாங்கள் உனது நண்பர்! நம்பிடு எங்களை! நாங்கள் உன்னை மதிக்கிறோம்! எங்கள் புரட்சியை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்! எங்கள் நாட்டு பணிக்கு நீ நல்லாதரவு அளிக்க வேண்டும்.

ஆண்டனி: [கண்ணீர் சொரிய] சீஸர் ஓர் உன்னத ரோமானியர்! உயர்ந்த ரோமானியர் எல்லாம் உயிரைக் கொடுக்க நேரிடுதே! அதனால் உங்கள் கையாலே நானும் உயிரிழக்கத் தயார். சீஸருக்கு நான் வாழ்விலும் தோழன்! சாவிலும் தோழனாக விழைகிறேன்! ஆனால் சாவதற்கு முன்னொரு வேண்டுகோள்! ..[தயக்கமுடன்] .. நீங்கள் ஏன் சீஸரை வீழ்த்தினீர் என்று காரணம் சொல்வீரா?

புரூட்டஸ்: கவலைப் படாதே ஆண்டனி! காரணத்தைச் சொல்கிறேன் உனக்கு! அங்காடி மேடையில் நானின்று பேசப் போகிறேன்! கேட்டுக்கொள் ஆண்டனி! ஆனால் கேட்ட பிறகு நீ உன்னுயிரைக் கொடுக்க வேண்டாம்! உன்னுயிர் எம்மால் நீக்கப் படாது! சீஸரைத் தீர்த்துக் கட்டிய பிறகு, எங்கள் கடமை தீர்ந்தது! நாட்டுக்கு விடுதலை! நாட்டுக்குக் குடியரசு! நாட்டுக்கு நல்ல காலம்!

ஆண்டனி: சீஸர் மடிந்ததால் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்குதா? எனக்குப் புரிய வில்லை! உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும்! குருதி கலந்த உங்கள் கரங்களை நீட்டுங்கள்! ஒவ்வொன்றாக நான் குலுக்க வேண்டும்! நாட்டுக்கு நீங்கள் செய்த நற்பணிக்கு நன்றி! புரூட்டஸ்! பொன்னான உன் கரத்தை முதலில் கொடு! [குலுக்குகிறான்] அடுத்து காஸ்ஸியஸ் உன்கரம். [குலுக்குகிறான்] அடுத்து தீஸியஸ், மெத்தலெஸ், சின்னா, காஸ்கா. உங்கள் மகத்தான செயலுக்கு நன்றி! நண்பர்களே! சீஸரை நேசித்த நான், அவரைக் கொன்ற உங்கள் கைகளைக் குலுக்குவது சரியில்லைதான்! அவரது சடலத்துக்கு அருகில், குருதி உலர்வதற்குள் அவரது எதிரிகளுடன் உடன்படிக்கை செய்கிறேன். [கதறி அழுகிறான்]

காஸ்ஸியஸ்: ஆண்டனி! என்ன சொல்கிறாய் நீ? முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாயே!

ஆண்டனி: மன்னித்துடு காஸ்ஸியஸ்! தெரியாமல் உளறிவிட்டேன்! நண்பர்கள் நீங்கள்! சீஸர் போனபின் நீங்கள்தான் என் நண்பர்! மறந்து விட்டேன், மன்னிப்பீர்!

காஸ்ஸியஸ்: சீஸரைப் பற்றி நீ புகழ்வதை யாம் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் எம்மை மட்டும் திட்டாதீர்! நாங்கள் அனைவரும் ஆழ்ந்து தர்க்கம் செய்து எடுத்த முடிவிது! உனக்குத் தெரியாது!

ஆண்டனி: ஆம், தெரியாது எனக்கு! சீஸரை நீவீர் கொன்றதுக்குக் காரணம் சொல்வீரா? சீஸரால் ரோமுக்கு என்ன அபாயம் நேரும் என்பதை விளக்குவீர் எனக்கு!

புரூட்டஸ்: ஆண்டனி! சீஸரின் புதல்வன் நீ! நிச்சயம் சொல்வேன் உனக்கு! அங்காடி மேடைக்கு வா!

ஆண்டனி: [தயக்கமுடன்] முதலில் ஓர் அனுமதி வேண்டும், புரூட்டஸ்! சீஸரின் உடலை மேடையில் கிடத்திப் பேச வேண்டும் நண்பன் என்ற முறையில்! அனுமதிப்பீரா?

புரூட்டஸ்: அனுமதி உண்டு ஆண்டனி உனக்கு! சீஸரின் பிரேதப் பேச்சை நிகழ்த்த நீயே தகுதி யானவன்! அவரது ஈமக் கிரியைகளை நீ செய்! அனுமதி அளிக்கிறோம்!

காஸ்ஸியஸ்: [மிக்க கவனமாக] பொறு புரூட்டஸ்! தனியாகப் பேச வேண்டும் நான் உன்னுடன்! [தனியாக ஒதுக்குப் புறத்தில் இருவரும் போய்] என்ன செய்கிறீர் என்று தெரிகிறதா? ஆண்டனி அங்காடி மேடையில் பேசுவதற்கு ஒப்புக்கொள்ளாதீர்! சீஸர் பிரேதத்தை முன்வைத்து, ரோமானியர் கல்நெஞ்சைக் கூடக் கரைத்து விடுவான் ஆண்டனி!

புரூட்டஸ்: முதலில் நான் பேசிச் சீஸரைக் கொன்றதின் காரணத்தைக் கூறுவேன்! நம் அனுமதியில் பேசும் ஆண்டனி தடம் மாறினால், தடுப்பேன் நான்! சீஸருக்குப் பிரேத அடக்கம் செய்ய சட்டப்படி ஆண்டனிக்கு அனுமதி அளிப்பதில் நமக்குத்தான் பாராட்டு.

காஸ்ஸியஸ்: என்ன நேருமோ என்பது தெரியாது! புரூட்டஸ்! உமது கூற்றில் நம்பிக்கை யில்லை எனக்கு! ஊமையாகத் தோன்றும் ஆண்டனி ஓர் எரிமலை என்று உமக்குத் தெரியாது!

புரூட்டஸ்: ஆண்டனி! சீஸரின் உடலை நீ தூக்கிச் செல்! அனுமதி உண்டு ஆண்டனி உனக்கு! மேடையில் சீஸரின் மேன்மையைப் பற்றிப் பேசு! பிரேதப் பேச்சில் விடுதலை வீரரைத் திட்டிப் பேசாதே! பேச்சு மீறினால், பிரேத அடக்கம் நிறுத்தப்படும்! உன்னக்கோர் எச்சரிக்கை அது! கவனம் வை! நான் பேசிய அதே தளத்தில் நின்றுதான் நீ உரையாற்ற வேண்டும்! குருதியில் ஊறிய உடலைத் துடைத்துத் தூக்கிக் கொண்டு வா! அல்லாவிட்டால் பார்ப்போர் மயங்கிப் போய் விழுவார்! நாங்கள் போகிறோம். எம்மைத் தொடர்ந்து வா!

[அனைவரும் ஆண்டனியைத் தனியே விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள்]

ஆண்டனி: [சீஸரின் உடலை உற்று நோக்கி] குருதியில் துவண்ட மண் துண்டமே! மன்னிப்பாய் என்னை! கசாப்புக் கடைக் கொலைஞர் முன்னே, கனிவாகக் கோழையாகக் காட்டிக் கொண்டேன்! மேலாக வாழ்ந்து சிதைக்கப் பட்ட மேதை மனிதரே! காலச் சரித்திரம் செதுக்கி வைத்த சிலையே! விலை மதிப்பில்லா உன் குருதியை வெளியாக்கிய கரங்களைக் கைகுலுக்கியதற்கு வேதனைப் படுகிறேன். இந்தக் கொடுமையான நாற்றம் பூமிக்கு மேலே போகும்!

[அப்போது செனட்டர் அக்டேவியஸின் பணியாள் வருகிறான்]

ஆண்டணி: [சட்டென எழுந்து] நீ அக்டேவியஸின் வேலைக்காரன் அல்லவா?

பணியாள்: ஆம், மார்க் ஆண்டனி!

ஆண்டனி: அக்டேவியஸ் ரோமுக்கு வரவேண்டும், பட்டாபிசேகத்தில் பங்கு ஏற்க வேண்டும் என்று சீஸர் அழைப்பு விட்டிருந்தார்.

பணியாள்: ஆம், அந்தக் கடிதம் கிடைத்தது. அக்டேவியஸ் ரோமை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். [அப்போது குனிந்தவன் குருதியில் துவண்ட சீஸரின் உடலைக் காண்கிறான்; ஆ வென்று அலறி] மேதகு சீஸர்! என்ன! செங்கோல் வேந்தருக்குச் செங்குருதிப் பட்டாபிசேகமா இது? [கதறி அழுகிறான்]

ஆண்டனி: அழாதே! திரும்பிப் போ! அக்டேவியஸ் ரோமுக்கு வருவதை நிறுத்து! ரோமில் பயங்கரப் பூகம்பம் ஏற்பட்டுள்ளது! அதற்கு முதற்பலி ஆகிவிட்டார் சீஸர்! அடுத்தது நானாக இருக்கலாம்! அப்புறம் அக்டேவியஸ்! போ! ஓடிப் போ! அக்டேவியஸ் ரோமில் தடம் வைத்தால், அவர் தலை துண்டிக்கப் படலாம்! போ! போ! போ!

[பணியாள் ஓடுகிறான்]

ஆண்டனி: ரோமில் காட்டு மிருகங்கள் வேட்டையாட நுழைந்து விட்டன! ரோம் ஒரு பயங்கர நகரம்! சீஸருக்கு பிறகு ஆண்டனி! ஆண்டனிக்குப் பின்னே அக்டேவியஸ்! சீஸர் சடலத்தின் மீது பேசும் உரையில் நான் கேட்கப் போகிறேன்! சீஸர் உடலைக் குத்திக் குத்திக் கூறாக்கியது ஏனென்று கேட்கப் போகிறேன்! யாரெங்கே? சீஸரை என் கரங்களில் தூக்கிச் செல்ல வேண்டும்! என் கடைசி உரைகள் அவர் காதில் விழவேண்டும்! அவரது ஈமக் கிரியைகளை என் கரங்கள் செய்ய வேண்டும். சீஸரின் புதல்வன் எனப்படும் நான் அவர் உத்தம உடலுக்குத் தீ வைக்க வேண்டும்!

[பணியாள் வந்து உதவி செய்ய, ஆண்டனி சீஸர் சடலத்தைத் தூக்கிச் செல்கிறார்]

*********************

அங்கள் -5 காட்சி -9

உறவு என்றொரு விதி இருந்தால்
பிரிவு என்றொரு முடி விருக்கும்!
கனவுக்குப் பின்னோர் கதை பிறந்தால்,
சிதைவுக்கு வாசல் திறந்தி ருக்கும்!
உலகுக்கு வழங்கும் ஈசன்,
கொடுத்த வற்றை எல்லாம்
எடுத்துக் கொள்வான் மீண்டும்!
தொட்ட பணிகளை
அற்று விடுவான் முடிக்க விடாமல்!

******

கதறி அழும் ரோமிங்கே!
பயங்கர ரோமிங்கே!
எனது மரண உரையைக் கேட்ட பின்
எப்படி ஏற்பர் மக்கள்,
இரத்த வெறியர் கோரச் செயலை?

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

நாடகப் பாத்திரங்கள்

ரோமாபுரியில்

தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

நேரம், இடம், கட்டம்: சீஸர் பட்டாபிசேக தினம். மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் சீஸர் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கிறார். ஆண்டனி சீஸர் உடலை ஏந்திக் கொண்டு அங்காடி மேடைக்குப் போகிறார். மனமுடைந்த கல்பூர்ணியாவைக் காண கிளியோபாத்ரா மகனுடன், பாதுகாவலருடன் அவளது மாளிகைக்குச் செல்கிறாள்.

நாடகப் பாத்திரங்கள்

 

கல்பூர்ணியா, அக்டேவியா, போர்ஷியா கிளியோபாத்ரா, மகன் சிஸேரியன், பாதுகாவலர், மற்றும் சேடியர்.

 

காட்சி அமைப்பு

 

மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. கண்ணீரும் கம்பலையுமாய்ப் படுக்கையில் கல்பூர்ணியா அழுது கொண்டிருக்கிறாள். ஆண்டனியின் மனைவி அக்டேவியா, புரூட்டஸின் மனைவி போர்ஷியா ஆறுதல் கூறி அருகில் நிற்கிறார்கள். அப்போது கிளியோபாத்ரா நுழைகிறாள்.

அக்டேவியா: [மிகக் கனிவோடு] கல்பூர்ணியா! அழுது, அழுது கண்ணீர் ஆறாய் ஓடுகிறது! கண்ணீர் சுரப்பிகள் காய்ந்து போய் விட்டன! தொண்டை நீர் வரண்டு போனது! ராத்திரி உறக்க மில்லாததால் கண்விழிகள் வெளியே வந்து விட்டன! புலம்பிப் புலம்பி உன் நெஞ்சும் குழிந்து போனது. வயிற்றில் உணவின்றிக் கிடக்கிறாய்! எழுந்து சிறிது பழரசத்தைக் குடி! அல்லாவிட்டால் நீயும் சீஸரோடு சேர்ந்து போய் விடுவாய்.

கல்பூர்ணியா: [சிறிது தெளிவுடன்] சீஸரோடு போகத்தான் ஆசை! எப்படி உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்றொரு வழியைக் காட்டு! நான் எதற்கினி உயிர் வாழ வேண்டும்? பிள்ளையும் கிடையாது! பதியும் கிடையாது. நஞ்சைக் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வேன். எத்தனை முறை தடுத்தேன் அவரை? மன்றத்துக்குப் போக வேண்டாம், போக வேண்டாம் என்று மன்றாடினேன்! கேட்டாரா? பாவிச் செனட்டர் தீஸியஸ் பதியை ஏமாற்றி இழுத்துச் சென்றான்! இடி, மழை, புயல், மின்னல் எதுவும் அவரை நிறுத்த முடிய வில்லை.

போர்ஷியா: [கண்ணீருடன்] உன் துயருக்கு என் கணவரும் ஒரு காரண கர்த்தா என்று அறிந்து வருந்துகிறேன், கல்பூர்ணியா! நான் கேட்கக் கேட்கச் சொல்லாமல் மர்மாய்ச் செய்த படுகொலை இது! என் பதிக்குக் கிடைக்கும் தண்டனை எனக்கும் கிடைக்க வேண்டும்! செனட்டார் சேர்ந்து படுகொலை செய்ய சீஸர் செய்த குற்றம்தான் என்ன?

கிளியோபாதா: [அழுது கொண்டு] கல்பூர்ணியா! நானும் சீஸரைத் தடுத்தேன்! என் எச்சரிக்கையையும் மீறித்தான் சென்றார்! ரோமாபுரிக்கு மீள வேண்டாம், சற்று பொறுங்கள் என்று எகிப்திலேயே தங்க வைக்க முயன்றேன். கேட்க வில்லை சீஸர்! [போர்ஷியாவை முறைத்து] எதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறாய் நீ? நீ புரூட்டஸைத் தடுக்க நிறுத்தி இருக்கலாம். ஆனால் தடுக்க வில்லை! சதியைப் பிறருக்குத் தெரிவித்திருக்கலாம். ஆனால் தெரிவிக்க வில்லை! புரூட்டஸ் தலைமையில் பல நாட்களாய்ச் சதிக் கூட்டம் மர்மமாய் நடமாடியது உனக்குத் தெரியாதா?

போர்ஷியா: கிளியோபாத்ரா! நான் விடும் கண்ணீர் மெய்யானது! உண்மையைச் சொல்கிறேன்! என் வீட்டில்தான் செனட்டர் கூட்டம் நேற்று நடுநிசியில் குசுகுசுவெனப் பேசி முடிவெடுத்தது! என்ன பேசினார்கள் என்பது மெய்யாகத் தெரியாது எனக்கு! கூட்டம் சென்றபின் புரூட்டஸைக் கேட்டேன். மன்றாடிக் கேட்டேன். பலனில்லை கிளியோபாத்ரா [அழுகிறாள்]. நான் சீஸரைக் காப்பாற்றி யிருக்க முடியும். ஆனால் முடியாமல் போனதே! [கதறி அழுகிறாள்]

கிளியோபாத்ரா: கல்பூர்ணியா! என் பதியாக சீஸர் எகிப்தில் வாழ்ந்தாலும், மெய்யாக சீஸர் உன் பதி! நீ பறிகொடுத்தது என் பதியில்லை! அவர் உன் பதி! சீஸர் எனக்கோர் விருந்தாளி! இப்போது நான் கண்ணீர் விடுவது, என் பதிக்கில்லை! உன் பதிக்கு!

கல்பூர்ணியா: அப்படியானால் சீஸரின் அருமைப் புதல்வன் சிஸேரியன் கதி என்ன? அவன் உன் மகன் அல்லவா? நானிழந்தது போல் சீஸரை நீ யிழக்க வில்லையா?

கிளியோபாத்ரா: எகிப்தை விட்டுச் சீஸர் எப்போது நீங்கினாரோ, அப்போதே எங்கள் உறவும் அற்று விட்டது, கல்பூர்ணியா! ஆனால் சிஸேரியன் என் மகனாயினும் அவன் சீஸரின் வாரிசு! ரோமா புரியின் எதிர்கால வேந்தன்! சீஸர் போனாலும், அவனை உன்னிடம் விட்டுச் செல்லலாமா என்று சிந்திக்கிறேன்!

கல்பூர்ணியா: ஐயோ வேண்டாம் கிளியோபாத்ரா! வேண்டாம்! ரோமா புரியில் வேந்தராய் மகுடம் சூடப் போன சீஸருக்கு என்ன கதி ஆகி விட்டது? அதே கதிதான் சீஸரின் வாரிசுக்கும் கிடைக்கும்! நான் சொல்வதைக் கேள்! சீஸர் போனபின் சிறுவன் உன் மகன் என்பதை மறவாதே! உனக்குப் பகைவர்கள் மிகுதி ரோமா புரியில்! நீயினித் தங்குவது உனக்கு அபாயம்! சிறுவன் சிஸேரியனுக்கும் அபாயம்! சீக்கிரம் போய்விடு கிளியோபாத்ரா! போய்விடு! உன்னுரைக் காப்பாற்றிக் கொள்! உன் மகன் உயிரைக் காப்பாற்றிக் கொள்! கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! சீஸருக்கு வந்த கத்திகள் அடுத்துச் சீஸரின் நேசருக்கும் வரும் என்பதை மறவாதே!

கிளியோபாத்ரா: [சிந்தித்துக் கவலையோடு] நல்ல யோசனை கல்பூர்ணியா! ஆம், நாங்கள் தங்கி யிருப்பது நல்லதல்ல! செல்கிறோம் இப்போதே! யாருக்கும் தெரிய வேண்டாம்! ஆனால் ஆண்டனிக்கு மட்டும் சொல்லலாம். நான் வருகிறேன். கடவுள்தான் உனக்கும், ரோமா புரிக்கும் பரிவு காட்ட வேண்டும். [கிளியோபாத்ரா மகனுடன் விரைவாக வெளியேறுகிறாள்]

*********************

அங்கம் -5 காட்சி -10

ஆண்டனி ஆற்றிய மரணப் பேருரை

 

பிறந்தவன் எவனும் மரணத்தின்
பிடியிலிருந்து தப்ப முடியாது !
மரணம் அனைவ ருக்கும் நண்பன்!
எல்லா விதத் துயர்களி லிருந்தும்
நமக்கு அது விடுதலை அளிப்பதால்,
நம் நன்றி உணர்வுக் குரியது!

 

மகாத்மா காந்தி (1869-1948)

சீஸரை சிறிதுதான் நேசித்தேன் எனச்
சிந்திக் காதீர், ரோமர்காள்! நான்
நேசித்தது மிகையாய் ரோமா புரியென
நினைத் திடுவீர் அன்பர்காள்!
சீஸர் வாழ்ந்து நீவீர் எல்லாம்
அடிமையாய் மடிவதை விட,
சீஸர் செத்து நீவீர் எல்லாம்
விடுதலை அடைவது மேலானது!
சீஸருக்கு விடுகிறேன் கண்ணீர், நெருங்கி
நேசித்ததால் அவர் என்னை! ஆயினும்
சீஸரைக் குத்தினேன் வாளால், அவர்
ஆசை தன்னை அழித்திட ! ….

(புரூட்டஸ்)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

ரோமாபுரியில்

 

தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

 

நேரம், இடம், கட்டம்

 

சீஸர் பட்டாபிசேக தினம். மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கும் சீஸர் உடலை ஏந்திக் கொண்டு ஆண்டனி அங்காடி மேடைக்கு வருக்கிறார். மேடை முன்பு ரோமானியர் மரணச் சடங்கு உரைகளைக் கேட்க ஆர்வமோடு, ஆரவாரமோடு நிற்கிறார்கள்.

 

நாடகப் பாத்திரங்கள்

 

புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஆண்டனி, ஆண்டனியின் தோழர்கள், ரோமானிய மக்கள்.

 

காட்சி அமைப்பு

 

அங்காடி மேடையில் புரூட்டஸ் முதல் பேச்சாளராய் நிற்கிறார். பக்கத்தில் காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் ஏனைய சதிகாரர் கையில் குருதியில் மூழ்க்கிய கைவாளை ஏந்தி விடுதலை வீரர்களாய்க் காட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள்.

பொதுமக்கள்: [கூக்குரலில்] பேசுங்கள்! புரூட்டஸ் பேசுங்கள்! சீஸரைக் கொன்றதின் காரணம் சொல்வீரா? காத்திருக்கிறோம் உங்கள் பேச்சைக் கேட்க.

புரூட்டஸ்: [கையை உயர்த்தி] அமைதி! ரோமானியரே! அமைதி! என்னுரையைக் கேட்பீர்! சீஸரைக் கொன்ற எமது காரணம் கேட்பீர். என்னுரையைக் கேட்பவர் என்முன் தங்குவீர்! அதோ காஸ்ஸியஸ்! அவர் உரையைக் கேட்க அவர் பின்னால் செல்வீர்.

பொதுநபர் ஒருவர்: உங்கள் பேச்சைக் கேட்பேன் நான். நீங்கள்தான் பிரதானத் தலைவர் சதிக்கு!

புரூட்டஸ்: ரோமர்களே! குடிமக்களே! அன்பர்களே! பொறுமையாய் இருப்பீர் இறுதிவரை. அமைதியாய்க் கேட்பீர்! எனது பண்பான தேசப் பணிக்கு மதிப்பளிப்பீர்! உங்கள் தெளிந்த ஞானத்தால் என்னை எடை போடுங்கள்! உங்கள் அறிவு விழித்து எழட்டும்! உங்களில் ஒருவர் சீஸரைக் கொன்றது ஏனென்று கேட்டால் என் பதிலிதுதான்! சீஸர் மீது நான் கொண்ட நேசிப்பு சிறிதில்லை! ஆனால் ரோமின் மீது நான் கொண்ட பற்று மிகுந்தது! அதுதான் காரணம்! சீஸர் ஏதேட்சைவாதியாய்த் தலைதூக்கி, ரோமானியர் அடிமைகளாய்க் கிடப்பதை விட, சீஸர் செத்து மடிந்து நீவீர் விடுதலை அடைவது மேல் அல்லவா? என்னை நேசித்த சீஸர் இறந்து போனதற்குக் கதறி அழுகிறேன்! ஆனால் அவரது பேராசையை ஒழிக்க அவரைக் கூரிய வாளால் குத்தினேன்! சீஸரின் பராக்கிரமத்திற்கு மெச்சுகிறேன்! ஆனால் அவரது பேராசைக்கு முடிவு அவரின் மரணம்தான்! யாரிங்கே உள்ளார் அடிமைகளாய் வாழும் ஆசையோடு? வாரீர் என் முன்னே! உங்களை நான் அவமதித்து விட்டேனா? யாரிங்கே உள்ளார் நாட்டின் மீது வாஞ்சை யில்லாதவர்? சொல்லுங்கள் பதில்! காத்திருக்கிறேன் உமது கருத்தறிய!

கூட்டத்தில் சிலர் குரல்: இல்லை புரூட்டஸ்! இல்லை! நீவீர் செய்தது நியாயமே! சீஸருக்கு உகந்த வெகுமதி கிடைத்தது! நாட்டுக்கு செய்த உமது பணி உயர்ந்தது! ஈடு இணை அற்றது! பாராட்டுகிறோம் உம்மை! உன்னத தேச நேசர் சீஸரில்லை! உண்மையான தேச நேசர் நீங்கள்தான், புரூட்டஸ் நீங்கள்தான்! யாரையும் அவமதிக்க வில்லை நீங்கள்!

புரூட்டஸ்: அப்படியானால் எவரையும் நான் அவமதிக்க வில்லை! கேட்கப் பூரிப்பாக உள்ளது. சீஸருக்கு நான் செய்தது போல்தான், நீங்கள் புரூட்டஸ¤க்குச் செய்கிறீர். நல்லது. கேளுங்கள்! சீஸரின் மரணச் சம்பவம் மக்கள் மன்றத்தில் பதிவாகி விட்டது! அவரது வெற்றிகள், சாதனைகள் எவையும் புறக்கணிக்கப்பட வில்லை! அதுபோல் சீஸரின் தவறுகள் எவையும் உயர்த்தப்பட்டு மேலாக எழுதப்பட வில்லை! சீஸர் செத்ததால் ரோமாபுரிக்கு விடுதலை! எங்கள் கடமை தீர்ந்தது!

[அப்போது ஆண்டனி சீஸரின் உடலைத் தாங்கிய வண்ணம், கண்ணீர் சொரிய மேடை நோக்கி வருகிறார்]

புரூட்டஸ்: ஈதோ! பாரீர்! துக்கப்படும் ஆண்டனியின் கரங்கள் ஏந்தி, சீஸரின் சடலம் வருகிறது! ஆண்டனி ஓர் உத்தமர்! சீஸரின் மரணத்தில் எங்களுடன் பங்கேற்க வில்லை ஆண்டனி! ஆனால் சீஸர் மரணத்தின் பலாபலனை முற்றும் அடைவார்! விடுதலை அடைந்த ரோமின் குடிமக்களில் ஒருவராய் இடம் பெறுவார்! சீஸர் மரணத்தால் உமக்குக் கிடைக்கும் வெகுமதி, நண்பர் ஆண்டனிக்கும் கிடைக்கும்! இத்துடன் என்னுரை முடிக்கிறேன், அன்பர்களே! நினைவில் வைப்பீர்! மீண்டும் ஒருமுறை உரைப்பேன்! அழுத்தமாய்ச் சொல்கிறேன்! என் ஆத்ம நண்பர் சீஸரை நான் கொன்றது, ரோமா புரியின் மேன்மைக்காகச் செய்தது! எனக்காகச் செய்ய வில்லை! உமக்காகச் செய்தேன்! மறக்காதீர்கள் அன்பர்களே! சீஸரைக் குத்திய அதே கத்திதான் என் கையில் உள்ளது! நாட்டுக்குத் தேவையானல் என்னுயிரையும் போக்கிக் கொள்ள நான் தயார், அதே கத்தியால்!

[புரூட்டஸ் மேடையிலிருந்து கீழே இறங்குகிறார்]

பொதுமக்கள்: [ஒன்றாகக் கூக்குரலில்] வாழ்க, வாழ்க, புரூட்டஸ் வாழ்க! நீண்ட காலம் புரூட்டஸ் வாழ்க!

பொதுநபரில் ஒருவர்: சிலை வைப்பீர் புரூட்டஸ¤க்கு! சிலை வைப்பீர் புரூட்டஸின் மனைவிக்கு! சிலை வைப்பீர் புரூட்டஸின் மூதாதையருக்கும், புரூட்டஸின் சந்ததியாருக்கும்!

மற்றொருவர்: ரோமுக்குப் புரூட்டஸை அதிபதி ஆக்குவீர்! புரூட்டஸை அரசர் ஆக்குவீர்! சீஸரின் ஆசனத்தில் பண்பாளர் புரூட்டஸ் அமரட்டும்! ரோமா புரியை நேசிக்கும் புரூட்டஸ்தான் அதன் ஆட்சிப் பீடத்தில் அமரத் தகுதி பெற்றவர்! சீஸர் செத்தது நாட்டுக்கு நல்லது! நமக்கு நல்லது! நம் சந்ததிக்கும் நல்லது!

மற்றொருவர்: ரோமைக் காப்பாற்றிய புரூட்டஸ¤க்கு சீஸரின் மகுடத்தைச் சூட்டுவீர்! புரூட்டஸ் நமது அடுத்த தளபதி!

புரூட்டஸ்: [திரும்பிப் பார்த்து, தயக்கமுடன்] என்னருமை நாட்டவர்களே! என்ன சொல்கிறீர்? ரோமின் அரசியல் நியதி குடியாட்சி! முடியாட்சி வேண்டாம் உமக்கு! நீங்கள் என்னை மன்னராக்கி மகுடம் அளித்தால் அது செல்லாது! செனட்டார் முடிவு செய்ய வேண்டிய தீர்வுப் பதவி அல்லவா அது? ரோமர்களே! என்னைத் தனியே போக விடுவீர்! நான் சீஸரைப் போல் ஆளப் பிறந்தவன் அல்லன்! போய் வருகிறேன், மேடைக்கு ஆண்டனி ஏறிவரட்டும்! முடிந்து விட்டதென் பணி! ஆண்டனியின் உரையைக் கேளீர்! அவர் எங்கள் அனுமதியில் பேச வருகிறார்! சீஸருக்கு மூத்த மகனாகக் கருதப்படும் ஆண்டனி சீஸருக்கு மரண உரையாற்றி ஈமச் சடங்குகளைச் செய்யப் போகிறார்! எங்களைச் சேராத அவருக்குப் பேச அனுமதி தாருங்கள்!

[புரூட்டஸ் சீஸர் சடலத்தைக் காணச் சகிக்காமல், முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியேறுகிறார்]

கூட்டத்தில் ஒருவன்: அமைதி! அமைதி! ஆண்டனி பேச்சைக் கேட்போம்.

அடுத்தவன்: மேடைக்கு ஏறிச்செல் ஆண்டனி! சீஸர் உடலைத் தரையில் இறக்கி வை! சீஸரைச் சுமந்தது போதும்! சீஸருக்கு நீங்கள் கண்ணீர் விட்டது போதும்! செத்த சீஸர் புதையப் போவது பூமியில்! பேச்சைத் துவங்குவீர்!

[சீஸரின் சடலத்தைப் பூமியில் கிடத்தி, ஆண்டனி மேடைக்குச் செல்கிறான்]

ஆண்டனி: [கண்ணீரைத் துணியில் துடைத்துக் கொண்டு] மிக்க நன்றி புரூட்டஸ்! நான் புரூட்டஸ் அனுமதி பெற்றுப் பேச வந்திருக்கிறேன். தனியே வந்திருக்கிறேன், சீஸர் சடலத்துடன்! [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] நான் நின்றாலும், பாரீர் என் கண்ணீர் நிற்க மறுக்கிறது! உங்களைக் காணத் தடையாய் என் கண்ணீர் திரையிடுகிறது! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், கண்ணீர் நிற்கும் வரை!

முன்னிற்கும் ஒருவன்: அந்தோ பாவம் ஆண்டனி! கண்ணீர் தைபர் நதிபோல் கரை புரண்டு ஓடுகிறது! மங்கலான கண்களால் எப்படி நம்மைக் காண முடியும்? என் கண்களைக் கொடுக்கத் தயார், ஆனால் எப்படிக் கொடுப்பது? … அமைதி! அமைதி! ஈதோ ஆண்டனி பேசப் போகிறார்!

ஆண்டனி: [தழுதழுத்த குரலில், சீஸர் சடலத்துக்கு அருகில் நின்று துக்கமோடு]

நண்பர்காள்! ரோமர்காள்! நாட்டு மக்காள்!
சீஸரை நான் புதைக்க வந்துளேன்!
புகழ்த்த வந்திலேன்!
மனிதரின் தீங்குகள் மறைந்தபின் நிலைபெறும்!
நற்பணி யாவும் புதைபடும் எலும்புடன்!
சீஸரைப் பேராசை யாளராய்
ஏசினார் புரூட்டஸ்! பண்புள்ள புரூட்டஸ்!
அப்படி யாகின் அது வருத்திடும் தவறு!
அதற்குச் சீஸர் தன்னுயிர் நீத்தார்!
புரூட்டஸ் மற்ற புரட்சியர் அனுமதிக்க
உரைதனை ஆற்ற வந்துளேன் ஈங்கு!
புரூட்டஸ் மிக்க பண்பாடு உடையவர்!
அத்தனை பேரும் பண்புடை மாந்தர்!
சீஸரின் அகால மரணச் சடங்கில்
பேச வந்துளேன்! அவரென் நண்பர்,
நம்பிக்கை யானவர், நியாய வாதி!
ஆனால் ஆசையாளி என்றார் புரூட்டஸ்!
புரூட்டஸ் உன்னதப் பண்பாடு உடையவர்!

பன்னாடுகள் வென்று பொற்காசுகள் திரட்டி
அடிமைகள் பிடித்துப் பெரும்பணம் உருட்டி
ரோமின் பொக்கிசம் நிரப்பிய சீஸரா
பேராசை மனிதர்? பேராசை மனிதர்?
ஏழையர் கதறிடச் சீஸரும் அழுதார்!
கல்நெஞ் சாளர் கைக்கொளும் வேட்கை!
சீஸரை ஆசை யாளியாய்க் காட்டுமா?
ஆயினும் கூறினார் அரிய புரூட்டஸ்
சீஸர் ஓர் பேராசைக் காரர் என்று!
உன்னத பண்பாடு உடையவர் புரூட்டஸ்!
அன்று நான் மும்முறை சீஸருக்கு
மகுடம் சூட்டப் புகுந்த வேளை
ஏற்றிலர் சீஸர்! இதுவா பேரவா?
ஆயினும் சொன்னார் பேராசை என்று,

உன்னத புரூட்டஸ் ! உண்மையா அது ?
மெய்யாய்ப் புரூட்டஸ் மேன்மை யானவர் !
புரூட்டஸ் உரைத்ததைத் தவறெனக் கூறி
நிரூபிக்க வர வில்லை நானிங்கு!
எனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொன்னேன்!
காரண மோடுதான் ஒருகா லத்தில்
நீவீர் யாவரும் நேசித்தீர் சீஸரை!
எந்தக் காரணம் உமது துயரை
இந்தக் கணத்தில் நிறுத்திட முடியும் ?
நீதியே! நீ எங்கே போனாய் ?
விலங்கின மூர்க் கத்தை நோக்கி
ஓடிவிட் டாயா?
மனிதர் இங்கே நன்னெறி மறந்தார்!
மன்னித் திடுமின்!
சீஸரின் சவத்தொடு சேர்ந்துள தென்மனம்!
திரும்பிடும் வரைநான் இருந்திட வேண்டுமே!

முதல் நபர்: ஆண்டனி பேசுவதில் அர்த்தம் உள்ளது! கேட்டீரா? மும்முறை கிரீடத்தை அணிவித்த போது அம்முறை ஏற்றுக் கொள்ள வில்லை சீஸர்! நிச்சயம் அவர் ஒரு பேராசைக்காரர் இல்லை!

அடுத்த நபர்: பாருங்கள்! அழுது, அழுது ஆண்டனி கண்களில் செந்நிறம் பூத்துக் கனல் பறக்கிறது!

முதல் நபர்: ஆண்டனி போன்ற ஓர் புனித மனிதன் ரோம் எங்கிலும் கிடையாது!

இரண்டாம் நபர்: பேசியது போதும், ஈதோ ஆண்டனி தொடர்ந்து பேசப் போகிறார்.

*********************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *