எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (7)

அங்கம் -5 காட்சி -11

சீஸரின் புண்கள் பேசா வாய்கள்!
எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர்! …..
இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா!
இனிய புரூட்டஸ் குத்தியது இங்கே !…

பாம்ப்பியின் சிலைக் காலடியில்

சீறிடும் குருதி சிந்தச் சிந்த

சீஸரும் வீழ்ந்தார் !
சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான்
நேசர் நம்மேல் வீசிச் சென்றிட
நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்!
எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! ….

(ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

நாடகப் பாத்திரங்கள்:

 

ரோமாபுரியில்

 

தளபதி மார்க் ஆண்டனி [35 வயது], மற்றும் செனட்டர்கள்: புரூட்டஸ் [35 வயது], காஸ்ஸியஸ் [30 வயது (புரூட்டஸின் மைத்துனன்)]. காஸ்கா [40 வயது], கவிஞர் சின்னா [35], சிசெரோ [50 வயது], அக்டேவியன் [24] டிரிபோனஸ் மற்றும் ஜூலியஸ் சீஸரின் மனைவி கல்பூர்ணியா [45 வயது]. ஒரு ஜோதிடன், காஸ்ஸியஸின் சதிகாரக் கூட்டம். பாம்ப்பியின் அனுதாபிகள். சீஸரின் சீடர்கள். ரோமானியப் படையாட்கள். பொது நபர்கள்.

 

நேரம், இடம், கட்டம்

 

சீஸர் பட்டாபிசேக தினம். மார்ச் பதினைந்தாம் தேதி மாலை வேளை. ரோமாபுரியில் மக்கள் மன்றம் கூடிய சமயம் பாம்ப்பியின் சிலைக்குக்கீழ் படுகொலை செய்யப்பட்டுக் குருதியில் கிடக்கும் சீஸர் உடலை ஏந்திக் கொண்டு ஆண்டனி அங்காடி மேடைக்கு வருக்கிறார். மேடை முன்பு ரோமானியர் மரணச் சடங்கு உரைகளைக் கேட்க ஆர்வமோடு, ஆரவாரமோடு நிற்கிறார்கள்.

 

நாடகப் பாத்திரங்கள்

 

புரூட்டஸ், காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஆண்டனி, ஆண்டனியின் தோழர்கள், ரோமானிய மக்கள்.

 

காட்சி அமைப்பு

 

அங்காடி மேடையில் புரூட்டஸ் முதல் பேச்சாளராய் நிற்கிறார். பக்கத்தில் காஸ்ஸியஸ், காஸ்கா, சின்னா மற்றும் ஏனைய சதிகாரர் கையில் குருதியில் மூழ்க்கிய கைவாளை ஏந்தி விடுதலை வீரர்களாய்க் காட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்கள்.

இரண்டாம் நபர்: பேசியது போதும், ஈதோ ஆண்டனி தொடர்ந்து பேசப் போகிறார்.

ஆண்டனி: [மேடையில் நின்று தொடர்கிறார்]

நேற்று சீஸரின் வாய்ச்சொல் வலுத்து நின்றது
உலகின் முன்பு ! ஈதோ கிடக்குது அவர் உடல்,
எளியோர் கூட நோக்கி மதிக்கா வண்ணம்!
என் மேலதி பதிகளே! நான்பழி வாங்கிக்,
கலகம் விளைந்திட மக்கள் மனதை
உசுப்பி விட்டால், தவறி ழைப்பேன்
புரூட்டஸ், காஸ்ஸியஸ் ஆகி யோர்க்கு!
இருவரும் அறிவீர் மாபெரும் ரோமர் !
ஈதோ பாரீர் ! சீஸரின் சாசனம் !
கையெழுத் தோடு கண்டேன் பெட்டியில்!
ஆயினும் மன்னிப்பீர் என்னை,
அதைப் படித்திட விரும்பேன்!
அதனைக் கேட்டால் அனைவரும் சீஸரின்,
செத்த புண்களை முத்தமிட வருவீர்!
புனிதக் குருதியில் துணிகளை மூழ்க்கிச்
சீஸரின் மயிரைச் சிறிது கொடுவென
நேசமாய்க் கேட்பீர்  நினைவில் வைத்திட!
சாகும் சமயம் உமது உயில் எழுதி
சந்ததி களுக்கும் சொந்தப் படுத்துவீர்!

முதல் நபர்: வாசிப்பாய் உடனே அந்த சாசனத்தை, ஆண்டனி!

இரண்டாம் நபர்: சாசனம்! சாசனம்! சீஸரின் சாசனம்! வாசிப்பாய் சீஸரின் சாசனம்!

ஆண்டனி:

பொறுப்பீர் அன்பு நண்பர்களே, பொறுப்பீர்!
நான் அதைப் படிப்பது தவறு!
சீஸர் உம்மை நேசித்த பாங்கை
நீவீர் அறிவது சரி யில்லை !
மரமில்லை நீவீர்! கல்லில்லை நீவீர்!
மக்களே நீவீர்! சீஸரின் உயிலை
மனிதராய்க் கேட்பின், உம்மைக்
கொதித்தெழச் செய்யும், பித்தராய் ஆக்கி!
தெரியா திருப்பதே உமக்கு நல்லது,
நீவீர் அவரது வாரிசு என்று!
அறிந்தால் உமக்கு ஆவது என்னவோ ?

முதல் நபர்: உயிலை வாசிப்பாய்! உடனே வாசிப்பாய்! சீஸர் உயிலை வாசி!

பலரது கூக்குரல்: சாசனம் வாசி! சீஸரின் சாசனம்! யாமதைக் கேட்போம்!

ஆண்டனி:

அமைதி! அமைதி! பொறுப்பீர் ஒருகணம்!
எல்லை மீறிச் சென்று விட்டேன்!
குத்திக் கொன்ற உத்தமர்க் கெதிராய்
பேசி விட்டேன், பெரும்பிழை செய்தேன்!
சீஸரின் சாசனம் வாசிக்க மறுப்பேன்!
மன்னிப்பீர் என்னை, அன்புடை மக்காள்!

இரண்டாம் நபர்: துரோகிகள் அவர்! உத்தமரா அவர்?

அடுத்தவன்: கொலைப் பித்தர்கள் அவர்! குணவாளரா அவர்?

முதல் நபர்: முதலில் படியப்பா உயிலை! என்னதான் எழுதி வைத்திருக்கிறார் சீஸர்?

ஆண்டனி:

அப்படி யானால் கேட்பீர்  அவரது உயிலை!
கட்டாய மாக வாசிக்க வைத்தீர்!
எனது சொற்படிச் செய்வீர் முதலில் !
வட்டமாய்ச் சவத்தைச் சுற்றி நிற்பீர்!
சாசனம் வடித்த சீஸரைக் காண்பீர்!
கீழிறங்கி நானவர் அருகில் வரவா?
அனுமதி தருவீரா?

முதல் நபர்: அனுமதி உண்டு, ஆண்டனி உனக்கு!

இரண்டாம் நபர்:  சீஸர் சவத்தைச் சுற்றி வட்டமாய் நிற்பீர்!

முதல் நபர்: இடம் அளிப்பீர் ஆண்டனி நுழைய.

[சீஸர் உடலைச் சுற்றி வட்டமாக நிற்கிறார்கள்]

ஆண்டனி:

கண்ணீர் இருந்தால் சொட்டுவீர் இக்கணம்!
இந்த அங்கியை யாவரும் அறிவீர்!
கோடை மாலையில் முதல்முறை அணிந்தார்!
நெர்வியை வென்றது போது கிடைத்தது.
காண்பீர், இங்குதான் ஆழமாய்க் குத்திக்
கிழித்தான் ஆங்காரக் காஸ்ஸியஸ்!
இங்குதான் குத்தினான், வஞ்சகக் காஸ்கா!
இங்கே குத்தினார் இனியர் புரூட்டஸ் !
கத்தியை புரூட்டஸ் எடுத்ததும் பீறிட்டு
கதவை உடைத்தது போல் விரைந்து
வெளியே குருதி வந்ததைப் பாரீர்!
ஏனெனில் புரூட்டஸ் சீஸரின் நேசன்!
உத்தமன் புரூட்டர் குத்துதல் முறையா?
செப்பிடு நீதி ! தீர்ப்பளி தெய்வமே!
எப்படி நேசித்தார் புரூட்டஸை சீஸர்?
அனைத்திலும் கொடூரக் குத்து தான்அது!
குணவான் சீஸர் புரூட்டஸ் குத்தவும்
பலத்தை இழந்தார்! பலிக்கிரை யாகிப்
பாம்ப்பியின் சிலைக் காலடியில்
சீறிடும் குருதி
சிந்தச் சிந்த சீஸரும் விழுந்தார்!
எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்!
சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான்
நேசர் நம்மேல் வீசிச் சென்றிட,
நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்!
அந்தோ நீவீர் இக்கணம் அழுகிறீர்!
பரிவுக் கண்ணீர் பெரிதாய்ப் பொழிகிறீர்
கரையுள அங்கியைக் கண்டே அழுகிறீர்!
கனிவு ஆத்மா கதறும் இங்கே!
பாரீர்  சீஸரின் பரிதாப நிலையை!
நாட்டுத் துரோகிகள் காட்டுத் தனமாய்க்
குத்திக் கிழித்து கூறாக்கிய

சீஸரின் உடலைப் பாரீர் !

 

ஆண்டனி

[அங்கியை சீஸர் மேனியிலிருந்து நீக்கி வெளியே எறிகிறான்]

முதல்வன்: ஐயோ பாரிதாபம்! கண்கொளாக் காட்சி!

அடுத்தவன்: குணாளர் சீஸர்! உத்தமர் சீஸர்! துரோகி புரூட்டஸ்! துரோகி காஸ்கா, காஸ்ஸியஸ், சின்னா. அனைவரும் நாட்டுத் துரோகிகள்!

ஆண்டனி: அப்படிச் சொல்லாதீர்! அனைவரும் விடுதலைத் தீரர்கள்! முடியாட்சி ஒழித்தவர்! குடியாட்சியை நிலை நாட்டியவர்! அடிமையாகப் போகும் நம்மைப் பாதுகாத்த பிதாக்கள்! புரூட்டஸைப் போல் நானொரு பெரும் பேச்சாளன் அல்லன்! சாதா மனிதன்! சீஸரின் ஈமக் கிரியை செய்ய வந்திருக்கிறேன்.

சீஸரின் புண்கள் பேசா வாய்கள்!
எனக்காய் நீவீர் பேசிட வைப்பீர்!
நானும் புரூட்டஸ் போல் பேச்சாளி ஆயின்,
ஊனை உருக்கி உலகைக் கலக்கி சீஸர்
ஊமைப் புண்களில் ஒரு வாய் வைத்து
ரோமின் கற்களும் நிமிர்ந்து தாக்கிடப்
புரட்சி செய்வேன், இரங்கற் பேச்சிலே!

எல்லோரும்: புரட்சி செய்கிறோம் ஆண்டனி! உன் பேச்சே போதும்! துரோகி புரூட்டஸ் ஆக வேண்டாம்!

முதல்வன்: முதலில் புரூட்டஸ் வீட்டுக்குத் தீ வைப்போம்! [தீப் பந்தத்தைத் தூக்குகிறான்]

இரண்டாம் நபர்: சீஸரைப் புண்படுத்திய புரூட்டஸ் வயிற்றைக் கிழிப்போம்! [வாளை உயர்த்துகிறான்]

மூன்றாம் நபர்: துரோகிகள் அத்தனை பேர் வீட்டிலும் தீ வைப்போம்! கொலைகாரருக்குக் கொள்ளி வைப்போம். [தீக் கம்பத்தைத் தூக்குகிறான்]

முதல்வன்: அமைதி, அமைதி, அமைதி! பண்பாளர் புரூட்டஸ் ஏதோ சொல்கிறார். என்ன வென்று கேட்போம்!

ஆண்டனி: நண்பர்களே! புரூட்டஸ் வீட்டில் தீ வைக்காதீர்! காஸ்ஸியஸ் வீட்டில் தீவைக்காதீர்! காஸ்கா வீட்டில் தீ வைக்காதீர்! சின்னா வீட்டில் தீ வைக்காதீர்! அத்தனை பேரும் உத்தமர்! செத்த சீஸருக்காக உத்தமர் உயிரைப் பழிவாங்க வேண்டாம்! சீஸரின் சாசனத்தைக் கேட்க மறந்து விட்டீரே!

எல்லோரும்: ஆம், ஆம் மறந்து விட்டோம். வாசிப்பாய் ஆண்டனி சாசனத்தை. முதலில் அதைக் கேட்போம்.

முதல்வன்: ஆண்டனியின் பட்டியலைக் கேட்டால் யார் யாரை முதன் முதலில் தாக்க வேண்டும் என்று சொல்வது போல் அல்லவா உள்ளது.

ஆண்டனி: கேளுங்கள், சீஸரின் சாசனத்தை. வாசிக்கிறேன். ரோமா புரியில் ஒவ்வொரு நபருக்கும் 75 நாணயங்கள் அளிக்கப்படும்.

இரண்டாம் நபர்: [ஆனந்தம் அடைந்து] அடடா! ரோமானியர் மீது எத்தனை பரிவு, கனிவு, அன்பு!

ஆண்டனி: மேலும் கேளுங்கள்! சீஸரின் பூங்காக்கள், பூந்தோட்டங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப் படுகின்றன. அதுபோல் தைபர் நதிக்கரை அருகே உள்ள அவரது வயற்காட்டுக் குடில்கள், வயல்கள் பொது நபருக்குப் போகும். அவை எல்லாம் உங்களுக்கும், உங்கள் சந்ததியார்க்கும் சொந்தம். அவற்றை உமக்கு எழுதி வைத்த சீஸருக்கு வாழக் கொடுத்து வைக்க வில்லை! ஈதோ கிடக்குது அவர் சடலம்! சீஸரைப் போலொரு அதிபதி இனிமேல் ரோமா புரியில் பிறப்பாரா?

எல்லோரும்: இல்லை, இல்லை ஆண்டனி! சீஸர் போலொரு வேந்தரினிப் பிறக்கப் போவதில்லை!

முதல்வன்: வாரீர், சீஸர் உடலைத் தூக்குவீர்! அவரது உடலைப் புண்ணிய தளத்தில் வைத்துத் தகனம் செய்வோம். துரோகிகள் வீட்டெரித்தத் தீயைக் கொண்டு வந்து கொள்ளி வைப்போம் அவருக்கு, அவரது பிள்ளைகளாய்!

எல்லாரும்: தீப்பந்தம் ஏந்தி புரூட்டஸ் இல்லத்துக்குச் செல்வோம். மரப் பலகணிகளை உடைத்துக் கொண்டு வாருங்கள்! மேஜை, நாற்காலி, கட்டில் எதுவாயினும் பரவாயில்லை! கொண்டு வாருங்கள்.

[சீஸர் சடலத்தைக் தூக்கிக் கொண்டு சிலர் விரைகிறார்கள். கத்திகளை, தீக் கம்பங்களை ஏந்திக் கொண்டு புரூட்டஸ் வீட்டுக்கு ஓடுகிறார் மற்றவர் எல்லோரும்.]

*********************

அங்கம் -5 காட்சி -12

சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான்
நேசர் நம்மேல் வீசிச் சென்றிட
நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்!
எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! ….

(ஆண்டனி)

 

வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

புரூட்டஸின் இறுதிக் காலம்

நேரம், இடம், கட்டம்:

சீஸர் கொல்லப்பட்ட மறுநாள். அங்காடிப் பொதுமனை அருகில் சீஸரின் சடலம் எரிக்கப் படுகிறது. ரோமாபுரிப் பொதுமக்கள் ஆண்டனியின் மரணப் பேருரை கேட்டதும் கோபத்துடன் கிளம்பிப் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் வீடுகளில் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். சதிகாரர் அனைவரும் தப்பிக்கொண்டு ரோமை விட்டு ஓடி வெளியேறுகிறார். ஆண்டனி, அக்டேவியஸ் [சீஸருடைய சகோதர் மகன்], தளபதி லெபிடஸ் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ரோமானியப் படையுடன் கொலைகாரர்களைப் பிடிக்க விரட்டிக் கொண்டு செல்கிறார்கள். படையினரில் ஒரு சிறு பகுதி புரூட்டஸைப் பின்பற்றிச் செல்கிறது. அனைவரும் ·பிலிப்பி [Philipi] என்னும் பகுதிக் காட்டில் சந்தித்துப் போரிடுகிறார்.

நாடகப் பாத்திரங்கள்:

ஆண்டனி, அக்டேவியஸ், லெபிடஸ், புரூட்டஸ், காஸ்ஸியஸ், மற்றும் சீஸர் கொலையில் ஈடுபட்ட சதிகாரர்கள், ஏராளமான ரோமானியப் படையினர்.

காட்சி அமைப்பு:

ஆண்டனி, அக்டேவியஸ், லெபிடஸ் படையினர் மலைக் காடுகளில் ஒருபுறமும், புரூட்டஸ், காஸ்ஸியஸ் சதிகாரர் படையினர் மறுபுறமும் கூடாரத்தில் தங்கி உள்ளனர்.

ஆண்டனி துரோகிகளைத் துரத்துகிறான்

ஆண்டனி: [கையில் தாளை வைத்துக் கொண்டு] அக்டேவியஸ்! இந்தப் பெயர்கள் எல்லாம் உன் குறிப்பிலும் உள்ளனவா? முதலில் நட்புத் துரோகி புரூட்டஸ்! அடுத்து நிஜத் துரோகிகள் காஸ்ஸியஸ், கஸ்கா, சின்னா …. பட்டியல் நீள்கிறது! சதிகாரர் எந்த சந்து பொந்தில், மலைக் குகையில் பதுங்கிக் கிடந்தாலும் பிடித்துக் கொல்லப் படவேண்டும்.

அக்டேவியஸ்: ஆம்! அந்த அயோக்கியர் பெயர் அத்தனையும் உள்ளன! … லெப்பிடஸ்! உன் சகோதரன் பெயரும் பட்டியலில் உள்ளது தெரியுமா? அதற்கு உன் ஒப்புதல் தேவை.

லெப்பிடஸ்: [சற்று மனக் கசப்புடன்] ஒப்புக் கொள்கிறேன்! என் தமையன் புரட்சிக் குழுவோடு ஏன் சேர்ந்தான் என்பது வியப்பாக உள்ளது எனக்கு! என்னருமை மைத்துனியை எப்படி விதவைக் கோலத்தில் பார்ப்பது என்று தெரியவில்லை! பாவம் அவள். வருவாயின்றி எப்படித் தனியாக அவள் வாழப் போகிறாள் என்று நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது! ஐயோ, அவளும் உயிரைப் போக்கிக் கொள்வாள்!

அக்டேவியஸ்: [ஆத்திரமாக] ஆண்டனி! உன் தங்கையின் மகன் பப்ளியஸ் பட்டியலில் உள்ளதா?

ஆண்டனி: மறந்து விட்டேன், அந்த மூடனை, அக்டேவியஸ்! எழுதிக் கொல்வோம்! அப்புறம் வேறு யாரும் நம் பட்டியலில் விடப் பட்டுள்ளனவா?

லெப்பிடஸ்: சரி! மன்னிக்க வேண்டும். என்னகொரு அவசரப் பணி உள்ளது! உங்களை மக்கள் மன்றத்தின் வாசலில் பிறகு சந்திக்கிறேன்.

[லெப்பிடஸ் போகிறான்]

ஆண்டனி: போகட்டும் லெப்பிடஸ்! நமது தளபதிதான், ஆனால் தலையில் மூளையைத் தவிர மற்றவை எல்லாம் உள்ளன! முரட்டுப் பலம் மட்டும் உள்ளது! ஆனால் மூளை காலி!

அக்டேவியஸ்: ஆம், ஆம் ஆனால் அவனொரு பராக்கிரமத் தளபதி, சீஸரைப் போல்! உனக்குத்தான் பிடிக்க வில்லை அவனை! அவன் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. தளபதிகள் அறிவுச் சுடராக இருக்கக் கூடாது. மூர்க்கமும், முரட்டுத்தனமும் பராக்கிரமமும்தான் ஒரு தளபதிக்குத் தேவை. அவை அனைத்தும் கனலாய்க் கொதிக்கிறது லெப்பிடஸ் நெஞ்சில்! அவன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன்!

ஆண்டனி: அதுபோல் என் குதிரையும் படைத்தது அஞ்சா நெஞ்சம், அக்டேவியஸ்! போரில் பயமின்றி என் குதிரை பாயும் தெரியுமா! சரி அவனை விட்டுத் தள்ளு! ஆக வேண்டிய போர்த் தயாரிப்புக்குச் சிந்திப்போம்! மலைக்கு அப்புறம் புரூட்டஸ், காஸ்ஸியஸ் படை திரட்டி நம்மைத் தாக்கப் போவதாக ஒற்றர் மூலம் அறிந்தேன். உனக்குத் தெரியுமா?

அக்டேவியஸ்: தெரியும். நாமிருவரும் முதலில் அந்தக் காட்டு நரிகளை வேட்டையாட வேண்டும். அவர்கள் யாரும் உயிருடன் ரோமுக்குத் திரும்பக் கூடாது.

[இருவரும் போகிறார்கள். மலைக்கு அப்புறம் உள்ளக் கூடாரத்தில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் காரசாரமாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்]

காஸ்ஸியஸ்: [கோபத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டு] பாருங்கள் புரூட்டஸ்! எல்லாம் உங்களால் நேர்ந்தது! மாளிகையில் ஆள வேண்டிய நாம் இப்போது, மலை அடிவாரத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறோம். சீஸரைக் குத்திய அதே கத்தியால், ஆண்டனி குடலையும் உருவி யிருந்தால் இப்படி ஆகுமா? நீங்கள் வேண்டாமெனத் தடுத்தீர்! பிரேதப் பேச்சுரையில் ஆண்டனி பேசக் கூடாதெனத் தடுத்தேன்! கேட்க வில்லை நீங்கள்! பொதுமக்கள் யாவரும் மெழுகுப் பொம்மைகள்! களிமண் சட்டிகள்! ஆட்டுக் குட்டிகள்! ஆண்டனி வில்லைக் காட்டியது ஆடுகளுக்குப் புல்லைக் காட்டியது போல்! சாய்ந்தால், சாயிறப் பக்கமே சாயிற செம்மறி ஆடுகள் மக்கள்! புல்லைக் காட்டி ஆடுகளைப் புலியாய் ஆக்கி விட்டான், ஆண்டனி! புலியாய் இருந்த நாம் இப்போது ஆடுகளாய்ப் போய்விட்டோம்!

புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! என்னை நீ மன்னிக்க வேண்டும்! மாபெரும் தவறு செய்து விட்டேன் நான்! ஆண்டனியை உயிரோடு விட்டது தப்பு! மேடையில் ஆண்டனியைப் பேச விட்டது தப்பு! ஆண்டனி, பசுத்தோல் போர்த்திய புலியெனத் தெரியாமல் போனது எனக்கு! என்னைப் பண்பாளன் என்று பாராட்டிப் பாராட்டி, மக்களிடம் பாசாங்கு பண்ணினான்! சிறிது நேரத்துக்குள் நம்மை வரவேற்ற கும்பல், சீஸரைப் பாராட்டத் துவங்கியது. நம்மை ஆதரித்த கைகள், தீப்பந்தம் ஏந்தி நம் வீட்டுக்கே தீயிட்டது! …[கண்ணீருடன்] … காஸ்ஸியஸ்! எப்படித் தாங்கிக் கொள்வேன் இதை! நேற்று மனைவி போர்ஷியா மாண்டு போனாள்! கும்பல் வீட்டுக்கு வைத்த தீ அவளது உடலுக்கும் வைத்த கொள்ளி ஆயிற்று!

காஸ்ஸியஸ்: [வருத்தமுடன் தோள் மீது கை வைத்து] எத்தகைய அதிர்ச்சி, புரூட்டஸ்! எப்படி இதுவரை பொறுத்துக் கொண்டாய்? ஆட்டு மந்தையை அரக்கர் மந்தையாய் ஆக்கியவன் ஆண்டனி! [கை வாளை உருவி] சீஸரைக் குத்திய இதே வாளால், பார்ப்பீர் ஆண்டனி வயிற்றையும் கிழிப்பேன்! ·பிலிப்பி போர்த் தளத்தில் இந்த வாளால் ஒன்று ஆண்டனி மடிவான், அல்லது நான் உயிரைப் போக்கிக் கொள்வேன். புரூட்டஸ்! போரில் நான் மாண்டு போனால், உங்களுக்குத் தவறு செய்த என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்! சீஸரின் உயிர் நண்பனான உங்களை மாற்றிய வஞ்சகன் நான்! சீஸர் மீது வெறுப்பு உண்டாக நான் முற்பட்டது மாபெரும் தவறு! என்னால் உங்கள் மனைவி போர்ஷியாவும் மாண்டு போக நேர்ந்தது! உங்கள் குடும்ப வாழ்வைச் சீர்குலைத்தது நான்! என்னை மன்னிப்பீர்களா புரூட்டஸ்?

Final War at Philipi

புரூட்டஸ்: காஸ்ஸியஸ்! நம் முடிவு நெருங்கி விட்டதாய், என் மனதில் ஓர் உணர்வு எழுந்து விட்டது! நேற்றுக் கனவில் சீஸர் வந்து என்னை ·பிலிப்பியில் சந்திக்க வா என்று அழைப்பு விடுத்துள்ளார்! நம்மால் ஆற்றல் மிக்க ரோமானியப் படையை எதிர்க்க முடியாது. அவரது எண்ணிக்கை மிகுதி! காஸ்ஸியஸ்! நீ மாற்ற முயன்றாலும், என்னை மாற்றிக் கொண்டவன் நான்தான்! ஓர் உன்னத செயலைச் செய்து முடித்ததாகத்தான் தோன்றுகிறது எனக்கு! முடியாட்சி ஒழித்தோம் நாமிருவரும்! குடியாட்சிக்கு விடிவு தந்தோம் நாமிருவரும்! கவலைப்படாதே! நீ என் தோழன்! யார் யாருக்கு மன்னிப்பு அளிப்பது? ..அதை எல்லாம் மறப்போம்! இப்போது நாம் செய்ய வேண்டியது இறுதிப்போர். ஓடி ஒளிய வேண்டாம் நாம்! கூடிப் போரிட்டு மாய்வோம். [இருவரும் கைகோர்த்துக் குலுக்கித் தழுவிக் கொள்கிறார்கள்.]

  • பிலிப்பியில் நடந்த போரில் தோற்கடிக்கப் பட்டுப் பிடிபடாமல் காஸ்ஸியஸ், புரூட்டஸ் இருவரும் தமது உயிரைத் தாமே மாய்த்துக் கொள்கிறார்கள். ஆண்டனி, அக்டேவியஸ் சதிகாரர் அனைவரையும் கொன்று பலரைக் கைது செய்து ரோமுக்கு மீள்கிறார்கள்.]

[இரண்டாம் பாகம் முற்றும்]

+++++++++++++++

  1. முதல் பாகம்: சீஸர் & கிளியோபாத்ரா [முற்றிற்று]
  2. இரண்டாம் பாகம்: ஜூலியஸ் சீஸர் [முற்றிற்று]
  3. மூன்றாம் பாகம்: ஆண்டனி & கிளியோபாத்ரா [ ஆரம்பம்]

*********************

Leave a Reply

Your email address will not be published.