பெருவை பார்த்தசாரதி

====================

 

 

மனத்திற்கிட்ட கட்டளைகள் மலைபோல் குவிந்தாலும்..

……….மனமதையேற்று மகிழ்வுடன் செய்வததன் கடமையாம்.!

மனவலிமை பெற்றிட வேண்டுமென்றால் அடங்காத..

……….மனப்பேயையொரு கட்டுக்குள் வைக்க வேண்டுமாம்.!

மனமொரு சேவகனெனில் மூளையதன் அரசனாகும்..

……….மனம்மூளை இரண்டும் ஒன்றுவதே இயற்கைவிதியாம்.!

மனப்புரவி அடக்குதற்கு மனக்கடிவாளம் அவசியம்..

……….மனம்போன போக்கில் மனிதன் ஓடாவழியெதுவாம்.?

 

வனவாசம் செய்தாலும் மனம்நோகும் செயலைத்தன்..

……….வசமாகாது திண்ணம் கொண்டவர்களே பாண்டவர்கள்.!

தனக்கெதிரே தன்மனைவி பாஞ்சாலியாடை யுரித்ததும்..

……….தமக்கிட்ட கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மாண்புகாத்தார்.!

தனஞ்செயனின் மனதில் பெருங்குழப்பம் இருந்தபோதும்..

……….தமக்கெதிர் வந்தவரை வில்லால் தகர்த்ததுமெதனால்.!

தனக்குநிகர் தானேயென ஆனவர்கள் அனைவருமே..

……….தன்மனத்திற்கிட்ட கட்டளையைத் தவறாமல் செய்தவரே.!

 

மந்தையாடுகள் குவிந்ததைப் போலெங்கும் போரிலே..

……….மாவீரர்கள் அம்படிபட்டுக் கிடந்தபாரதப் போர்க்களம்.!

சிந்தையிலே சிகரமாக கொடைக்குணம் கொண்டவனும்..

……….சீறிப்பாய்ந்த கூரம்பால் சிறகொடிந்த பறவையானான்.!

அந்தப்போதிலும் அந்தணனாக வந்து தானம்கேட்ட..

……….இந்திரனுக்குத் தானமீயாதே? தந்தையும் எச்சரித்தான்.!

தந்தைதன் மனத்திற்கிட்ட கட்டளையேற்க மறுத்தகர்ணன்..

……….தர்மத்தையே குருதியில் தாரைவார்த்துக் கொடுத்தான்.!

 

பல்வேறருஞ் செயலுக்கும் சாதனைக்கும் புகழுக்கும்..

……….பலமான மூளையும் மனதுமே மூலக்காரணமாகும்.!

வில்லம்பு தொடுக்கும் வேடன்கண் வேற்றுநோக்கின்..

……….வைத்தகுறியும் தப்பிவிடும்!..வனவிலங்கும் நழுவிவிடும்.!

சொல்லடுக்கும் கவிஞனின் சிந்தனைகள் சிதறினாலும்..

……….சொற்களங்கே உருவாகாது?சொல்லவந்ததும் புரியாது.?

மெல்லநம் மனத்திற்கிட்ட நற்கட்டளை யாவையுமறுப்பு

……….மில்லாச் செய்யின்?..செயல்களனைத்தும் சாதனையாம்.!

 

======================================================

நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::

நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *