க. பாலசுப்பிரமணியன்

பயம் – வாழ்க்கையின் வளர்ச்சிக்கு ஒரு முட்டுக்கட்டை

வாழ்ந்து-பார்க்கலாமே-1

ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சி. ஒரு தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆரம்ப வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். பள்ளியில் எல்லாப் பாடங்களிலும் சிறப்பாகக் கற்றுக்கொண்டிருந்த குழந்தை சுற்றுப்புற சூழல் பற்றிய பாடத் திட்டத்தில் மட்டும் கவனமே இல்லாமலும் அதைப் பற்றிய எந்தப் பாடத்திலும் ஈடுபாடு இல்லாமலும் இருந்தது. அந்தக் குழந்தையின் தாய் என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது “ஒரு வேளை இந்தப் பாடத்தை நடத்தும் ஆசிரியர் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல் இருக்கலாம். அல்லது குழந்தையைத் திட்டியிருக்கலாம். அதனால்தான் இந்தப் பாடத்தில் மட்டும் ஈடுபாடில்லாமல் இருக்கின்றது. நான் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் பேசலாம் என்று நினைக்கின்றேன் ” என்றார்கள் .

“அவசரமாக எந்த முடிவுக்கும் நாம் வரக்கூடாது. இதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கலாம். அதை நாம் கவனித்துத்தான் செயல்பட வேண்டும்” என்று சொன்னேன். சிறிது நேரத்தில் அந்தக் குழந்தையுடன் உரையாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் “உன்னுடைய புத்தகங்களை நான் பார்க்கலாமா?” என்று நான் கேட்க அந்தக் குழந்தையும் தன்னுடைய புத்தகங்களை என்னிடத்தில் கொடுத்தாள்

பேசிக்கொண்டே அவளுக்குப் பிடிக்காத புத்தகத்தை நான் திறந்ததும் என் கையை இழுத்துப் பிடித்துகொண்டு “அய்யய்யோ, உள்ளே திறக்காதீங்க. அங்கே ஒரு பெரிய பாம்பு இருக்கு ” என்றாள்.. எனது கேள்விக்கு விடை கிடைத்தது. உள்ளே இருக்கின்ற ஒரு படத்தைப் பார்த்து ஏற்பட்ட பயத்தில் அந்த விஷயத்தின் மீது முழுதாக வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

பயம்…. மனித வளர்ச்சிக்கு ஒரு சாபக்கேடு .. நல்ல பல அறிஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வாழ்க்கையில் பயம் என்ற உணர்வுடன் வளர்க்கப்பட்டதால் வாழ்க்கை முழுவதும் அதற்கு அடிமையாகி வாழ்க்கையில் முன்னேறாமல் இருந்ததற்கான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

பயம் – முன்னேற்றத்திற்கு ஒரு தடைக்கல். நம்மை அடுத்தபடிக்கு எடுத்துவைக்க முடியாமல் நமது நம்பிக்கையின் வேர்களை அழித்துவிடும்.

பயம்-நம்முடைய திறனையும் நேர்மையையும் வல்லமையையும் நம்மைக்கொண்டே சந்தேகப்பட வைத்து இருட்டறையில் தள்ளிவிடும்

பயம் – இது  தன் வாலை கூடாரத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒட்டகம் எவ்வாறு சிறிது சிறிதாக முழுக்கூடாரத்தையும் தனதாக்கிக் கொண்டதோ அதுபோல் சிறிது சிறிதாக மற்ற உள்ளுணர்வுகளைத் தாக்கி நம்மை நம்மிடமிருந்து விலக்கிவிடும் .

வளரும் பருவத்தில் குழந்தைகளின் மனதில் பயத்தின் வித்துக்களை விதைப்பது முட்டாள்தனமான செயல். “கடவுள் கண்ணைக்குத்தி விடுவார்” என்றும் “முருங்கை மரத்தில் பேய் இருக்கின்றது” என்றும் சில  பயத்தைத் தூண்டுவிக்கக் கூடிய வார்த்தைகளால் அவர்களுடைய தைரியத்தையும் தன்னம்பிக்கையும் பாழ்படுத்தக் கூடாது. மாறாகச் செய்கின்ற செயல்களில் எது சரி எது தவறு என்ற நிலைப்பாட்டை அறிவுப்பூர்வமாக அறிந்து கொள்ள உதவ வேண்டும். தவறுகள் செய்வதால் நம்முடைய  தரத்தை நாமே குறைத்துக்கொள்கின்றோம் என்ற கருத்தை முன்வைத்து நாம் செய்கின்ற தவறால் எவ்வாறு நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் துயரமும் தீங்கும் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற சிந்தனையை உருவாக்குதல் அவசியம்.

அதேப் போன்று “கணக்கு கற்றுக்கொள்ளுவது மிகக் கடினம். அதற்கெல்லாம் மூளை வேண்டும். அதுதான் உன்னிடம் கிடையாதே” என்று கேவலமான தன்னம்பிக்கையை வீழ்த்தும் வாசகங்களை அள்ளிவீசி அவர்களுடைய இயலாமைக்கு உரமிடுதல் தவறான செயல். அது வீட்டிலானாலும் சரி, பள்ளிகளிலானாலும் சரி, .. இந்தத் தவறான பார்வைகளை விட்டு ” உன்னால் முடியும் தம்பி… ” என்ற நம்பிக்கையை ஊக்குவித்தல் அவசியம்.

உள்ளுண்ட பயத்தால் மனநோயாளிகளாகி  தங்கள் வாழ்வின் முழுப் பலனை அடையாதவர்களையும், வாழ்வில் வேண்டுமென்றே முன்னேற மறுப்பவர்களை நான் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன். வேதனையான நேரங்கள் அவை,

பயமின்மை என்பது அடாவடித்தனம் அல்ல. பயமின்மை என்பது வெறித்தனம் அல்ல. பயமின்மை என்பது ஆணவ ஆதிக்கப் போக்கு அல்ல. பயமின்மை என்பது தேவைக்குத் தகுந்தவாறு தோள்வலிமையையும் ஆய்த அரவணைப்பையும் ஏற்பது அல்ல.  பயமின்மை என்பது தவறுகளுக்குத் துணை போவது அல்ல. அது நல்லறிவின் ஆணித்தரமமான வெளிப்பாடு. அது அறிவின் முதிர்ச்சிக்கு வழிகாட்டி. அது நம்முடைய தன்னம்பிக்கையின் தன்மானத்தின் அடையாள அட்டை.  புத்தரிடம் பயம் இல்லை. மகாத்மா காந்தியிடம் பயமில்லை. நெல்சன் மண்டேலாவிடம் பயமில்லை. ஆப்ரஹாம் லிங்கனிடமும், மார்ட்டின் லூத்தரிடமும், திருப்பூர் குமரனிடமும் பயமில்லை. அவர்கள் எடுத்துக்கொண்ட செயல்களில் துணிவையே துணையாகக் கொண்டிருந்தனர்.

வாழ்ந்து பார்ப்பதற்கு நமக்கு பயமின்மை தேவை. ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர் தன்னுடைய ஒரு நூலில் கூறுகின்றார் “கோழைகள் ஒரு நாளைக்கு எத்தனையோ முறைகள் மரணமடைகின்றார்கள். வீரனுக்கு ஒரு முறைதான் மரணமுண்டு” நமக்கு எதற்கு வம்பு என்று பயந்து ஒதுங்கி இருப்பவர்களில் பலர் தங்கள் இயலாமைக்கு அடிப்படையாக பயம் என்ற உணர்வை வித்திடுகின்றனர்.

`ஒன்றை மட்டும் நாம் உணர வேண்டும். பயம் என்பது நமது மனதிற்கு வெளியிருந்து வருவதல்ல. அதன் நம்முடைய மனதிலே உருவான ஒரு உணர்வே.  அதை நம்மைத் தவிர யாரால் வெல்ல முடியும்? நம்முடைய குழந்தைகளின் மனதில் பயத்தின் வித்தை விதைத்து அவர்கள் வாழ்க்கைக்கு நாம் ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும்?

வாழ்ந்து பார்க்கலாமே.. பயத்தை சற்றே ஓரங்கட்டிவிட்டு….

(தொடருவோம் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *